1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு

ஆக்கம்: டி.பி.எஸ். ஜெயராஜ்

“ இப்படியாக அடக்கியாள்பவர்களின் வன்முறையினால் ஒடுக்கப் பட்டவர்களின் வன்முறையற்ற போராட்டம் அமைதியாக்கப் பட்டது சிங்கள குறுகியவாதத்தின் ஆயுத பலம் தமிழர்களின் அகிம்சா வாதத்தை நசுக்கியழித்தது. இந்தச் சரித்திரப் பிரசித்தியான நிகழ்வு தமிழ் தேசியப் போராட்டத்தின் மிக முக்கியமான அரசியல் அனுபவத்திற்கு தொடக்கம் குறித்தது.அந்த அனுபவம் தமிழர்களுக்குப் போதித்தது வன்முறையற்ற நீதியான போராட்டத்தின் சக்தியால், இனத் துவேசமானதும் மனிதத்தன்மையையும் நாகரிகப் பழக்க வழக்கங்களினதும் எல்லா ஒழுங்கு நெறிகளின் தரங்களையும் தாண்டி நிற்கும் அடக்கியாளும் வன்முறையான இராணுவ சக்தியை உட்கொள்ள முடியாது என்பதை. இந்த நிகழ்ச்சியில் அடக்குமுறையாளர்கள் ஊக்குவித்த கருத்தானது,இராணுவ பயங்கரவாதம்தான் தமிழர்களின் கோரிக்கைக்கும் மற்றும் வன்முறையற்ற தன்மையை அடித்தளமாகக் கொண்ட தமிழர்களின் அரசியல் கிளர்ச்சிக்குமான ஒரே பதில்,மேலும் துப்பாக்கிக் குழல்களின் முன்பாக அது பலவீனமானதும் கையாலாகானதுமான ஒரு கட்டமைப்பு” – அன்ரன் பாலசிங்கம்


“விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்” எனும் நூலில் இருந்து.

பெப்ரவரி 20 1961 இழந்த உரிமைகளை மீளப் பெறுவதற்காக உருவான ஸ்ரீலங்கா தமிழ் அரசியல் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான நாள்.

50 வருடங்களுக்கு முன்னர் இந்த ஒரு நாளில்தான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான ஆங்கிலத்தில் பெடரல் பார்ட்டி (எப்.பி) என அழைக்கப்படும். இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ஐ.ரி.ஏ.கே) உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக வன்;முறையற்ற நேரடிப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்தது.

வருடக்கணக்காக நடந்துவந்த தமிழ் போராளிகளின் கொடூரமான ஆயதப் போராட்டம், இந்த நாட்டில் தமிழர்களின் அரசியல் இயல்பாகவே இத்தகைய வன்முறை நிறைந்தது என்கிற ஒரு எண்ணத்தை தோற்றுவிக்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தமிழர்களின் பிரச்சனைகளின் அடிப்படைக் காரணமான விடயங்களைப் புறந்தள்ளி இந்தப் பிரச்சனை சட்டம் ஒழுங்கு சம்பந்தமான ஒரு விடயம் மட்டுமே எனச் சித்தரித்துக் காட்டக்கூட இந்த வன்முறையைப் பரிமாறியிருக்கலாம். இதில் மறக்கடிக்கப்பட்டு,அவகணிக்கப்பட்டு அல்லது வசதிப்படி கவனிக்காமல் விடப்பட்ட உண்மை என்னவென்றால்,மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சுதந்திரம் பெற்ற ஸ்ரீலங்காவில் தமிழர்களின் அரசியல் போராட்டமானது அடிப்படையில் வன்முறையற்றதும் ,மகாத்மா காந்தி எனும் வன்முறைக்கு எதிரான மாபெரும் பரிசுத்தவானால் தெளிவாக எடுத்துக் கூறப்பட்ட வன்முறையையோ இரத்தம் சிந்துவதையோ முற்றாகத் தவிர்க்கும் அகிம்சை எனும் அறவழிக் கொள்கையை கடைப்பிடித்து நடத்தப்பட்டு வந்தது என்பதை.

இதில் பலராலும் விவாதிக்கப்பட்டு வருவது, தமிழர்களின் வன்முறையற்ற போராட்டம் தோல்வியுற்ற படியாலேயே வழக்கத்திலிருந்து வரும் அரசியல் வியாதியை குணப்படுத்துவதற்கு தோன்றிய ஒரு வழிதான் விரக்தியுற்ற தமிழ் இளந் தலைமுறையினரைத் துப்பாக்கிகளைத் தூக்க வைத்தது என்று.

இதன் தகுதிகள்; அல்லது இந்த விவாதம் எவ்வாறிருப்பினும் 20ம் நூற்றாண்டின் கடைசி முக்கால் பகுதி; ஸ்ரீலங்காத் தமிழர்களால் நடத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகளால் நிறைந்து இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஹர்த்தால், சத்தியாக்கிரகம், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபவனிகள், ஊர்வலங்கள், திரளான பிரச்சாரங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், துக்க தினங்கள், சட்டமறுப்புகள், புறக்கணிப்புகள் என்று அந்நாட்களில் தமிழ் அரசியலில் ஒழுங்கான சம்பவங்களாக இருந்தன.

இந்த வன்முறையற்ற அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களின் உச்சக்கட்ட அடையாளமாகவிருந்தது 1961 பெப்ரவரி 20ல் நடத்தப்பட்ட மிகப் பெரிய சத்தியாக்கிரக இயக்கம்தான்.

ஸ்ரீலங்காத் தமிழர்கள் எல்லோருமே பெருமைப் படக்கூடிய அந்த நிகழ்ச்சியினால்அடைந்த வெற்றி சிறிய,ஆயுதம் ஏந்தாத பாதுகாப்பில்லாத மக்களின் அர்ப்பணிப்புடன் ஐக்கியப்பட்ட முயற்சியினால் கொழும்பின் நிருவாக இயந்திரத்தை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் இராணுவத்தின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் வரை இயங்காமல் முடக்கிய சம்பவம்தான்.


முன்னறிவிப்பு

ஆயுதப் படையினரை ஈடுபடுத்தியது, தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வட மாகாணத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தை அதிகரித்து இராணுவமயமாக்கலை தீவிரமயமாக்கும் எதிர்காலத் திட்டத்திற்கு ஒரு விதமான முன்னறிவிப்பு ஆகும்.

இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஆயுதப் படையினரின் பிரசன்னனம் எங்கும் படர்ந்து பரவியுள்ளது.

ஒரு அரசாங்கத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் அந்த மாகாணங்களில் மறுக்கப் பட்டதாகவும் அழிக்கப் பட்டதாகவும் உள்ளது.

1961 சத்தியாக்கிரகம் அதன் வன்முறையற்ற அடிப்படைத் தன்மைக்கு அப்பால் தமிழ் அரசியலின் எதிர்காலப் பாடங்களுக்கான அறிகுறிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. எதிர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த சில இளைஞர்களின் அமைதியற்ற தன்மை சாத்தியமான இராணுவ அதிகரிப்பின் அடையாளத்தை வெளிப்படுத்தியது. இந்தப் பிரச்சார வேளையில் குடியியல் சட்டமறுப்பு நடவடிக்கையாக அரம்பிக்கப்பட்ட சமாந்தர தபால்சேவைகள் போன்றவை எதிர்காலத்தில் மலரப்போகும் பிரிவினைவாதத்தை முன்கூட்டியே சுட்டிக்காட்டின. வருந்தத் தக்க விதமாக இந்த முழு முயற்சிகளுக்கும் பலனற்ற விதத்தில் 1960 ஜூலை மாதத்தில் நடந்த தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமிழரசுக் கட்சி ஒரு தேர்தல் கூட்டை வைத்துக் கொண்டதன் பயனாக திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா அதிகாரத்துக்கு வந்திருந்தார்.

அந்த நேரான தன்மைக்கு மாறாக நிகழ்வுகள் மோசமான திருப்பத்தை அடைந்தன, ஒரு வருடத்துக்குள் சிங்களவர்கள் மற்றும் தமிழர்களின் பிரதான அரசியற் கட்சிகள் ஒருவரை ஒருவர் முட்டாளாக்கிக் கொண்டனர். இந்த அரசியல் முறிவின் விளைவாக எதிர்வாத அரசியல் 1961 ஆண்டின் சத்தியாக்கிரகத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

முக்கியத்துவம்

இந்த விவகாரங்களின் தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின், தமிழரசுக் கட்சி டட்லி சேனநாயக்காவின் அரசாங்கத்தை விழுத்துவதிலும் மற்றம் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தை உருவாக்குவதிலும் முக்கியமான பாத்திரத்தை வகித்த 1960 மார்ச் மற்றும் ஜூலையில் நடந்த இரண்டு பொதுத் தேர்தல்களையும் பற்றி ஆழமாக அலச வேண்டிய தேவை உள்ளது.

தமிழரசுக் கட்சியை தன்முழு சக்தியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகப் பிரயோகிக்கத் தூண்டியது எது? மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – தமிழரசுக் கட்சி உறவு முறிவடைவதைத் தூண்டியது எது? என்பன பற்றிய முன்னேற்றங்களை இது சம்பந்தமாக விபரமாக பரிசீலிப்பது பயனுள்ளது.

1961 சத்தியாக்கிரகம் மேடையேற்றப் பட்டதன் பின்னணியை முற்றாகப் பாராட்ட வேண்டுமாயின் கடந்து போய்விட்ட அந்த நிகழ்வுகளை ஆராய்வது இந்தக் கட்டத்தில் மிகவும் அவசியம்.

பல மறைபுதிரான அரசியல் பேரங்கள் 1960 மார்ச் மற்றும் ஜூலை தேர்தல்களுக்கு இடையே நடந்தேறின. இந்தக் காட்சி மாற்றங்களுக்குப் பின்னால் தமிழரசுக் கட்சி மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது. 1961 சத்தியாக்கிரகத்தை நடத்த வேண்டிய அரசியல் சூழலுக்கு வழியமைத்த காரணத்தைக் கண்டறிய வேண்டுமாயின் இந்தச் சம்பவங்களை மிக நுணுக்கமாகப் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமும் எதிர்க் கட்சியான தமிழரசுக் கட்சியும் சத்தியாக்கிரக கொந்தளிப்பின்போது காட்டிய வேகமும் பிடிவாதமுமான சூழலை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் 1960 மார்ச்க்கும் ஜூலைக்கும் இடையே நடந்த அரசியல் ஊடல்களையும் கூடல்களையும் நன்கு பரிசீலித்தால் மட்டுமே முடியும்.

செப்டம்பர் 1959 ல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டது சுயாதீனச் சிந்தனையாளரான டபிள்யு. தகநாயக்கா பிரதமராக வருவதற்கு வழிகோலியது. எப்படியாயினும் அவரது பதவியின் ஆயுள் குறுகியதாகி 1960 மார்ச் மாதத்தில் புதிய தேர்தல்கள் நடைபெற்றன. முதல்தடவையாக் பருத்தித்துறை தொடக்கம் தெவிநுவர வரையான நாட்டின் எல்லாப் பாகங்களிலும் தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெற்றன.

பாராளுமன்றத்திலுள்ள ஆசனங்களின் தொகை 101 லிருந்து 157 ஆக அதிகரிக்கப் பட்டது. இதில் 6 ஆசனங்கள் நியமன அங்கத்தவர்களுக்கும் மிகுதி 151 ஆசனங்களும் 145 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களுக்குமாக இருந்தது.தேர்தல் தொகுதிகளான, கொழும்பு தெற்கு, அக்குறணை,மட்டக்களப்பு,மற்றும் மூதூர் ஆகியவை இரட்டை அங்கத்துவத் தொகுதிகளாகவும்,கொழும்பு மத்தி மூன்று அங்கத்துவத் தொகுதியாகவும் இருந்தன.

பிரச்சாரம்

1953 ல் அரசியலில் இருந்து சுயமாக ஓய்வு பெற்றிருந்த டட்லி சேனநாயக்கா 1957 ல் அரசியலுக்கு மறுபிரவேசம் செய்தார்.1960 தேர்தல்களில் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தலமை தாங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சீ.பி.டீ.சில்வா தலமை ஏற்றிருந்தார்.

பண்டாரநாயக்காவின் விதவை சிறிமா தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த போது பிரதான மேடைக்கு வரவில்லை ஆனால் கடைசி நேரத்தில் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

பிரதமர் பதவிக்காக எதிர்பார்க்கப்பட்ட மற்றவர்கள் மகாஜன எக்ஸத் பெரமுன (எம்.ஈ.பி) கட்சியைச் சேர்ந்த பிலிப் குணவர்தன,லங்கா சமசமாஜக் கட்சியை (எல்.எஸ்.எஸ்.பி) சேர்ந்த கலாநிதி.என்.எம்.பெரேரா, மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காபந்து அரசாங்கப் பிரதமராகிய லங்கா பிரஜாதந்திரவாதி பெரமுனயைச்(எல்.பி.பி) சேர்ந்த விஜயானந்த தகநாயக்கா ஆகியோராவர். முடிவுகள் அறிவிக்கப் பட்டபோது அது ஒரு தொங்கு பாராளுமன்றமாக அமைந்தது. ஐதேக 50 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 46 ஆசனங்களையும் பெற்றிருந்தன. எல்.எஸ்.எஸ்.பி மற்றும் எம்.ஈ.பி ஆகியவை தலா 10 ஆசனங்களைப் பெற்றிருந்தன.மூன்றாவது பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சி 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது. புதிய பாராளுமன்றத்தின் ஆட்சிபீட அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்கியது.

தமிழரசுக்கட்சி வடமாகாணத்தில், காங்கேசன்துறை, வட்டுக்கோட்டை, நல்லூர், சாவகச்சேரி, பருத்தித்துறை, உடுவில் ஊர்காவற்றுறை, கோப்பாய், கிளிநொச்சி, மற்றும் மன்னார் ஆகிய இடங்களிலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, திருகோணமலை, மற்றும் மூதூர் ஆகிய இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தேசாதிபதி சேர் ஒலிவர் குணதிலக ஐதேக மீது ஒருவித பக்கச்சார்பு கொண்டபடியால் பாராளுமன்றில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி என்ற காரணத்தைக் காட்டி புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி டட்லி சேனநாயக்காவுக்கு அழைப்பு விடுத்தார்.எப்படியாயினும் நிலையான அரசை நிறுவுவதற்குத் தேவையான பெரும்பான்மையை டட்லியால் உருவாக்க முடியுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

ஆறு நியமன உறுப்பினர்கள் பிரதமரால் நியமிக்கப் படடிருந்தும் சில சுயேச்சைகள் மற்றும் எல.பி.பியில் இருந்து கட்சி தாவிய சிலரின் ஆதரவு இருந்தும் கூட 157 அங்கத்தவர்களில் டட்லியிடமிருந்தவர்கள் 60 – 61 பேர்களே. ஆனால் தமிழரசுக்கட்சியின் 15 அங்கத்தவர்களின் ஆதரவை பெற முடியுமாகவிருந்தால் அது சாத்தியமாக இருந்திருக்கும் ஆனால் ஐதேக யின் தலைவர் மேலும் சில சுயேச்சை அங்கத்தவர்களின் ஆதரவை சேகரிக்க முடியுமென்பதிலும் சில சிறிய கட்சிகளை உடைத்து ஆசைகாட்டி அங்கத்தவர்களைப் பெறமுடியும் என்பதில் நன்னம்பிக்கை கொண்டவராக இருந்தார்.

செல்வநாயகம்

இப்படியாக செல்வநாயகத்தின் ஆதரவு நிiயான அரசாங்க மொன்றை அமைக்க சேனநாயக்காவுக்கு மிக அவசியமாக தேவைப்பட்டது. அதே போல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்கும்படி கோரப்பட்டால் அதற்கும் தமிழரசுக்கட்சியின் ஆதரவு சரிசமனாகத் தேவைப்படும்.

எனவே வெற்றியாளரான செல்வநாயகம் பலாலியிலிருந்து இரத்மலானைக்குப் பறந்தார். அரசியலில் அவர் மிகமிக வேண்டப்பட்டவராக இருந்தார். பிரபலமான மனிதர்களாகிய முன்னாள் பிரதமர் சேர் ஜோண் கொத்தலாவல,முன்னாள் அரச சபா அங்கத்தவர் சேர் அருணாசலம் மகாதேவா,ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சேர் எட்வர்டு; ஜெயதிலக, முன்னாள் நீதியமைச்சரும் செனட்சபைத் தலைவருமான சேர் லலித ராஜபக்ஸ ஆகியோர் செல்லநாயகத்துடன் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்து கொண்டு ஐதேக சார்பாக டட்லி சேனநாயக்காவுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்தனர்.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம்; ஐதேக, தனக்கு எதிராகப் போட்டி போட முடியாத ஒரு துருப்புச் சீட்டு கைவசம் இருந்தது. அதுதான் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவும் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் ஜூன் 1957ல் கைச்சாத்திட்ட பண்டா – செல்வா அல்லது பி – சீ ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது, வடக்கில் ஒரு பிரதேச சபையும் கிழக்கில் இரண்டு பிரதேச சபைகளும் ஒன்றிணையத் தக்க பிரிவுகளுடன் அமைப்பது.மேலும் நீதிமன்றத்திலும் நிருவாகத்திலும் சாத்தியமான அளவுகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது, மேலும் குடியேற்றங்களுக்கு எல்லைக் கோடுகளை அமைப்பது என்பன.

இந்த பி – சீ ஒப்பந்தத்துக்கு ஐதேக வினாலும் புத்த மத குருமாரின் ஒரு பகுதியினரிடமிருந்தும் கிளம்பிய எதிர்ப்பினால் பண்டாரநாயக்கா அதை தன்னிச்சையாக நிராகரிக்க வேண்டிய நிலைக்கு வற்புறுத்தப் பட்டார்.

இரத்மலானையில் வந்திறங்கிய செல்வநாயகத்துக்காக ஒரு எதிர்பாராத விருந்தாளி காத்திருந்தார். அது வேறுயாருமல்ல முன்னாள் மலையகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராமானுஜன் என்பவர்தான். அவர் அங்கே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பிரதிநிதியாக வந்திருந்தார். அந்த நேரத்தில் டட்லி சேனநாயக்கா தமிழ் தோட்டத்தொழில் தலைவர் எஸ்பி வைத்திலிங்கத்துடன் நெருக்கமாக இருந்தார், வளங்களை உடைய தொண்டமான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழரசுக்கட்சியுடன் ஒரு பொதுவான இணக்கப் பாட்டை எட்டியிருந்தது, அதாவது ஸ்ரீலங்காத் தமிழ் கட்சி பதவியிலிருக்கும் எந்த அரசாங்கத்துடன் பேரம் பேசும் போது மலையகத் தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த இணக்கப்பாடு.அதன்படி இரண்டு கடசிகளிடையேயும் அரசியல் உறவு ஏற்பட்டிருந்தது. ராமானுஜன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து ஒரு எதிர்பாராத விருந்தாளியை சந்தித்துச் செல்லும்படி செல்வநாயகத்தை வற்புறுத்தினார். செல்வநாயகமும் அதற்கு இணங்கினார்.அங்கு தொண்டமானுடன் அவருக்காகக் காத்திருந்தது கல்வியாளரான கலாநிதி.பதியுதீன் மகமூத்.

கலாநிதி.பதியுதீன் மகமூத் பின்னாளில் திருமதி. பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகக் கடமையாற்றினார். பண்டாரநாயக்காவின் குடும்பத்துக்கு மிக நெருங்கியவரான அவர் சிறிமாவை சுறுசுறுப்பான அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய பாத்திரங்களாக இருந்தவர்களில் ஒருவர்.

பண்டா – செல்வா ஒப்பந்தம்

கலாநிதி.பதியுதீன் மகமூத், செல்வநாயகத்திடம் n;சான்னது, தமிழரசுக் கட்சி ஐதேக வுக்கு ஆதரவளிக்காமல் விலகியிருக்குமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு புத்துயிரளிக்கவும், காணி மற்றும் குடியேற்றங்களில்அதிக அதிகாரங்களுடன் கூடிய பிரதேச சபைகளை அமைப்பதற்கும் தயாராகவுள்ளது என்று. அவர் மேலும் உறுதியளித்தது,தமிழை நிருவாக மற்றும் சட்ட கோளங்களில் அமல்படுத்த தேவையான முற்போக்கான சலுகைத் திட்டங்களை. கூர்மதியாளரான மகமூத் சுட்டிக் காட்டியது பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஐதேக யால் தமிழரசுக் கட்சிக்கு வழங்க முடியாது என்பதை.

இதன்படி செல்வநாயகம், டட்லி சேனநாயக்காவுடன் பேச்சு வார்த்ததையில் ஈடுபட்டபோது பண்டா – செல்வா ஒப்பந்தத்தைப் பற்றிய அறிவை அதன் பிரதான வாயிலாகப் பலப்படுத்திக் கொண்டார்.அதைத்தவிர டட்லி சேனநாயக்கா தமிழரசுக் கட்சியுடன் பேரம்பேசத் தொடங்கு முன்னரே அதன் ஆதரவு தனக்கிருப்பதாக தேசாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக வெளியான பூரணமற்ற ஊடகச் செய்திகளால் தமிழரசுக் கட்சி சற்று வெறுப்புக் கொண்டிருந்தது.

டட்லி சேனநாயக்காவுடனான கலந்துரையாடல்களில் தமிழரசுக் கட்சித் தலைவர் நான்கு விரிவான கோரிக்கைகளை வாய்மொழியாகச் சமர்ப்பித்தார்.

முதலாவது: பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் மனக் கணக்கு போடப்பட்டிருந்த நில உரிமை மாற்றம் மற்றும் அபிவிருத்தி அதிகாரத்துடன் கூடிய பிரதேச சபைகளை நிறுவுதல்.

இரண்டாவது:நிருவாகத்திலும்,நீதி மன்றுகளிலும் தமிழ் மொழிக்குச் சம உரிமை.

மூன்றாவது: மலையகத் தமிழர்கள் இழந்துள்ள பிரஜா உரிமை மற்றும் வாக்குரிமைகளை வழங்கத் தக்க விதத்தில் விரைவான விரிவாக்கமுள்ள பதிவுகளை மேற்nகொள்ளத் தக்கதாக 1948ம் ஆண்டு இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் இல.18 ஐத் திருத்தியமைத்தல்.

நான்காவது:ஆறு நியமன அங்கத்தவர்களில் நான்கினை மலையகத் தமிழ் பிரதிநிதிகளுக்கு வழங்குதல்.

தேவைப்பட்டால் இந்தக் கோரிக்கைகளில் சிறிதளவு விட்டுக் கொடுப்பிற்கு தமிழரசுக் கட்சி தயாராக உள்ளதாகவும் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் பிரசவ வேதனை போன்ற துயரத்தை தணிக்க டட்லி சேனநாயக்கா நேர்மையான முயற்சிகளை மேற்கொள்வாராயின் தமிழரசுக் கட்சி ஐதேக வுக்கு ஆதரவு வழங்கத் தயார் என செல்வநாயகம், டட்லி சேனநாயக்காவிடம் தெரிவித்தார்.

சேனநாயக்கா,செல்வநாயகத்திடம் விசாரித்த கோரிக்கைகளை தட்டிக் கழிக்காமலேயே கூட்டம் முடிவுற்றது. அடுத்த கூட்டம் மார்ச் 26 ந்திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப் பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திரும்பவும் வேகமாக இயங்கி டட்லியை பின்தள்ளியது.

பீலிக்ஸ். ஆர். டி. பண்டாரநாயக்கா

மார்ச் 23ல் செல்வநாயகத்திடம் ஒரு இளம் விருந்தாளி வந்திருந்தார். அது தொம்பே தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் மருமகனான பீலிக்ஸ். ஆர். டி. பண்டாரநாயக்கா. திறமையான இளம் சட்டவாளரான அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகக் கருதப்பட்டார் ,பீலிக்ஸின் தந்தையான உயர் நீதிமன்ற நீதிபதி செல்வநாயகத்தின் நெருங்கிய நண்பராவார்.

எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவுக்கும் மற்றும் செல்வநாயகத்திற்கும் இடையே 1957ல் ஏற்படுத்தப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் தொடர்ந்து பின்பற்றப் படும்.அந்த ஒப்பந்தம் முற்றாக நடைமுறைப் படுத்தப் படுவதாகவும் பிரதேச சபைகள் நிறுவப்படும் என்றும் பீலிக்ஸ் செல்வநாயகத்துக்கு உறுதியளித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது சிம்மாசனப் பிரசங்கத்தில் இதைப்பற்றிய கொள்கை விளக்கம் ஒன்றையும் வழங்கும் என்று பீலிக்ஸ் செல்வாவுக்கு மேலும் சொன்னார்.

சேனநாயக்கா, செல்வநாயகத்தை மார்ச் 26ல் சந்தித்த போது ஐதேக யின் தலைவர் தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளுக்கு சம்மதிப்பதில் தனக்குள்ள கஷ்டத்தைப் பற்றி விளக்கினார். சாத்தியப் படுமானால் கோரிக்கைகளின் வீரியத்தை சற்றே குறைக்கும்படி அவர் செல்வநாயகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழரசுக் கட்சியால் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளின் சம அந்தஸ்து கோரிக்கையை கைவிட முடியும் ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிருவாக மற்றும் சட்டக் கோளங்களின் நியாயமான பயன்பாட்டுக்காகத் தமிழை ஒரு அரச கரும மொழியாக மாற்றும் சில விதிகளை அமல் படுத்தினால் தமிழரசுக் கட்சி திருப்திப்படும் என்று செல்வா டட்லியிடம் தெரிவித்தார்.மலையகத் தமிழ் பிரதிநிதிகளின் கோரப்பட்;ட நான்கு பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கும் தமிழரசுக் கட்சி தயாராக இருந்தது.

எப்படியாயினும் தமிழரசுக் கட்சி மற்ற இரண்டு கோரிக்கைகளான பிரதேச சபைகள் மற்றும் பிரஜாவுரிமைச் சட்டம் ஆகியவற்றில் எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லை. எனவே சேனநாயக்கா தமிழரசுக் கட்சியின் இறுதிக் கோரிக்கைகளை எழுத்து மூலம் தரும்படி கோரினார். அது அன்றைய தினமே நடந்தேறியது.

மார்ச் 27 ந்திகதி சேனநாயக்கா, செல்வநாயகத்திடம் தொடர்பு கொண்டு ஐதேக நியமித்த அங்கத்தவரை சபாநாயகராகத் தெரிவு செய்வதற்கு ஆதரவு வழங்கும்படி கோரினார். கட்சி தனது ஆதரவினை எதிர்கட்சிக்கு வழங்குவதற்கு சம்மதித்துவிட்டது எனக்கூறி செல்வா அதை நிராகரித்து விட்டார்.

அதன் தொடர்ச்சியாக எதிர்கட்சி வேட்பாளர் ரி.பி. சுபசிங்க அரசாங்க வேட்பாளர் சேர் அல்பட் பீரிசினை தோற்கடித்தார்.

சேனநாயக்கா, செல்வநாயகத்தை திரும்பவும் மார்ச் 27 மாலையில் சந்தித்தார்..

பிரிவினை

அந்த சந்திப்பில் சேனநாயக்கா, செல்வநாயகத்திடம் மிகவும் அன்புடன் தெரிவித்தது பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் கண்டிருப்பதைப் போன்ற பிரதேச சபைகளை நிறுவுவதற்கு தன்னால் உதவி செய்ய முடியாது,ஏனெனில் அது பிரினைக்கான அடிக்கல் நாட்டப் படுவதாக ஐதேக அதனை கடுமையாக எதிர்த்துள்ளது. அதற்குப் பதிலாக தமிழரசுக் கட்சி அவரை நம்பவேண்டும், அவர் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எதனையும் செய்யப் போவதில்லை என உறுதியும் வழங்கினார்.அத்துடன் அவர் தமிழரசுக் கட்சிக்கு அமைச்சர் பதவிகளையும் வழங்கச் சம்மதித்தார். செல்வநாயகம் அமைச்சர் பதவிகளை நிராகரித்ததுடன் கலந்துரையாடலிருந்தும் பின்வாங்கிக் கொண்டார். கலந்துரையாடல் தோல்வியடைந்து விட்டது என்பது தெளிவாகியது.

இருந்தபோதிலும்; கொழும்பிலுள்ள பிரபலமான தமிழர்களினால் பொதுவாக தமிழரசுக் கட்சியின் மீதும் குறிப்பாக செல்வநாயகத்தின் மீது டட்லி சேனநாயக்கா அரசியலில் ஒரு கனவான் எனவே நிபந்தனையின்றி ஆதரவு வழங்கவேண்டும் என்று தொடர்ச்சியான அழுத்தங்கள் பிரயோகிக்கப் பட்டன.

அந்த அழுத்தங்களை எதிர்த்து நிற்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக இருந்தது. தமிழரசுக் கட்சி இவ்வாறு பிடிவாதமாக நிற்பதற்கு முக்கியமான ஒரு காரணமிருந்தது, ஏனெனில் கட்சி ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஒரு புரிந்துணர்வை எட்டியிருந்தது.

செல்வாவுக்கும் பீலிக்ஸ_க்கும் இடையே நடந்த ஆரம்பப் பேச்சு வார்த்தைகளுக்கு புறமே, சி.பி.டீ. சில்வா,மைத்திரிபால சேனநாயக்க, ஏ.பி. ஜெயசூரிய மற்றும் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா அடங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ தூதுக்குழு ஒன்றும் செல்வநாயகத்தின் தலமையிலான தமிழரசுக் கட்சி குழுவினரைச் சந்தித்திருந்தது.

செல்வநாயகம் ஐதேக யிடம் சமர்ப்பித்த அதே நான்கு கோரிக்கைகளையுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிடமும் முன்வைத்தார். எஸ்.எல்.எப்.பி தமிழரசுக் கட்சியுடன் சம்பிரதாயமான எந்த இணக்கப்பாட்டுக்கும் வரமுடியாது என ஆரம்பத்திலேயே அறிவித்தருந்தது. பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு இருந்த சிங்கள எதிர்ப்புச் சரித்திரத்தைக் கூறி இன்னுமொரு உத்தியோகபூர்வ ஒப்பந்தத்தை திரும்பவும் மேற்கொள்ளுவது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதையும் விளக்கியிருந்தது. ஆனால் எதிர்பார்த்திருக்கும் ஐதேக அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு அரசாங்கம் அமைப்பதற்கு கட்சிக்கு அழைப்புக் கிடைத்தால் அப்போது கட்சி ஆற்றவிருக்கம் சிம்மாசனப் பிரசங்கத்தில் கொள்கை விளக்க அறிக்கையாக தமிழரசுக் கட்சியினால் எழுப்பப் பட்ட விடயங்களை அறிவிப்பதாக எஸ்.எல்.எப்.பி தெரிவித்திருந்தது.

மாவட்ட சபைகள்

தமக்கு முன்பாக எழுப்பப் பட்ட நான்கு பிரச்சனைகளிலும் சீ,பி.டி சில்வா தலைமையிலான எஸ்.எல்.எப்.பி தூதுக்குழவினர் பீலிக்ஸ் ஏற்கனவே உறுதியளித்த நிலையிலிருந்து சிறிது மாறுபட்டிருந்தனர். எஸ்.எல்.எப்.பி வடக்கு மற்றும் கிழக்குக்கு பிரதேச சபைகளை நிறுவுவதைத் தாமும் எதிர்ப்பதாக வெளிப்படையாக நேர்மையாகத் தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் பிரதேச சபைகளை நிறுவுவதற்கு தயாராகவிருந்த பண்டாரநாயக்காவின் நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் அந்தக் கருவினை படிப்படியாக அரித்துச் சிதைத்து விட்டன.

பெரும்பான்மையான தமிழர்களுக்கு மட்டும் வடக்கு மற்றும் கிழக்கில் விசேட ஏற்பாடுகளைச் செயற்படுத்துவது சாத்தியமற்றது அது சிங்கள எதிர்ப்பினை தூண்டிவிடும் என எஸ்.எல்.எப்.பி தெரிவித்தது. அதற்கப் பதிலாக எஸ்.எல்.எப்.பி பிரேரித்தது என்னவெனில் ஒவ்வொரு நிருவாக அல்லது இறைவரி மாவட்டங்களுக்கும் தனியான மாவட்ட சபையை நிறுவுதல் என்பதாகும். அப்போது 22 மாவட்டங்கள் இருந்தன.ஒவ்வொரு மாவட்ட சபையின் அதிகாரமும் நடைமுறையும் எதிர்பார்க்கப்பட்ட பிரதேச சபையின் குணாதிசயத்தைக் கொண்டிருக்கும்.

யாழ்ப்பாணம்,மன்னார், வவுனியா,திருகோணமலை,மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட சபைகளில் நிருவாகத்தில் தமிழ் ஆதிக்கம் செலுத்தும். எஸ்.எல்.எப்.பி மீண்டும் வலியுறுத்தியது பிரதேச சபைகளுக்கு வழங்கப்படத் தீர்மானித்த அதிகாரங்கள் மாவட்ட சபைகளுக்கும் இருக்குமென்பதை.

மொழிகளைப் பொறுத்த மட்டில் சம அந்தஸ்து வழங்குவதற்கு எஸ்.எல்.எப்.பி தயாராக இருக்கவில்லை.எப்படியாயினும் வடக்கு மற்றும் கிழக்கில் நிருவாக மற்றும் நீதிமன்ற அலுவல்களில் தமிழைப் பயன்படுத்த இயலக்கூடிய நடைமுறைகளுக்கான வழிகளை அறிமுகப் படுத்த அது தயாராக இருந்தது.வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே தமிழ் மொழியின் நியாயமான உபயோகத்தை உறுதி செய்யும் விதிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி செய்யப் பட்டது. பண்டாரநாயக்காவினால் 1958;ல் வழங்கப்பட்டு பாராளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தமிழ் மொழி(விசேட விதிகள்) சட்டம் இதற்கான வழிகாட்டு வரையாகக் கொள்ளப்படும்.

எவ்வாறாயினும் எஸ்.எல்.எப்.பி பிரஜா உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப் படுவதை நிராகரித்தது.அந்த விடயத்தில் அது விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்கவில்லை, ஆனால் நியமன உறுப்பினர்களாக இரண்டு மலையகத் தமிழர்களை தெரிவு செய்ய அது இணக்கம் தெரிவித்தது.

எஸ்.எல்.எப்.பி மேலும் தெரிவித்தது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொண்டமான் நியமன அங்கத்தவராக்கப் படுவார், மலையகத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் அந்த விடயத்தில் அவருடன் உறுதி செய்யப்பட்டு விட்டது என்று.

சிம்மாசனப் பிரசங்கம்

எஸ்.எல்.எப்.பி தெரிவித்தது இந்த விடயங்களில் வழங்கப்பட்ட அனைத்து உத்தரவாதங்களும் உறுதி மொழிகளும் சிம்மாசனப் பிரசங்கத்தின்போது உறுதியான கொள்கை அறிக்கையாக வழங்கப்படும் என்று.எப்படியாயினும் எழுத்து வடிவிலான எந்த இணக்கமோ,ஒப்பந்தமோ இடம் பெறவில்லை.

தனது துருப்புச் சீட்டுக்களை பகிரங்கமாக விரித்துக் காட்டிய பின்னர் எஸ்.எல்.எப்.பி தமிழரசுக் கட்சியிடம் தெரிவித்தது சிங்களக் கட்சி தனது உத்தரவாதத்திலிருந்து தவறுமாயின் தமிழ்க் கட்சிக்கு எப்போதும் சிம்மாசனப் பிரசங்க விவாதத்தின் பின் எதிர்த்து வாக்களிக்கும் ஒரு தெரிவு இருக்கவே இருக்கிறது என்று.

எஸ்.எல்.எப்.பிக்கு தமிழரசுக் கட்சியின் ஆதரவு இல்லாவிட்டால் அரசாங்கம் கவிழ்ந்து விடும்.அப்படியான ஒரு கட்சி தனது வாக்குறுதியில் நேர்மையற்றதாக இருக்காது எனச் சுட்டிக் காட்டப்பட்டது.எஸ்.எல்.எப்.பி சில விடயங்களில் ஏற்கமுடியாத நிலையைக் கொண்டிருந்த போதிலும் தமிழரசுக் கட்சி அதற்கான தனது ஆதரவினை வழங்கி ஐதேக வுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்தது.

முக்கியமான விடயங்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவுடன் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாடு தவிர்க்க முடியாததது என நிரூபணமானது. வைபரீதியாகப் பாராளுமன்றம் ஏப்ரல் 19ந்திகதி ஆரம்பிக்கப் பட்டது.சிம்மாசனப் பிரசங்க விவாதம் ஏப்ரல் 20ந்திகதி ஆரம்பமானது.மூன்றாவதும் இறுதியானதுமான நாளன்று செல்வநாயகம் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்,அதில் ஐதேக வை காரசாரமாகத் தாக்கியிருந்தார்.

“தமிழ் பேசும் மக்களின் உண்மையான எதிரி எஸ்.எல்.எப்.பி அல்ல, ஆனால் ஐதேக தான் அதன் உண்மையான எதிரி.ஐதேக பிக்குகள்தான் திரு.பண்டாரநாயக்காவுக்கு அழுத்தம் கொடுத்து. பண்டா – செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிய வைத்தவர்கள்” என செல்வநாயகம் கடுமையாகத் தாக்கினார். ஏப்ரல் 22 ல் வாக்கெடுப்ப நடத்தப்பட்ட போது தமிழரசுக் கட்சி எதிர்கட்சியுடன் சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தது.சிம்மாசனப் பிரசங்கம் 25 வாக்குகளால் தோல்வியடைந்தது.அரசாங்கம் 61 வாக்ககளையும் எதிர்கட்சி 86 வாக்குகளையும் பெற்றிருந்தது, 8 பேர் நடுநிலை வகித்தனர்.

அமைச்சரவையின் ஒரு அவசரக் கூட்டத்தின் பின்னர் டட்லி சேனநாயக்கா பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல்களை நடத்தும்படி தேசாதிபதிக்கு ஆலோசனை வழங்கினார். சேர் ஒலிவர் எப்படியாயினும் எல்லா எதிர்கட்சித் தலைவர்களையும் வவைழைத்து புதிய தேர்தல்கள் நடத்துவதற்குப் பதிலாக ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்கத் தான் ஒரு வாய்ப்பினைத் திறந்து விடுவதாக அவர்களிடம் தெரிவித்தார். இப்போது 46 அங்கத்தவர்களுடன் அரசாங்கத்தை அமைக்கும் முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடையதாக இருந்தது.

சீ.பி.டீ சில்வா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் சீ.பி.டீ.சில்வா தேசாதிபதியைச் சந்தித்து அரசாங்கம் அமைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை தனக்குத் தரவேண்டும் என வலியுறுத்தினார்.அவர் தெரிவித்தது, தன்னிடம் தேவையான அங்கத்தவர்கள் இருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் ஆதரவை சுவீகரிப்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளது என்று.

அதன்பின்னர் சேர் ஒலிவர், உண்மையில் தமிழரசுக் கட்சி தனது ஆதரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கத் தயாரா என்பதை உறுதி செய்வதற்காக செல்வநாயகத்தை தனது இராணி மாளிகைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது அல்பிரட் வீட்டு தோட்டத்தில் இருந்து கோட்டைக்குச் செல்லும் வழியில் செல்வநாயகம் பீலிக்ஸின் வீடான மகனுகே தோட்டத்தில் இறங்கினார். அங்கே அவருக்காக சீ.பி.டீ.சில்வா மற்றும் ஏ.பி.ஜெயசூரிய ஆகியோர் காத்திருந்தனர்.

மீணடும் ஒரு தடவை செல்வநாயகம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் பெறுமதியானவைகளா என வினாவினார். ஆம் என்கிற பதில் மிக உறுதியாக வெளிவந்தது. பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் சாரங்கள் வாக்களித்தபடி நடைமுறைப்படுத்தப் படுமா என செல்வா மீண்டும் வினாவினார். பதில் மீண்டும் சாதகமாகவே இருந்தது.

இந்தக் கட்டத்தில் செல்வநாயகம் தனது பழைய தோமியன் சகாவும் பிரதமராக வரக்கூடியவருமான சீ.பி.டீ.சில்வாவைப் பார்த்து “ இந்த உறுதிப்பாடுகளை நீங்கள் மதிப்பீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என நேரிடையாகவே கேட்டார். அதற்கு சீ.பி.டீ.சில்வா குணசித்திரமான ஒரு பதிலாக “ நான் ஒரு கடினமான ஒரு பேரத்தை மேற்கொண்டு அதை செய்து முடித்தேன், எனவே அதை நான் நிறைவேற்றுவேன்” இப்படித் தெரிவித்தார்.

திருப்தியடைந்த செல்வநாயகம் இராணிமாளிகையை நோக்கிப் புறப்பட்டார். அதேவேளை சீ.பி.டீ.சில்வா தனது தலையெழுத்தைச் சந்திக்கும் நேரத்துக்காகக் காத்திருந்தார்;

அந்தோ விதியின் தீர்ப்பு வேறுவிதமாக இருந்தது.

சேர் ஒலிவர் குணதிலகா செல்வநாயகத்தை வரவேற்று சீ.பி.டீ.சில்வாவினால் ஒரு மாற்று அரசாங்கத்தை நிறுவ முடியுமா என்பதை தான் உறுதிப்படுத்த வேண்டியிருப்பதாக அவரிடம் சொன்னார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் தேவையானளவு அங்கத்தவர்கள் இல்லாவிட்டால் தான் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதாகவும் சொன்னார்.

நிபந்தனையற்ற ஆதரவு

தமிழரசுக் கட்சியின் ஆதரவு இதுவிடயத்தில் மிகவும் அவசியமாக இருப்பதால் தேசாதிபதி தமிழரசுக் கட்சியின் தலைவரிடத்தில் தமிழரசுக் கட்சியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் அமைக்கப்படப் போகும் மாற்றரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவினை குறைந்தது இரண்டு வருடங்களுக்கு வழங்க முடியுமா எனக் கேட்டார்.

சேர் ஒலிவர் நிபந்தனையற்ற ஆதரவு என்பதனை வற்புறுத்தினார் ஏனெனில் எஸ்.எல்.எப்.பி தமிழரசுக் கட்சியினருக்கு வழங்கியுள்ள வாக்குறதிகளிலிருந்து பின்வாங்கினால் தமிழரசுக் கட்சி தனது ஆதரவினை விரைவிலேயே பின்வலிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகும் என அவர் நினைத்தார்.எனவே அதன் உறுதிப்பாட்டினை செல்வநாயகத்திடமிருந்து வரவழைக்கும் ஒரு உத்தரவாத்தின் மூலமாகத் தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்ள விரும்பினார்.ஆனால் செல்வநாயகத்தின் உள்ளேயிருந்த வழக்கறிஞர் புத்தி நிபந்தனையற்ற ஆதரவு தரும்படி தேசாதிபதியால் கேட்கப்பட்ட வாக்குறிதியை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தது.

ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்த செல்வநாயகம் தான் சேர் ஒலிவரிடம் அதற்குச் சம்மதம் தெரிவித்தால் தமிழரசுக் கட்சி இரண்டு வருடங்களுக்கு உறுதியாகக் கட்டுப்பட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்.அதே நேரத்தில் எஸ்.எல்.எப்.பி வழங்கிய உறுதிமொழிகளை அது மதிக்காவிட்டால் நிபந்தனையற்ற ஆதரவை 24 மாதங்களுக்கு நீட்டி அரசியல் ஆபத்தை எதிர் கொள்ள முடியாது. அந்த சூழ்ச்சியான சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள செல்வநாயகம் வழங்கிய பதிலை சாமர்த்தியமான பதில் என்று குறிப்பிடலாம்

தமிழரசுக் கட்சி எஸ்.எல்.எப்.பி யுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்துள்ளது அதன்படி எனது கட்சி எஸ்.எல்.எப்.பி யால் நடத்தப்படும் அரசாங்கத்துக்கு இரண்டு வருடங்கள் அல்ல அதன் முழுத் தவணைக்கும் ஆதரவு வழங்கும் என்பதே அவர் வழங்கிய பதில். இந்தப் பதில் மூலம் நிபந்தனையற்ற ஆதரவு எனும் வகைப்படுத்தப்பட்ட உத்தரவாதத்தை வழங்குவதை அவர் தவிர்த்துக் கொண்டார்.ஆனால் அரசியல் சம்பந்தமான அறிவுக் கூர்மையுள்ள சேர் ஒலிவர் நிபந்தனையற்ற ஆதரவுக்கு தமிழரசுக் கட்சித் தலைவர் தெளிவான உத்தரவாதத்தை வழங்கத் தயங்குவதை கூர்ந்து அவதானித்தவுடன் அமையப் போகும் அரசாங்கம் நொறுங்கக் கூடியது என்பதற்கு இதுவே ஆதாரம் என்பதைப் புரிந்து கொண்டார்.

செல்வநாயகம் வழங்கிய பதில் தனக்குத் திருப்தி தரவில்லை எனக்கூறி தேசாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலானார்.

தேசாதிபதி

அபபோது பரவலாக நம்பப் பட்டது சேர் ஒலிவர் ஐதேக வுக்கு சார்பானவர் என்பதுதான் இந்த நிலைக்குக் காரணம்,இதற்காக தேசாதிபதி செல்வநாயகத்தை பலியாடாக்கி விட்டார் என்று. ஆனால் சேர் ஒலிவரின் நடத்தைக்கும் தர்ம ரீதியான சிறிதளவு விளக்கம் இருக்கிறது.

செல்வநாயகத்தின் மருமகனும் அரசியல் விஞ்ஞானியுமான ஏ.ஜே வில்சனின் கூற்றுப்படி இதற்கான உண்மைக் காரணம் ‘சாதி’ . சீ.பி.டீ.சில்வா “சலாகம” சாதியைச் சேர்ந்தவர்.வில்சன் குறிப்பிடுவது கலாநிதி.என்.எம்.பெரேரா சேர் ஒலிவரிடம் “நான் எப்படி ஒரு சலாகம சாதிக்காரனை நியமிப்பது” எனச் சொல்லியிருந்தாராம். சாதிக் கருவானது ஸ்ரீலங்காவின் நாகரிக சமூகத்திடையே முகத்தைச் சுளிக்க வைத்து மற்றும் அரியசியல் ரீதியாகத் தவறானது என விலக்கி வைக்கப்பட்ட போதிலும் அதில் கசப்பான உண்மை என்னவெனில் அரசியலிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறும் திருமணங்களிலும் சாதிக் காரணி முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.

இது ஆட்சேபிக்க முடியாத ஒரு உண்மை. தற்காலச் சரித்திரத்தில் ஸ்ரீலங்காவின் தேசாதிபதிகள், பிரதம மந்திரிகள் மற்றும் ஜனாதிபதிகள் என எல்லோருமே கொவிகம சாதியைச் சேர்ந்தவர்களே. இதற்கு ஒருமையான விதிவிலக்கு அல்லது பிறழ்ச்சி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.

தேசாதிபதியின் நடவடிக்கையை எந்தக் காரணம் ஆட்சிப்படுத்திய போதிலும் அதன் உடனடித் தொடர்ச்சி பாராளுமன்றக் கலைப்பும் புதிய தேர்தல்களை அரங்கேற்றுவதுமாகவே அமைந்தது.

தமிழரசுக் கட்சி உட்பட சகல எதிர்க்கட்சிகளும் சேர் ஒலிவரின் நடவடிக்கையை எதிர்த்ததுடன் அந்த நகர்வைக் கண்டித்து ஒரு கடிதமும் எழுதின.எப்படியிருந்த போதிலும் 1960 ஜூலையில் புதிய தேர்தல்கள் நடத்தப் பட்டன.

தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமானதுமே புது மெருகிடப்பட்ட எஸ்.எல்.எப்.பி மார்ச் தேர்தல்களில் அடைந்ததைவிட இன்னும் சிறப்பாக வெற்றி பெறும் என்பது விரைவிலேயே தெளிவாகியது.

தேம்பியழும் விதவை

இதற்கான முக்கிய காரணம் சிறிமாவினால் மேற்கொள்ளப் பட்ட பிரச்சாரம். தேம்பியழும் விதவை என ஒரு பகுதி ஊடகங்களால் வர்ணிக்கப் பட்ட திருமதி சிறிமா பண்டாரநாயக்கா கூட்டங்களுக்கு வரையறையற்ற ஜனத்திரளை வரவழைத்தார். பல செல்வாக்கான பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பண்டாரநாயக்காவின் மரணத்தின் பின் எஸ்.எல்.எப்.பி யிலிருந்து பிரிந்து சென்றிருந்தார்கள் அவர்கள் எல்லோரும் இப்போது கட்சிக்குத் திரும்பி விட்டார்கள். கட்சி ஆதரவாளர்கள் மார்ச் தேர்தலில் எம்.ஈ.பிக்கும், எல்.பி.பி.க்கும் வாக்களித்தவர்கள் இப்போது எஸ்.எல்.எப்.பிக் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

எஸ்.எல்.எப்.பி, சமசமாஜிகளுடனும், கமியுனிஸ்ட்டுகளுடனும் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த படியால் இடதுசாரி வாக்குகள் பாதுகாக்கப் பட்டன. இந்தக் காரணிகளுக்குப் புறமே தமிழரசுக் கட்சியுடன் ஏற்படுத்தப் பட்ட ஒரு எழுதப் படாத புரிந்துணர்வு முன்னணித் தமிழ் கட்சி, எஸ்.எல்.எப்.பியின் மறைமுகமான தேர்தல் கூட்டாளி என்கிற சூழு;நிலையைத் தோற்றுவித்திருந்தது.

மார்ச் தேர்தல்களில் வமங்கப்பட்டிருந்த முறிவடைந்த தீர்ப்பானது, 1960 ஜூலைத் தேர்தலிலும் எஸ்.எல்.எப்.பி க்கு அதிகமான ஆசனங்களைக் கொண்ட ஒரு தொங்கு பாராளுமன்றமே அமையும் என்கிற ஊகங்களுக்கு வழிகோலியது. தமிழரசுக் கட்சியின் ஆதரவு அரசாங்கம் அமைக்க முக்கியமானதாகக் கருதப் பட்டது.

தமிழரசுக் கட்சியின் எதிர்பார்ப்பு ஜூலை தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எஸ்.எல்.எப்.பி முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப் படுத்தும் என்பதாக இருந்தது. செல்வநாயகம் திருமதி பண்டாரநாயக்காவை சுருக்கமான விளம்பரப் படுத்தப்படாத சந்திப்பொன்றில் பீலிக்ஸ_டன் சென்று கண்டார். அதில் சிறிமா தமிழரசுக் கட்சித் தலைவரிடம் சீ.பி.டீ.சில்வா தலைமையிலான தூதுக்குழு தமிழரசுக் கட்சிக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை தான் பின்பற்றுவதாக உறுதியளித்தார். அந்த உறுதிமொழியால் பலமடைந்த தமிழரசுக் கட்சி தனது பெட்டியை எஸ்.எல்.எப்.பி யுடன் இணைத்துக் கொண்டது.

செல்வநாயகம் எஸ்.எல்.எப்.பி யிடமிருந்து நடைமுறைப் படுத்துவது தொடர்பான ஒரு உறுதி மொழியை வரவழைத்திருந்த போதிலும் முக்கியமான விடயங்களில் தேவையான உத்தரவாதத்தைப் பெற கட்சி தவறிவிட்டது.

கடப்பாடு

பேராசிரியர் வில்சன், செல்வநாயகத்தின் வாழ்க்கை குறிப்பை எழுதியவர், குறிப்பிடுவது தமிழரசுக் கட்சியானது எஸ்.எல்.எப்.பி அளித்திருந்த வாக்குறுதிகள் கட்சி தேவையானளவு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழரசுக் கட்சியின் உதவி தேவைப்படாத போதும் கூட அந்த வாக்குறுதிகளுக்கு கட்சி கட்டுப்படும் என்கிற உத்தரவாதத்தைப் பெறத் தவறி விட்டது.

செல்வநாயகம் அந்த உத்தரவாதத்தின் உட்பொருளை எஸ்.எல்.எப்.பி அறுதிப் பெரும்பான்மை பெற்று தமிழரசுக் கட்சியின் ஆதரவு தேவைப்படாதவிடத்தும் அதன் தன்மைக்கு கட்டுப்படும் என விளங்கிக் கொண்டிருக்கிறார்.ஆனால் இது செல்வ நாயகத்தின் உட்பொருள் விளக்கம் மட்டுமே என அவரது மருமகன் சொல்கிறார்

தெளிவான உத்தரவாதம் இதில் கோரப்படவோ பெறப்படவோ இல்லை.இந்தக் குறைபாடு சுட்டிக் காட்டுவது தமிழரசுக் கட்சி ஒரு அரசியல் வெகுளி என்பதை. அப்படியான உறுதியான உத்தரவாதமில்லாமல் தமிழரசுக்கட்சி வெறும் நம்பிக்கையை மாத்திரம் வைத்து எஸ்.எல்.எப்.பியை பின்தாங்கியது.அது தனது கட்சி போட்டியிடாத தொகுதிகளில் உள்ள தமிழ் வாக்காளர்களிடம் எஸ்.எல்.எப்.பி க்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டது.மேலும் தமிழரசுக்கட்சி அரசியல்கட்சிக் கூட்டங்களில் மக்களிடம், கட்சியானது எஸ்.எல்.எப்.பியுடன் ஒரு புரிந்துணர்வை எட்டியிருப்பதனால் பண்டா – செல்வா ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படும் என்று சொன்னது. இதன் விளைவாக ஐதேக, தமிழரசுக்கட்சி - எஸ்.எல்.எப்.பி கூட்டுக்கு எதிராக மிகப் பெரிய பிரச்சாரத்தை உருவாக்கக் கூடியதான ஒரு திருப்பத்தை உருவாக்கியது. எஸ்.எல்.எப்.பி தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து நாட்டைப் பிரிக்க சதி நடத்துவதாக ஐதேக அதன் மீது குற்றம் சுமத்தியது.

இந்தப் பிரச்சாரத்தின் உச்சக் கட்டமாக வண்ணமயமான சுவரொட்டிகள் இலங்கைத் தீவினை ஒரு பெரிய கேக்காக சித்தரித்தும் திருமதி பண்டாரநாயக்கா அதன் வடக்கு கிழக்கு பகுதிகளைத் துண்டாடுவது போலவும் சீ.பி.டீ.சில்வா அதைப் பாhத்துக் கொண்டிருக்கையில் செல்வநாயகம் தனது பங்கைப் பெறுவதற்காக பெரிய தட்டத்துடன் நிற்பதைப் போலவும் அவருக்குப்பின்னால் அவரது உபதலைவர் நாகநாதன் நிற்பதைப் போலவும் சித்தரிக்கப் பட்டு பரவலாக காட்சிக்கு வைக்கப்பட்டன.

இரகசிய ஒப்பந்தம்

எஸ்.எல்.எப்.பி மற்றும் தமிழரசுக்கட்சி இடையே ஒரு இரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டிருப்பதாக ஐதேக குற்றம் சாட்டியது, எஸ்.எல்.எப்.பிக்கு எதிர்ப்பினை ஏற்படுத்தியது. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா, தமிழரசுக்கட்சியிடம் அப்படியான ஒரு கூட்டு எஸ்.எல்.எப்.பி மற்றும் தமிழரசுக்கட்சி இடையே எற்படவில்லை என பகிரங்கமாக அறிவிக்கும்படி அதனை நெருக்கினார்.

செல்வநாயகம் தயக்கத்துடன் அதற்கு சம்மதிக்க வேண்டியதாயிற்று,தமிழரசுக் கட்சி எஸ்.எல்.எப்.பிக்கு ஆதரவு வழங்கியது எந்த வித உடன்படிக்கையும் இல்லாமலே என அவர் அறிக்கை வெளியிட்டார். ஊடக நேர்காணல்களிலும் அவர் இதனைத் திரும்பத் திரும்ப கூறினார்.

இது தமிழரசுக் கட்சியின் பிரதான எதிராளியான ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ் கட்சிக்கு, ஐதேக ஆதரவளிக்க வேண்டிய பொன்னான சந்தர்ப்பததை தவறவிட்டு எஸ்.எல்.எப்.பியை எந்த வித உத்தரவாதமும் இல்லாமல் ஆதரித்தார்கள் என தமிழரசுக் கட்சியை விமர்சிக்கும் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த மாதிரியான சூழலில் எஸ்.எல்.எப்.பி மற்றும் தமிழரசுக்கட்சி என்பன ஜூலை 1960 ல் பிரசங்க மேடைகளை சந்தித்து வந்தன. வசதியான கூட்டாக இருந்தாலும் சிங்கள தொகுதிகளில் வாக்குகள் புறக்கணிக்கப் படும் என்கிற பயத்தினால் எஸ்.எல்.எப்.பியினால் பகிரங்கமாக அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழரசுக் கட்சியும் எஸ்.எல்.எப்.பியின் விருப்பத்துக்கு மாறாக எழுதப்படாத புரிந்துணர்வை ஏற்றுக் கொள்ள இயலாத இக்கட்டான நிலையிலேயே இருந்தது.

இந்த இக்கட்டுகளுக்கிடையிலும் தமிழரசுக் கட்சி மீண்டும் ஒரு தடவை பெரும்பான்மையான தமிழ் தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. அது மார்ச் மாதம் வென்ற 15 தொகுதிகளையும் திரும்பக் கைப்பற்றியதுடன் கூடுதலாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கல்முனைத் தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது,அங்கு வீட்டுச் சின்னத்தில் எம்.சி அகமட் வெற்றி பெற்றிருந்தார்.

தமிழரசுக் கட்சி பாராளுமன்றத்தின் 157 ஆசனங்களில் 16 ஆசனங்களைப் பெற்று திரும்பவும் முன்றாவது பெரிய கட்சியாக வந்திருந்தது.ஐதேக 30 ஆசனங்களுடன் இரண்டாவதாக வந்திருந்தது. எஸ்.எல்.எப்.பி 75 ஆசனங்களுடன் முதலாவதாக வந்திருந்தது.

பெரும்பான்மை

நியமன அங்கத்தவர்கள் ஆறு பேருடனும்,சில சுயேச்சைகளின் ஆதரவுடனும் கட்சிக்கு சிறிய ஆனால் உறுதியான பெரும்பான்மை கிட்டியிருந்தது. முக்கியமானது என்னவென்றால் அது தமிழரசுக் கட்சியின் ஆதரவில் தங்கியிருக்கவில்லை. திருமதி.பண்டாரநாயக்க பிரதமராகிச் சரித்திரம் படைத்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதிர்ச்சியிலாழ்ந்து போயிருந்தது. எஸ்.எல்.எப்.பி உடனான எழுதப்படாத புரிந்துணர்வு அரசாங்கத்துக்கு தமிழரசுக் கட்சியின் ஆதரவு தேவைப்படாத ஒரு சந்தர்ப்பத்தின் போதும் எஸ்.எல்.எப்.பி அதற்கு கட்டுப்படும் என்கிற அதன் வெகுளித்தனமான எதிர்பார்ப்பு முரட்டுத் தனமாக நொருக்கித் தள்ளப்பட்டது.

எஸ்.எல்.எப்.பி தமிழரசுக் கட்சியுடன் எந்த பேச்சு வார்த்தையும் மீள அரம்பிக்காமல் அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளைத் தொடங்கியது.அது தேர்தல்களுக்கு முன் கடப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒழுங்கு முயற்சிகளுக்கும் மதிப்பளிக்கவில்லை. எஸ்.எல்.எப்.பி தலைவர்களுடன் தொடர்பு கொள்ள தமிழரசுக் கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

புதிய அரசாங்கத்தின் சிம்மாசனப் பிரசங்கம் ஆகஸ்ட் 12 ந்திகதி வழங்கப் பட்ட போது தமிழரசுக் கடசி ஆரம்பத்தில் மகிழ்ச்சியடைந்தது ஏனென்றால் முதல் தடவையாக சிம்மாசனப் பிரசங்கம் தமிழிலும் வாசிக்கப் பட்டது.அதில் அடங்கியிருப்பவை வெளியானதும் அந்த ஆரம்ப மகிழ்ச்சி ஆவியாகி மறைந்தது.

தேர்தல்களுக்கு முன் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளான மாவட்ட சபைகளைப் பற்றியோ,அல்லது தமிழ் மொழி விதிகளைப் பற்றியோ எந்த வித வெளிப்பாடும் அதில் இல்லை.#

மாறாக சிங்களத்தை தனித்த அரசகரும மொழியாக 1. ஜனவரி 1961 முதல் முழு அளவில் நடைமுறைப் படுத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. நீதிமன்றுகளிலும் சிங்களம் மட்டுமே ஏக பாஷையாக இருக்குமெனவும் அரசாங்கம் மேலும் அறிவித்தது.

மாயையிலிருந்து முற்றாக விடுபட்ட தமிழரசுக்கட்சி தமிழ் தூற்றுவாரிடையே இப்போது ஒரு கேலிப் பொருளாக மாறியிருக்கிறது. கட்சியானது இரண்டாவது தடவையாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஏமாற்றப்பட்டும் கை விடப்பட்டுமிருக்கிறது. டட்லி சேனநாயக்காவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காமல் மாபெரும் தவறைச் செய்து விட்டதாக தமிழரசுக்கட்சி குற்றச் சாட்டுக்கு இலக்காகியது. மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் நிருவாகம் முழவதையும் தனிச் சிங்களமயமாக்குவதில் வெகு வேகமாக முன்னேறுகிறது.

நேரடி மோதல்

இச்செயல் தமிழர்களை காயப் படுத்துவதை அதிகரிக்கச் செய்ததுடன் அவர்ககளை; பாதுகாப்பற்ற்வர்களாகவும் மாற்றியிருக்கிறது.அந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நகர்வுகளை எதிர்க்கும்படி தமிழரசுக் கட்சி மீது பயங்கரமான அழுத்தம் பிரயோகிக்கப் பட்டது.

தவிர்க்க முடியாத ஒரு அரசியல் நேரடி மோதலுக்கான மேடை அமைக்கப் பட்டிருக்கிறது. மார்ச் மற்றும் ஜூலை தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியினால் பெறப்பட்ட பாடம் இப்படியான மோதலுக்கான அடித்தள வேலைகளை இட்டிருக்கிறது. நிகழச்சிகளின் ஒன்று கூடலின் உந்து விசையானது ஒரு தர்க்க ரீதியான முடிவை 1961 பெப்ரவரி 20 ந்திகதி சத்தியாக்கிரக போராட்டம் என்கிற வடிவத்தில் எட்டியது.

1961 சத்தியாக்கிரகத்தின் தன்மை,நோக்கம்,மற்றும் பின்விளைவுகள் தொடர்பானவை இனி வரும் கட்டுரைகளில் ஆராயப்படும்.



தமிழில்: எஸ்.குமார்

நன்றி தேனீ

1 comment:

kirrukan said...

[quote]

இருந்தபோதிலும்; கொழும்பிலுள்ள பிரபலமான தமிழர்களினால் பொதுவாக தமிழரசுக் கட்சியின் மீதும் குறிப்பாக செல்வநாயகத்தின் மீது டட்லி சேனநாயக்கா அரசியலில் ஒரு கனவான் எனவே நிபந்தனையின்றி ஆதரவு வழங்கவேண்டும் என்று தொடர்ச்சியான அழுத்தங்கள் பிரயோகிக்கப் பட்டன.[/quote]

அன்று கொழும்பில் இருந்து தமிழர்கள் அழுத்தம் கொடுத்தார்கள் இன்று புலத்தில் இருந்து தமிழர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள்,மகிந்தா கனவான் அவருக்கு ஆதரவு கொடுங்கோ தமிழன் எங்கயோ போய்விடுவான் என்று.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்