குலசேகர ஆழ்வார்
கடந்த சில வாரங்களாக முதல் ஆழ்வார்கள், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், அவரது சீடர் மதுரகவி ஆழ்வார் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக அடுத்ததாக உள்ள குலசேகர ஆழ்வாரை பற்றி பார்ப்போம்.
குலசேகர ஆழ்வார் நீர் வளம், மலை வளம், இயற்கை வளம் நிறைந்த மலயாள தேசம் என்று கொண்டாட படும் கேரள நாட்டில் கொல்லி நகரத்தை ஆட்சி புரிந்த த்ருடவிரதன் என்னும் மன்னனுக்கு புத்திரனாக அவதரித்தார்.
த்ருடவிரதன் பல காலமாக புத்திர பாக்கியம் இன்றி நம் திரு மாலை நோக்கி தவம் செய்து வந்தார். அவருடைய தவத்திர்க்கு இறங்கி அந்த பகவானும் அவர்களுக்கு தனது “கௌஸ்துப மணியின்” அம்சமான ஒரு சத்புத்திரனை கொடுத்தார்.
குலசேகர ஆழ்வார் கலியுகம் 28 ஆம் வருடம் இந்த பூலோகத்தில் மன்னனின் வாரிசாக அவதரித்தார்.
ஏழு வயதை அடைந்த குழந்தைக்கு தக்க குருவாய் கொண்டு வேத பாராயணம், சகல சாஸ்திரங்களையும், மொழிகளையும் கற்பித்தனர். குலசேகரர் சகல கலா வல்லவனாக திகழ்ந்தார். அவர் வாள் வீச்சு , குதிரை ஏற்றம், அம்புயெய்தல் என்று எல்லா கலைகளிலும் முதன்மையாக திகழ்ந்தார்.
தக்க பருவத்தை அடைந்த உடன் அரச பொறுப்பையும் ஏற்றார். குலசேகரர் நீதி நெறி தவறாத மன்னனாக ஆட்சி புரிந்தார். நாடெங்கும் ஆன்மீகம் தழைத்து ஓங்கியது. மக்களும் மகிழ்வோடு “குறை ஒன்றும் இல்லாமல் அந்த கோவிந்த நாமத்தை வாயார பாடி வாழ்ந்து வந்தனர்”.
தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீ ரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரைக் கண்டு பொறாமை கொள்ளாத மன்னர்களே இல்லை எனலாம். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.
போரில் வெற்றி வாகை சூடும் மன்னனுக்கு அதில் மடியும் உயிர்களை எண்ணி அதன் மேல் இருக்கும் ஈடுபாடு குறைய தொடங்கியது. மேலும் ஒருநாள் குலசேகரரின் கனவில் ஸ்ரீமன் நாராயணன் தோன்றி அவருக்கு காட்சி அளித்ததோடு இல்லாமல் அவரை உண்மையான பேரின்ப நிலையை அடைய அருள் புரிந்தார். அன்று முதல் அரசன் அழிவுக்கு உரிய இந்த சிற்றின்பங்களில் நாட்டம் கொள்ளாமல் அந்த பகவான் ஸ்ரீமன் நாராயணனின் திருவடியில் சரண் அடைந்தார்.
ஒவ்வொரு நாளும் வித்துவான்களை அழைத்து, எம்பிரான் இராமனின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் ஆரண்ய காண்டத்தில் சீதா ராம லக்ஷ்மணர் வனவாசம் செய்யும் போது பல அரக்கர்களை ராமன் தனியே எதிர்த்தார் என்றதை கேட்டவுடன் குலசேகரர், தனியே இருக்கும் இராமபிரானுக்கு அசுரர்களால் ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சி, தன் நால்வகைப்படைகளையும் இராமபிரானுக்குத் துணையாய் தன் படையை அனுப்ப ஏவினார்.. அப்பொழுது, அந்த வித்துவான் , இராமர் ஒருவரேத் தனியாய் அவர்களை எல்லாம் வென்றுவிட்டார், என்று கூறி சமாதானப் படுத்தினார். என்னே ஒரு பக்தி!
இப்படி அரண்மனை எங்கும் பாகவத விசயங்கள் அதிகரித்து அரச காரியங்களுக்கு தடையாக இருப்பதை எண்ணி மந்திரிகள் பாகவதர்கள் மீது பழிசுமத்தினர். "ராமர் விக்ரகத்தில் இருந்த நவரத்தின மாலை களவு போனதர்க்கு பாகவதர்களே காரணம் என்று பழிசுமத்தினர். இதை கேட்ட குலசேகர ஆழ்வார் துடித்து போனார். "எனது பாகவத கூட்டம் ஒரு நாளும் பொன் பொருளுக்கு ஆசை பட்டு இத்தகய காரியம் செய்ய மாட்டார்கள்" என்று கூறி அதை நிரூபிக்க உடனே அவர், கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்றை ஒரு குடத்திலிடச்சொல்லினார். பின், "எம்பிரான் பக்தர்கள் அந்த மாலையை எடுத்திருந்தால், நானும் அப்பக்தர்களில் ஒருவன், ஆதலால் இக்குடத்திலுள்ள பாம்புத் தன்னைத் தீண்டட்டும்" என்று கூறிக் குடத்தினுள் தன் கையை விட்டார். ஆனால், அப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை.
அப்பொழுது, அவரது அமைச்சர், அந்த மாலையை எடுத்து மறைத்து வைத்தது, நாங்கள்தான். இராமபிரானின் மீதான உங்கள் பக்தியை நீக்கவே அவ்வாறு செய்தோமென்று கூறி, அந்த மாலையைத் திருப்பிக் கொடுத்து, தம் தவற்றிற்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார்.
அது முதல் குலசேகரர் தனது அரச காரியங்களை ஒப்படைத்து விட்டு ராமரின் அபிமான மூர்த்தியான திருவரங்க நாதனை தரிசிக்க புறப்பட்டார். அங்கு திருவரங்க நாதனை தரிசித்து விட்டு அவர் மேல் "இருளிரியச் சுடர்மணி " என்னும் 30 பாசுரங்களை பாடி அருளினார். பின் அங்கிருந்து வரத ராஜ பெருமாளை தரிசித்து விட்டு திருப்பதிக்கு சென்று அங்கு திருவேங்கட முடையானை அகம் குளிர தரிசித்து 11 பாசுரங்களை கொண்ட திவ்ய பிரபந்த பாடல்களை பாடியருளினார். பின் வடமதுரை, கோவர்தனம் , பிரிந்தாவனம், சித்திரகூடம், ஸ்ரீ வைகுந்தம் என்று அநேக திவ்ய தேசங்களை தரிசித்து 105 பாசுரங்களை கொண்ட " பெருமாள் திருமொழி" என்னும் திவ்ய பிரபந்ததத்தையும், வட மொழியில் " முகுந்த மாலை" என்னும் பிரபந்ததத்தையும் பாடி அருளி
ஆனாதசெல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும்யான் வேண்டேன்
தேனர்பூஞ்சசோலை திருவேங்கடச்சுனையில்
மீனாய்ப்பிறக்கும் விதி யுடையேனாவேனே -- [திவ்ய பிரபந்தம் 4 ஆம் திருமொழி ]
அர்த்தம்:
எனக்கு இவ்வுலகையே ஆளும் மிக்க செல்வம் படைத்த மன்னனாக இருக்கும் பதவி வேண்டாம். அதர்க்கு பதிலாக தான் திருவேங்கடத்தில் (திருப்பதியில்) உள்ள பூஷ்கரணியில் ஒரு மீன் ஆக பிறக்கவே விருப்பம் என்று பாடியுள்ளார்.
இதில் இருந்து அவரது பக்தியில் ஆழத்தை புரிந்து கொள்ளலாம்.
இப்படி 67 வருடங்கள் இந்த பூலோகத்தில் வாழ்த்து பின் தன் வைகுண்ட பதவியை அடைத்தார்.
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.!
என்றும் அன்புடன்,
ஆண்டாள்
No comments:
Post a Comment