இலங்கைச் செய்திகள்

.
ஒத்திகையில் ஈடுபட்ட கிபீர் விமானங்கள் வீழ்ந்து நொறுங்கின


இலங்கை விமானப்படையின் 60ஆவது விழாக் கொண்டாட்த்திற்காக ஒத்திகையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு கிபீர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கம்பஹா பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

இதேவேளை இவ்விமானங்களில் இருந்த இரு விமானிகளில் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய விமானி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விமான விபத்து இடம்பெற்ற இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டாதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அரசியல் தீர்வின் எதிர்காலம்?

வட புலத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் இடம்பெற்ற புத்திஜீவிகளுடனான சந்திப்பொன்றின் போது தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பு முன்வைத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றத் தான் தயாராக இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். ஜனாதிபதியின் இந்தக் கூற்று இரண்டு விதமான தொனியில் அமைந்திருப்பதை நன்கு அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வடக்குத் தமிழ் மக்கள் தமக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமென பெரிதும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் ஜனாதிபதியின் இந்தச் செய்தி அந்த தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை தோற்றுவித்திருப்பதையே அவதானிக்க முடிகிறது.

இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்குக் குறிப்பாக வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு அவர்களது சாதாரண உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத் தாம் தயாராக உள்ள போதிலும் புலிகளின் கோரிக்கையை ஒருபோதும் நிறைவேற்றப் போவதில்லை எனத் தெரிவித்திருப்பதன் மூலம் யார் முயற்சித்தாலும் கூட தமிழ் மக்களின் அரசியல் இருப்பை உறுதி செய்யக்கூடியதான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டிக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாகவும் சகல உரிமைகளையும் பெற்றவர்களாகவும் வாழக்கூடிய விதத்தில் தேவையான அனைத்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதன் உள்ளர்த்தம் என்னவென்பதைக் கண்டறிய வேண்டிய தேவைப்பாடு இன்று உருவாகியுள்ளது.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முக்கியமான இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மையானது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண்பதாகும். அடுத்தது தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதாகும். இதிலிருந்து ஒன்றை நன்கு புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முக்கியமானதாகக் கருதப்படும் நீண்டகாலமாக எதிர் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதிலேயே கூடுதல் முனைப்புக் காட்டிவருகிறது.

தமிழ் மக்களின் உடனடித் தேவையான பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்துவைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் தலையாய கடப்பாடாக இருக்கின்ற போதிலும் அதைவிடவும் முக்கியமான விடயமாகவே அந்த சமூகம் எதிர்பார்க்கும் அரசியல் இருப்பை உத்தரவாதப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றை காலம் கடத்தாமல் முன்வைக்க வேண்டிய பாரிய கடப்பாட்டையும் அரசு கொண்டிருப்பதை இங்கு வலியுறுத்திக் கூறவேண்டி யுள்ளது.

நாடு சுதந்திரமடைந்த நாள் முதல் சிறுபான்மைச் சமூகங்களாக தமிழ்பேசும் மக்களை இரண்டாம் தரத்தில் வைத்துச் செயற்பட முனைந்ததன் காரணமாகவே பிரித்து வைத்துப் பார்க்கும் அவலநிலை காணப்பட்டது. தென்னிலங்கை அரசியல் சக்திகள் அரசியல் நோக்கத்துடனும் வாக்கு வங்கியைப் பாதுகாத்துக் கொள்வதற்குமாக பெரும்பான்மை மக்களோடு ஒத்துப்போக வேண்டிய நிலைக்குள்ளானார்கள். இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டில் சிறுபான்மை என்று எவரும் கிடையாது எனக்கூறி வருகின்றார். அத்துடன் தமிழ் மக்கள் பங்கேற்கும் வைபவங்களிலும் நாட்டு மக்களுக்கு ஆற்றுகின்ற உரைகளிலும் தமிழிலும் பேசுகின்றார். இதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார். இதனை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்தாலும் கூட தமிழ் மக்களுக்கு அவர்களது அரசியல் இருப்பை உறுதி செய்யக்கூடியதான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை உறுதிப்படுத்தாதவரை தமிழ் மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க முடியாது. தமிழ்பேசும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை முழுமையாகப் பெற்றுக் கொடுக்காதவரை அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானதாகவே தொடரும். நடந்து முடிந்தவற்றை பேசிக்கொண்டு கசப்புணர்வோடு சிந்திக்க முற்பட்டால் ஒருபோதும் பிரச்சினை தீரப்போவதில்லை. தமிழ் மக்களின் மனங்களையும் முழுமையாக வெற்றி கொள்ள முடியாது.

இலங்கையில் கல்வித்துறையில் சீரழிவு
இலங்கையில் பெரும் சீரழிவுக்கு உள்ளாகியிருக்கும் துறைகளில் கல்வித்துறையும் ஒன்றாக விளங்குவதும் அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கங்கள் பயனுறுதியுடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கத்தவறி வந்திருக்கின்றமையும் பெரும் கவலைதரும் விடயங்களாகும். நாட்டில் 105 தேசியப் பாடசாலைகள் பல வருடங்களாக நிரந்தர அதிபர்களின்றி இயங்கிவருவதாகக் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருக்கும் தகவல் இலங்கையின் கல்வித்துறை எத்திசையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

இலங்கையில் மொத்தமாக 304 தேசியப் பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையான பாடசாலைகள் நிரந்தர அதிபர்களின்றி இயங்கி வருகின்றன என்றால், ஏனையவற்றின் இலட்சணம் எத்தகையதாக இருக்கும் என்பதை நாமெல்லோரும் ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான். இந்த தேசிய பாடசாலைகளில் அனேகமானவற்றில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கின்றன என்பதுடன் கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது என்று தெரியவந்திருக்கிறது. நவீன யுகத்தின் தேவைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்கக் கூடியதாக நாட்டின் கல்வித்துறையைத் தரமுயர்த்தி மேம்படுத்துவது குறித்து அரசாங்கத் தலைவர்களும் அமைச்சர்களும் ஏனைய அரசியல்வாதிகளும் வாய்கிழியக் கத்திவருகின்ற நிலையில் பாதுகாப்புத்துறைக்கு அடுத்ததாக அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கே கூடுதல் நிதியை ஒதுக்கியிருக்கும் நிலையில் அத்துறை இத்தகைய சீரழிவுக்கு ஏன் உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உகந்த அதிபர் ஒருவர் இன்றி பாடசாலை இயங்குவதென்பது மீகாமன் இல்லாமல் கப்பலொன்று கடல் பயணம் மேற்கொள்வதைப் போன்றதாகும். எமது தேசியப் பாடசாலைகளில் மூன்றில் ஒருபங்கு பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லையென்பது ஒரு சாதாரண குறைபாடு அல்ல. கல்வித்துறைக்குப் பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற போக்கினால் எமது இளைய தலைமுறையினரின் எதிர்காலம் பாழடிக்கப்படுவதற்கு வகைசெய்கின்ற ஒரு பாவகரமான கைங்கரியமே இதுவாகும். கடந்த சில வருடங்களாகக் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது கல்வித்துறையின் சீரழிவின் பாரதூரத்தன்மையைப் புரிந்துகொள்வதில் எவருக்குமே சிரமம் இருக்காது. முன்னென்றுமில்லாத வகையில் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் ஒருபாடத்தில் கூடச் சித்திபெறத் தவறியிருப்பதைக் கடந்த ஒருசில வருடங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. முறையான வழிகாட்டலை வழங்குவதற்கு அதிபர் இல்லாத நிலையில், மாணவர்கள் மத்தியில் மாத்திரமல்ல, ஆசிரியர்கள் மத்தியிலும் கூட ஒழுங்கு கட்டுப்பாடுகளை உறுதி செய்வது சாத்தியமில்லை. இந்த இருதரப்பினர் மத்தியிலும் ஒழுங்குக் கட்டுப்பாட்டையும் நேரந்தவறாமையையும் பேண முடியாவிட்டால், பரீட்சைகளில் நல்லபெறுபேறுகளை எதிர்பார்க்கவே முடியாது.

புதிய தகுதிவாய்ந்த அதிபர்களை நியமிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கல்வியமைச்சர் குணவர்தன உறுதியளித்திருக்கிறார். ஒரு பிள்ளையின் முழு எதிர்காலமுமே அப்பிள்ளை பாடசாலையில் பெறுகின்ற கல்வியிலேயே தங்கியிருக்கிறது. சாத்தியமானளவு விரைவாக நிரந்தர அதிபர்களை மேற்படி தேசியப் பாடசாலைகளுக்கு நியமித்து எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துவிடாதபடி பார்த்துக்கொள்வது அமைச்சரின் தார்மீகக் கடமையாகும். தேசியப் பாடசாலைகளின் இலட்சணமே இவ்வாறிருக்கிறதென்றால் ஏனைய பாடசாலைகளின் கதியை நினைத்துப் பார்க்கும் போது தலைசுற்றுகிறது!
நன்றி தினக்குரல்No comments: