ஒரு வருட நிறைவுப் பதிப்பாக வெளிவருகின்றது தமிழ்முரசு ஒஸ்ரேலியா .


.

அன்பான வாசகர்களே

தமிழ்முரசு ஒஸ்ரேலியா இன்று தனது ஒரு வருட நிறைவுப் பதிப்பாக  வெளிவருகின்றது. இது நீங்கள் தந்த ஊக்கம் என்பதை சொல்லிக்கொள்வதில் ஆசிரியர்குழு பெருமைப் படுகின்றது. நாம் வாழும் ஒஸ்ரேலியாவில் உள்ளுர் விடயங்களை உடனுக்குடன் கொண்டுவரவேண்டும் என்ற எங்களின் எண்ணம் அரும்பாகி மொட்டாகி மலராகி உங்கள் மனம் கவருகின்றது. எந்தப்பாகுபாடும் இல்லாது எல்லோருக்கும் பொதுவான பத்திரிகையாக நடந்து கொண்டு செல்வதை நீங்கள் அறிவீர்கள் தொடர்ந்தும் அந்த வளியிலேயே பயணிக்கும் அதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடி நிற்கிறோம்.
எந்தப் பதிவிற்கும் தடையின்றி உங்கள் கருத்துக்களை இடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறோம் இதுவரை வாசகர்களும் நாகரீகமாக தரமான கருத்துக்களையே தந்திருக்கின்றார்கள். ஒரு சில நேரத்தில் மட்டும் ஒரு ஊடகத்தில் பாவிக்க கூடாத வார்த்தைப் பிரயோகங்கள் பாவித்த காரணத்தால் கருத்து நீக்கப்பட்டது. அதை எழுதிய வாசகர்கள் கூட பின்னாளில் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்தார்கள் அதற்காக நாம் மகிழ்வு கொள்கின்றோம். கருத்துச் சுதந்திரம் உள்ளபோது சரியான கருத்தை வையுங்கள். அது எம் சமூகத்திற்கு ஆரோக்கிமானதாக இருக்கும்.



ஆரம்பத்தில் ஒரு வாரத்தில் ஜந்நூறு தடவைகள் பார்க்கப்பட்ட உங்கள் தமிழ்முரசு இப்போது வாரத்தில் சராசரியாக ஆயிரத்து நாநூறு தடவைகள் பார்க்கப் படும் பத்திரிகையாக இருக்கின்றது என்பது மகிழ்வைத் தருகின்றது. இந்தப் பத்திரிகைக்கு தங்கள் ஆக்கங்களைத் தந்து பத்திரிகையை மெருகூட்டிய  உள்ளுர் எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வாரம் தோறும் திங்கட் கிழமைகளில் பத்திரிகை வெளிவந்ததும் வாசித்துவிட்டு அதில் இருக்கும் தவறுகள் எழுத்துப்பிழைகள் போன்றவற்றை திருத்துமாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் ஒரு சில வாசகர்களை நாம் நன்றியோடு பார்க்கின்றோம்.
எமது பணி தொடரும் உங்கள் ஆதரவோடு நீண்ட தூரம் செல்ல முனைவோம். உங்கள் ஆக்கங்கள் மட்டுமல்ல உங்கள் ஆலோசனைகளும் எமக்கு தேவை. இது உள்ளுர் விடயங்களுக்கு முன்உரிமை கொடுக்கும் பத்திரிகை உங்கள் அமைப்பின் செய்திகள் அறிவித்தல்களை அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.

 சென்ற ஆண்டின் சில நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றோம்.


சிட்னி முருகன் ஆலயத்தில் ஜந்தாம் திருவிழா

24.03.2010




சிட்னி முருகன் கோவிலின் ஜந்தாம் திருவிழா பக்தர்கள் நிறைந்த திருவிழாவாகக் காணப்பட்டது. முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் அமர்ந்திருக்க முருகனின் முன்னே பிறைச்சந்திரன் ஒலித்துக்கொண்டிருக்க வீதி உலா வந்த காட்சியை காணக் கண் ஆயிரம் வேண்டும் என்பதுபோல் மிக அழகிய காட்சியாக இருந்தது.நாதஸ்வர இசையுடன் வீதிஉலா வந்த முருகனுக்கு நான்கு மூலையிலும் மண்டபபடி போட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தென்கிழக்கு மூலையில் பிரசாதமாக வடை பரிமாறப்பட்டது பக்தர்கள் மகிழ்ச்சியோடு பிரசாதத்தை பெற்றுக்கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் இன்று வாசித்த மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன என்ற தில்லானா மோகனாம்பாள் படப் பாடலும் தொடர்ந்து வந்த தில்லானா இசையும் பக்தர்களை கொள்ளை கொண்டது. இதன்போது தவில் வித்துவான்கள் தவில் வாசித்தi அழகை மக்கள் புகழ்ந்து பேசியதை கேட்கக்கூடியதாக இருந்தது. பாடலைத் தொடர்ந்த தனித்தவில் கச்சேரி மனதை வருடிச்சென்றது


முருகப்பெருமான் வீதி உலா வரும் காட்சியை வாசகர்களும் கண்டு ஆனந்தம் கொள்வதற்காக படங்களாக இணைக்கின்றோம்.


                                                                                                                                     Photos by Gnani.
                 முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் அமர்ந்திருக்க முருகனின் முன்னே      
                                 பிறைச்சந்திரன் ஒலித்துக்கொண்டிருக்க வீதி உலா வந்த காட்சி 


காத்திருப்போம்

                                                                                     செ.பாஸ்கரன்








முற்றத்து மணற்பரப்பில் விரித்தபாயும்


வேப்பமர நிழலில் கயிற்றுக் கட்டிலுமாய்


வீற்றிருந்த என் வீடும் வளவும்


தூசி படிந்து தூர்ந்து கிடக்கிறது


வளையோசையும் வாய்ப்பாட்டு ராகமுமாய்


வலம் வந்த என் அம்மை


கழுவித்துடைத்து அழகுக்கோலமிட்ட அரண்மனை


தூண்களும் கல்லுமாய் அடையாளம் தருகிறது


பிரசவத்துக்காய் காத்துக் கிடந்த


முப்பது வருடங்களின் முற்றுப்பெறாத கருக்கலைப்பு


மக்கள் மௌனித்திருந்த நகரத் தெருக்களும்;


மரணித்திருந்த மானிட நேயமும்


ஊட்டச்சத்தின்றி உலாவிவரும் பிள்ளைபோல்


எழுந்து நிற்க எத்தணிப்புச் செய்கிறது


சாவிலிருந்து தப்பியவர்களில் சவாரிவிட காத்திருக்கிறது


சாதிப்பேயும் பிரதேச வேறுபாடும்


காதல் வரி பாடி கழித்திருந்த காலம்


மீண்டும் துளிர்விட்டு பசுமைதருமென்று


காத்திருக்கும் பெரிசுகளும்


அம்மன் கோயில் தேராக அசைந்துவரும் காதலியின்


விழிபார்த்து காத்திருக்கும் இளசுகளும்


கேலிச் சிரிப்பும் கெக்களமும் கொட்டி


சேர்ந்து மகிழ்திருக்க


நாம் நடந்த நகரம் மீண்டும்


திரும்பும் என காத்திருப்போம்


சிட்னியில் என்னை கவர்ந்த இனிய இசை நிகழ்வு

.
                              நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்






சென்றமாதம் தமிழர்களாகிய நாம் வழமைக்கு மாறான ஒரு இசை நிகழ்ச்சியை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஐங்கரன் கந்தராஐhவால் நடாத்தப்பட்ட தபேலா நிகழ்ச்சியே அது.
வழமையாக தமிழரது என கர்நாடக இசையையும் மெல்லிசையையும் கேட்டு பழகிய காதுகளுக்கு இந்த கச்சேரி ஒரு புதிய உணர்வை ஊட்டியது. ஆமாம் அன்று நாம் கேட்டது முற்று முழுக்க வட இந்திய இசையான ஹிந்துஸ்தானி இசையே.






எப்படி இருக்குமோ என கேள்விக்குறியுடன் போனவர்களை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். அன்றைய கலைஞர்கள் Kuring-Gai Campusல் அமைந்த Greenhalgh Theatre நிறைந்த ஐனதிரள் கச்சேரியின் நாயகனான ஐங்கரன் கந்தராஜாவின் தனி தபேலா நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. அவருக்கு துணையாக Sandeep Mishra சாரங்கி என்ற நரம்பு வாத்தியத்தை இசைத்தார். இவை எல்லாம் எம்மவருக்கு புதிதுதான்.

இதை உணர்ந்த ஐங்கரன் பார்வையாளருக்காக வாத்தியம் பற்றிய சிறு விளக்கத்தை தந்து எம்மை உசுப்பிவிட்டார். நிமிர்ந்து ஆசனத்தில் அமர்ந்தோம். கச்சேரி சூடு பிடிக்கத் தொடங்கியது. மக்கள் இயற்கையாக இசையிலே லயித்து போயினர். ஐங்கரனோ தான் தனியாக தபேலாவில் வாசிப்பவற்றை மக்கள் இரசிக்கவேண்டும் என்பதற்காக சிறு சம்பவங்களை விளக்கினார். குறிப்பாக மான் ஓடுவது மேலும் காலையிலே தாயார் எழுப்பும்போது புரண்டு படுத்து முனகும் பையன் என தனது வாசிப்பை உருவகப்படுத்தினார். இசையில் இணையாதவரையும் இணையவைக்கமுடியும் யாவரையும் என் இசையால் கவருவேன் என்பது போன்று இருந்தது இந்த வாசிப்பு.






 ஐங்கரனுக்கு இணையாக Sarangi  வாசித்த கலைஞர் Sandeep Mishra மிக பிரபலமான கலைஞர் Bhimsen Jushi  மற்றும் Ustart Vilayat Khan போன்றவருக்கு வாசிப்பர். இவர் ஐங்கரனுடன் இணைந்ததே ஐங்கரனுக்கு மட்டும் பெருமையல்ல தமிழ் சமூகமே இதையிட்டு பெருமைப்படலாம்.





சந்தேகம் இல்லாமல் இசை ரசிகர்களும் விற்பன்னர்களும் Dr  ஐங்கரன் கந்தராஜா ஒரு சிறந்த கலைஞராக உருவாகி இருப்பதை பாராட்டினார்கள். ஐங்கரன் சிட்னியிலே Ram Chandra Suman  டம் கற்க தொடங்கியவர். தனது ஆர்வத்தில் கலையை மேலும் விருத்தி செய்யும் ஆர்வத்தில் Mumbai சென்று Yogesh Sumsi டம் கற்றார். Yogesh Sumsi இசையுலகில் கோலோச்சும் Zahir Hussain ன் தந்தையான Allah Rakka யின் சிஸ்யராவார். நமது ஐங்கரனும் Zahir Hussain டமும் தபேலா கற்றுள்ளார். சிறந்த உயர்ந்த பாரம்பரியத்தின் வாரிசுதான் ஐங்கரன்.






கலை உலகிலே யாரது சிஸ்யன் யார் என்பதே முக்கியம். குருவின் பரிபூர்ண ஆசியும் அன்பும் அபிமானமும் ஐங்கரனுக்கு உண்டு. ஐங்கரனின் முழுநீள கச்சேரியை கண்டு இரசிப்பதற்கு குருவான Yogesh Sumsi யே மும்பையில் இருந்து வருகை தந்திருந்தார். ஆரம்பகால குருவான Ram Chandra Suman ம் Yogesh Sumsi யும் ஐங்கரனை மனதார வாழ்த்தினார்கள்.

இடைவேளையின்பின் கச்சேரி எதிர்பாராத ஒரு திருப்பத்தை தந்தது. திருமதி கலா றாம்னாத்தின் வயலின் இசைக்கு ஒத்திசையாக தபேலா வாசித்தார் ஐங்கரன். இங்கு ஐங்கரன் தான் ஒரு சிறந்த கலைஞன் என்பதை நிரூபித்தார். எப்போதுமே ஒத்திசையாக தாளவாத்தியத்தை வாசிக்கும்போது இசையை உணர்ந்து, இசையின் அழகு குறைந்துவிடாது அதை மேலும் மெருகூட்டுவதாக அமையவேண்டும் பக்கவாத்தியம். தனது பங்கை நன்றாகவே உணர்ந்து வாசித்தமை அவரது இசை ஞானத்தையும் ஈடுபாட்டையும் எமக்கு உணர்த்தியது.
வயலின் மேற்கத்திய வாத்தியமாக இருந்தபோதும் கர்நாடாக இசை கலைஞர்கள் மனித குரலுடன் இணைந்து வாசிக்கக்கூடிய அருமையான வாத்தியம் என்பதை உணர்ந்து வயலினை 200 வருடங்களுக்கு மேலாக நமதாக்கி கொண்டனர். ஆனால் இன்றோ மேற்கத்தியவரும் வியக்கும் வண்ணம் கர்நாடக கலைஞர்கள் வயலினை வாசித்து வருகின்றார்கள். புரவலாக கர்நாடக சங்கீத கச்சேரியில் ஒத்திசையாக வாசிக்கப்பட்டபோதும் அதில் தேர்ந்த வித்தகர் வயலினை தனிவாத்திய கச்சேரியாக வாசித்து புகழ்பெற்று வருகிறார்கள். வு T N Krishnan, T N Rajam  குன்னைக்குடி வைத்தியநாதன் போன்றோர் பிரபலமானவர்கள். இவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இளம் கலைஞரே கலா றாம்நாத். இவர் தனது வாசிப்பால் யாவரையும் கவர்ந்தார். கச்சேரியின் ஆரம்பத்திலேயே கர்நாடக சங்கீதத்திற்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கு வயலின் புதிய வாத்தியமே. இசையிலே இணைந்த விதூசகி இசை பிரவாகமாக இரசிகர்களை வர்சித்தார். ஐங்கரன் ஸ்ரீபன் கந்தராஜா

சளைக்காமல் அதற்கு ஈடு செய்தார்.
மொத்தத்திலே ஒரு அருமையான கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினோம். 
வசீகர தோற்றமுடைய ஐங்கரன் இன்றைய இளைஞருக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐங்கரன் டாக்டர் மட்டுமல்ல சிறந்த கலைஞனும்கூட. சளைக்காத உழைப்பும் தீராத தாகமும் இருக்குமானால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஐங்கரன் ஒரு எடுத்துக்காட்டு.



உமாவின் PATCH WORK அமைப்புக்காக சேரனின் ஆஞ்சநேயம்

.


                                                                                                பராசக்தி சுந்தரலிங்கம்    








சென்ற ஞாயிற்று கிழமை 11.4.2010௦ அன்று சிட்னி Bankstown நகர மண்டபத்திலே பிரபல நாட்டியக் கலைஞர் சேரன் சிறீபாலனின் தயாரிப்பிலே ஆஞ்சநேயம் பரதநாட்டிய நிகழ்வு PATCH WORK அமைப்புக்காக அரங்கேறியது. சேரனுடன் இணைந்து ஹரீஷன் இளங்கோவன், லாவண்யா தேவராஜா ஆகியோரும் ஆடினார்கள். இந்த நடன நிகழ்வு நல்லதொரு நோக்கத்துக்காக நடைபெற்றது என்பது மனநிறைவைத் தந்தது.
தமிழர் தாயகத்திலே போரினால் அங்கவீனம் உற்றவர்களின் மறுவாழ்வுக்காக சிட்னியை சேர்ந்த உமா ராஜ் PATCH WORK எனும் அமைப்பை  அவுஸ்திரேலியாவிலே தொடங்கியுள்ளார். இது உலகளாவிய ரீதியில் இயங்கும் ஓர் அமைப்பு.
உமா சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர். துரதிஷ்டவசமாக அவரது கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில், இந்நாட்டிலே அவருக்கு கிடைத்த சூழலின் பயனாக Braille முறையில் கல்வி பயின்று, தன்னம்பிககையுடன் தனது வாழ்வை அமைத்துக் கொண்டபோதும் பிறர் துன்பம் கண்டு கண்கலங்குகிறார்.





2004 ம்  ஆண்டு, தமிழர் தாயகத்திலே சமாதானம் நிலவிய காலத்தில், அங்கு சென்ற உமா போரினால் கண்பார்வையை இழந்த சிறுவர் சிறுமியருக்கு  கடந்த ஐந்து ஆண்டுகளாக Brailleமுறையில் கல்வி கற்பித்து வந்துள்ளார். இன்று அவருடைய அரிய முயற்சிகள் யாவும் போரினால் அடிபட்டுப்போன நிலையிலும் அவர் தனது பணியைக் கைவிடவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு அவர் திரும்பிய பின்னரும் அல்லும் பகலும் உமாவின் சிந்தனை தான் ஊரிலே நிராதரவாக விட்டுவிட்டு வந்த உறவுகளைப் பற்றியே இருந்திருக்கிறது  . பார்வையற்றவர்களுக்கு மாத்திரமன்றி, அங்கங்களை இழந்து தவிப்பவர்களுக்ககவும் உதவும் நோக்குடன் PATCH WORK என்னும் அமைப்பை இங்கு ஆரம்பித்துள்ளார்.


சேரன் சிறீபாலன் தாயகத்தில் இயங்கி வந்த நவம் அறிவுக் கூடத்தின் பணிகளுக்காக சென்ற சில ஆண்டுகளாக தனது நடன நிகழ்வு மூலம் நிதி சேகரித்து உதவி வருவதை நாமெல்லோருமே அறிவோம் . இவ்வாண்டு சேரன் ஆஞ்சநேயம் நடன நிகழ்வு மூலம் PATCH WORK அமைப்புக்கு உதவ முன்வந்துள்ளமை எமக்கு பெருமையாக இருக்கிறது.
ஆஞ்சநேயன் என்பது அனுமனுக்கு மறுபெயர். ராமாயண காவியத்திலே ராமதூதனாக வந்து தனது ஆழ்ந்த பக்தியினாலும், வீரச் செயல்களாலும் மக்களின் மனதிலே நீங்காத இடத்தைப் பிடித்து தெய்வநிலைக்கு உயர்ந்தவன் அனுமன். அனுமனின் பிறப்பு, வீரம், ராமபக்தி ஆகியவற்றைப் புகழும் பாடல்களுக்கு
பரதநாட்டிய முறையில் நடனமமைத்து சேரன் சிறீபாலன் மேடையேற்றியுள்ளார்.






அஞ்சனையின் மகனாக அவதரித்த அனுமன் சிறுவனாக இருக்கும் போதே வியத்தகு செயல்களால் தனது ஆற்றலை நிரூபித்தவன். சூரியனையே பழமென்று நினைத்துப் பறித்து விழுங்கிப் பின் தேவர்களின் வேண்டுகோளுகிணங்க விடுவித்து, அவர்களிடமிருந்து முக்கியமாக வாயு பகவானிடமிருந்து பல வரங்களைப் பெற்றவன் . இதனால் வாயு புத்திரன் மாருதி என்றும் அழைக்கபட்டான். ராமதூதனாக, சீதையை தேடிக் கடல் கடந்து இலங்கையை அடைந்து ராவணனுடன் வாதித்து இலங்காபுரியை இலங்காதகனம் செய்தவன்.


சேரனும் ஹரீஷனும் இணைந்து இக்காட்சிகளை தங்கள் விறுவிறுப்பான நடனம் மூலம் மேடையிலே தத்ரூபமாக கொண்டு வந்தனர். சேரன் அனுமனாகவும், ஹரீஷன் ராமன் மற்றும் ராவணனாகவும் தோன்றி ஆடினார்கள். லாவண்யா அஞ்சனை, சீதையாக நடனத்தில் இணைந்து கொண்டார். பிரபல நாட்டிய கலைஞர்களான சாந்தா, தனஞ்சயன் தம்பதியினரிடம் சேரன் நடனம் பயின்றவர். ஹரீஷன் நாட்டியக் கலையர் திருமதி ஜெயலக்ஷ்மி கந்தையாவின் மாணவர். லாவண்யா சேரனின் ரசன்னா கவின் கல்லூரி மாணவி.


அருணாசலக் கவிராயரின் ராமநாடகத்திலிருந்து "கைகூப்பிதொழும் அய்யன் நீ" என்னும் பாடலுக்கு அமைந்த நடனமும், மாருதி கவுத்துவமும் முக்கியமாக 
ஐம்பூதங்களைப்  பற்றிய வர்ணனை குறிப்பிடும்படி இருந்தன. "சரணம், சரணம்" என்னும் பஜன் பக்திச் சுவையுடன் பொருத்தமாக அமைத்திருந்தது. சேரனின் நடன ஆற்றலையும், நடன அமைபாண்மையையும் கீரவாணி ராகத்திலமைந்த வர்ணத்தில் கண்டு மகிழ முடிந்தது. ஹரீஷனும் லாவண்யாவும்  இடையில் இணைந்து ஆடினர். வர்ணத்தில் சஞ்சாரிகளைக் குறைத்திருக்கலாம்.


இவர்களின் விறுவிறுப்பான, தொய்வில்லாத நடன நிகழ்வு, இரண்டரை மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுவிட்டது என்றே கூறவேண்டும் . நடனக் கலைஞர்களைப் போலவே பக்கவாத்தியக் கலைஞர்களும் சிறப்பாக இசை வழங்கினார்கள். எல்லோருமே இளைஞர்கள். வாய்ப்பாட்டிசையை வழங்கிய மோகன் பரத் நல்ல குரல் வளமுடையவர். ஆனால் பல பாடல்கள் அவருக்குச் சவாலாக அமைந்து விட்டன. கிஷானின் மிருதங்க இசை, செந்தூரனின் கடம், ஜனகனின் கெஞ்சிரா, டோலக், மோர்சிங் ஆகியன நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்திவிட்டன என்பதில் சந்தேகமில்லை.






அனுமன், ராவணன் ஆகியோரின் சந்திப்பு கோபமாக வீராவேசத்துடன் அவர்கள் மோதியது போன்ற சந்தர்பங்களில் வாத்தியங்களின் பொருத்தமான இசை, செந்தூரனின் ஜதிகள் கலாரி முறையில் அமைந்த அசைவுக்கு மெருகேற்றிவிட்டன
.
காயத்திரியின் நட்டுவாங்கம் எப்பொழுதும் போல கம்பீரமாக இருந்தது. ஐங்கரனின் வேணுகானம், கோபதிதாசின் வயலினிசை மிக ஒத்திசைவாக இருந்தன. நடனத்தின் சிறப்புக்கு இக்கலைஞர்களின் திறமை இன்றியமையாதிருந்தமை இந்நிகழ்வின் சிறப்பம்சம்.
ஆஞ்சநேயம் என்ற பரதநாட்டிய நிகழ்வை புஷ்பாஞ்சலி, வர்ணம், கீர்த்தனம் என்னும் முறையில் ஆடும் பொழுது ஒரே கருத்து திரும்பத் திரும்ப வருவதை தவிர்க்க முடியாமல் இருக்கும். இதனை ஒரு நாட்டிய நாடகமாகச் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இதனால் சேரனின் நடன அமைப்பாண்மையை குறைப்பது என்றாகாது.
அனுமனும் ராமனும் சந்திப்பது, ராம தூதனாக சீதையிடம் சென்று சூடாமணியை பெற்று ராமனிடம் கையளிப்பது, சேது பந்தனம், சஞ்சீவி பர்வததைக் கொண்டு வந்தது என்று சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடராகக் கொண்டு வந்திருந்தால் சூரியனைப் பழமென்று விழுங்கிய சம்பவத்தைத் திரும்பத் திரும்பக் காட்டியதைத் தவிர்த்திருக்கலாம். கம்பராமயணத்தில் கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் யாவற்றிலும் அனுமனின் பிரபாவம் விரவியிருப்பதை அனுபவித்தவர்களுக்கு இவற்றையும் நடனத்தில் அழகாகச் சேர்த்திருக்கலாமே என்று தோன்றுவதில் வியப்பில்லை. அதே போல மகா பாரதத்திலும் பாரிஜாத மலரைத் தேடிச்சென்ற வீமனை அனுமனின் வால் குறுக்கே கிடந்து தடுத்ததையும் பின்னர் இருவரும் தாங்கள் வாயுபுத்திரர்கள், சகோதரர்கள் என்று உணர்ந்து மகிழ்ந்த்ததையும் கூட இணைத்திருக்கலாம் . மற்றும் அர்ச்சுனனின் கொடியில் இருந்தபடி அனுமன் நேரடியாக கீதோபதேசம் பெற்ற ஞானி .


ராமாயணமும் மகாபாரதமும் எங்கள் வாழ்வோடு ஒன்றிவிட்ட கதைகள். எனவே ராவணேசனைப்  படைத்த சேரன் போன்ற ஒரு சிறந்த கலைஞன் ஏன் இவற்றை சிந்திக்கவில்லை எனப் பார்வையாளர் எதிர்பார்ப்பதில் தவறில்லை என்றே கூற வேண்டும்.
அனுமன் என்றால் துளசிதாசரின் அனுமான் சாலிசா எல்லோருக்கும் நினைவுக்கு வரும். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் துதியாக, அனுமான் சாலிசாவிலிருந்து ஓரிரு பாடல்களை ஒலித்தால் , நன்றாக இருக்கும். பிரபல பாடகர்கள் பலர் இவற்றைத் தமிழிலேயும் பாடியுள்ளார்கள். அதேபோல நிறைவு செய்யும் போதும் தில்லானாவின் பின்னர் "சரணம் சரணம்" என்னும் பஜனைத் தொடர்ந்து மங்களம் வந்தால் அனுமனின் "காதலாகிக் கசிந்துருகும்" ராமபக்தி அந்த சரணாகதி தர்மம் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.


சேரனின் சிறந்த நடன அமைப்பாண்மையில் அமைந்த ஆஞ்சநேயம் மீண்டும் மீண்டும் மேடையேற்றப்படும் பொழுது மென்மேலும் மெருகடையும் என்பதில் ஐயமில்லை. நிகழ்ச்சியின் நிறைவில் உமா ராஜ் மேடையிலே தோன்றி PATCH WORK அமைப்பைபற்றி நல்லதொரு விளக்கத்தை தந்தது மனதைத் தொட்டது. "நான் இவரின் தொண்டை மதர் தெரேசாவின் சேவையாகவே காண்கிறேன்" என்று அவரை மேடைக்கு வழிகாட்டி அழைத்து வந்த திரு ஜெகன் அவர்கள் வர்ணித்த போது எல்லோரையும் கண்கலங்க வைத்தது. இன்றைய புலம் பெயர் இளையோர் பலர் தாயகக் கனவுகளைச் சுமந்த வண்ணம் தமது உறவுகளுக்காக ஆற்றிவரும் தொண்டு நம்பிக்கை தருகிறது,


"தன்னலமற்ற அன்பு" கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது இவையே அனுமன் என்பதன் தத்துவம். எனவே PATCH WORK அமைப்புக்காக ஆஞ்சநேயம் சாலப் பொருத்தமே.


மெல்பேர்ண் நாட்டுப்பற்றாளர் நாள்

.


அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநிலத்தில் சென்ற  ஞாயிற்றுக்கிழமை 25 – 04 – 2010 அன்று நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.







அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் பொதுச்சுடரேற்றல், ஈகச்சுடரேற்றல், தொடர்ந்து வந்திருந்த உறவுகள் அனைவரும் உணர்வுடன் சகல நாட்டுப்பற்றாளர்களுக்குமான மலர் வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். மாலை ஆறு மணிக்கு மெல்பேண் வன்ரேனா சென்யூட்ஸ் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்திய இராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராய் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து மரணித்த அன்னை பூபதியின் நினைவுடன் சகல நாட்டுப் பற்றாளர்களையும் நினவுகூரும் இந்நிகழ்வில் நாட்டுப்பற்றாளர் நாள் தொடர்பான நினைவுரைகள் மற்றும் கவிதை ஆகியன இடம்பெற்றன.


மேலும் இந்நிகழ்வில் அன்னை பூபதி நினைவான காணொலி காட்சிகளும், எழுச்சிபாடல்களும் தமிழீழ தேசிய தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் தாயகத்தில் நடைபெற்ற இறுதிவணக்க நிகழ்வும் காணொலி காட்சியாகவும் காண்பிக்கப்பட்டது.


அவுஸ்திரேலிய போர்வீரர்களை நினைவுகொள்ளும் நாளான அன்சாக் தினமன்று நாட்டுப்பற்றாளர் நாள் இடம்பெற்றமையும் அதில் இருநூற்றி ஜம்பது வரையிலான மக்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


அதனை தொடர்ந்து அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு முடிவுகள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பையும், அதனை சிறப்பாக செயற்படுத்த உதவிய அனைத்து அமைப்புக்களுக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டு தெரிவித்து முன்னனி செயற்பாட்டாளர்களில் ஒருவரான ச.டொமினிக் உரையாற்றினார்.


எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பிலும், நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கியத்துவம் குறித்தும் அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டுக்குழுவின் அவுஸ்திரேலிய பிரதிநிதியான மருத்துவ கலாநிதி சிவேன் சீவநாயகம் விரிவாக விளக்கவுரையாற்றினார்.


நாட்டுப்பற்றாளர் நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டிகளில் சிறுவர்கள் பலர் பங்குபற்றினர். இப்போட்டிகளில் பேச்சுப்போட்டிகளும் பொது அறிவுப்போட்டிகளும் இடம்பெற்றிருந்தன. பொதுத்திறன் போட்டியில் பங்குபற்றிய பண்டாரவன்னியன் அணி வெற்றிக்கேடயத்தை பெற்றுக்கொண்டது.


தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்களை நாட்டுப்பற்றாளர்களின் குடும்பத்தவரினால் வழங்கப்பட்டதை தொடர்ந்து, தேசிய கொடியிறக்கத்துடன் இரவு 8.30 மணியளவில் தமிழீழத்திற்கான உறுதியுரையுடன் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

4 comments:

Satchithananthan said...

திங்கள் தோறும் மலரும் தமிழ்முரசே உன் சேவைக்குத் தலை சாய்க்கிறேன். ஒரு வருடம் வருவது பெரிய விடயமில்லை இனியும் தொடர்ந்து கொண்டு செல்வதுதான் முக்கியமானது. வாசகர்கள் கூடிவிட்டார்கள் என்று பெருமைப் படுங்கள் அதுவே கர்வமாக மாறாது இருக்க பார்த்துக்கொள்ளுங்கள். சரியெப்படுபவை சொல்லப்படட்டும் பிழையெனப்படுபவை தவிர்க்கப்படட்டும். நல்ல இலக்கியமும் உள்ளுர் செய்திகளும் உடனுக்குடன் வருவது எம்மை கவர்ந்துள்ளது. குற்றம் கூறுவதல்ல இருந்தாலும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது எழுத்துப் பிழைகளை கவனியுங்கள். வாழ்க நீடு.
ஆர்வமுள்ள வாசகன்
சச்சிதானந்தன்

karuppy said...

அன்பு முரசுக்கு அன்பு வணக்கங்கள்
நல்லதோர் வீணையை நலமாக மீட்டும் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள் .
நாட்டு நடப்புகள், சுவையான கவிதைகள் , கதைகள், கட்டுரைகளை அவ்வப்போது சுடச் சுட தந்து கொண்டிருக்கும் உங்கள் சேவை தொடரட்டும்.
சிறப்பாக சமன் செய் கோலாக ஒரு புறமும் சாராது சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லியும் கூடாதவற்றை நாகரீகமாக தவிர்த்தும் நீங்கள் பேணும் ஊடக தர்மத்திற்கு
எனது சிரம் சாய்க்கின்றேன் .
தொடரட்டும் உங்கள் சேவை.
நன்றியுடன்
கறுப்பி

kirrukan said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து டமிழ்முரசு தனது சேவையை எங்களுக்கு தர வேண்டும்.தொடர்ந்து ஒரு வருட காலமாக நானும் இதில் கிருக்கி இருக்கிறேன்.கிறுக்க அனுமதித்தமைக்கு நன்றிகள் ,தொடர்ந்து பல முரசுகள் கொட்டவேண்டும் ....

கிறுக்குடன்
கிறுக்கன்

Tamilmurasu said...

நன்றி சச்சிதானந்தன். தவறுகளையும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி . எழுத்துப்பிழைகள் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றோம். எந்த சமாதானமும் சொல்லமுடியாது. முயற்சிக்கிறோம். தமிழ்முரசு ஆசிரியர் குழுவில் இன்னும் பலர் இணைவதை விரும்புகின்றோம் விருப்பமுள்ளவர்கள் தயவுசெய்து இணைந்து கொள்ளுங்கள்.முரசு அஞ்சலில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். நீங்கள் ஏதாவது எழுதலாமே?

நன்றி கறுப்பி நீங்கள் தொடர்ந்து வாசித்து குறிப்புப் போடுவதற்கு நன்றி. உங்களுக்குப் பிடித்த கலர் கறுப்போ?

நன்றி கிறுக்கன். கிறுக்கன் ஒரு வாரம் கிறுக்கவில்லையென்றால் நாங்கள் சோர்ந்து விடுகின்றோம். வாசகர்களும் கிறுக்கனை எதிர்பார்ப்பது புரிகிறது. இப்போது போல் எப்போதும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.சில வேளைகளில் சாட்டை அடிபோல் இருக்கும் அதுதான் உண்மையில் எங்களுக்குத் தேவையானது.தவறாக செல்லாமல் இருக்கும் கடிவாளம் என்று எடுக்கலாமா?

கருத்தைப்பதியுங்கள் வாசகர்களே. அது விமர்சனமாக இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்

நன்றி
ஆசிரியர் குழு