சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்..




நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் சென்னை தி. நகர் சௌத் போக் ரோடில் வசித்து வருகிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது கொடுக்கப்பட்டபோது, சென்னை மாநகராட்சி எங்கள் தெருவின் பெயரை “செவாலியே சிவாஜி கணேசன் சாலை” என்று மாற்றியது. பொதுவாகவே எங்கே ஆட்டோ ஏறினாலும், தி. நகர் சௌத் போக் ரோடு என்றவுடன், சிவாஜி வீட்டு கிட்டேயா?’ என்று டிரைவர்கள் கேட்கத் தவறமாட்டார்கள். சிவாஜியின் பரம ரசிகர்களான என் வயதான உறவினர்கள் சிலர், ” சிவாஜியை அடிக்கடி பார்ப்பியா? ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்; என்னை சிவாஜியைப் பார்க்க கூப்பிட்டுக்கிட்டுப் போ!” என்று கட்டளையிடுவார்கள். நான் உடனே டாபிக்கை மாற்றிவிடுவேன்.
உண்மை என்னவென்றால் நானே முதல் மரியாதை படம் ரிலீசாகும் வரை சிவாஜி வீட்டின் பெரிய கேட்டைத்தான் பார்த்திருக்கிறேன். முதல் மரியாதை வெளியாகி, பெருத்த வரவேற்பைப் பெற்றவுடன், கல்கிக்காக அவரை சந்தித்தேன். சிவாஜி என்ற சிங்கத்தைப் பார்க்கப் அவர் வீட்டுக்குள் போன என் கண்களில் முதலில் பட்டது கம்பீரமாக ஒரு கண்ணாடி ஷோ கேசின் உள்ளே நின்றுகொண்டிருந்த ஒரு நிஜ சைஸ் புலி.



சிவாஜி நடந்து அந்த வரவேற்பு அறைக்குள் வந்தபோது, எனக்குள்ளே ஒரு இனம் தெரியாத சிலிர்ப்பு. பொதுவாக சினிமா உலகம் பற்றியும்,குறிப்பாக முதல் மரியாதை பற்றியும் அப்போது பேசினார். “நீங்கள் இத்தனை படங்களில் நடித்ததற்கும், முதல் மரியாதையில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டதும், ” முதல் மரியாதையில நான் எங்கே நடிச்சேன்? நீங்க நடிக்கவே வேணாம்; சும்மா வந்திட்டுப் போனா போதும்னு அந்த டைரக்டர் பாரதி(ராஜா) சொல்லிப்புட்டாரில்ல. அப்புறம் எங்க நான் நடிக்கறது?” என்றார்.
ஒரு முறை பாரதி ராஜாவை பேட்டி கண்டபோது, சிவாஜி சொன்னததை அவரிடம் சொன்னபோது, அவர் முதல் மரியாதையில் சிவாஜியை இயக்கிய அனுபவத்தை சொன்னார். ஆற்றங்கரையோர குடிசையில் ராதா கொடுத்த மீனை ருசித்தபடியே நீண்ட வசனம் சொல்ல வேண்டிய காட்சி. பாரதி ராஜா, ‘ஸ்டார்ட்’ சொன்னதும் சிவாஜி வசனம் பேச ஆரம்பித்தர். கேமரா ஓடிக்கொண்டிருந்தது. ஐம்பது, அறுபது வினாடிகளுக்குப் பிறகு, சிவாஜி மீண்டும் முதலிலிருந்து வசனத்தை சொல்ல ஆரம்பித்தார். பாரதிராஜாவுக்கும், மற்றவர்களுக்கும் எதற்காக மறுபடியும் வசனத்தை ஆரபித்து சொல்கிறார் என்று புரியவில்லை. ஆனாலும், அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொத்த வசனத்தையும் பேசி முடித்தபோது, பாரதி ராஜா கட் சொன்னார்.
