இந்தியன் வேல்யூஸ் - சிறுகதை


.

S.நாராயணசுவாமி மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்அன்று மதியம், அடர்த்தியாக படர்ந்திருந்த டென்ஷன் ஒரேயடியாக தகர்ந்து விட்டது போல் வெயில் காலத்து இடியுடன் கூடிய புயல் நகரத்தைத் தாக்கியது. வாசந்தி அதை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் பிராட்வே வழியாக நடந்து போய் கொண்டிருந்தாள்.

"உன் உத்தேசத்தில் இந்தியன் வேல்யூஸ் என்றால் என்ன நீரூ?"
நீரூ என்று அழைக்கப்படும் நீரஜா டீ பாட்லிருந்து க்ரீன் டீயை நிதானமாக தன் கோப்பையில் ஊற்றிக் கொண்டு பிறகு நிமிர்ந்து பார்த்தாள்.
சிநேகிதியைக் கூர்ந்து பார்த்தவள், "உன் போக்கைப் பார்த்தால் உன் கேள்விக்குப் பின்னால் ஏதோ பெரிய கதை இருப்பது போல் தோன்றுகிறது. முதலில் அந்தக் கதையைச் சொல்" ஆணையிட்டாள் நீரஜா.
"கதைத்தான். எங்க அம்மா அப்பா என் கல்யாணத்திற்காக செய்து கொண்டிருக்கும் ரகளைதான் உனக்குத் தெரியுமே? போன கிருஸ்துமஸ் வீடுமுறைக்கு வீட்டுக்குப் போயிருந்தேன். மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுக்கப் போவதாக சொன்னார்கள். அதற்கென்ன வந்தது என்று நினைத்து சரி என்றேன். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ...."
"வெயிட் எ மினிட். விளம்பர வரிகளை நீ எழுதினாயா? அவர்கள் எழுதினார்களா?""அவர்கள்தான் எழுதினார்கள். எனி வே, அதன் மூலமாக ஒரு வரன் வந்தது. அவன் நியூயார்க் கொலம்பியாவின் கார்டியாலஜியில் ·பெலோஷிப் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் ·பில்லியில் இருக்கிறார்கள். அவர்கள்தான் விளம்பரத்தை பார்த்துவிட்டு என் பெற்றோரிடம் பேசியிருக்கிறார்கள்."
"உன் வீட்டார் உன் போன் நம்பர் கொடுத்து, அவர்கள் அதை மகனிடம் கொடுத்து, அவன் உன்னைக் கூப்பிட்டு..." நீரஜா கதையை ·பாஸ்ட் ·பார்வாட் செய்ய முயன்றாள்.
"இரு இரு. அப்படி நடந்தால் பின்னே கதை என்ன இருக்கிறது?" சஸ்பென்ஸ் கூட்டுவது போல் நிறுத்தினாள் வாசந்தி. நடந்த நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்ததும் அவள் இதழ்களில் முறுவல் மலர்ந்தது.
"பின்னே என்னதான் நடந்தது? சீக்கிரமாக சொல்லு." அவசரப் படுத்தினாள் நீரஜா.
"முதலில் அவனுடைய பேற்றோர்கள் வந்தார்கள், என்னுடன் டேட் செய்வதற்கு!"
நீரஜாவின் முகத்தில் வெளிப்பட்ட ஆச்சரியத்தைக் கண்டு அடக்கிக் கொள்ள முடியாமல் சிரித்துவிட்டாள் வாசந்தி.
நீரஜா மட்டும் சீரியஸாக "யு ஆர் கிட்டிங் மி. அப்படித்தானே?" என்றாள்.
"இல்லை இல்லை. சத்தியமாக சொல்கிறேன்." வலது கரத்தை தலையின் மீது வைத்தபடி சொன்னாள் வாசந்தி. "அவர்கள் ·பில்லியிலிருந்து என்னைப் பார்ப்பதற்காக வந்தார்கள். முதலில் எங்க அம்மா அப்பா என்னிடம் இந்த விஷயத்தைச் சொன்ன போது நானும் திகைத்துப் போய் விட்டேன். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதுவும் நன்றாக இருப்பது போல்தான் தோன்றியது. சரி என்று சொல்லிவிட்டேன். அது மட்டுமே இல்லை. அவர்களை இம்பிரெஸ் செய்வதற்கும் ஆயத்தமாகி விட்டேன்."
"ஹ¤ம். இத்தனை வருடங்கள் வளர்ந்து கடைசியில் நீ இந்த நிலைக்கு வந்து விட்டாயா? எம்.பி.ஏ. படித்திருக்கிறாய். பெரிய வேலையில் இருக்கிறாய். உனக்கு வேண்டியவனை நீ தேர்வு செய்து கொள்ளாமல், கல்யாணத்திற்காக இப்படி முன்பின் தெரியாத மாமிக்களை இம்பிரெஸ் செய்வதற்கு திண்டாடி கொண்டு..."
"நிறுத்து நிறுத்து. ஒரு நிமிடம் நிறுத்து. கணவனைத் தேடிக் கொள்வதற்கு இதைவிட நல்ல வழிகள் ஏதாவது இருந்து தொலைத்திருக்கா என்ன? எப்பொழுது பார்த்தாலும் சிங்கிள் பார்கள், நைட் கிளப்புகள் என்று சுற்றிக் கொண்டிருப்பது, தூக்கத்திற்கும் கேடு, தண்டச் செலவு! இவ்வளவு திண்டாடினாலும் மனதிற்கு பிடித்தவன் எவனாவது கிடைப்பான் என்பதற்கு கியாரண்டி இல்லை. அப்படியே கிடைத்தாலும் அவன் யார்? அவன் ஹிஸ்டரி என்ன? அவனுடைய க்ளோசெட்டில் எத்தனை ரகசியங்கள் புதைந்திருக்கோ என்று பயந்து சாக வேண்டும்."
"ஓ.கே. ஓ.கே. நீ சொல்லுவதிலும் பாயிண்ட் இருக்கிறது. ஒப்புக் கொண்டு விட்டேன். பின்னால் நடந்த கதையைச் சொல்லு. நீ உன் வருங்கால மாமியாரைக் கவர்ந்து விட்டாய். அப்புறம்?"
"பிறகு என்ன இருக்கிறது? கதாநாயகனே போன் செய்தான். இரண்டு முறை டின்னரில் சந்தித்தோம்."
"அப்பாடா! கதை தொடங்கிய அரைமணி நேரம் கழித்து ஹீரோ எண்ட்ரி செய்து விட்டான். இத்தனைக்கும் உன் ஹீரோவுக்கு பெயர் ஏதாவது இருக்கிறதா? பார்ப்பதற்கு எப்படி இருக்கிறான்?"
"பெயர் கிருஷ்ணகுமார். பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறான். ரொம்ப அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் ஸ்பார்ட்டாக ·பிட்டாக இருக்கிறான்."
"ஓ.கே. லுக்ஸ் பி பிளஸ். பின்னே டிரெஸ்?"
"உன் யோசனைகள் எந்த பக்கம் போகிறதென்று எனக்குத் தெரியும், அவன் சாக்ஸ் பேண்டுக்கு மேட்சாக இருந்ததா? வேறு ஏதோ எதனுடனோ மேட்சாக இருந்ததா என்று கேட்கத் தொடங்குவாய். ஸ்மார்ட் ஆக இருக்கிறான் என்று சொல்லிவிட்டேனே."
"நீ அவனை சப்போர்ட் செய்வதைப் பார்த்தால் உனக்குப் பிடித்திருப்பதாக தெரிகிறது. முதலில் அதைச் சொல்லு. பிடித்திருக்கிறானா?"
"இரண்டு முறை சந்தித்து விட்டால் மட்டும் பிடித்தானா இல்லையா எப்படிச் சொல்ல முடியும்?"
"அப்பாடா! பரவாயில்லை. இனியும் உன்னைக் காப்பாற்ற முடியும்."
"இருந்தாலும் முதல்பார்வையில் பிடித்து விட்டதாகத்தான் சொல்லணும்."
"அப்போ என்னதான் பிரச்னை? முன்னேற வேண்டியதுதானே?"
"அதுதான் ... அங்கேதான் வந்தது இந்தியன் வேல்யூஸ் பிரச்னை!"
"இந்தியன் வேல்யூஸ்? வாட் இந்தியன் வேல்யூஸ்?" முதல் முறையாக அந்த வார்த்தையை கேட்பது போல் குழப்பமாக பார்த்தாள் நீரஜா.
***********************************************************************
மன்ஹட்டனில் பெயர் பெற்ற ரெஸ்டாரெண்ட். அன்று இரவு நேரத்தில் கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கான டேபிள் ரெடியாக இருந்தது. முன் கூட்டியே ரிசர்வ் செய்து வேண்டும் என்ற கிருஷ்ணகுமாரின் தொலை நோக்குப் பார்வைக்கு மனதிலேயே வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டாள் வாசந்தி. இந்த விஷயத்தில் மோசமான அனுபவங்களை அவள் சந்தித்து இருக்கிறாள். வெயிட்டர் ஆர்டருக்காக வந்த போது அவன் ஐஸ்ட் டீக்காக கேட்டான். அவள் பிரஷ் லெமனேட் ஆர்டர் செய்தாள்.
அறிமுகப்படலம் முடிந்த பிறகு பொதுவாக உரையாடலை தொடங்கினார்கள். உணவுக்காக காத்திருக்கும் போதும், சாப்பிட்டுக் கொண்டும், சாப்பிட்டு முடித்த பிறகும் எதிராளியின் எண்ணங்களை, கருத்துக்களை, ரசனைகளை, விருப்பு வெறுப்புகளை பேச்சோடு பேச்சாக தெரிந்து கொண்டு, கேட்டுக் கொண்டு, முக்கியமானவை என்று தோன்றியவற்றை நினைவு பெட்டகத்தில் பதிவு செய்து கொண்டு, பின்னால் அலசி ஆராய்வதற்கு தோதாக வரிசை படுத்திக் கொண்டு... இதுதானே முதல் சந்திப்பு. அவசரம் எதுவும் இல்லை. முதலில் அறிமுகம் வளரவேண்டும். ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் இருவருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு... பிறகு.. அதை எல்லாம் இப்போதே யோசிப்பானேன்? கிருஷ்ணா ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
"ஹைஸ்கூல் படிப்பு முடிந்தது. எனக்கு மட்டும் மெடிசன் செய்யணும் என்று விருப்பம். அப்பாவுக்கு என்னை பெரிய பிசினெஸ் மேன் ஆக பார்க்கணும் என்ற ஆசை. முதலில் ப்ரி மெடிகல் செய். பின்னால் பார்ப்போம் என்றார். என்னை தன் வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தார். அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டு நான் ஆறு வருடங்கள் மெடிகல் பிரோக்கிராமில் சேர்ந்து விட்டேன். அப்பாவுக்கு கொஞ்சம் மன வருத்தம்தான்" என்று லேசாக சிரித்தான். ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வாசந்தியும் புரிந்தாற்போல் பதிலுக்கு சிரித்தாள்.
அவன் மேலும் தொடர்ந்தான். "சிகாகோவில் இன்டர்ன் இரண்டு வருடங்கள். அதற்கு அம்மா ரொம்ப ரகளை செய்தாள், ரொம்ப தொலைவாக போகிறேன் என்று. ஆனால் அது ரொம்ப நல்ல வாய்ப்பு. நான் அம்மாவிடம் சொன்னேன். "நீயும், அப்பாவும் இந்தியாவிலிருந்து இவ்வளவு தூரம் வந்தீங்க. நான் சிகாகோவிற்கு போனால் மட்டும் தொலைவு எப்படி ஆகும் என்று?" அம்மா சம்மதிக்க வில்லை. ஆனால் இப்பொழுது நான் நியூயார்க்கில் இருப்பதால் அம்மாவுக்கு சந்தோஷம்தான்." இதுதான் என் கதை. நீ உன் கதையைச் சொல்ல என்பது போல் நிறுத்தினான்.
வாசந்தி தன்னுடைய கதையைச் சொன்னாள். "நான் கலிபோர்னியாவில் வளர்ந்தேன். உனக்குத் தெரிந்துதான் இருக்கும். என் கல்லூரி படிபெல்லாம் ஈஸ்ட் கோஸ்டில்தான் முடிந்தது. முதலில் கொஞ்ச நாள் கார்னெலில் இன்ஜினியரிங். கொஞ்ச காலம் நியூஜெரிஸியில் வேலை பார்த்த பிறகு போர் அடித்தது. ஐ வாஸ் லுக்கிங் ·பர் எ குட் சாலெஞ்ச். அதனால் வேலையை விட்டு விட்டு எம்.பி.ஏ. படிக்க நினைத்தேன். வ்வார்ட்டன்லிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னால்தான் முடித்தேன்."
"வெல், நீ வ்வார்ட்டன் எம்.பி.ஏ.வா? எங்க அப்பா உன்னைச் சந்தித்த போது ரொம்ப த்ரில்லாக உணர்ந்திருப்பாரே?"
வாசந்திக்கு அன்று நடந்தது நினைவுக்கு வந்து புன்முறுவலை பதிலாக தந்தாள். "அப்படித்தான் நானும் நினைக்கிறேன். நாங்கள் பல விஷயங்களை பேசிக் கொண்டோம். பிசினேஸ், ஆர்ட்ஸ்... உங்க அம்மாவுடனும். உங்க அம்மாவுக்கு அங்கே இருக்கும் தெலுங்குக் காரர்களை எல்லாம் தெரியும் போலும்."
"அங்கே இருக்கும் தெலுங்கு சங்கத்தில் அம்மா ரொம்ப சுறுசுறுப்பாக பங்கு எடுத்துக் கொள்வாள். அம்மாவின் பங்களிப்பு இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது. நீ எப்பொழுதாவது அந்த நிகழ்ச்சிகளுக்குப் போயிருந்தாய் என்றால்..."
"எங்கே? என்னுடைய புரோகிராமே ரொம்ப பிசியாக இருக்கும். எப்பொழுதாவது கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைத்தால், முடிந்த போது சுருதி க்ரூப் நடத்தும் கச்சேரிகளுக்குப் போய் கொண்டிருந்தேன்."
"அப்படியா? நான் அந்த மாதிரி நிகழ்ச்சிகளிலிருந்து கொஞ்சம் விலகியே இருப்பேன். பாஸ்கெட் பால் என்றால் எப்போ வேண்டுமானாலும் போவேன். உனக்கு இசையில் எப்படி ஆர்வம் வந்தது?"
"எங்க பாட்டி காரணமாக இருக்கலாம். நான் சிறுமியாக இருந்த போது அடிக்கடி இந்தியாவுக்குப் போய் வருவோம். பாட்டி என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டு நிறைய விஷயங்களை பேசுவாள். அப்படித்தான் இந்தியன் மைத்தாலஜியில், இசையில் ஆர்வம் ஏற்பட்டது. சில நாட்கள் சிரத்தையாக கற்றுக் கொள்ளவும் செய்தேன். பிறகு படிப்பு கேரீர் சூழ்ந்து கொண்டு விட்டதில் அவற்றுக்கு நேரம் அதிகம் இல்லாமல் போய் விட்டது."
"டேட்டிங்கிற்கு கூடவா?" கேஷ¤வலாக கேட்டான் கிருஷ்ணா.
"உண்மையைச் சொல்லப் போனால் ஆமாம். அதோடு அம்மாவும் ஹைஸ்கூலில் படிக்கும் போது, கல்லூரியில் இருக்கும் போது டேட்டிங்க் எல்லாம் வேண்டாம். ஆண்களிடமிருந்து தள்ளியிருக்கணும் என்று விடாமல் ஒரே லெக்சர். எனக்கும் அதற்கான நேரமோ மனநிலையோ இருக்கவில்லை." சிரித்து விட்டாள் வாசந்தி.
"வெல். இந்த நாட்டில் இருந்தாலும் நல்ல இந்தியன் வேல்யூசுடன் உன்னை வளர்த்த உன் பெற்றோர்களை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்." பாராட்டு தெரிவிப்பது போல் சொன்னான் கிருஷ்ணா.
வாசந்திக்கு இதேதோ புகழாரம் போல் தோன்றியது. "தாங்க்ஸ்!" என்றாள் கொஞ்சம் வியப்படைந்தவளாக. கேள்வியை அவன் பக்கம் திருப்பினாள். "உன் விஷயம் என்ன? டேட்டிங் எதுவும் செய்யவில்லையா? இந்தியன் பெண்ணை பண்ணிக் கொள்ள வேண்டும் என்று எப்படித் தோன்றியது?"
கிருஷ்ணா யோசித்தபடி சொல்லத் தொடங்கினான். "கல்யாணத்தைப் பற்றி யோசனை வந்ததும் எத்தனையோ பிரச்னைகள், சந்தேகங்கள். கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் எனக்கு ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. தாய் தந்தை இந்தியர்களாக, இந்தியன் வேல்யூசுடன் வளர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும். அதற்காக இந்தியாவிடம் எனக்கு தீவிரமான பற்று இருப்பதாக நினைத்து விடாதே. இதற்குப் பின்னால் ஒரு பிராக்மாடிக் ரீசனிங்க் இருக்கிறது."
"காரணம் எதுவாக இருந்தாலும், உன் பெற்றோர் இந்த முடிவுக்கு சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்."
"அ·ப்கோர்ஸ்! ஆனால் இந்த முடிவுக்கு வருவதற்கு அவர்களுடைய பிரமேயம் எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க என்னுடைய சுயநலம்தான்" என்று லேசாக சிரித்தான். "ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது. இப்படிப்பட்ட தகுதிகள் கொண்ட பெண்ணை நானாக தேடி கண்டுபிடிப்பது, என்னுடைய பிசி ஷெட்யூலுக்கு நடுவில் கஷ்டம் என்று தோன்றியது. அப்பா அப்பா உதவி செய்வதாக சொன்னார்கள். எனக்கும் சரி என்று பட்டது."
டெஸர்ட் சாப்பிட்டு முடித்த பிறகு கிருஷ்ணா பில்லை தானே கொடுப்பதாக சொன்னான். ஆனால் வாசந்தி சம்மதிக்கவில்லை. தன்னுடைய பங்கை தானே கொடுத்து விடுவதாக பிடிவாதம் பிடித்தாள்.
"வெல் வாசந்தி! உன்னுடைய கம்பெனி ரொம்ப எக்ஸெலெண்டாக இருந்தது. உனக்கு டின்னர் கொடுப்பது ... இட்ஸ் மை பிளெஷர்" என்று கிருஷ்ணா மென்மையாக எதிர்ப்பு தெரிவித்தான்.
ஆனால் வாசந்தி பிடிவாதமாக "நானும் உன் கம்பெனியை ரசித்தேன். இந்த காலத்தில் கூட ஆண்கள்தான் செலவு செய்யணும் என்று சொல்வது ரொம்ப பழங்காலத்து சம்பிரதாயம். இன்னும் எதிர்காலத்தில் எத்தனையோ நிகழ்வுகள் இருக்கும். இந்த தடவைக்கு இப்படி நடக்கட்டும்" என்று தன் பங்கு முப்பத்தைந்து டாலர்களை வாலெட்டில் வைத்துக் கொண்டே. கிருஷ்ணாவுக்கும் அவள் வார்த்தைகளில் எதிர்காலத்திற்குத் தேவையான அழைப்பு ஏதோ தொனித்ததும், அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு தன்னுடைய பங்கையும் அத்துடன் சேர்த்தான்.
ரெஸ்டாரெண்ட் லிருந்து வெளியே வந்த பிறகு, "உன்னை வீடு வரையிலும் கொண்டு விடுகிறேன்" என்றான், இந்த விஷயத்தில் மட்டும் சமாதானம் ஆகப் போவதில்லை என்பது போல். வாசந்தியும் சரி என்றாள். மனதிற்கு இனிமையான வசந்தகாலத்து தென்றல் காற்றில் பஸ்ஸ¤ம், ரயிலும் வேண்டாமென்று இருவரும் நடந்தே சென்றார்கள் வாசந்தி குடியிருக்கும் அபார்ட்மெண்ட் வரையிலும்.
வாசந்தி நட்புடன் விடைபெற்றுக் கொண்டே 'பரவாயில்லை, இரண்டாவது டேட்டிங்கிற்கு போகலாம்' என்று நினைத்துக் கொண்டாள். உள்ளே போகும் முன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து விட்டு கையை அசைத்த போது, கிருஷ்ணா இரண்டே எட்டில் நான்கு படிகளையம் ஏறி அவளை நெருங்கி வந்தான். கதவின் மீது கையை வைத்துக் கொண்டு நின்ற வாசந்தியின் கையைப் பற்றி மென்மையாக அழுத்திவிட்டு "உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலி. உன்னைப் போல் இந்தியன் வேல்யூஸ் இருக்கும் பெண் இப்பொழுதாவது எனக்கு அறிமுகம் ஆனதற்கு" என்றான் அவள் கண்களுக்குள் ஊடுருவுவது போல் பார்த்துக் கொண்டே. சொல்லிவிட்டு மளமளவென்று இறங்கியவன் வேகமாக நடந்து தெருமுனையில் திரும்பி கண்மறைவாகிவிட்டான்.
வாசந்தி 'இதென்ன வேடிக்கை?' என்பது போல் அவன் போன திசையைப் பார்த்தபடி ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள்.
***********************************************************************************
"இந்தியன் வேல்யூஸ்? வாட் இந்தியன் வேல்யூஸ்?" அந்த வார்த்தையை முதல்முறையாக கேட்பது போல் குழப்பத்துடன் பார்த்தாள் நீரஜா.
"வாழ்ந்தாற்போல் இருக்கு. அங்கேதானே இந்த கதை தொடங்கியிருக்கிறது." வாசந்தி சலித்துக் கொண்டாள்.
"ஓ.கே. நீ சொல்லு. இந்த இந்தியன் வேல்யூஸ் பிரச்னை என்ன?"
"இரண்டு பேரும் நன்றாகத்தான் பேசிக் கொண்டோம் முதல்முறை சந்திப்பில். பொழுது போக்குகளை, ரசனைகளை பகிர்ந்து கொண்டோம். அவன் என்னை வீடு வரையிலும் கொண்டு விட்டு போகும் முன் "இந்தியன் வேல்யூஸ¤டன் வளர்ந்த நீ எனக்கு அறிமுகமானது என் அதிர்ஷ்டம்" என்று சொல்லிவிட்டு போய்விட்டான். அதுதான் என்னவென்று எனக்குப் புரியவில்லை."
"புரியாமல் இருப்பதற்கு என்ன இருக்கு? நீ பாட்டு அது இது என்று கற்றுக் கொண்டாய் இல்லையா சில நாட்கள். அதைப் பற்றி உன் வீட்டார் பெருமையாக சொல்லியிருப்பார்கள்."
"கொஞ்சம் யோசித்தால் எனக்கும் அப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது. இரண்டாவது முறை சந்தித்தப் போது அவனுக்கு இசை, நாட்டியம் போன்றவற்றில் விருப்பம் போலும் என்று அதைப் பற்றி பேசத் தொடங்கினேன். ஆனால் அவனுக்கு பாலமுரளி பாடுவார் என்றும், ரமணி புல்லாங்குழல் வாசிப்பார் என்றும் கூட தெரிந்திருக்கவில்லை. சொல்லப் போனால் அவன் அந்தப் பெயர்களைக் கூட கேள்விப் பட்டாற்போல் இல்லை."
"ரொம்ப வேடிக்கையாகத்தான் இருக்கு. இந்தியன் வேல்யூஸ் என்றால் அவன் உத்தேசம் ஹிந்தூ ட்ரெடிஷன் ஆக இருக்கலாமோ. பண்டிகைகள் கொண்டாடுவது, நோம்பு வகைரா..."
"ஊஹ¤ம். அதையும் பார்த்துவிட்டேன். அவனுக்கு அவற்றைப் பற்றி அதிகமாக தெரியவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. ஆனால் இரண்டாவது சந்திப்பின் போது நான்கு முறையாவது சொல்லியிருப்பான். இந்த நாட்டில், இந்த ஜெனரேஷனில் இந்தியன் வேல்யூசுடன் வளர்ந்திருக்கும் என்னைப் போன்ற பெண் கிடைத்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று. அப்படி சொல்லும் போதும் ரொம்ப நேர்மையாக சொல்லுவான், அதேதோ ரொம்ப முக்கியமான விஷயம் என்பது போல்."
"இதேதோ புதிரான விஷயம்தான். என்னை கொஞ்சம் யோசிக்க விடு." நீரஜா கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டாள். திடீரென்று நிமிர்ந்து பார்த்தவள் "உன் வீட்டார் பேப்பரில் கொடுத்த விளம்பரம் இருக்கா?" என்று கேட்டாள்.
"இருக்கு என்று நினைக்கிறேன்." வசந்தி தன்னுடைய பேக்கில் தேடிவிட்டு ஒரு சின்ன பேப்பர் கட்டிங்கை எடுத்து நீரஜாவின் முன்னால் வைத்தாள். நீரஜா அதை மளமளவென்று படித்துவிட்டு வெற்றியைச் சாதித்து விட்டது போல் மேஜையின் மீது ஓங்கி கையைத் தட்டினாள்.
"இங்கே பார். பேரண்ட்ஸ் இன்வைட்ஸ்..... ரெயிஸ்ட் வித் இந்தியன் வேல்யூஸ்.."
"விளம்பரத்தில் என்ன இருக்கு என்று எனக்கும் தெரியும். எனக்கு பாட்டு அது இது எல்லாம் தெரியும் என்று பெருமையடித்துக் கொள்வதற்காக எங்க வீட்டார் அப்படி கொடுத்திருப்பார்கள். அந்த விஷயத்தில் பர்சனலாக எந்த ஆர்வமும் இல்லாத கிருஷ்ணா அதைப் பற்றி இவ்வளவு தீவிரமாக இருப்பானேன் என்பதுதான் என்னுடைய கேள்வி."
"எனக்கும் தெரியவில்லை. அவனிடமே கேட்டு விட வேண்டியதுதானே? நீயும் அவனும் ஓரளவுக்கு நெருங்கி விட்டீர்கள் போலிருக்கே?" இலவசமாக அறிவுரையை எடுத்துவிட்டாள் நீரஜா.
"அப்படித்தான் செய்யணும்" என்றாள் வாசந்தி முடிவுக்கு வந்து விட்டாற்போல்.
***********************************************************
கேட்டு விடுவதாக சொன்னாளே தவிர கிருஷ்ணாவிடம் இதைப் பற்றி கேட்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இரண்டு மாத அறிமுகத்தில் அவள் கிருஷ்ணாவை ஓரளவுக்கு எடை போட்டு விட்டிருந்தாள். அவள் பார்த்த வரையில் அவன் ரொம்பவும் இண்டிபெண்டென்ட் ஆசாமி. தன்னுடைய கேரீர் விஷயத்தில், சொந்த விஷயத்தில், அவன் எடுத்துக் கொள்ளும் முடிவுகளில், ரசனைகளில் சமாதானமாகாத நபர். அதற்காக கொடுங்கோல் மனிதன் இல்லை. தங்களுக்கு இடையே கம்பாடபிலிடீ பற்றி கூட அவளுக்கு தயக்கம் இருக்கவில்லை. கல்யாணம் ஆன பிறகு எத்தனையோ பிரச்னைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். அவற்றை பரஸ்பரம் புரிதலுடன் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருந்தது. இந்தியன் வேல்யூஸ் மட்டும் புரியாத புதிராகவே நின்றுவிட்டது.
அவள் கவனித்த வரையில் கிருஷ்ணாவுக்கு இந்திய கலாச்சாரம், மதம், அரசியல், சமுதாயம் போன்ற விஷயங்களில் பிடிமானமோ, ஈர்ப்போ எதுவும் இருக்கவில்லை. தனிப்பட்ட முறையில் இது ஒரு பிரச்னையாக தெரியவில்லை வாசந்திக்கு. ஆனால் அவர்கள் சந்தித்துக் கொண்ட ஒவ்வொரு முறையும் இந்தியன் வேல்யூஸ் என்ற வார்த்தை இரண்டு மூன்று முறையாவது வந்து கொண்டிருந்தது. அந்த விஷயமாக அவனிடம் எப்படி கேட்பது என்று வாசந்தி தயங்கி கொண்டிருந்தாள்.
ஜுலை மாதம் ஒரு சனிக்கிழமை மதியம் இருவரும் சேர்ந்து லஞ்ச் முடித்துவிட்டு, மெட்ரோ பாலிடன் மியூசியத்தில் வேன்கோ ஸ்பெஷல் எக்ஸிபிஷனைப் பார்ப்பதற்காக போனார்கள். வெயில் காலத்து உஷ்ணம் சூழ்ந்து கொண்டு திக்கு முக்காட செய்து கொண்டிருந்தது. ஏ.சி. ஹாலுக்குள் கால் எடுத்து வைத்ததும் உயிர் வந்தாற்போல் இருந்தது இருவருக்கும். வாசந்திக்கு வேன்கோ தீட்டிய ஓவியங்கள் என்றால் உயிர். கிருஷ்ணாவுக்கு ஓவியக்கலையில் பெரிதாக ஈடுபாடு இல்லாவிட்டாலும் வாசந்தியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வந்தான். அவள் அதற்கு முந்தைய சனிக்கிழமை அவனுடன் யான்கீஸ் பால் கேம் பார்க்கச் சென்றிருந்தாள். அதற்கு பதில் செலுத்துவது போல் என்று இல்லாவிட்டாலும் அந்த கோடையின் தாக்குதலை சமாளிப்பதற்கு ஏ.சி. மியூசியத்தில் கழிப்பது நல்லது என்று கூட அவன் நினைத்திருக்கக் கூடும்.
டிக்கெட் வாங்கிக் கொண்டு இரண்டு பேரும் மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்தார்கள். வாசந்தி வேன்கோ உருவாக்கிய வண்ணங்களின் வலையில் சிக்கிக் கொண்டு தன்னையே மறந்து விட்டிருந்தாள். கிருஷ்ணாவும் ஆடியோ காமென்டரியுடன் ஓவியங்களை ரசித்திருப்பான் போலும். ஒவ்வொரு ஓவியத்திடமும் சிறிது நேரம் நின்று கவனித்து கொண்டிருந்தான். வெளியே வந்த பிறகு இருவரும் கே·பிடேரியாவுக்குப் போனார்கள். காபி வாங்கிக் கொண்டு டேபிளுக்காக பார்த்துக் கொண்டிருந்த போது "ஹாய் வாசந்தி!" என்று நீரஜாவின் குரல் கேட்டது.
வாசந்தி நீரஜாவைக் கவனித்துவிட்டு அந்தப் பக்கம் நோக்கி நகர்ந்த போது கிருஷ்ணாவும் பின் தொடர்ந்தான். நீரஜாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார இளைஞன் ஒருவன் எழுந்து இவர்களை வரவேற்றான். தன்னுடைய நண்பன் டேவிட் என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் நீரஜா. அறிமுகப் படலம் முடிந்த பிறகு ஐந்து நிமிடங்கள் பொதுவாக பேசினார்கள்.
நீரஜா அன்று நல்ல மூடில் இருந்தாள் போலும். டேவிட்டை கலாட்டா செய்தபடி கிண்டலடித்துக் கொண்டிருந்தாள். விளையாட்டுக்கு அவனை அடித்துக் கொண்டும், நடுநடுவில் கிள்ளிக் கொண்டும், அவன் கோபமாக இருப்பது போல் காட்டிக் கொண்டால் உடனே அணைத்துக் கொண்டு முத்தம் பதித்து கொஞ்சியபடி ரகளை செய்து கொண்டிருந்தாள். வாசந்திக்கு நீரஜாவை சிறுவயது முதல் தெரிந்திருப்பதால் அவளுடைய நடவடிக்கை புதிதாக இருக்கவில்லை. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து கிருஷ்ணா உரையாடலில் பங்கு பெறாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதை, நாற்காலியில் சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருப்பதை வாசந்தி கவனித்தாள். ஏதோ விஷயம் அவனுக்கு சங்கடமாக இருப்பதை உணர்ந்து, நீரஜாவிடம் தங்களுக்கு வேறு வேலை இருப்பதாக சொல்லிவிட்டு எழுந்து கொண்டாள். கிருஷ்ணா டேவிட், நீரஜாவிடம் சுருக்கமாக குட்பை சொல்லிவிட்டு பின்னாலேயே எழுந்து கொண்டான்.
மியூசியத்திலிருந்து வெளியே வந்ததும் திரும்பவும் வெக்கை தகிக்கத் தொடங்கியது. வானத்தில் கிழக்குத் திசையில் அடர்த்தியான மேகக் கூட்டம் நகர்த்தின் மீது கவிழந்து கொள்வதற்கு தயாராக இருந்த சைன்னியம் போல் இருந்தது. புயல் வரும் போல் இருக்கு என்று நினைத்துக் கொண்டாள் வாசந்தி. கைக்குட்டையால் நெற்றியை ஒற்றிக் கொண்டே பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த கிருஷ்ணாவிடம் "ஸோ.. வாட் டு யு திங்க்?" என்றாள். அதுவரையில் வலுக்கட்டாயமாக அடக்கி வைத்திருந்தவன் இனியும் தாக்கு பிடிக்க முடியாதவன் போல் வெடுக்கென்று சொல்லிவிட்டான். "அந்தப் பெண் உன்னுடைய சிநேகிதி என்றால் என்னால் நம்ப முடியவில்லை. எவ்வளவு வெட்கம் கெட்டவளாக நடந்து கொள்கிறாள், அந்த வெள்ளைத்தோல் காரனுடன். கொஞ்சம் கூட நம் வேல்யூஸ் பற்றி தெரியாமல் வளர்ந்திருப்பாள் போலிருக்கிறது."
வாசந்திக்கு முதலில் ஆச்சரியமும், தொடர்ந்து கோபமும் வந்து விட்டன. ஆனாலும் நடுத் தெருவில் இருப்பது நினைவுக்கு வந்ததும் அமைதியான குரலில் "கிருஷ்ணா! உன்னிடம் கொஞ்சம் விவரமாக பேச வேண்டும். இங்கே வேண்டாம். செண்ட்ரல் பார்க்கிற்கு பொவோம்" என்றாள்.
இருவரும் அவரவர்களின் யோசனையில் ஆழ்ந்தபடி சென்ட்ரல் பார்க்கை அடைந்தார்கள். ஆளரவமற்ற மூலையில் ஒரு பெஞ்சியில் அமர்ந்து கொண்டார்கள்.
வாசந்தி கிருஷ்ணாவின் பக்கம் திரும்பி சொல்லத் தொடங்கினாள். "கிருஷ்ணா! நீரஜாவை முதல் முறையாக இப்பொழுதுதான் பார்க்கிறாய். அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் பத்து நிமிஷ அறிமுகத்தில் நீரஜாவின் மதிப்பீடுகளைப் பற்றி அவ்வளவு தாழ்மையான அபிப்பிராயம் ... உனக்கு அப்படிப்பட்ட யோசனை எப்படி வந்தது என்று எனக்குப் புரியவில்லை."
"வெல்... ஒருத்தருடைய கேரக்டர் எப்படிப் பட்டது என்று தெரிந்து கொள்வதற்கு அவர்களை வாழ்க்கை முழுவதுமாக தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு நிமிஷம் போதும், தெரிந்து போய் விடும். நடத்தைக்கு அஸ்திவாரம் சிறுவயதிலேயே ஏற்பட்டு விடும். கணவன் அல்லாத வேற்று ஆணுடன் ஒரு பெண், வெள்ளைத்தோல்காரனுடன் அவிழ்த்துவிட்ட கழுதையைப் பொல் சுற்றிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் போக்கு, அவள் எப்படிப் பட்டது என்று சொல்லாமலேயே பறைசாற்றிக் கொண்டிருக்கிறது."
"ஒரு விஷயம்! அந்தப் பெண்ணுக்கு ஒரு பெயர் இருக்கிறது. நீரஜா! இரணாடாவது... அவள் சிறுவயது முதல் என்னுடைய பெஸ்ட் பிரண்ட். அவள் பெற்றோர்களையும் எனக்கு நன்றாக தெரியும். அவர்களை பற்றி நான் உன்னிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை."
வாசந்திக்கு தன்னுடைய பேச்சு நன்றாக கோபம் வரவழைத்து விட்டது என்று அப்பொழுதுதான் கிருஷ்ணாவுக்கு உறைத்தது போலும். அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டு நயமான குரலில் சொன்னான். "நீ என்னை தவறாக நினைக்காதே. உன்னையே எடுத்துக் கொள். இந்த நாட்டில் வளர்ந்தாலும், அந்த நீரஜா உனக்கு பெஸ்ட் பிரண்டாக இருந்தாலும் நீ இந்தியன் வேல்யூசுடன் வளரவில்லையா? உன்னைச் சந்திப்பது, நம் அறிமுகம் இப்படி வளருவது.."
"உன் அதிர்ஷ்டம்! இந்த வார்த்தையை ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கிறாய். எனக்கு தெரியாமல்தான் கேட்கிறேன். இந்தியன் வேல்யூஸ் என்றால் என்ன? கொஞ்சம் விவரமாக எனக்கு சொல்ல முடியுமா?" என்றாள் வாசந்தி தீவிரமான குரலில்.
"உனக்குத் தெரியாமல்தான் கேட்கிறாயா? உனக்கு இருக்கும் வேல்யூஸ் என்னவென்று உனக்கே நன்றாக தெரியும்."
"எனக்கு இருக்கும் வேல்யூஸ் என்னவென்று எனக்குத் தெரியும். அதோடு அந்த வேல்யூஸிடம் உனக்கு இருக்கும் அபிப்பிராயம் என்னவென்று இப்பொழுதுதான் தெரிகிறது. நீரஜாவிடம் இல்லாததும், என்னிடம் இருக்கும் அந்த மகத்தான இந்தியன் வேல்யூஸ் என்னவென்று விவரமாக எடுத்துரைத்து கொஞ்சம் புண்ணியம் மூட்டை கட்டிக் கொள்."
வாசந்தியின் குரலில் தொனித்த ஏளனம் கிருஷ்ணாவுக்கு எட்டியதாக தெரியவில்லை. கசப்பாக ஏதோ நாவிற்கு உரைத்து விட்டது போல் முகத்தை விகாரமாக மாற்றி கொண்டு "ச்ச.. ச்ச.. அந்தச் சிறுக்கியுடன் உன்னை ஒப்பிடுவதாவது? வேற்று ஆண்களுடன் தோளோடு தோளாக உரசிக் கொண்டு, அருவருப்பு ஏற்படும் வகையில்... கார்த்திகை மாதத்து நாய் போல் கண்ணில் பட்ட ஆண்களுடன் சரசமாடிக் கொண்டு... எத்தனை பேருடன் படுத்துக் கொண்டிருப்பாளோ இந்நேரத்திற்குள்.."
வாசந்தி சரேலென்று கையை பின்னால் இழுத்துக் கொண்டாள். கிருஷ்ணாவின் மனம் அழுக்கு துடைத்துவிட்ட கண்ணாடியைப் போல் தெளிவாக காட்சி தந்தது. அதை உணர்ந்து கொண்டதும் மூளையில் பேரிரைச்சல் கேட்க, கண்கள் அக்னிப்பிழம்புகளாக ஜொலிக்க பற்களைக் கடித்துக் கொண்டு சீறுவது போல் சொன்னாள். "இதுதானா அது? வர்ஜினிடீ! ஈஸ் தட் இட்... யுவர் இந்தியன் வேல்யூ? உனக்கு மிகவும் பிரியமாக, பிடித்தமான இந்தியன் வேல்யூ? கன்னித்தன்மை!"
வாசந்தி ஏன் இவ்வளவு ஆவேசமடைகிறாள் என்று கிருஷ்ணாவுக்கு இன்னும் புரிந்தாற்போல் இல்லை. வாதம் புரிவது போல் சொன்னான். "வெல்... அதில் தவறு என்ன இருக்கிறது? அதுதான் உண்மையான இந்தியன் வேல்யூ. துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டில், இந்த நாட்களில் இந்தியர்களிடம் கூட காணாமல் போய் கொண்டிருக்கிறது."
"அதாவது என்னுடன் அறிமுகம் ஏற்பட்டதில ஏற்பட்ட சந்தோஷத்திற்குக் காரணம் நான் கன்னியாக இருப்பதுதான். இல்லை இல்லை. நான் இந்தியன் மதிப்பீடுகளுடன் வளர்ந்ததால் நான் நிச்சயமாக கன்னிப்பெண்ணாகத்தான் இருப்பேன் என்று உனக்கு இருக்கும் நம்பிக்கை. அதனால்தான் உனக்கு என்மீது இன்டரெஸ்ட். எனக்கு இருக்கும் மற்ற தகுதிகள் எதுவும் இதற்கு முன்னால் கணக்கில் வராது, அப்படித்தானே?"
கிருஷ்ணா ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டான். யோசனைகளை கூட்டிக் கொண்டு கம்பீரமாக சொன்னான்.
"என் உத்தேசத்தை புரிந்து கொள்ள முயற்சி செய். நாம் இந்த நாட்டில் நம் வாழ்க்கைகளை ஸ்திரமாக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கேயே குடும்ப வாழ்க்கையைத் தொடங்கி இந்த சமுதாய சூழலில் நம் குழந்தைகளை வளர்க்கப் போகிறோம். நம் குழந்தைகளுக்கு இந்திய மதிப்பீடுகள் தெரிந்திருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய தாய்... என் மனைவி அந்த மதிப்பீடுகளை மதிப்பதுடன் பின்பற்றுபவளாக இருக்க வேண்டும் என்று நான் ஆழமாக நம்புகிறேன். கல்யாணத்திற்கு முன்னாடியே ஆண்களுடன் கண்டபடி சுற்றுவது நிச்சயமாக இந்தியன் வேல்யூஸ் இல்லை. அப்படிப்பட்ட பெண் என் குழந்தைகளுக்கு தாயாக தன்னுடைய கடமையை நிறைவேற்ற மாட்டாள். என் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உரிமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். நீ வெளிப்படையாக கேட்டதால் நானும் வெளிப்படையாக சொல்கிறேன். என் வருங்கால மனைவி கன்னியாக இருக்க வேண்டும்." முடிந்தால் இந்த வாதத்தைக் கண்டித்துப் பார் என்று சவால் விடுவது போல் அவன் முகம் தென்பட்டது.
வாசந்தி மெதுவாக எழுந்து கிருஷ்ணாவுக்கு நேர் எதிரில் நின்றாள். "கிருஷ்ணா! நீ சொன்னது ரொம்ப நன்றாக இருக்கிறது. இவ்வளவு விவரமாக சொன்னதற்கு நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். உனக்கு அந்த உரிமை இருப்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அப்படி என்றால் உன்னிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். உண்மையைச் சொல்வாய் என்று எதிர்பார்க்கிறேன். ஆர் யூ எ வர்ஜின்?"
வாசந்தி அப்படிப்பட்ட கேள்வி கேட்கும் சாகசம் செய்வாள் என்று கிருஷ்ணா எதிர்பார்த்திருக்க வில்லை போலும். அவன் கம்பீரம் கொஞ்சம் கலைந்து, ஒரு நிமிடம் முகம் களையிழந்ததை அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த வாசந்தியின் கவனத்திலிருந்து தப்பவில்லை. அவன் கொஞ்சம் சமாளித்துக் கொண்டு வாயைத் திறப்பதற்குள் தடுப்பது போல் அவளே மேலும் சொன்னாள். "வேண்டாம் கிருஷ்ணா! நீ வாயைத் திறந்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமலேயே நீ சொல்லப் போகும் பதில் என்னவென்று எனக்குத் தெரிந்து போய் விட்டது. அந்தப் பதில் எனக்கு முக்கியம் இல்லை. அது என்னை வருத்தப்படவும் செய்யாது. என்னை வருத்தப்பட வைப்பதெல்லாம் உன்னுடைய டபிள் ஸ்டாண்டர்ட். ஐ ஹேட் டபிள் ஸ்டாண்டர்ட்ஸ். குட் பை கிருஷ்ணா!"
**********************************************************************************************
அன்று மதியம் அடர்த்தியாக படர்ந்திருந்த டென்ஷன் ஒரேயடியாக தகர்ந்து விட்டது போல் வெயில் காலத்து இடியுடன் கூடிய புயல் நகரத்தைத் தாக்கியது. வாசந்தி அதை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் பிராட்வே வழியாக நடந்து போய் கொண்டிருந்தாள் உள்ளமும் உடலும் இலேசாகிவிட்டது போல் இருந்தது

Nantri: Thinnai

No comments: