.
அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநிலத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை 25 – 04 – 2010 அன்று நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் பொதுச்சுடரேற்றல், ஈகச்சுடரேற்றல், தொடர்ந்து வந்திருந்த உறவுகள் அனைவரும் உணர்வுடன் சகல நாட்டுப்பற்றாளர்களுக்குமான மலர் வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். மாலை ஆறு மணிக்கு மெல்பேண் வன்ரேனா சென்யூட்ஸ் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்திய இராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராய் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து மரணித்த அன்னை பூபதியின் நினைவுடன் சகல நாட்டுப் பற்றாளர்களையும் நினவுகூரும் இந்நிகழ்வில் நாட்டுப்பற்றாளர் நாள் தொடர்பான நினைவுரைகள் மற்றும் கவிதை ஆகியன இடம்பெற்றன.
மேலும் இந்நிகழ்வில் அன்னை பூபதி நினைவான காணொலி காட்சிகளும், எழுச்சிபாடல்களும் தமிழீழ தேசிய தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் தாயகத்தில் நடைபெற்ற இறுதிவணக்க நிகழ்வும் காணொலி காட்சியாகவும் காண்பிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய போர்வீரர்களை நினைவுகொள்ளும் நாளான அன்சாக் தினமன்று நாட்டுப்பற்றாளர் நாள் இடம்பெற்றமையும் அதில் இருநூற்றி ஜம்பது வரையிலான மக்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதனை தொடர்ந்து அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு முடிவுகள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பையும், அதனை சிறப்பாக செயற்படுத்த உதவிய அனைத்து அமைப்புக்களுக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டு தெரிவித்து முன்னனி செயற்பாட்டாளர்களில் ஒருவரான ச.டொமினிக் உரையாற்றினார்.
எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பிலும், நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கியத்துவம் குறித்தும் அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டுக்குழுவின் அவுஸ்திரேலிய பிரதிநிதியான மருத்துவ கலாநிதி சிவேன் சீவநாயகம் விரிவாக விளக்கவுரையாற்றினார்.
நாட்டுப்பற்றாளர் நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டிகளில் சிறுவர்கள் பலர் பங்குபற்றினர். இப்போட்டிகளில் பேச்சுப்போட்டிகளும் பொது அறிவுப்போட்டிகளும் இடம்பெற்றிருந்தன. பொதுத்திறன் போட்டியில் பங்குபற்றிய பண்டாரவன்னியன் அணி வெற்றிக்கேடயத்தை பெற்றுக்கொண்டது.
தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்களை நாட்டுப்பற்றாளர்களின் குடும்பத்தவரினால் வழங்கப்பட்டதை தொடர்ந்து, தேசிய கொடியிறக்கத்துடன் இரவு 8.30 மணியளவில் தமிழீழத்திற்கான உறுதியுரையுடன் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment