கல்லறை வீரர்கள் - அமலகுமார்


.
Posted date 2/28/2011
  மரணத்தின் பின்னர் என்ன நடக்கும்? ஆவிகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புதைபொருள் அகழ்வு ரெறக்கோட்டா வீரர்கள் என அழைக்கப்படும் இந்தக் களிமண் பொம்மைகளின் வயது ஏறக்குறைய 2500. இவற்றை சீனாவின் பண்டைய தலைநகராகிய ஷியான் நகரில், 1974 ஆம் ஆண்டு அகழ்ந்தெடுத்தார்கள். வயலொன்றில் கிணறு தோண்டும்போது தற்செயலாக இந்த ரெறக்கோட்டா வீரர்கள் வெளிப்பட்டிருக்கின்றனர். இதுவே சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அகழ்வென்று நம்பப்படுகிறது. கி.மு 210 இல் இறந்த சீனாவின் ஷிஹுவாங் என்னும் பேரரசனின் கல்லறை இது என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சீன வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களையும் இந்தக் கல்லறை பகிரங்கப்படுத்தியுள்ளது. அத்துடன் யுனெஸ்கோ நிறுவனத்தினால் பாதுக்காக்கப்படவேண்டிய கலாசார, பாரம்பரிய முக்கியத்துவம் பெற்ற இடமாக 1984 இல் அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடரும் அகழ்வாராய்ச்சிகள்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதற்கொண்டு சீன இராட்சியத்தை ஆட்சி செய்த 13 அதிமுக்கிய சீன வம்சங்களின் ஆட்சியின் போது ஷியான் நகரம்தான் தலைநகராக இருந்திருக்கிறது.சென்ஸி மாநிலத்திலுள்ள லிஸான் மலைக்கு வடக்கே ஷியான் நகர் அமைந்துள்ளது. இங்கு பல கல்லறைக் கட்டடங்கள் காணப்படலாம் என நம்பப்படுவதால் லிஸான் மலையை அண்டிய பகுதிகளில் தற்போதும் அகழ்வாராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

ஆவிகள் அழிவதில்லை

பொதுவாக மனிதன் இறந்த பின் அவனுடைய ஆவி அழிவதில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பண்டைக்கால மனிதர்கள் மரணச் சடங்கிற்கு பெரும் முக்கியத்துவம் அளித்தனர். அரசன் இறக்கும்பொழுது அவனது மெய்க்காவலர்கள் மற்றும் படையிலேயே மிகச்சிறந்த 100 300 வீரர்களை உயிரோடு அடக்கம் செய்து விடுவர். மன்னனின் மறுமையிலும் இவர்களே காத்து நிற்க வேண்டும் என்ற நோக்கோடு காலங்காலமாய் நடந்து வந்த வழக்கம் இது. இந்த நம்பிக்கையில் உருவாகிய கல்லறை சிற்பக்கலை, ஓவியம், எழுத்து வளர்ச்சி, சிற்பம், சிலைவடித்தல் முதலிய பல்வேறு பண்டைக்கால கலைகளைப் பிரதிபலிக்கும் கட்டடங்களாக இன்று திகழ்கின்றன. இயற்கை நில அமைவை பயன்படுத்தி மலைப்பகுதிகளைச் சார்ந்து கல்லறை கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நான்கு பக்கங்களும் சுவரால் கட்டப்பட்டுள்ள கல்லறைகளுக்கு நான்கு பக்கங்களிலும் நுழைவாயில்கள் உள்ளன. நான்கு மூலைகளிலும் முக்கோண வடிவிலான சிறிய கட்டடங்களும் உள்ளன.

இதுவரை கண்டுபிடித்த களிமண் பொம்மைகள் எல்லாவற்றையும் மிகப் பெரிய மண்டபம் அமைத்து, மூன்று குழிகளில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் இருக்கும் ரெற்க்கோட்டா ஆளுயர பொம்மைகள், அன்றைய கால கட்டத்தில் வீரர்கள் எப்படி இருந்தார்களோ அவர்களைப் போலவே தோற்றம், உடை, ஆயுதம் முதற்கொண்டு முகங்களில் பிரத்யேகமான உணர்ச்சிகள் வரை தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டுள்ளன. நின்ற நிலைகளிலும் அமர்ந்த நிலைகளிலும் ஆயுதமேந்தியபடியும் கைகளை கட்டிக்கொண்டும் என அனைத்திலும் கலைத்துவமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

மூன்று குழிகள்

முதலாவது குழி 14000 சதுர அடிக்கும் அதிகமானது. இதுதான் ஆகப்பெரிய குழி. போர்ப்படை போலவே சுமார் 6000 களிமண் வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கையில் உண்மையான ஆயுதங்களோடு காட்சியளிக்கின்றனர். முன்வரிசையில் வில்லாளிகளும் பின்வரிசைகளில் நீண்ட ஈட்டி தரித்த வீரர்களுடன் 50 க்கும் மேற்பட்ட ரதங்களுமாக மிகப்பெரிய படை ஒன்று தளபதியின் ஆணைக்கு காத்திருப்பது போல் முதலாவது குழி காணப்படுகின்றது.

இரண்டாவது குழி ஏறக்குறைய 12000 சதுர அடியில் அமைந்துள்ளது. இந்தக் குழியில், 300 க்கும் மேற்பட்ட வில்வீரர்கள் நின்று கொண்டும், முழங்காலிட்டு அமர்ந்துகொண்டும் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். நான்கு நான்கு குதிரைகளாய் இழுக்கும் சுமார் 60 ரதங்களும் உண்டு. மேலும் பல்வேறு ஆய்தமேந்திய காலாட்படையும் பல்வேறு குழுக்களாய் ரதங்களோடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது குழி 500 சதுர அடியில் அமைந்துள்ள மிகச்சிறிய இடமாகக் காணப்படுகின்றது. சுமார் 60 காலாட்படை வீரர்கள், ஒரே ஒரு ரதம் நான்கு குதிரைகளோடு இருக்கின்றது. இந்த இடத்தைக் கவனித்தால் போர் நடக்கும் இடங்களில் இருக்கும் தளபதிகளின் ஆலோசனை அறைபோல்க் காணப்படுகின்றது.

துருப்பிடிக்காத ஆயுதங்கள்

தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் பாதரசத்தை கலந்து துருப்பிடிக்காத உலோகத்தினால் இந்த ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2500 வருடங்கள் கழித்தும் களிமண் பொம்மைகள் இன்றைக்கும் உறுதியாக இருக்கின்றன. இந்த களிமண் பொம்மைகள் 9001000 செல்சியஸ் டிகிரி வெப்பத்தில் சுடப்பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது. வெறும் மரம் அல்லது கரி கொண்டு அவ்வளவு அதிக வெப்பத்தை உண்டாக்கியிருப்பதை நினைக்கும்போது அந்தக் காலத்திலேயே நிகழ்ந்த விஞ்ஞான முன்னேற்றங்களை எண்ணி வியப்புறாமல் இருக்க முடிகின்றதா?

கி. மு.300 ஆண்டு காலப்பகுதியில் ஷிஹுவாங்என்ற அரசன் சீனப்பிரதேசத்தை ஆட்சி புரிந்து வந்தான். 13 வயதிலேயே அரியணை ஏறிய அரசன், ஆட்சி புரிய ஆரம்பித்தது மிக குறுகிய ஒரு நிலப்பரப்பைத்தான். பின் தன் வீரதீர பராக்கிரமங்களால் சுற்றி இருந்த ஆறு பேரரசுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்த்தி தற்போதைய சீன நிலப்பரப்புக்கு சமமான நாட்டை நிறுவினான். அரியணை ஏறிய அந்த மிகச்சிறிய வயதிலிருந்தே மரணத்திற்கு பிந்தைய வாழ்வைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். அவனுக்கு எதிரிகள் அதிகமாகையால் தன் மறுவாழ்விலும் அதற்கேற்ப ஆபத்துகள் வருமென்று அஞ்சி மிகப் பிரும்மாண்டமாய் தன் கல்லறையை நிர்மாணிக்க ஆரம்பித்தான்.

அரசனுக்கு சேவை செய்த களிமண் பொம்மை

நிலத்திற்கடியில் மாபெரும் அரண்மனையொன்றை நிர்மானித்த அரசன் தன் பாதுகாப்பிற்காக தன் படையிலேயே சிறந்த வீரர்கள் எட்டாயிரம் பேரை தேர்ந்தெடுத்தான். தன் காலத்திற்குப் பின் அவ்வளவு பேரும் உயிருடன் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று ஆணையும் பிறப்பித்தான். இதேவேளை முதலமைச்சரின் மகள், அரசரின் மெய்க்காப்பாளனை காதலித்தாள். போரின்போது கடுமையாய் காயமடைந்த மன்னனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது, எப்படியாவது தனது காதலனான மெய்க்காப்பாளனைக் காப்பாற்ற வேண்டும் என்று யோசித்தவள் ஒரு யுக்தி செய்தாள்.

அரசனிடம் சென்று தனக்கு மந்திரவித்தை தெரியுமென்றும், அதன் மூலம் அவனுடைய உடல் நிலை சீரடைவதற்கும், மன்னன் மறுமையில் வெற்றி பெறுவதற்கும் தன்னால் உதவ முடியுமென்றாள். மருத்துவத்தில் கெட்டிக்காரியான அவள், அரசனுக்கு வைத்தியம் செய்ய மன்னனுக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அடுத்தகட்டமாக ஒரு களிமண் பொம்மை செய்து, அரசனின் படுக்கை அருகே நிறுத்தினாள். அந்த களிமண் உரு அவளின் ஆசி பெற்றதென்றும் வீரர்களைவிட அது சிறப்பாக மன்னனை காக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தாள். உண்மையில் களிமண் உடை தரித்து யாரும் சந்தேகிக்கா வண்ணம் அரசனை கண்மணிபோல் காத்து வந்தது மெய்க்காப்பாளனே.

தன்மீது அரசனுக்கு நம்பிக்கை வரவர, எட்டாயிரம் வீரர்களையும் களிமண்ணில் பிரதியெடுத்தாள். பின் அந்த ஆளுயர களிமண் பொம்மைகளை சீனபாணியில் சுட்டு அரண்மனையைச் சுற்றி அணிவகுப்பில் நிறுத்தி, அவர்கள் கையில் ஆயுதங்களையும் கொடுத்து, இவைகளே மந்திர ஆசியுடன் மன்னனை மறுபிறவியில் சிறப்பாக காக்கும் என நம்ப வைத்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டாள். இவையாவும் நல்லமுறையில் நடந்து முடியும் தருவாயில்... அனைத்தும் அறிந்த அமைச்சனுக்கோ மகளின் காதலில் உடன்பாடில்லை. எனவே ஒரு நாளிரவு அரசனின் பக்கத்தில் இருந்த களிமண் பொம்மையை யாருமறியாமல் சுக்குநூறாய் உடைத்தெறிந்தான். காவலுக்கு வந்த மெய்க்காவலன் செய்வதறியாது பொம்மை போலவே மன்னன் அருகில் நின்றுவிடுகிறான். பின்னர் மன்னனை நலம் விசாரிப்பதுபோல் வரும் அமைச்சன், இந்த களிமண் பொம்மைகள் போர் மற்றும் அந்நிய சக்திகளிடமிருந்து மட்டுமல்லாமல் தீ, வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளில் இருந்தும் காக்குமா என வினா எழுப்புகிறான். பின் அவனே விடையளிப்பது போல் தீ மற்றும் வெள்ளத்திடமிருந்து தன்னைக் காத்துக்கொள்பவை மட்டுமே பிறரையும் காக்க வல்லவை என்று கூற மன்னனுக்கும் சந்தேகப் பேய் பிடித்து விடுகிறது. தன் பக்கத்தில் இருக்கும் களிமண் பொம்மையை கடும்வெப்பத்தில் சுட்டு, பின் வெள்ளத்தில் அமிழ்த்த ஆணையிடுகிறான்.

தன் காதலன்தான் களிமண் பொம்மை போல் நிற்கிறான் என்ற உண்மை தெரியாத அமைச்சன் மகள் அந்த ஆணையை முன்னின்று செயல்படுத்த, எட்டாயிரம் வீரர்களை காப்பாற்றவும், அமைச்சன் மகள் மேல் கொண்ட காதலாலும், மேலும் தங்கள் திட்டம் வெற்றி பெறவும் வேண்டி மெய்க்காப்பாளனும் சத்தமின்றி தீயில் பொசுங்கிப் போகிறான். இந்த தியாகத்தை நேரில் கண்ணுற்ற அமைச்சனோ குற்ற உணர்ச்சியில் அங்கேயே இறந்து போகிறான். வெள்ளத்தில் அமிழ்த்த களிமண் பொம்மையை வெளிக்கொணரும்போதுதான் காதல் பரிசாக கொடுத்த மோதிரத்தையும் மெய்க்காப்பாளனின் வாளையும் பார்த்து உண்மை அறிந்த அமைச்சன் மகள் காலம் தாழ்த்தாமல் அன்றிரவே மருந்தில் விஷம் கலந்து மன்னனை சாகடித்து எட்டாயிரம் வீரர்களை விடுவிக்கிறாள். ஆனாலும் மன்னன் விரும்பியபடி வெகுவிமர்சையாக அவனை அடக்கமும் செய்வித்தாள். இன்னமும் இந்த களிமண் வீரர்கள்தான் மன்னனை மட்டுமல்லாது ஷியான் நகரையும் காப்பற்றி வருவதாக சீன மக்கள் நம்புகிறார்கள்.

Nantri:Kalaikesari

1 comment:

kirrukan said...

[quote]நிலத்திற்கடியில் மாபெரும் அரண்மனையொன்றை நிர்மானித்த அரசன் தன் பாதுகாப்பிற்காக தன் படையிலேயே சிறந்த வீரர்கள் எட்டாயிரம் பேரை தேர்ந்தெடுத்தான். தன் காலத்திற்குப் பின் அவ்வளவு பேரும் உயிருடன் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று ஆணையும் பிறப்பித்தான்[/quote]
என்ன கொடுமை சார் ....