தமிழ் சினிமா

சீடன் - பட விமர்சனம்!


 கிருஷ்ணா, தனுஷ், அனன்யா, ஷீலா
இசை: தினா
இயக்கம்: சுப்பிரமணியம் சிவா
தயாரிப்பு: அமித் மோகன்

எப்போதோ வந்திருக்க வேண்டிய ஒரு கதை, மிகக் காலம் கடந்து இப்போது வந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த சீடன். கதையை மட்டும் மலையாளத்திலிருந்து எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டு சூழலுக்கேற்ப திரைக்கதை அமைத்திருந்தால் ஒரு வேளை பார்க்கும்படி இருந்திருக்குமோ என்னவோ....பழனியில் பெரிய அரண்மனை வீட்டில் ஒரேயொரு பாட்டி. அவருக்கு வேலைக்காரியாக இருக்கிறார் அனன்யா. பக்கா முருக பக்தை. ஆனால் பழனி முருகனைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு வீட்டில் வேலை அவரை அழுத்துகிறது.

அப்போது அந்த வீட்டுக்கு வருகிறான், பாட்டியின் பேரன் கிருஷ்ணா. வழக்கம்போல வேலைக்காரிக்கும் பேரனுக்கும் காதல். இந்தக் காதல் தெரிந்ததும், கிருஷ்ணாவின் அம்மா அவனை தன் தோழியின் மகளுக்கு கட்டி வைக்க திட்டம் போடுகிறார்.

அனன்யாவின் வாழ்க்கை சோகமாக, 'முருகா காப்பாத்து' என அவர் உருகுகிறார். சரியாக அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைகிறார் சமையல்காரர் சரவணன் ( தனுஷ்). அதன் பிறகு எல்லாமே மாறுகிறது. இதில் அனன்யா - கிருஷ்ணா காதல் என்னாகிறது... தனுஷால் அந்தக் காதல் கைகூடுகிறதா என்பது மீதிக் கதை.

படம் முழுக்க மலையாள வாடை. வசனங்களில் கூட அப்படியே. காட்சிகள் ஒவ்வொன்றும் சவசவவென வந்து போகின்றன. "அடுத்த காட்சி இதுதான்... இந்த இடத்தில் காதலைச் சொல்லப் போகிறார்கள். இதோ இப்போது காதல் பிரியப் போகிறது... அடுத்த சீனில் தனுஷ் வருவார் பார்..." என மகா சுலபத்தில் ஊகிக்க முடிகிற திரைக்கதை, பொறுமையைச் சோதிக்கிறது. இத்தனைக்கும் இரண்டு மணி நேரமே ஓடும் படம் இது!

வசனங்களாவது கொஞ்சம் ஷார்ப்பாக உள்ளதா என்றால், ம்ஹூம்... மெகா சீரியல் தோற்றது போங்கள்!

எதற்காக தனுஷுக்கு இத்தனை மகா ஆர்ப்பாட்டமான விளம்பரம் என்று தெரியவில்லை. அவர் வருவது கொஞ்ச நேரம்தான். அதிலும் சமையல் பற்றி படு சுமாரான ஒரு பாட்டைப் பாடிவிட்டு, எப்போது சீனிலிருந்து போனார் என்பதே தெரியாமல் போகிறார்.

ஹீரோவாக கிருஷ்ணா என்பவர் நடித்திருக்கிறார். இப்படி ஒரு பாத்திரத்தில் வந்து போகிறார் என்பதைத் தவிர பெரிதாக சொல்ல ஏதுமில்லை.

அனன்யா பரவாயில்லை... முகமும் நடிப்பும் பார்க்கும்படி உள்ளது. விவேக்கின் போலிச்சாமியார் கெட்டப்பும், தினாவின் இசையும் சகிக்கலை!

சுகாசினி, ஷீலா, இன்னொரு பாட்டி என படம் முழுக்க 'கிழவிகள்' மயம். கடுப்பாக உள்ளது. இன்னொன்று, அவ்வப்போது வரும் குட்நைட் காயில் விளம்பரங்கள். விளம்பரப் படத்துக்கு நடுநடுவே படத்தை ஓட்டுகிறார்களோ என்ற பிரமையைத் தவிர்க்க முடியவில்லை. என்னதான் தயாரிப்பாளர் குட்நைட் கம்பெனி உரிமையாளர் என்றாலும் இத்தனை.. இத்தனை விளம்பரம் ஆகாது!

திருடா திருடி என்ற ஒரேயொரு 'விசிட்டிங் கார்டு' திரையுலக வாழ்க்கை முழுவதற்கும் கூட வராது என்பதை இயக்குநர் சுப்பிரமணிய சிவா புரிந்துகொண்டால் சரி!

வர்மம்

தங்கை சாவுக்கு காரணமானவர்களை பழி தீர்க்கும் அண்ணன் கதை...

கிராமத்து இளைஞன் சிவா. தங்கை நந்தினியை பட்டினத்துக்கு படிக்க அனுப்புகிறான். விடுதியில் தங்கும் அவளை விபசார தொழில் செய்யும் சாமி கடத்துகிறான். பாலியல் பலாத்காரம் செய்து அவளை கொன்றும் விடுகிறான். அண்ணன் சிவா தகவல் தெரிந்து துடிக்கிறான். தங்கையை கொன்றவர்களை பழி தீர்க்க புறப்படுகிறான். ஒரு வீட்டில் தங்கி பகலில் வேலை பார்க்கிறான்.

இரவில் பெண் வேடமிட்டு வில்லன்களை தேடிபிடித்து வதம் செய்கிறான். சிவாவாக வரும் அகிலன் பாசக்கார அண்ணன். ஆக்ஷனில் அனல் பறக்க வைக்கிறார். பெண் வேடத்தில் ஒவ்வொருவரையும் போட்டுத் துள்ளுவது மிரட்டல். அனகா விரட்டி விரட்டி காதல் செய்கிறார். பைக்கில் சேறு அடித்து போகும் அகிலனை மடக்கி பிடித்து அவர் வீட்டுக்கே சென்று டிரெஸ்ஸை அவிழ்த்து துவைக்க சொல்வது கலகலப்பு. கிரன் மனோகர், பரோட்டா சூரி, சிசர் மனோகர் சிரிக்க வைக்கின்றனர்.வில்லனாக பாலாசிங், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், புவனா ஆகியோரும் உள்ளனர். ஒரு பெண் பெரிய ஆட்களை தீர்த்துக்கட்டுவது போல் கதையை ஆரம்பித்து காட்சிகளை விறு விறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஏ.எஸ். லாரன்ஸ் மாதவன். திருநங்கைகள் சீன்களும் அவர்கள் பேசும் வசனங்களும் சலிப்பு. மீராலால் இசையில் பாடல்கள் இதம்.

நடுநிசி நாய்கள்


தாயை இழந்தவன் வீரா. வீட்டில் பெண்களை அழைத்து பாலியல் உறவில் ஈடுபடும் மோசமான தந்தை பராமரிப்பில் வளர்கிறான். சிறு வயதிலேயே தந்தையின் வக்கிரமங்களை பார்த்து மனம் பாதிக்கப்படுகிறான். அவ்வீட்டில் போலீஸ் சோதனையிட தந்தை தன்னைத்தானே சுட்டு சாகிறார்.

ஒன்பது வயதில் அனாதையான அவனை பக்கத்து வீட்டு பெண் மீனாட்சி தத்து எடுத்து வளர்க்கிறாள். பெரியவனானதும் ஒரு இரவில் அவளையே வீரா பலவந்தப்படுத்தி கெடுக்கிறான். அதிர்ச்சியாகும் அப்பெண் மறுநாள் தன்னை பல நாட்களாக காதலிக்கும் ஒருவனை பதிவு திருமணம் செய்து அழைத்து வருகிறாள். முதல் இரவில் படுக்கையிலேயே அவனை குத்தி கொல்கிறான் வீரா.

அப்போது தீ விபத்து ஏற்பட்டு மீனாட்சி கருகி சாகிறாள். அவள் உடலை சென்னையில் ஒரு மர்ம பங்களாவில் அடக்கம் செய்கிறான். மீனாட்சி உயிருடன் இருப்பதுபோல் பாவித்து கற்பனையாக அவளுடன் வாழ்கிறான். அழகான பெண்களை கடத்தி வந்து கற்பழித்து கொல்கிறான்.

சில பெண்களை அறைக்குள் அடைத்து போடுகிறான். சிறு வயதில் தன்னுடன் படித்த ப்ரியாவையும் கடத்தி வருகிறான். அவள் தப்பினாளா என்பது திக்... திக்... கிளைமாக்ஸ்...

சைக்கோ இளைஞனின் வாழ்வியலை திகிலான திரைக்கதையில் விறு விறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவமேனன். அவரின் உதவி இயக்குனர் வீராவே வீரா கேரக்டரில் வருகிறார். சிரிப்பு, பேச்சு நடவடிக்கை அனைத்திலும் சைக்கோத்தனத்தை அச்சு அசலாய் பிரதிபலிக்கிறார் வீரா.

மீனாட்சியம்மா பயமா இருக்கு என்று நடுங்கியபடி கால்களை கட்டிபிடித்து கதறுவதும் பிறகு அவளையே பலாத்காரம் செய்வதும் சீட் நுனிக்கு இழுக்கும் பயங்கரம். அவள் கணவனை குத்திக் கொல்வது பகீர்... பங்களாவில் பெண்களை கொன்று அமிலத்தில் மூழ்கடிப்பது... போலீசாரை கொன்று சமீராரெட்டியை கடத்துவது... ரத்தத்தை உறைய வைப்பவை...

சைக்கோவிடம் சிக்கி தப்பிக்க போராடும் அவஸ்தைகளில் சமீராரெட்டி முகம் நிறைய பயம் காட்டுகிறார். மீனாட்சியம்மாவாக வரும் சுவப்னா ஆறுமுகம் விகார முகத்தில் குரூரம்.மிகையான ஆபாசம் முகம் சுளிக்க வைக்கின்றன.

காட்சிகளின் திகிலோட்டம் படத்தோடு ஒன்ற வைக்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு நள்ளிரவு பயங்கரத்தை அள்ளுகிறது. பின்னணி இசை இல்லாமல் யதார்த்த சப்தங்களை பயன்படுத்தி இருப்பது புதுமை...நன்றி தினக்குரல்

No comments: