உமாவின் PATCH WORK அமைப்புக்காக சேரனின் ஆஞ்சநேயம்

.

                                                                                                பராசக்தி சுந்தரலிங்கம்    




சென்ற ஞாயிற்று கிழமை 11.4.2010௦ அன்று சிட்னி Bankstown நகர மண்டபத்திலே பிரபல நாட்டியக் கலைஞர் சேரன் சிறீபாலனின் தயாரிப்பிலே ஆஞ்சநேயம் பரதநாட்டிய நிகழ்வு PATCH WORK அமைப்புக்காக அரங்கேறியது. சேரனுடன் இணைந்து ஹரீஷன் இளங்கோவன், லாவண்யா தேவராஜா ஆகியோரும் ஆடினார்கள். இந்த நடன நிகழ்வு நல்லதொரு நோக்கத்துக்காக நடைபெற்றது என்பது மனநிறைவைத் தந்தது.
தமிழர் தாயகத்திலே போரினால் அங்கவீனம் உற்றவர்களின் மறுவாழ்வுக்காக சிட்னியை சேர்ந்த உமா ராஜ் PATCH WORK எனும் அமைப்பை  அவுஸ்திரேலியாவிலே தொடங்கியுள்ளார். இது உலகளாவிய ரீதியில் இயங்கும் ஓர் அமைப்பு.
உமா சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர். துரதிஷ்டவசமாக அவரது கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில், இந்நாட்டிலே அவருக்கு கிடைத்த சூழலின் பயனாக Braille முறையில் கல்வி பயின்று, தன்னம்பிககையுடன் தனது வாழ்வை அமைத்துக் கொண்டபோதும் பிறர் துன்பம் கண்டு கண்கலங்குகிறார்.



2004 ம்  ஆண்டு, தமிழர் தாயகத்திலே சமாதானம் நிலவிய காலத்தில், அங்கு சென்ற உமா போரினால் கண்பார்வையை இழந்த சிறுவர் சிறுமியருக்கு  கடந்த ஐந்து ஆண்டுகளாக Braille முறையில் கல்வி கற்பித்து வந்துள்ளார். இன்று அவருடைய அரிய முயற்சிகள் யாவும் போரினால் அடிபட்டுப்போன நிலையிலும் அவர் தனது பணியைக் கைவிடவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு அவர் திரும்பிய பின்னரும் அல்லும் பகலும் உமாவின் சிந்தனை தான் ஊரிலே நிராதரவாக விட்டுவிட்டு வந்த உறவுகளைப் பற்றியே இருந்திருக்கிறது  . பார்வையற்றவர்களுக்கு மாத்திரமன்றி, அங்கங்களை இழந்து தவிப்பவர்களுக்ககவும் உதவும் நோக்குடன் PATCH WORK என்னும் அமைப்பை இங்கு ஆரம்பித்துள்ளார்.

சேரன் சிறீபாலன் தாயகத்தில் இயங்கி வந்த நவம் அறிவுக் கூடத்தின் பணிகளுக்காக சென்ற சில ஆண்டுகளாக தனது நடன நிகழ்வு மூலம் நிதி சேகரித்து உதவி வருவதை நாமெல்லோருமே அறிவோம் . இவ்வாண்டு சேரன் ஆஞ்சநேயம் நடன நிகழ்வு மூலம் PATCH WORK அமைப்புக்கு உதவ முன்வந்துள்ளமை எமக்கு பெருமையாக இருக்கிறது.
ஆஞ்சநேயன் என்பது அனுமனுக்கு மறுபெயர். ராமாயண காவியத்திலே ராமதூதனாக வந்து தனது ஆழ்ந்த பக்தியினாலும், வீரச் செயல்களாலும் மக்களின் மனதிலே நீங்காத இடத்தைப் பிடித்து தெய்வநிலைக்கு உயர்ந்தவன் அனுமன். அனுமனின் பிறப்பு, வீரம், ராமபக்தி ஆகியவற்றைப் புகழும் பாடல்களுக்கு
பரதநாட்டிய முறையில் நடனமமைத்து சேரன் சிறீபாலன் மேடையேற்றியுள்ளார்.



அஞ்சனையின் மகனாக அவதரித்த அனுமன் சிறுவனாக இருக்கும் போதே வியத்தகு செயல்களால் தனது ஆற்றலை நிரூபித்தவன். சூரியனையே பழமென்று நினைத்துப் பறித்து விழுங்கிப் பின் தேவர்களின் வேண்டுகோளுகிணங்க விடுவித்து, அவர்களிடமிருந்து முக்கியமாக வாயு பகவானிடமிருந்து பல வரங்களைப் பெற்றவன் . இதனால் வாயு புத்திரன் மாருதி என்றும் அழைக்கபட்டான். ராமதூதனாக, சீதையை தேடிக் கடல் கடந்து இலங்கையை அடைந்து ராவணனுடன் வாதித்து இலங்காபுரியை இலங்காதகனம் செய்தவன்.

சேரனும் ஹரீஷனும் இணைந்து இக்காட்சிகளை தங்கள் விறுவிறுப்பான நடனம் மூலம் மேடையிலே தத்ரூபமாக கொண்டு வந்தனர். சேரன் அனுமனாகவும், ஹரீஷன் ராமன் மற்றும் ராவணனாகவும் தோன்றி ஆடினார்கள். லாவண்யா அஞ்சனை, சீதையாக நடனத்தில் இணைந்து கொண்டார். பிரபல நாட்டிய கலைஞர்களான சாந்தா, தனஞ்சயன் தம்பதியினரிடம் சேரன் நடனம் பயின்றவர். ஹரீஷன் நாட்டியக் கலையர் திருமதி ஜெயலக்ஷ்மி கந்தையாவின் மாணவர். லாவண்யா சேரனின் ரசன்னா கவின் கல்லூரி மாணவி.

அருணாசலக் கவிராயரின் ராமநாடகத்திலிருந்து "கைகூப்பிதொழும் அய்யன் நீ" என்னும் பாடலுக்கு அமைந்த நடனமும், மாருதி கவுத்துவமும் முக்கியமாக 
ஐம்பூதங்களைப்  பற்றிய வர்ணனை குறிப்பிடும்படி இருந்தன. "சரணம், சரணம்" என்னும் பஜன் பக்திச் சுவையுடன் பொருத்தமாக அமைத்திருந்தது. சேரனின் நடன ஆற்றலையும், நடன அமைபாண்மையையும் கீரவாணி ராகத்திலமைந்த வர்ணத்தில் கண்டு மகிழ முடிந்தது. ஹரீஷனும் லாவண்யாவும்  இடையில் இணைந்து ஆடினர். வர்ணத்தில் சஞ்சாரிகளைக் குறைத்திருக்கலாம்.

இவர்களின் விறுவிறுப்பான, தொய்வில்லாத நடன நிகழ்வு, இரண்டரை மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுவிட்டது என்றே கூறவேண்டும் . நடனக் கலைஞர்களைப் போலவே பக்கவாத்தியக் கலைஞர்களும் சிறப்பாக இசை வழங்கினார்கள். எல்லோருமே இளைஞர்கள். வாய்ப்பாட்டிசையை வழங்கிய மோகன் பரத் நல்ல குரல் வளமுடையவர். ஆனால் பல பாடல்கள் அவருக்குச் சவாலாக அமைந்து விட்டன. கிஷானின் மிருதங்க இசை, செந்தூரனின் கடம், ஜனகனின் கெஞ்சிரா, டோலக், மோர்சிங் ஆகியன நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்திவிட்டன என்பதில் சந்தேகமில்லை.



அனுமன், ராவணன் ஆகியோரின் சந்திப்பு கோபமாக வீராவேசத்துடன் அவர்கள் மோதியது போன்ற சந்தர்பங்களில் வாத்தியங்களின் பொருத்தமான இசை, செந்தூரனின் ஜதிகள் கலாரி முறையில் அமைந்த அசைவுக்கு மெருகேற்றிவிட்டன
.
காயத்திரியின் நட்டுவாங்கம் எப்பொழுதும் போல கம்பீரமாக இருந்தது. ஐங்கரனின் வேணுகானம், கோபதிதாசின் வயலினிசை மிக ஒத்திசைவாக இருந்தன. நடனத்தின் சிறப்புக்கு இக்கலைஞர்களின் திறமை இன்றியமையாதிருந்தமை இந்நிகழ்வின் சிறப்பம்சம்.
ஆஞ்சநேயம் என்ற பரதநாட்டிய நிகழ்வை புஷ்பாஞ்சலி, வர்ணம், கீர்த்தனம் என்னும் முறையில் ஆடும் பொழுது ஒரே கருத்து திரும்பத் திரும்ப வருவதை தவிர்க்க முடியாமல் இருக்கும். இதனை ஒரு நாட்டிய நாடகமாகச் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இதனால் சேரனின் நடன அமைப்பாண்மையை குறைப்பது என்றாகாது.
அனுமனும் ராமனும் சந்திப்பது, ராம தூதனாக சீதையிடம் சென்று சூடாமணியை பெற்று ராமனிடம் கையளிப்பது, சேது பந்தனம், சஞ்சீவி பர்வததைக் கொண்டு வந்தது என்று சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடராகக் கொண்டு வந்திருந்தால் சூரியனைப் பழமென்று விழுங்கிய சம்பவத்தைத் திரும்பத் திரும்பக் காட்டியதைத் தவிர்த்திருக்கலாம். கம்பராமயணத்தில் கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் யாவற்றிலும் அனுமனின் பிரபாவம் விரவியிருப்பதை அனுபவித்தவர்களுக்கு இவற்றையும் நடனத்தில் அழகாகச் சேர்த்திருக்கலாமே என்று தோன்றுவதில் வியப்பில்லை. அதே போல மகா பாரதத்திலும் பாரிஜாத மலரைத் தேடிச்சென்ற வீமனை அனுமனின் வால் குறுக்கே கிடந்து தடுத்ததையும் பின்னர் இருவரும் தாங்கள் வாயுபுத்திரர்கள், சகோதரர்கள் என்று உணர்ந்து மகிழ்ந்த்ததையும் கூட இணைத்திருக்கலாம் . மற்றும் அர்ச்சுனனின் கொடியில் இருந்தபடி அனுமன் நேரடியாக கீதோபதேசம் பெற்ற ஞானி .

ராமாயணமும் மகாபாரதமும் எங்கள் வாழ்வோடு ஒன்றிவிட்ட கதைகள். எனவே ராவணேசனைப்  படைத்த சேரன் போன்ற ஒரு சிறந்த கலைஞன் ஏன் இவற்றை சிந்திக்கவில்லை எனப் பார்வையாளர் எதிர்பார்ப்பதில் தவறில்லை என்றே கூற வேண்டும்.
அனுமன் என்றால் துளசிதாசரின் அனுமான் சாலிசா எல்லோருக்கும் நினைவுக்கு வரும். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் துதியாக, அனுமான் சாலிசாவிலிருந்து ஓரிரு பாடல்களை ஒலித்தால் , நன்றாக இருக்கும். பிரபல பாடகர்கள் பலர் இவற்றைத் தமிழிலேயும் பாடியுள்ளார்கள். அதேபோல நிறைவு செய்யும் போதும் தில்லானாவின் பின்னர் "சரணம் சரணம்" என்னும் பஜனைத் தொடர்ந்து மங்களம் வந்தால் அனுமனின் "காதலாகிக் கசிந்துருகும்" ராமபக்தி அந்த சரணாகதி தர்மம் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.

சேரனின் சிறந்த நடன அமைப்பாண்மையில் அமைந்த ஆஞ்சநேயம் மீண்டும் மீண்டும் மேடையேற்றப்படும் பொழுது மென்மேலும் மெருகடையும் என்பதில் ஐயமில்லை. நிகழ்ச்சியின் நிறைவில் உமா ராஜ் மேடையிலே தோன்றி PATCH WORK அமைப்பைபற்றி நல்லதொரு விளக்கத்தை தந்தது மனதைத் தொட்டது. "நான் இவரின் தொண்டை மதர் தெரேசாவின் சேவையாகவே காண்கிறேன்" என்று அவரை மேடைக்கு வழிகாட்டி அழைத்து வந்த திரு ஜெகன் அவர்கள் வர்ணித்த போது எல்லோரையும் கண்கலங்க வைத்தது. இன்றைய புலம் பெயர் இளையோர் பலர் தாயகக் கனவுகளைச் சுமந்த வண்ணம் தமது உறவுகளுக்காக ஆற்றிவரும் தொண்டு நம்பிக்கை தருகிறது,

"தன்னலமற்ற அன்பு" கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது இவையே அனுமன் என்பதன் தத்துவம். எனவே PATCH WORK அமைப்புக்காக ஆஞ்சநேயம் சாலப் பொருத்தமே.

1 comment:

Anonymous said...

இந்த இளைஞர்களின் செயலை பாராட்டவேண்டும் ,இப்படியான் செயல்கள் மூலம்தான் நாம் எமது மக்களுக்கு உதவமுடியும்.

இந்த நாட்டியம் மூலம் இந்தியா எமக்கு செய்த தீமைகளை காட்சி படித்தியிருந்தால் இன்னும் நல்லாக இருந்திருக்கும்



"தன்னலமற்ற அன்பு" கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது இவையே அனுமன் என்பதன் தத்துவம்.



ஒரு வருடம் ஆவதற்கு முதலே மறந்து விட்டோம் எமக்கு இந்தியா செய்த அழிவுகளை ,அதுதான் அனுமான் பூராணம் பாடுகிறோம்