எல்லோரும் சிவாஜியின் முகத்தையே பார்க்க, ” எதுக்காக ரெண்டாவது தடவை முதலிலே இருந்து வசனத்தை ஆரம்பிச்சேன்னுதானே பார்க்கறீங்க?  சொல்லிக்கிட்டே வரும்போது சின்ன தப்பு பண்ணனேனே? கவனிக்கலையா நீங்க? மறுபடியும் இன்னொரு டேக் எடுக்கறதுக்கு பதிலா, அதே டேக்லயே மறுபடியும் முதல்லே இருந்து வசனத்தை பேசிட்டேன்” என்று சொன்னார்.
இந்த சம்பவத்தை சொன்ன பாரதி ராஜா, வசனம் பேசிக்கிட்டே வரும்போது ஒரு கணம் தப்பு ஏற்பட்டாலும், தடுமாறாமல், அதை புத்திசாலித்தனமா சமாளிக்க ஆன் தி ஸ்பாட் முடிவு எடுத்து, மறுபடி வசனத்தை பேசின அவன்தான்யா பிறவி நடிகன். என் டைரக்ஷன்லயும் அவன் நடிச்சிருக்கான் என்பதுல எனக்குப் பெருமை! ” என்றார் பூரிப்புடன்.
குமுதத்தில் பத்திரிகையாளர் மணா ‘ நதி மூலம்’ தொடரில் சிவாஜியைப் பற்றி எழுதினபோது, அந்தக் கட்டுரையில் இடம் பெற வேண்டிய ஒரு பாக்ஸ் மேட்டரை என்னை எழுதும்படி சொன்னார்கள்.(உங்க ஏரியாதானே! சிவாஜி பத்தி ஒரு சின்ன மேட்டர். அவரைப் பார்த்திட்டு நீங்களே எழுதிடுங்களேன் என்று குமுதத்தில் சொல்லிவிட்டார்கள்) அதற்காக சிவாஜியை சந்தித்தேன். அப்போது சிவாஜி தன் ஆரம்ப நாட்களைப் பற்றி மிகவும் உருக்கமாகப் பேசினார். அதன் சுருக்கம்:
“என் அப்பா மன்றாடியார் பகத்சிங் டைப் தேசியவாதி. நெல்லிக்குப்பத்துல ரயிலுக்கு வெடிகுண்டு வைக்கிறது யாருன்னு திருவுளச்சீட்டு போட்டபோது என் அப்பா பெயர் வந்தது. பிளான்படி வெடிகுண்டு வெச்சிட்டு ஓடறப்போ, பிரிட்டிஷ்காரன் சுட்டுட்டான். கால்ல பலத்த அடி. ஓடி வந்து மண்டையில் ஒரு போடு போட்டான். கேஸ் நடந்து ஏழரை வருஷ ஜெயில் தண்டனைன்னு தீர்ப்பாச்சு.” சொல்லும்போதே சிவாஜியின் குரல் கம்மியது. “ஜெயிலுக்குப் போன நாலரை வருஷத்துக்கெல்லாம் விடுதலையாகி வந்தவரைக் காட்டி என் அம்மா எனக்கு  சொன்னாங்க, ” இவருதாண்டா உன் தகப்பனார்!”
அந்த சமயத்துல நாங்க விழுப்புரத்தை விட்டுட்டு, திருச்சிக்குப் பக்கத்துல சங்கிலியாண்டபுரம் என்கிற கிராமத்துக்கு வந்திட்டோம். அந்த கிராமத்துல நான் உருண்டு விளையாடாத இடமில்லை. அங்கே வருஷா வருஷம் கட்டபொம்மன் நாடகம் நடக்கும். அதைப் பார்க்கிறப்போ, நமக்கு இஞ்செக்ஷன் போட்டாப்புல இருக்கும்.நாமளும் நடிக்கணும்னு உடம்புல ஸ்பிரிட் ஏறும். அந்த வெறிதான் என்னை நாடகக் கம்பெனியில சேர வெச்சுது. அதற்கு அப்புறமும் நான் வாழ்க்கையில சந்திச்ச கஷ்டங்கள் ஏராளம்; சோகங்களும் சொல்லிமாளாது.
நான் இன்றைக்கு யாருக்காவது நன்றிக் கடன் பட்டிருக்கேன்னா அது ரெண்டு பேருக்குத்தான். ஒண்ணு ஆண்டவனுக்கு; இன்னொண்ணு பராசக்தி படத்தை தயாரிச்ச பார்ட்னரான பெருமாளுக்கு. ரொம்ப வெளிப்படையா சொல்லணும்னா என்னோட வாழ்க்கையும், வசதியும் பெருமாள் போட்ட பிச்சை” ரொம்ப உருக்கமாகப்பேசினார் சிவாஜி.
1997ல், சிவாஜிக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட்டபோது குமுதத்துக்காக சிவாஜியை சந்தித்தேன். மனுஷர் ரொம்ப ஜாலி மூடில் இருந்தார். இரண்டு சிறுமிகள் சிவாஜிக்கு பொக்கே கொடுத்தபோது, அவர்கள் இருவரையும் உச்சி மோந்து, முத்தமிட்டுவிட்டு, ” உங்க அப்பன் உங்களுக்கு சாப்பாடே போடறதில்லையா? இப்படி இளைச்சு போயிட்டீங்களே!” என்று ஜோக் அடித்தார் சிவாஜி. அந்த இரண்டு சிறுமிகள் ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும்தான்! அவர்களுக்கு சோறு போடாத அப்பன் வேறு யார்? சாட்ஷாத் சூப்பர் ஸ்டார்தான்!
‘எனக்கு சுயநலம் குறைச்சல். மத்தவங்க சந்தோஷப்பட்டா, அதைப் பார்த்து சந்தோஷப்படற கலைஞன் நான். இவ்வளவு நாள் தகுதியான ஒருத்தன் இருக்கிறது தெரியாம இருந்து, இப்ப தெரிஞ்சு, தாதா சாஹேப் பால்கே விருது கொடுத்து கௌரவிச்சிருக்காங்களேன்னு நம் தமிழ் நாட்டு ஜனங்கள் எல்லாம் சந்தோஷப்படறதைப் பார்க்கிறபோது, எனக்கு ரெட்டை சந்தோஷமா இருக்கு.” என்று சிவாஜி சொன்னபோது அவர் முகத்தில் நிஜமாலுமே ரெட்டை சந்தோஷம்.
தொடர்ந்து பராசக்தி நாட்களைப் பற்றி நினைவு கூர்ந்தார் நடிகர் திலகம். ‘அது ரத்தக் கண்ணீர் வடிச்ச சோகமான காலம். சினிமா உலகம் இரும்புக்கோட்டை மாதிரி இருந்தது. புதுசா ஒருத்தன் அத்தனை சுலபமா உள்ளே நுழைஞ்சிட முடியாது. என்னை பலர் ஜீரணிச்சுக்கலை. ஒரு சவுண்டு இஞ்சினியர் நான் வசனம் பேசினதைப் பார்த்துட்டு, “மீன் மாதிரி வாயை தொறந்து, தொறந்து மூடி வசனம் பேசுறானே! இவனெல்லாம் நோ கட் பாடி”ன்னு சொன்னார். (நோ கட் பாடி என்பது ‘இவனெல்லாம் எங்கே தேறப்போறான்னு அர்த்தம் கொண்ட அந்தக் கால சினிமா உலக வார்த்தை)
‘உங்களுடைய நீண்டகால, நிலைத்த வெற்றிக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?” என்றபோது, ” நான் ஆறு வயசுல நடிக்க வந்தவன். மேடையிலதான் நான் நடிப்பை கத்துக்கிட்டேன் என்பதால, என் நடிப்புல எப்போதுமே ஸ்டேஜ் இன்ஃப்ளுயன்ஸ் உண்டு. ஆனால், காலத்தோட சேர்ந்து, நானும் என்னோட நடிப்பு பாணியை கொஞ்சம், கொஞ்சமா மாத்திக்கிட்டு வந்ததுதான் பெரிய பிளஸ் பாயிண்ட். எனக்கு கடவுள் பக்தி நிறைய உண்டு. உழைப்பின் மேல் நம்பிக்கை உண்டு. ஆரம்ப காலத்துல பலரும் என்னை அங்கீகரிக்க மறுத்தபோது, டைரக்டர் (கிருஷ்ணன்) பஞ்சு, ” நீ கவலைப்படாதே! பிற்காலத்துல எல்லாரும் உன்னத்தான் ஃபாலோ பண்ணுவாங்க!” என்று அடிக்கடி சொல்லுவார்.
இந்தியன் படத்தில் ஹாலிவுட் மேக்-அப் மேன் உதவியோடு கமல் முதியவராக நடித்தபோது, தேசிய அளவுல அங்கீகாரம் கிடைச்சது. ஆனா அவரைவிட குறைஞ்ச வயசுல அப்பர் வேஷத்துல தொண்டுக் கிழவராக நீங்க நடிச்சிருக்கீங்க. அந்தக் காலத்துலயே ஒரே படத்துல ஒண்ணுக்கொண்டு சம்மந்தமில்லாத ஒன்பது கேரக்டர்ஸ் பண்ணி இருகீங்க! அதுக்கெல்லாம் பெரிய அளவுல அங்கீகாரம் கிடைக்கலையேன்னு வருத்தப்பட்டதுண்டா?” என்று சற்றே தயக்கத்துடன் கேட்டேன். “அந்தக் காலத்துல ஏது இத்தனை வசதி? நானேதான் அப்பர்சுவாமிகளா மேக்-அப் போட்டுக்குவேன். அப்ப ஜனங்க ரசிச்சாங்க! இப்போ இருக்கறது மாதிரி நிறைய வசதிகள் இருந்தா இன்னும் என்னென்னவோ செய்திருக்கலாம்” என்று வருத்தம் கலந்த நழுவலாக பதில் வந்தது.
இந்தக் காலத்தில் சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் பற்றிய கேளவிக்கு அவர் ஒரு பஞ்ச் பதில் சொன்னார் பாருங்கள்! ” அந்தக் காலத்துல நான் (திறமையை) வெச்சிக்கிட்டு, வஞ்சனையா பண்ணினேன்? இந்தக் காலத்துல ஏகப்பட்ட பேர் வராங்க. இவங்க எல்லாம் (திறமையை) வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணறாங்க?” அப்பப்பா! அசந்து போனேன் நான். சிவாஜி மேலும் தொடர்ந்தார்: ” நடிகன்னா நிறைய திங்க் பண்ணணும். காலையில பாத் ரூம்ல நான் நிறைய யோசனை பண்ணுவேன். பகல்ல சாப்பிட்ட பிறகு, உடம்புக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தாலும், திங்க் பண்ணாம இருக்க மாட்டேன். நடிக்க வந்திட்டு, தீவட்டி மாதிரி நின்னா சீக்கிரமே வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.
‘இத்தனை வருஷ அனுபவத்துல, இப்போ எப்படி நடிக்கணும்னாலும் ஃபூன்னு ஊதிடுவீங்க இல்லை?’
டைரக்டர் சீனை சொன்னதும், நான் செஞ்சு காட்டறேன். கொஞ்சம் கூட, குறைய இருக்கும். எப்படி வேணும்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டு நடிச்சுக் காட்டுவேன். ஏதாவது சேஞ்ச் வேணுமென்றால் சொல்லுவார்கள். முதல் டேக்கில் அவர்களுக்கு முழு திருப்தி கிடைக்கலைன்னா, இன்னொரு டேக் போயிடுவேன். வீட்டுல இருந்தா வெட்டியா பொழுது போகும்; செட்டுல இருந்தா வசனம் பேசினா பொழுதுபோகும்; அதான் வித்தியாசம்.
“இத்தனை வருடங்களின் எத்தனையோ விதமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும், இன்னமும் நீங்கள் ஏற்று நடிக்க விரும்பும் கேரக்டர் ஏதாவது உண்டா?” என்று கேட்டதும், “ஓ! இருக்கே! பெரியார் வேஷத்துல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஆண்டவன் அனுகிரஹம் இருந்தா நிறைவேறும்” என்றார். பதிலைக் கேட்டு நான் லேசாக சிரித்தேன். என் சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவராக, ‘ எதுக்கு சிரிக்கறே? பெரியாரா நடிக்க, ஆண்டவன் அனுகிரஹம் வேணும்னு சொன்னதுக்காகவா? பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எனக்கு நிறைய இருக்கே?”
இப்போது அவர் சிரித்தார்

Nanri: tamilpaper

No comments: