இலங்கை இந்தியச் செய்திகள்

.
#சென்னை சேத்துப்பட்டு அடுக்குமாடி வீட்டில் பயங்கரம்: தாய், 2 மகள்கள் தீக்குளித்து சாவு
இலங்கை மீது பொருளாதாரத் தடை தமிழக சட்டசபையில் தீர்மானம்
ஜெயலிலிதாவை எப்படி கையாளப் போகிறது அரசாங்கம்?


கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?
                                                                                 - ஜூட் லால் பெர்னாண்டோ

இன்று, முள்ளிவாய்க்காலிலும் அதேபோல் மற்றும் பிற இடங்களிலும் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் தமிழர்களின் மரணத்துக்காக எங்கள் இதயங்களின் அடிநாளத்திலிருந்து அஞ்சலி செலுத்துகிறோம். அவர்கள் யார்? அவர்கள் எங்கள் அழகான பிள்ளைகள். வீரமிக்க எங்கள் மகன்கள் மற்றும் மகள்கள், பிரியத்துக்குரிய நமது பெற்றோர் மற்றும் மூதாதையர், ஆனால் அவர்களின் புதைகுழிகள் எங்கேயிருக்கின்றன என்பதுதான் தெரியவில்லை.



இன்றைய தினத்தில் ஒரு சிங்களவன் என்ற முறையில் நான் நினைவுகூர்வது ஆயிரக்கணக்கான தமிழர்களின் பௌதீக மரணங்களை மட்டுமல்ல, ஆனால் அத்தோடு நான் சார்ந்திருக்கும் சிங்கள தேசத்தின் தார்மீக மற்றும் ஆன்மீக மரணத்தையும்தான். ஒரு தேசம், அது கட்டியெழுப்பப் பட்டிருப்பது பல்லாயிரக் கணக்கான தமிழ் சகோதர சகோதரர்களின் இனந்தெரியாத புதைகுழிகளின் மீது.

மார்ட்டின் லூதர் கிங் வியட்னாம் மக்களுக்கு எதிரான போரின்போது நொந்து வெதும்பிக் கூறியது, ஒரு தேசம் யுத்த நலன்களுக்காக செலவு செய்கிறது, சுகாதார நலன்களுக்காக அல்ல, கல்வி மற்றும் நலன்புரி சேவைகள் என்பன அதன் மக்களுக்கு ஆன்மீகமாகவும் தார்மீகமாகவும் விதிக்கப் பட்டவை என்று.

முள்ளிவாய்க்கால் தமிழர்களின் தேசியம், சுதந்திர நாடு, மற்றும் சுய நிர்ணயம் என்பனவற்றின் முடிவை அடையாளப் படுத்தவில்லை. ஆனால் அது அடையாளப்படுத்தவது மானிடத்தின் மற்றொரு தோல்வியை.

எவராவது, சிங்களவர்கள் மத்தியிலுள்ள மனச்சாட்சி உள்ளவர்களோ மற்றும் சர்வதேச சமூகத்திலுள்ளவர்களோ அறியவேண்டியது தமிழர்களின் வன்னிப் படுகொலைகள் கேள்வியெழுப்புவது தமிழீழ குறிக்கோளைக் காட்டிலும் எமது மானிட தர்மத்தை நோக்கியே என்பதை.

ஆகவே முள்ளிவாய்க்கால் இருபதாம் நூற்றாண்டின் விடியலுக்குப் பின்னான ஒரு வரலாற்றுச் சம்பவம். அது ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுப்பது பிரபலமான இந்த சர்வதேசக் கிராமங்களின் மனித தர்மத்தைப் பற்றி.

தமிழர்களின் வன்னிப் படுகொலைகளைப் பற்றிய தார்மீக அடிப்படையிலான உண்மை இது. முள்ளிவாய்க்காலைப் பற்றிய அரசியல் உண்மைகள் எவை?

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டு பின்னர் 1948 ல் வழங்கப்பட்ட சுதந்திரத்துக்குப்பின் அரச கட்டிலில் அமர்ந்த ஒவ்வொரு சிங்கள ஆளும் கட்சியினராலும் திரும்பத் திரும்ப மாற்றியமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கொடூரத்தனத்தின் உச்சக்கட்டம்தான் முள்ளிவாய்க்கால்.

கடந்த 60வருடங்களாகத் தமிழர்கள் கொன்று குவிக்கப் படுவதை சிங்களவர்கள் அறிய மாட்டார்களா?

1983லும் 2009லும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அவர்கள் அறியவில்லையா?

1983ல் அந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வமற்ற காடையர்களால். ஆனால் 2009ல் அது நடந்தேறியது அதே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான இராணுவத்தாலும், சர்வதேச சமூகத்திலுள்ள ஒவ்வொரு பிரதான அதிகாரசக்திகளினதும் பூரண நல்லாதரவுடனும்.

சிங்கள மக்கள் இந்தப் படுகொலைகளை நன்கறிவார்கள். அப்படியாயின் மானிடப் பிறவிகளான அவர்கள் அரசாங்கத்தின் இந்தக் கொடூரத்தனத்துக்கு எந்த விதத்தில் நியாயம் கற்பிப்பார்கள்? அவர்கள் அதை நியாயப்படுத்துவது பாதிக்கப்பட்டவர்கள் என்கிற பாத்திரத்தை நடித்துக்கொண்டு, கூறலாம் அவர்கள்தான் தாக்குதலை மேற்கொண்டார்கள் எனவே அரசாங்கம் என்னகிற வகையில் அதை தற்காத்துக் கொள்ளும் உரிமை அதற்கு உண்டு என்று. அது மட்டும்தானா?

இல்லை அதற்கும் பல படிகள் மேலே சென்று தமிழர்களை எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்து பாதுகாக்கும் தார்மீகக் கடப்பாடு உள்ளது என்றும் கூறலாம். இதே தர்க்கரீதியான விவாதங்கள்தான் அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான்மீது ஆக்கிரமிப்பு நடத்தியபோதும், இஸ்ரவேல் பாலஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு நடத்தியபோதும் கூறப்பட்டன.

எனவே சிங்கள தேசம் இந்தப் படுகொலைகளை அறியவில்லை எனக் கூறுவது சரியல்ல, ஆனால் அவர்களால் அறிய முடியவில்லை ஏனென்றால் இந்தப் படுகொலைகளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பெயரால் அவர்கள் முழு மனதோடு நியாயப் படுத்தியுள்ளார்கள்.

இதைப்பற்றி ஐநா மற்றும் சர்வதேச சமூகங்கள் அறியவில்லையா? படுகொலைகளின் உண்மைத்தன்மையை வெளியிடாதது அவாகளின் பக்கமுள்ள தவறா? இல்லை, அது தவறில்லை. அது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினைப் பாதுகாப்பதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட செய்கை. அதை அவர்கள் தவிர்த்தது தற்செயலாக ஏற்பட்ட பிழையோ அல்லது தவறோ அல்ல, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயலின் ஒரு பகுதிதான் அது.

நான் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். 21ம் நூற்றாண்டில் தமிழர்கள் முதலாவது இனப் படுகொலைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்தப் படையினரால் பாதிக்கபட்டு அனாதரவானார்களோ அவர்களையே தமிழர்களின் பாதுகாவலர்கள் என்று காட்சிப்படுத்த முயலும் கருத்துக்களுக்கு முற்படலாகாது.

தமிழ் மக்கள்தான் அவர்களின் எதிர்கால நடைமுறைகளுக்கு வேண்டியவற்றைத் தீர்மானிக்க வேண்டியவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா மற்றும் பலர் கூறியிருப்பதை நான் இங்கு எதிரொலிக்க விரும்புகிறேன். சுதந்திரத்தை நோக்கி வீறு நடைபோட மக்கள் தீர்மானித்துப் புறப்பட்டுவிட்டால் நீதியின்பாதை அதற்கு ஒருபோதும் தடையாக நிற்காது.

ஸ்ரீலங்கா சரித்திரத்தில் முரண்பாடாகத் தோன்றினாலும் உண்மையான கூற்று என்னவென்றால், புத்தபகவான் ஞானம் பெற்றதின் 2600 வது ஆண்டுநிறைவை சிங்கள மக்கள் கோலாகலமாகக் கொண்டாடும்போது தமிழர்களும் தங்கள் பிரியப்பட்டவர்கள் படுகொலைக்கு ஆளானதை இவ்வருடம் மே மாதம் 18ந்திகதி நினைவு கூரவேண்டி ஏற்பட்டது.

புத்த பகவானின் வன்முறையற்ற போதனைகள் வெளிப்படுத்துவது, கருணை என்பது பூமியில் உள்ள மனித உயிர்களிடத்து மட்டும் காண்பிக்கப் படவேண்டிய ஒன்று மட்டுமல்ல, அது சகல உயிர்களிடத்தும் காண்பிக்கப்படவேண்டிய ஒன்றாகும் என்று. இந்தப் போதனை முக்கியமாக சவால் விட்டு இராச்சியங்களை உருமாற்றி, மற்றும் சமூகங்களை முன்னேற்றி நீதியான மற்றும் சமாதானமான நிகழ்வுகளை ஆசியாவில் ஏற்படுத்தியுள்ளது .சிங்கள தேசத்தில் அந்த மாபெரும் மனிதர் ஞானமடைந்ததை கொண்டாடிய அதே வேளை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்களின் தாயகத்தில் வன்னியில் கொல்லப்பட்ட தங்களின் பிரியமானவர்களுக்கு வேண்டி ஒரு ஒற்றை மெழுகுவர்த்தியைத்தானும் ஏற்றி நினைவுகூருவதற்கு அந்த மக்களை அனுமதிக்கவில்லை.

இந்த முரண்பாடு அல்லது ஓரவஞ்சனை பற்றி ஒவ்வொரு மனிதனும் மற்றும் நாங்கள் போற்றிப் பாதுகாக்கும் தார்மீகம் மற்றும் சமய மதிப்புகள் யாவும் வெட்கப்பட வேண்டும். அது புத்த பகவானின் சாசுவத தர்மத்துக்கும் மேலும்; உயரிய தியானம் மற்றும் சமய மரபுகளை நிறுவிய ஒவ்வொருவருக்கும் எதிரான செய்கை இது.

சிங்கள சமூகம் உருவாக்கியிருக்கும் ஆட்சியானது ஜனநாயக நடைமுறையுடன் இணங்கிச் செல்லும் ஒவ்வொரு நிலையினையும் அழித்து நிர்மூலமாக்குகிறது. தமிழர்களுக்கு ஒரு சிறைச்சாலையைக் கட்டுவதன்மூலம் சிங்களவர்கள் தங்களைப் பிணைக்கும் சங்கிலிகளை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள். காதுகள் உள்ளவர்கள் இதைக் கேட்கட்டும் கண்கள் உள்ளவர்கள் காணட்டும் நாவுள்ளவர்கள் பேசட்டும்.

இறுதியாக இந்த நாள் துக்கம் அனுட்டிக்கும் ஒரு நாள் மட்டுமோ அல்லது வெட்கப் படுவதற்குரிய ஒரு நாள் மட்டுமோ அல்ல தங்கள் வாழ்நாளின் கடைசி மூச்சு உள்ளவரை உயர்வான வாழ்க்கை கனவுகளை தாங்கிப் பிடித்திருந்த ஆயிரக்கணக்கான எனது தமிழ் சகோதர சகோதரிகளின் துணிவினை நினைவுகூரும் நாள் கூட.

அந்தத் துணிவே எங்கள் உள்மூச்சாகட்டும். அப்போதுதான் எங்கள் அஞ்சலிகள் நாதியற்ற பாதிப்படைந்தவர்கள் என்கிற எண்ணத்தோடு நிறைவடையாது, ஆனால் மக்கள் என்ற வகையில் நீதி,கண்ணியம், சுதந்திரம் என்பனவற்றை இலக்காக நோக்கி நடைபோடும் எங்கள் பயணத்திற்கு புத்துயிர் ஊட்டும்.

(ஜூட் லால் பெர்னாண்டோ பிரபலமான அரசியற் செயற்பாட்டாளர் வேறுபட்ட கிறீஸ்தவ தேவாலயங்களுக்கு இடையேயான ஐக்கியத்தின் அபிவிருத்தி பற்றிய கற்கையை Irish School Of Ecumenics) நடத்தும் ஐரிஸ் பாடசாலையில் பணியாற்றுகிறார். இந்தக் கட்டுரை Countercurrents.org காணப்பட்டது)

தமிழில் எஸ்.குமார்

Nantri:thenee

சென்னை சேத்துப்பட்டு அடுக்குமாடி வீட்டில் பயங்கரம்: தாய், 2 மகள்கள் தீக்குளித்து சாவு

இலங்கை தொழிலதிபர் குடும்பத்தின் பரிதாப முடிவு

gnachandranசென்னை சேத்துப்பட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை தொழிலதிபரின் மனைவியும், 2 மகள்களும் தீக்குளித்து பரிதாபமாக உயிரைவிட்டனர். இலங்கை தொழிலதிபரும் அவருடைய இன்னொரு மகளும் பலத்த தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் உள்ள லாமக் அவென்ïவில், ராயல் என்கிளேவ் என்ற பெயரில் புதிதாக 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 7 வீடுகள் இருக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் பெங்களூருவில் வசிக்கிறார். இந்தக் குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகவும் ஆடம்பரமானவை ஆகும்.

ஏழு வீடுகளில் 4 வீடுகளுக்கு மட்டும் மாதம் ரூ.50 ஆயிரம் வாடகை கொடுத்து 4 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். மற்ற 3 வீடுகள் காலியாக உள்ளன. இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஞானச்சந்திரன் (வயது 55) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்து குடியேறினார். இவரது மனைவி ஜெயா (வயது 50). இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூத்த மகள் பெயர் சவுமியா (வயது 15), கடைசி 2 மகள்களும் எட்டு வயது நிரம்பிய இரட்டைக் குழந்தைகள் ஆவார்கள். இலங்கை தமிழர்களான இவர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து இங்கு குடியேறியுள்ளனர்.

வீட்டில் பயங்கர தீ

நேற்றிரவு 8.15 மணியளவில் தொழிலதிபர் ஞானச்சந்திரன் வீட்டில் இருந்து பயங்கர புகை கிளம்பியது. இதைப் பார்த்து பக்கத்து 3 வீடுகளில் வசிப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே ஓடிவந்தனர். அந்தத் தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் பங்களாவாசிகள் ஆவார்கள். சத்தம் கேட்டு அனைவரும் தெருவில் கூடினார்கள். இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு அதிகாரிகள் பிரியா, லோகநாதன் ஆகியோர் தலைமையில் இரண்டு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் பவானீஸ்வரி, சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் போலீஸ் படையோடு விரைந்து வந்தார்கள்.

தீக்காயங்களுடன்...

தீப்பிடித்து எரிந்த தொழிலதிபர் ஞானச்சந்திரனின் வீட்டுக் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்தக் கதவை உடைத்து வீட்டுக்குள் போக முயன்றனர். ஆனால், வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக இருந்தது. பயங்கர அனல் அடித்ததால் யாரும் உள்ளே போக முடியவில்லை. அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

அப்போது, தொழிலதிபர் ஞானச்சந்திரன் தீக்காயங்களுடன் வெளியே வந்தார். அவரது மகள் சவுமியா உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் நிர்வாண கோலத்தோடு வெளியே ஓடிவந்தார். என்ன நடந்தது? எதனால் தீப்பிடித்தது? என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. ஞானச்சந்திரனையும், சவுமியாவையும் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

3 பேர் சாவு

வீட்டுக்குள் 3 படுக்கை அறைகள், பெரிய வரவேற்பு அறை, சமையலறை, பூஜை அறை என பல அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தபோது, ஒரு படுக்கை அறைக்குள் ஜெயாவும், ஒரு மகளும் தீயில் எரிந்து கரிக்கட்டைகளாக பிணமாக கிடந்தனர். இன்னொரு மகள் குளியலறைக்குள் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டை கோலத்தில் பிணமாக கிடந்தார்.

அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தபோதும் இவர்களைப் பற்றிய பெயர், விவரங்கள்கூட தெரியவில்லை. அவர்கள் வீட்டில் வேலை செய்த பாப்பாத்தி என்ற பெண் மட்டும் ஒரு சில விவரங்களை மட்டும் கூறினார். பின்னர் படிப்படியாக, போலீசார் தகவல்களை சேகரித்தனர். இவர்கள் குடும்பத்தோடு தீக்குளித்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணை மூலம் கருதுவதாக தீயணைப்பு படையினரும், போலீசாரும் கூறினார்கள்.

உடல்கள் மீட்பு

சமையல் கியாஸை திறந்துவிட்டு தீவைத்துக் கொண்டார்களா! அல்லது மண் எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்களா! என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும், தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இரவு 10.30 மணிக்கு மேல்தான் பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொழிலதிபர் ஞானச்சந்திரனே மனைவி, மகள்களை தீவைத்து எரித்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஏனென்றால், அவருக்கு தீயினால் அதிக காயம் ஏற்படவில்லை.

தனிப்படை

வேலைக்கார பெண் பாப்பாத்தியிடம் விசாரித்தபோது, அவர்கள் அதிகமாக யாரிடமும் பேசமாட்டார்கள். எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர்களிடமும்கூட எதுவும் பேசுவதில்லை. எப்போதும் கதவைப் பூட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். ஏதாவது வேலை சொன்னால் மட்டும் நான் செய்வேன் என்று சுருக்கமாக கூறினார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, தொழிலதிபர் ஞானச்சந்திரனிடம் ஆஸ்பத்திரியில் விசாரணை நடந்து வருகிறது. ஞானச்சந்திரன் மட்டுமே பேசக்கூடிய நிலையில் இருப்பதால், அவர் மூலம் உண்மையிலேயே என்ன நடந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேத்துப்பட்டு போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நன்றி தேனீ 

இலங்கை மீது பொருளாதாரத் தடை தமிழக சட்டசபையில் தீர்மானம்

Wednesday, 08 June 2011
jayalaitha111இலங்கைக்கெதிராக இந்திய மத்திய அரசு பொருளாதாரத் தடையை ஏற்படுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கும் தீர்மானமொன்றை தமிழக அரசாங்கம் நேற்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு உட்பட இலங்கையிலுள்ள தமிழர்களின் விவகாரங்கள் தொடர்பாகவே இந்திய அரசாங்கம் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்மொழிந்தார்.

நன்றி தினக்குரல்

யாழ்.மாவட்ட உள்ளூராட்சித் தேர்தலில் 1169 வேட்பாளர்கள் களத்தில் குதிப்பர்


election_box யாழ்.மாவட்டத்தில் அடுத்த மாதம் இருபத்திமூன்றாம் திகதி நடைபெறவிருக்கும் மூன்று நகரசபைக்கும் பதினாறு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களில் 1169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் கட்சி ரீதியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவையும் பல சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

வல்வெட்டித்துறை நகரசபைக்கு 9 பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய 48 வேட்பாளர்களும் பருத்தித்துறை நகரசபைக்கு 9 பிரதிநிதிகளை தெரிவு செய்ய 60 வேட்பாளர்களும் சாவகச்சேரி நகர சபைக்கு பதினொரு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய அறுபது பேர் போட்டியிடுகின்றனர். காரைநகர் பிரதேச சபைக்கு ஐந்து பேரைத் தெரிவு செய்ய இருபத்தெட்டுப் பேரும் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு ஐவரைத் தெரிவு செய்ய 21 பேரும் நெடுந்தீவுப் பிரதேச சபைக்கு ஒன்பது பேரைத் தெரிவு செய்ய 36 பேரும் வேலணை பிரதேச சபைக்கு பதினொரு பேரைத் தெரிவு செய்வதற்கு 48 பேரும் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு 14 வேட்பாளரைத் தெரிவு செய்ய 57 பேரும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு 21 பேரைத் தெரிவு செய்வதற்கு 81 பேரும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு 16 பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய 63 வேட்பாளர்களும் வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்கு 16 பேரைத் தெரிவு செய்ய 63 பேரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு 21 பேரைத் தெரிவு செய்ய 108 பேரும் வடமராட்சி தெற்கு,மேற்கு பிரதேச சபைக்கு 18 பேரைத் தெரிவு செய்ய 76 பேரும் பருத்தித்துறை பிரதேச சபைக்கு ஒன்பது பேரைத் தெரிவு செய்வதற்கு 48 பேரும் சாவகச்சேரி பிரதேச சபைக்கு 15 பேரைத் தெரிவு செய்ய 120 பேரும் போட்டியிடுகின்றனர்.

நல்லூர் பிரதேச சபைக்கு 12 பேரைத் தெரிவு செய்ய 48 பேரும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு 9 பேரைத் தெரிவு செய்வதற்கு 48 பேரும் கரைச்சி பிரதேச சபைக்கு 19 பேரைத் தெரிவு செய்ய 100 பேரும் பூநகரி பிரதேச சபைக்கு 10 பேரைத் தெரிவு செய்வதற்கு 30 பேரும் போட்டியிடுகின்றனர்.

சகல வேட்பாளர்களுக்கும் தேர்தல் திணைக்களம் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை வெளியிட்டுள்ளது.
நன்றி தினக்குரல்

குடாநாட்டில் 6 மாதத்தில் 62 பேர் தற்கொலை



யாழ். குடாநாட்டில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிகின்றன. குடாநாட்டில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 62 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனக்குத் தானே தீமூட்டி 21 பேரும் தூக்கிட்டு 18 பேரும் நஞ்சருந்தி 8 பேரும் நீரில் மூழ்கி 15 பேரும் தற்கொலை செய்துகெõண்டுள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. குடாநாட்டில் தற்கொலை செய்துöகாண்டவர்களில் 75 வீதமானோர் பெண்களாவர்.

நன்றி வீரகேசரி

ஜெயலிலிதாவை எப்படி கையாளப் போகிறது அரசாங்கம்?
-கே. சஞ்சயன்

Jayalalitha200511இலங்கையின் இராஜதந்திரம் பலவீனமானது என்ற விமர்சனங்கள் அவ்வப்போது வெளியாகின்றபோதும், அதன் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

என்னதான் சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், இலங்கை அரசு தனது இராஜதந்திர நகர்வுகளை முழுமூச்சோடு மேற்கொண்டு வருகிறது.

மேற்குலகைப் பகைத்துக் கொண்டதை இலங்கையின் இராஜதந்திர பலவீனங்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம். ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள பலமான இராஜதந்திர உறவுகளின் பக்கத்தை யாராலும் மறந்து விட முடியாது.

இலங்கையின் பிரதான இராஜதந்திர பலமே இந்தியா தான். எல்லாவிதமான வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் இலங்கைக்கு கவசமாக இருப்பது இந்தியா தான் என்பதில் சந்தேகம் இல்லை.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போர்க்கருத்தரங்கில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ , இதனைத் தெளிவாகக் கூறியிருந்தார்.

மற்றெல்லா நாடுகளும், பொருளாதார, அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில்தான் இருந்தன. இலங்கைக்குப் பாதுகாப்பு அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய ஒரே நாடாக இந்தியா மட்டுமே இருந்தது. எனவே தான் அதனை முறையாக கையாண்டதாக அவர் பெருமிதப்பட்டிருந்தார்.

அதுமட்டுமன்றி, போர் பற்றிய சர்ச்சைகள் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், இந்தப் போருக்கு இந்தியா எவ்வாறு உதவியது என்ற விபரத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இதன்மூலம் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் முக்கியமான பங்கை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகளுக்குப் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இது இலங்கை அரசாங்கத்துக்கு கவலை தருகின்ற ஒன்றாக இருந்த போதும், போருக்கு உதவிய நாடு என்ற வகையில் இந்தியா தம்மைக் கைவிட்டு விடாது என்ற நம்பிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு மிக அதிகமாகவே உள்ளது. அதை நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உறுதிப்படுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

முன்னர் போருக்கும் இப்போது போருக்குப் பிந்திய சூழலிலும் இலங்கைக்கு உதவுகின்ற ஒரு நாடாகவே இந்தியா இருக்கிறது.

ஆனால், அதேவேளை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் அவ்வப்போது உரசல்கள் வந்து போவதையும் மறுக்க முடியாது. இந்த உரசல்கள் மிக மோசமான நிலையை எட்டவிடாமல் இராஜதந்திர முனைப்புகள் நடந்தேறுகின்றன.

கடந்த சில வாரங்களாக, அதாவது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் ஒருவித தேக்கம் காணப்படுகிறது.

ஐ.நாவின் அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு வெளியிடவில்லை என்ற அடிப்படையே இந்த உறவுத் தேக்கம் உருவாகக் காரணமாகும்.

அதேவேளை, கடந்தமாதம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் கூட, இந்திய - இலங்கை உறவுகளில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படக் காரணமாகியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்த ஜெயலலிதாதான் இப்போது தமிழ்நாட்டின் முதல்வர்.

அவ்வப்போது, இலங்கை அரசுக்கு வெளிப்படையான எதிர்ப்பை வெளியிட்டாலும், மத்தியில் தமது கட்சிக்கோ, ஆட்சிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நெகிழ்வுப் போக்கை கையாண்ட கருணாநிதியின் ஆட்சி இப்போது இல்லை. கருணாநிதி ஆட்சி இலங்கை அரசுக்கு மறைமுகமான ஒரு பலமாகவே அமைந்திருந்தது.

ஆனால், ஜெயலலிதாவின் அணுகுமுறை வித்தியாசமானது. எடுக்கின்ற முடிவைத் தீர்க்கமாக நடைமுறைப்படுத்தும் குணவியல்பு கொண்டவர் ஜெயலலிதா.

இந்தநிலையில் தமிழ்நாட்டின் முதல்வராக அவர் பதவியேற்று மூன்று வாரங்கள் கழிந்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு அவர் எத்தகைய தோற்றத்தைக் காண்பிக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்து வந்தது.

ஒரு பக்கத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இவர் மத்திய அரசைக் குழப்பி விட்டு விடுவாரா என்ற கலக்கம் இருக்கிறது. அதேவேளை தமிழர் தரப்புக்கோ அவரும் தம்மைக் கைவிட்டு விடுவாரா என்ற பயமும் இருந்தது.

இந்த நிலையில்தான் ஜெயலலிதாவுடன் இலங்கை அரசாங்கம் நெருக்கதை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கியது. அரசியலில் யாரும், யாருக்கும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை என்று கூறுவார்கள். அதுபோலத் தான் இலங்கை அரசாங்கம் ஜெயலலிதாவையும் அரவணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்க முன்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியிருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியது.

ஒருபக்கத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இந்திய மத்திய அரசு தான் எமக்குத் தேவையே தவிர மாநில அரசுகள் தேவையும் இல்லை, அவற்றுடன் இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டிய தேவையும் இல்லை என்று கூறியிருந்தார்.

அதேநேரத்தில் தான் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். தமிழ்நாட்டு முதல்வருடன் இலங்கை அரசு இராஜதந்திர நெருக்கத்தை ஏற்படுத்த முனைவது அப்போதே வெளிப்படுத்தப்பட்டு விட்டது.

இப்போது வேறொரு முறையில் அவருடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடந்துள்ளதாகத் தகவல்.

அண்மையில் ஜனாதிபதியின் வெளிவிவகார மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட, ஜெயலலிதாவை சந்தித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வமற்ற முறையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்தவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடுவுடன் இருந்த நெருக்தைக் கொண்டு மிலிந்த மொறகொட அதை சாதித்துள்ளார். விரைவிலேயே அதிகாரபூர்வ சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் நாயுடு அவருக்கு உறுதியளித்துள்ளாராம். தனிப்பட்ட சிறப்பு விமானம் ஒன்றில் ஹைதராபாத் சென்று வந்திருக்கிறார் மிலிந்த மொறகொட. இவரை ஜனாதிபதியின் ஆலோசகராக நியமித்த போது, அது ஒரு இராஜதந்திர முயற்சி என்றே கருதப்பட்டது.

ஆனால், அனைவரும் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள உறவுச் சிக்கலைத் தீர்ப்பதற்கே இவரைப் பயன்படுத்த மஹிந்த ராஜபக்ஷ முனையலாம் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் அவரை வைத்து இந்தியாவின் மீது வலையை வீசத் தொடங்கியுள்ளது அரசாங்கம். அதுவும் மத்திய அரசின் மீது அல்ல, தமிழ்நாடு அரசின் மீது தான் அதன் கவனம் திரும்பியுள்ளது.

மாநில அரசுகளுடன் இராஜதந்திர உறவுகள் ஒன்றும் தேவையில்லை என்ற கூறிய அரசின் சார்பில் தான் இந்தச் சந்திப்புக்கு சென்றுள்ளார் மிலிந்த மொறகொட. இந்தச் சந்திப்பு அல்லது இனிவரும் சந்திப்புக்கள் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும் இடையில் மிலிந்த மொறகொடவினால் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால், இலங்கை அரசாங்கம்முடியாதது என்று எதையும் கைவிடாமல் முயற்சிகளைத் தொடர்கிறது என்பது கவனிக்கத்தக்கது. யாரையும் ஒதுக்கித் தள்ளி விடாமல் இராஜதந்திரத்தை பிரயோகிப்பது முக்கியமானதொன்று. எதிரிகளை சம்பாதிப்பது சுலபம். ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது தான் கடினம்.

இலங்கை அரசு பல நண்பர்களை இழந்து போயுள்ள நிலையில் ஜெயலலிதா போன்ற புதிய உறவுகளைத் தேடத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் தான் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். இத்தனை வேகமாக அவர் இதைச் செய்வார் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இலங்கை அரசு எதிர்பார்க்கவில்லை.

இலங்கை அரசு அவருடன் ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்த உறவுக்கு இந்தத் தீர்மானம் பெரும் சவால் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்து இலங்கை அரசு என்ன செய்யப் போகிறது?

சீச்...சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று ஜெயல்லிதாவுடனான உறவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளைக் கைவிட்டு விடப் போகிறதா? அல்லது தனது இராஜதந்திரத்தை புதிய வழிமுறையில் பிரயோகிக்க முனையப் போகிறதா?
நன்றி: தமிழ்மிரர்
நன்றி தேனீ









1 comment:

kirrukan said...

ஆயிரத்தில் ஒர் வார்த்தைஎவராவது, "

[quote]அறியவேண்டியது தமிழர்களின் வன்னிப் படுகொலைகள் கேள்வியெழுப்புவது தமிழீழ குறிக்கோளைக் காட்டிலும் எமது மானிட தர்மத்தை நோக்கியே என்பதை[/quote].


கட்டுரையை இணைத்தமைக்கு நன்றிகள்,