பெண்டாட்டி சுமை


.

அந்தக் கல்லூரியில் ஒரு ஜென் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த ஜென் மாஸ்டர்கள் அங்கே வந்து சொற்பொழிவாற்றினார்கள், கலந்துரையாடினார்கள்.
முதல் நாளன்று, அந்தக் கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்தவர், மத்திய அமைச்சர். அவர் இதற்காகவே டெல்லியிலிருந்து வந்திருந்தார்.
விழா மேடையில், மத்திய அமைச்சர் பக்கத்திலிருந்த ஜென் மாஸ்டரிடம் கிசுகிசுத்தார். ‘சாமி, நீங்க கல்யாணம் செஞ்சுகிட்டீங்களா?’


‘இல்லைங்க. நான் பிரம்மச்சாரி!’
’கொடுத்து வெச்ச ஆளுங்க நீங்க!’ என்றார் அமைச்சர். ‘நாங்கதான் இந்த சம்சார சாகரத்தில சிக்கி அவஸ்தைப்படறோம். என் பொண்டாட்டி நாளுக்கு நாள் புதுப்புது பிரச்னைகளைச் சொல்லிப் புலம்பறா. அதையெல்லாம் கேட்கவும் முடியலை, கேட்காம இருக்கவும் முடியலை!’
பக்கத்திலிருந்த ஜென் மாஸ்டர் சிரித்தார். ‘நீங்க டெல்லியிலிருந்து தனியாவா வந்தீங்க?’
‘இல்லையே, எப்பவும்போல என் அஸிஸ்டென்டும் வந்திருக்காரே!’
’சரி, நீங்க இந்தப் பயணத்துக்காக எடுத்துகிட்டு வந்த சூட்கேஸ் என்ன எடை இருக்கும்ன்னு உங்களுக்குத் தெரியுமா?’
அமைச்சர் யோசித்தார். ‘ஏழெட்டு கிலோ இருக்கும்ன்னு நினைக்கறேன்!’
’ஏன் நினைக்கணும்? உங்க உதவியாளரைக் கூப்பிட்டு விசாரிங்க!’
உடனே, அமைச்சர் தன் உதவியாளரை அழைத்தார். அதே கேள்வியைக் கேட்டார். ‘நான் கொண்டுவந்த சூட்கேஸ் என்ன எடை இருக்கும்ன்னு தெரியுமாய்யா?’
’ஓ, நல்லாத் தெரியும்ங்கய்யா!’ என்றார் உதவியாளர். ‘பதினேழரை கிலோ!’
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜென் மாஸ்டர் புரிந்ததுபோல் புன்னகை செய்தார். ‘அது உங்க பெட்டிதான். அதுக்குள்ள இருப்பதும் உங்க பொருள்கள்தான். ஆனா நீங்க அதைச் சுமக்கலை, யாரோ சுமந்துகிட்டிருந்ததால, உங்களுக்கு அதோட கனத்தைச் சரியா ஊகிக்கமுடியலை. சரியா?’
‘ஆமா, ஆனா இதுக்கும் நான் முன்ன சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?’
‘உங்க மனைவி சொல்ற பிரச்னைகளெல்லாம் உங்களுக்கு லேசாத் தோணலாம். ஆனா, அவங்களைப் பொறுத்தவரைக்கும் அதோட கனம் அதிகம், ஏன்னா அவங்க அதைச் சுமக்கறாங்க, நீங்க சுமக்கலை, ஒண்ணு நீங்களும் அதுல கொஞ்சத்தைத் தாங்கிச் சுமக்கணும், இல்லாட்டி அவங்க சுமையை இறக்கிவைக்க உதவி பண்ணணும், அதை விட்டுட்டு மூணாம் மனுஷனான என்கிட்ட இப்படிப் புலம்பினா எந்தப் பிரயோஜனமும் இருக்காது!
Nantri:tamilpaper

No comments: