நீரிழிவு நோயாளர்களுக்கும் மூட்டு சத்திர சிகிச்சை சாத்தியமே

.

எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களை எதிர்கொள்வதற்கு மனோதிடத்துடன் சற்று சமயோசிதம் தேவை என்பதே புத்திசாலிகள் மற்றும் அனுபவஸ்தர்களின் முன்மொழிபு. எதிர்பாராமல் நடக்கும் விபத்தில் பாதிக்கப்படுவோர்களை, விபத்து நடந்த தருணத்திலிருந்து குறிப்பிட்ட தருணத்திற்குள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட வாய்ப்பிருக்கிறது என்கிறார் எலும்பு மருத்துவ நிபுணர் டொக்டர் எஸ். முத்துகுமார்.

எலும்பு மருத்துவத்திற்கான சத்திர சிகிச்சைக்கூடத்தில் சிடி ஸ்கேன் என்ற நவீன மருத்துவ உபகரணத்தைப் பொருத்தி, இம்மருத்துவத்திற்கான புதிய சர்வதேச தர அடையாளத்தை அறிமுகப்படுத்தியவர் இவர் என்பதும், "ஐ.ஓ. ஆர்' எனப்படும் நுண்மதிப்பு கொண்ட சத்திர சிகிச்சை அரங்கத்தை உருவாக்கி, ஏழு அல்லது எட்டு செ. மீ அளவேயுள்ள முதுகுத்தண்டின் இணைப்பினிடையேயுள்ள பாலப்பகுதியில் ஐந்து அல்லது ஆறு செ. மீ அளவுள்ள ஸ்குரூக்களைப் பொருத்தி, நோயாளிக்கு துல்லியமான சிகிச்சை வழங்குவதில் முன்னோடி என்பதை, அறிந்ததும், இவர் நிர்வாக இயக்குநராக பணியாற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் பார்வதி மருத்துவமனைக்கு சென்று சந்தித்தோம்.

விபத்துத் தொடர்பாக, மருத்துவ உலகம் "கோல்டன் ஹவர்ஸ்' என்று குறிப்பிடுவதைப் பற்றி விளக்கமாக எடுத்துரைங்களேன்?

விபத்து நடைபெற்ற தருணத்திலிருந்து முதல் நான்கு மணித்தியாலங்களைத்தான் "கோல்டன் ஹவர்ஸ்' என்று குறிப்பிடுகிறோம். இத்தøகய தருணத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்களை காப்பாற்ற ஒவ்வொரு விநாடியும் மதிப்புமிக்கது. விபத்து எதிர்பாராமல் நடைபெற்றுவிடுவதால் அவர்களுக்கு எம்மாதிரியான சிகிச்சை வழங்கப்படவேண்டும் என்பதனை துல்லியமாகத் திட்டமிட இயலாது. அதே தருணத்தில் விபத்து நடந்த இடத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கிடைக்காது. உதாரணமாக விபத்தில் அடிப்பட்டு, அதிக அளவில் இரத்தம் வெளியேறி, மூச்சு விடுவதில் சிரமமோ அல்லது மூளை போன்ற பகுதிகளில் அடிபட்டு நினைவிழத்தல் போன்றவையோ நிகழ்ந்திருப்பின், இவர்களை பதினைந்து நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கும் படியான சூழல் மேலைத்தேய நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற தேசங்களில் இது செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களை அதிகபட்சம் மூன்று நிமிடத்திற்குள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டால், அவர்களை காப்பாற்ற இயலும் என்று மருத்துவ உலகம் அறிவுறுத்துகிறது. இந்த நிலை குறித்த விழிப்புணர்வு உலக அளவில் ஏற்பட்டால், விபத்தின் மூலம் நிகழும் மரணத்தை 90 சதம் குறைக்க முடியும். ஆனால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் விபத்து ஏற்பட்டு நான்கு மணி நேரமாகியும் கூட அவர்களுக்கு குறைந்தபட்ச மருத்துவ சிகிச்சையும கிடைப்பதில்லை.

விபத்து ஏற்பட்டவுடன் உடலில் ஏற்படும் காயங்களை பிரைமரி இன்ஜுரி (primary injury) என்றும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிலைக்கு, ஆனால் தவிர்க்கப்பட வேண்டிய நிலைக்கு செகண்டரி இன்ஜுரி (secondary injury)என்றும் குறிப்பிடுகிறோம். செகண்டரி இன்ஜுரி என்றால், விபத்தில் அடிப்பட்டவர்களை காப்பாற்றுகிறேன், உதவி செய்கிறேன் என்று கூறி, அவரை அசைப்பது, வலுவில் நகர்த்துவது. இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடலுறுப்புகள் மேலும் மோசமடைகிறது. இதனை மருத்துவ உலகம் செகண்டரி டேமேஜ் என்று குறிப்பிடுகிறது.

அதனைத் தெடர்ந்து மார்பிடிட்டி என்றதொரு நிலையைப் பற்றியும் குறிப்பிடுகிறோம். அதாவது, விபத்தில் மாட்டிக்கொண்டவர், மண், அழுக்கு, அசுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, சேதமடைந்த உறுப்பின் வழியாக உடலுக்குள் கிருமிகள் நுழைவது. இதனால் அந்த உறுப்பின் செயல்பாட்டில் சிக்கல் எழுவது. இதனால் பாதிக்கப்பட்டு நான்கு மணி தியாலத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தாலும், அவர்களுக்கு துல்லியமான, முழுமையான சிகிச்சை வழங்குவதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது அடிப்பட்ட பத்து நிமிடத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவரை சந்தித்து, சிகிச்சை பெறுவதற்கும், அடிப்பட்டு நான்கு மணி தியாலம் கடந்து சென்ற பின் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவதற்கும் வித்தியாசம் உண்டு. அதாவது அவர்கள் பலனடைவதில் மாறுபாடு உண்டு.

ஒரு சில தருணங்களில் இரவு பதினொரு மணியளவில் விபத்து நடைபெற்றிருக்கிறது. நீங்களும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று அனுமதித்துவிட்டீர்கள். ஆனால் அம்மருத்துவமனையில் எந்நேரமும் இயங்கக்கூடிய சத்திர சிகிச்சை கூடம் இருக்கும் என்று உறுதியாக கூற இயலாது. அத்தகைய தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே தரமான சிகிச்சை கிடைக்காமற்போகக்கூடிய வாய்ப்பு உண்டு. இந்நிலை எங்கள் மருத்துவமனையில் கிடையாது. இங்கு இருபத்திநான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய சத்திர சிகிச்சை கூடம் இருக்கிறது. இருபத்திநான்கு மணி நேரமும் சத்திர சிகிச்சை நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். இவை முழுமையாக கிடைக்கவில்லையென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பின்விளைவு அபாயகரமானது. உதாரணமாக கால்பந்து வீரர் ஒருவருக்கு விபத்தில் அடிப்பட்டு விட்டது. நான்கு மணி தியாலத்திற்குள் அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடனே நிகழ்த்தப்படவேண்டிய சத்திர சிகிச்சை, உரிய நிபுணர் இல்லாததால் நடைபெறவில்லை. மறுநாள் காலையில் அவரை பரிசோதிக்கும் நிபுணர், காலை எடுத்தேயாகவேண்டும் என்று அறிவுறுத்தும் போது, அவருடைய கால்பந்து வீரர் என்ற அடையாளத்தையே மாற்றிக் கொள்ள நேரிடும். அத்துடன் நிற்காமல், அவர் தன் வாழ்நாளில் வேறு துறையை தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிடும். அதனால் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஒருவருடைய வாழ்க்கை முறையையே மாற்றிவிடக்கூடிய வல்லமை விபத்திற்கு இருப்பதால், அதற்கு இடங்கொடுக்காது, மனம் விரும்பும் துறையில் உற்சாகமாக செயல்படவேண்டும் என்றால், விபத்து நடைபெற்ற தருணத்தில் இருந்து ஒவ்வொரு விநாடியும் மதிப்புமிக்கதாக உணர்ந்து செயல்படுங்கள்.

லிம்ப் லென்த்தனிங் என்று வழங்கப்படும் எலும்பை வளர்தெடுப்பது எத்தகைய தருணங்களில் அவசியமாகிறது? அது எப்படி மேற்கொள்ளப்படுகிறது?

நாற்பது ஐம்பது ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவ தொழில் நுட்பம் தான் இந்த லிம்ப் லென்த்தனிங். ருஷ்ய நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி இல்லீஸறா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பம். உடலில் உள்ள எல்லா எலும்புகளும் உடைந்தபின் சேர்வது இயற்கை. இதனை மருத்துவர்கள் சேர்ப்பதில்லை. ஆனால் அதற்கேதுவான சூழலை மருத்துவர்கள் உருவாக்குகிறார்கள். உடைந்த பின் எலும்புகள் இணையும் போது புதிய எலும்புகள் உருவாகிறது. இந்நிலையில் புதிய எலும்பை சிறிது சிறிதாக இழுத்தோமென்றால், அவர் வளர்வதுடன், அதனுடன் இருக்கும் தசை, திசுக்கள் மற்றும் இரத்த நாளங்கள் உள்ளிட்ட அனைத்தும் வளர்கிறது என்பதை தன்னுடைய ஆய்வில் கண்டறிந்தார்

இல்லீஸறா. பன்னிரண்டு அங்குலம் வரை இதனை இழுக்க இயலும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. போலியோவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இந்த மருத்துவ தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சூம்பியிருக்கும் காலை சதையுடன் வளர்த்தெடுக்க இயலாது. ஆனால் அவ்விடத்திலிருக்கும் எலும்பை இழுக்க இயலும். இந்த மருத்துவ தொழில் நுட்பம், தற்போது விபத்தில் அடிப்பட்டு, அந்த தலத்திலேயே எலும்புகள் சுக்குநூறாக உடைந்துபோயிருப்பவர்களுக்கு, எலும்பை இணைக்கும் போது இதனை பயன்படுத்துகிறோம்.

இடுப்பு மாற்று மற்றும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை எப்போது, யாருக்கு தேவைப்படுகிறது? நீரிழிவு நோயாளிகளுக்கு இது சாத்தியமா?

இடுப்பு மாற்றை விட மூட்டு மாற்று சத்திர சிகிச்சை தான் தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் நாம் மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறை. அதாவது அதிகமாடிகளைக் கொண்ட கட்டிங்களை( அலுவலகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள்) எழுப்பி, ஆரோக்கியம் என்ற பெயரில், படியேறும் போது கால் மூட்டை அதிகப்படியாக பயன்படுத்துவதால், மூட்டு எலும்பின் தேய்மானம் அதிகரிக்கிறது. அதேபோல் ஒரேயிடத்தில் அதிக நேரத்திற்கு உட்கார்ந்தே பணியாற்றுவது. (கொம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது.) ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கொரு முறை தன்னுடைய உடல் நிலையை மாற்றியமைத்து, அதாவது எழுந்து இரண்டு நிமிடங்கள் நடந்து சென்றுவிட்டு, அதன் பின் அமர்ந்து பணியாற்றவேண்டும். அதேபோல் உணவு எடுத்துக்கொள்ளும் விடயத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. விதவிதமான ஹொட்டேல்கள், வகைவகையான சுவையை அறிமுகப்படுத்தி, நம் உடல் எடையை அதிகரிப்பதிலேயே குறியாய் இருக்கின்றன.

இதனால் உடற்பருமன் ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் கால் மூட்டு வலுவிழக்கிறது. அலுவலகம், வீடு என்று பூட்டிய அறைக்குள்ளேயே நாள்களை கடத்துவதால் எம்முடைய சருமத்தின் மீது சூரிய ஒளி கூட தேவைக்கு குறைவாக படுகிறது. இதனால் சருமம் பாதிக்கப்படுகிறது. சருமம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சருமத்தின் வழியாக எலும்புகளுக்கு சக்தியூட்டும் விட்டமின் டி போதிய அளவிற்கு உடலுக்கு கிடைப்பதில்லை. ஆண்களைக் காட்டிலும், பெண்கள் திருமணத்திற்கு பின் உடற்பருமன் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு மாதவிடாய் நின்றுவிட்டால், ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் இடுப்பு எலும்பு மற்றும் மூட்டு எலும்பின் தேய்மானம் அதிகரிக்கிறது.

அதேபோல் மூட்டு வலிக்கான சிகிச்சைக்காக வருவோரில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவோர்களின் சதவீதம் குறைவே. அதனால் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தாராளமாக மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்ளலாம். அவர்கள் பயப்படதேவையில்லை. ஏனெனில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவோரில் அறுபது சதத்தினர் முதுமையடைந்தவர்களே. தற்போது நாற்பது வயதை கடந்துவிட்டவர்களில் அறுபது சதவீதத்தினர் மேல் நீரிழிவு குறைபாடுடையவர்களே.

ஆயுள் அதிகம் என்பதால் தான் எலும்பு மருத்துவ சிகிச்சையின் போது ஆக்சீனியத்தாலான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா?

எலும்பு மருத்துவத்தின் போது பயன்படுத்தப்படும் இரும்பாலான பிளேட்கள்,. ஸ்குரூக்கள் ஆகியவை எலும்புகள் இணையும் வரை மட்டுமே அதன் தேவைப்பாடு இருக்கும். எலும்புகள் இயற்கையாக இணைந்த பின், அங்கு பொருத்தப்பட்ட இரும்புகள் எந்தவித பயனுமில்லாமல், உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கிடாமல் இருக்கும். ஆக்சீனியம் பொதுவாக மூட்டு மாற்று சிகிச்சையின் போது தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அதனை விட செராமிக் எனப்படும் பீங்கானில் ஆன செயற்கை மூட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் ஆயுள் மற்றும் உறுதி தன்மை நோயாளியைப் பொறுத்தும்., அவர் பயன்படுத்தும் விதம் பொறுத்தும் மாறுபடுகிறது. மருத்துவர்கள் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்யும் போது, அவர்களின் எஞ்சியுள்ள வாழ்க்கை முழுவதும் வரும்வகையிலான மூட்டுகளையே பொருத்துகின்றனர். ஆக்சீனியம் மற்றும் செராமிக்கால் உருவாக்கப்பட்டு, பொருத்தப்பட்டுள்ள செயற்கை மூட்டுகளின் ஆயுள் குறித்து தற்போது ஆய்வு மட்டுமே நடந்து வருவதால், அதற்கான இறுதி முடிவை உறுதியாக தெரிவிக்க இயலாது. அதே தருணத்தில் ஆக்சீனியத்தாலான செயற்கை மூட்டுகள் பொருத்தப்படுவதால் மட்டுமே ஒருவரின் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை பயன் தந்துவிடாது. அதை துல்லியமாக பொருத்துகிற சத்திர சிகிச்சை நிபுணரின் பங்களிப்பும் இருக்கிறது.

வாசர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பும் விடயம் என்ன? தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்ய தவறாதீர்கள். சிறு வயது முதல் இதனை தொடர்ந்து செய்து வந்தால் எலும்பு தொடர்பான சிக்கல்கள் வராது. உடற்பருமனை வரவிடாமல் எச்சரிக்கையுடன் உணவு பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். அதையும் கடந்து நோய் வந்துவிட்டால், முதலில் அதற்கேற்ற மருத்துவ நிபுணரை தெரிவுசெய்து, சிகிச்சையை செய்துகொள்வதே சிறந்தது.

நன்றி வீரகேசரி நாளேடு

No comments: