படித்துச் சுவைத்த சிறுகதை - ஆண்பெண் போட்டி

. 
ஆண்பெண் போட்டி


‘ஆண்புத்தி பெரிசா, பெண்புத்தி பெரிசா’ என்று சாமியின் அப்பா சிறுவயதில் அவனுக்கொரு கதை சொல்வதுண்டு. கதை கேட்பதற்காகவே சாப்பிடப்படுத்தியிருக்கிறான். அது மதனகாமராஜன் கதைகளில் ஒன்று என்று அவர் சொல்வது வழக்கம். ஆனால் பெரியவனானபிறகு அப்படியொரு கதையை மதனகாமராஜன் கதைத்தொகுப்பில் அவன் படித்ததில்லை. அது இடைச்செருகலாக இருக்கலாம். அவன் பெண்களை மதிக்கவேண்டும் என்பதற்காக அவரே கதைகட்டிவிட்டிருக்கலாம். ஆண்களால் முடிவதைப் பெண்கள் செய்ய இயலாதென்று ஒப்புக்கொள்ளாத ஒருத்தியை ஒருதீவில் எந்தவிதக் கருவிகளும் இல்லாமல் தனியாக விட்டுவிடுவார்கள். அவள் அங்கே கிடைத்ததைச் சாப்பிட்டு, ஓராண்டு கெடுவிற்குள் தப்பிவந்து, அவர்கள் முகத்தில் கரியைப்பூசியதுதான் கதை. அதைப் பலமுறை அவரைச் சொல்லச்சொல்லிக் கேட்டிருக்கிறான். முதலும் முடிவும் ஒன்றுதான், ஆனால் விவரங்கள் அவர் கற்பனைக்கேற்ப மாறுபடும். மரக்கட்டைகளைச் சேர்த்து ஒரு தெப்பம் கட்டினாளா இல்லை, பல பறங்கிக்காய்களைக் காயவைத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நீந்தினாளா என்பதுதான் சஸ்பென்ஸ். இப்போது அது நினைவுக்கு வந்தது.


பத்துநாட்களுக்கு முன் அவன் மனைவி சரவணப்ரியா அவனுக்கொரு சவால்விட்டாள். பெண்களால் சாதிப்பது ஆண்களால் முடியாதென்று அவள் அடித்துச்சொன்னபோது, ஆண்குலத்தின் பெருமையைக் காப்பாற்ற அவன் சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. நேற்றுவரை எப்படியோ தாக்குப்பிடித்துவிட்டான். இன்று, அதிலிருந்து ஓய்வு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அதற்காக மதியத்தில் பிடித்த கடும் கோடைமழை ஏழுமணிவரையிலாவது பெய்யட்டுமென வேண்டிக்கொண்டான்.

ஊரிலிருந்து வந்த தன் மாமியாரை இரண்டு வீடு தள்ளியிருக்கும் ப்ரேமா அறிமுகம் செய்தாள். அவளே ஆறுமாதத்திற்கு முன்புதான் செயின்ட் லூயிஸிலிருந்து இடமாற்றி அந்த வீட்டிற்குக் குடிவந்தாள். மாமியாருக்கு சதையே இல்லாத பத்துவயதுப்பெண்ணின் உடல், சுருக்கம் அதிகமில்லாத தெளிவான முகம். பத்து கிராமுக்கும் குறைவான நகைகள். கழுத்துவரை தொங்கிய தலைமயிரில் பாதிக்குமேல் சாம்பல்நிறம். “அவருக்கு எழுபத்தாறு ஆகப்போறது, நம்பமுடியறதோ?” என்றாள் ப்ரேமா பெருமையுடன். “மருந்து, மாத்திரை ஒண்ணும் பாக்கறதுகூடக் கிடையாது.” மாமியார் புன்னகையோடு நிறுத்திக்கொண்டார்.

மார்ச் முதலில் அவர் வந்த ஒருவாரம் குளிரும் மழையுமாக இருந்தது. பிறகு பகல் சூடாகத்தொடங்கி சூரியனின் கதிர்கள் உடலில் உறைத்தன. சாமியும் சரவணப்ரியாவும் வேலையிலிருந்து திரும்பியபோது வீட்டின் முன்வட்டத்தில் ப்ரேமாவின் மாமியார் முந்தானையைத் தோளில் சுற்றி நடந்துகொண்டிருந்தார். சரவணப்ரியாவின் பக்கம் திரும்பி உன்னைத்தெரியுமென்று ஒருபுன்னகை. பிறகு பார்வையை நேரேவைத்து நடையைத் தொடர்ந்தார்.

வீட்டிற்குள்வந்து அரைமணிகழித்து கதவருகில் இருந்த கண்ணாடி வழியாகப் பார்த்தபோதும் அவர் நடப்பது தெரிந்தது.

“பெரியமணியோட அம்மா இந்த வயசிலும் எப்படி நடக்கறார்!” என்று சாமி வியந்தான்.

“கண்போட்டிறாதே!” என்றாள் பின்னால்வந்த சரவணப்ரியா.

“வீட்டுக்கு முன்னாடியே ஏன் சுத்திச்சுத்தி வரார்? அதுவும் பிரதட்சணமாகத்தான்.”

“தரை மேடுபள்ளமில்லாம இருக்கு. அதைத் தாண்டிப்போனா தெருவிலே ஒரே சரிவு. இறங்கி ஏர்றது அவங்களுக்குக் கஷ்டமா இருக்கலாம். நாளைக்குக் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்.”

மறுநாள் மாமி நடக்கத் தொடங்கியபோது சரவணப்ரியா காத்திருந்து அவரை எதிர்கொண்டாள்.

“நல்லா நடக்கறீங்களே, மாமி!”

“சாயந்தரம் நடந்தா ராத்ரி தூக்கம் வரலியேன்னு முழிக்க வேண்டாம்.”

“ஏன் இங்கியே சுத்திச்சுத்தி வரீங்க? போரடிக்கலையா?”

“நான் தொலைஞ்சு போயிடுவேனோன்னு ப்ரேமாவுக்கு பயம். இங்கேன்னா வீட்டு ஜன்னல்லேர்ந்து என்னைப் பாத்துண்டிருக்கலாம். மயாமிலே என் பொண்ணு இருக்கா. அங்கே தெருவோரமா நேராப்போயிட்டு ‘பப்ளிக்ஸ்’ சூப்பர்மார்கெட்டைப் பாத்தவுடனே நேராத்திரும்பி வருவேன். ஒருநாள் ஏதோ ஞாபகத்திலே திரும்பற இடத்தையும் தாண்டி இன்னொரு ‘பப்ளிக்ஸ்’ பக்கம் போயிட்டேன். வீட்டிலேர்ந்து ரொம்ப தூரம். என்ன பண்ணறதுன்னு தெரியலை. நல்ல வேளையா ஒரு சர்தார்ஜி கண்ணிலே பட்டான். அவன்கிட்டை மாப்பிள்ளை பேரைச்சொன்னேன். ஆத்தைக் கூப்பிட்டான். பொண்ணு கார்லே வந்து அழைச்சிண்டு போனா. சின்சினாட்டிலே ரெண்டாவது பிள்ளை இருக்கான். அவனுக்கு பதினோரு வயசிலே ஒருபையன். அங்கே நான் நடந்தா என்பக்கத்திலேயே சைக்கிள்லே மெதுவா வருவான். அவன்கிட்ட செல்ஃபோன்கூட இருக்கும். இந்தப்பேரனுக்கு நாலுவயசுதானே ஆறது. இன்னும் ரெண்டு வருஷம் போனா என்னோட நடப்பானோ என்னமோ.”

“நான் துணைக்கு வரேன். டென்னிஸ் கோர்ட் வரைக்கும் நடந்துட்டு வரலாமா?” மாமியின் முகத்தில் ஒரு பிரகாசம்.

“இங்கியே இரு! ப்ரேமாகிட்ட சொல்லிண்டு வந்துடறேன்.”

சரவணப்ரியா காத்திருந்தாள். மாமியைப் பார்த்ததும், “என்னை ப்ரியான்னு கூப்பிடலாம். உங்க பேர்?” என்றாள்.

“அம்புஜம். வெறும் ப்ரியாவா?”

“இல்லை, சரவணப்ரியா.”

“என்னோட பெண் கிருஷ்ணப்ரியாவை கிருஷ்ணான்னு கூப்பிடறது. அவதான் பெரியவ. சின்னபையன் சின்னமணி சின்சினாட்டிலே இருக்கான்.”

கடைசி வாக்கியத்தின் ஓசை சரவணப்ரியாவுக்குப் பிடித்திருந்தது.

“எங்களுக்கு ஒரேபையன். பெர்க்கிலிலே படிக்கிறான்.”

முன்வட்டத்திலிருந்து வெளியேறியவுடன் சாலையில் இறக்கம். அங்கே வேலியைத்தாண்டி இரண்டு நாய்கள் உச்சத்தில் குரைத்தன.

“நான் எப்ப நடந்தாலும் ரெண்டும் ஹலோ சொல்லும். இப்ப உங்களுக்கும் சேர்த்து ஒரே கூச்சல். இங்கே எவ்வளவுநாள் இருப்பீங்க?”

“கணக்குப்படி ஒத்தொருத்தர் ஆத்திலே நாலுமாசம். குளிர்காலத்திலே பெண்ணோட மயாமி. அங்கேருந்து மார்ச்லே இங்கே வந்தேனா, ஜூலை நாலாந்தேதி வாக்கிலே சின்சினாட்டி போயிடுவேன். தீபாவளி வரைக்கும் அங்கே இருந்துட்டு, திரும்பவும் மயாமி.”

“காலண்டர்தேதி மாதிரி இடம் மாறிட்டிருக்கீங்களே.”

“அப்படின்னு இல்லே. நாலுமாசத்துக்குமேலே ஒரே இடத்திலே தங்கினா அவாளுக்கும் கஷ்டம். எங்கே போனாலும் சமைக்கற வேலையை நான் பாத்துனுடுவேன். குழந்தைகளை வளக்கறதிலே தலையிடமாட்டேன். தனியா என்னை வீட்டிலே விட்டுட்டு அவா வெளிலே போனாலும் எனக்கு வருத்தம் கிடையாது. நான்பாட்டுக்கு படிச்சிண்டிருப்பேன். உங்கிட்ட நிறைய தமிழ்ப்புஸ்தகம் இருக்குன்னு ப்ரேமா சொன்னா.”

“இருக்கு. இன்னிக்கித் திரும்பிப்போகும்போது வந்து பாருங்க! எதுவேணும்னாலும் எடுத்துட்டுப் போகலாம். ம்ம்… கொடுத்துவச்சிருக்கீங்க. மூணுபேரும் முறைதவறாம பாத்துக்கறாங்க.”

மாமியின் முகத்தில் ஒருபெருமிதம். அதை மறைக்க, “நடுவிலே எதாவது வந்துதுன்னா, வரிசை மாறிப்போயிடும்” என்றார்.

“ரெண்டுவருஷத்துக்கு முன்னாடி சின்ன மாட்டுப்பெண்ணுக்கு ரெண்டாவது குழந்தை பொறந்தது. அதைப் பாத்துக்க ஒருவருஷம் சின்சினாட்டிலே இருந்தேன். குளிர்காலத்திலே கொஞ்சம் கஷ்டம்தான். வீட்டுக்குள்ளியே ஒருகோடிலேர்ந்து இன்னொரு கோடிக்கு அரைமணி நடப்பேன். போன வருஷம் ஜனவரிலே அம்பிக்குக் கல்யாணம். அதுக்கு எல்லாருமா இந்தியா போயிட்டுவந்தோம்.”

அம்பி பெண்வழிப்பேரனென்று ஊகித்தாள். சமனான பாதையில் சிறிது நடந்தவுடன் டென்னிஸ் கோர்ட்டுகள் கண்ணில்பட்டன.

“திரும்பிப்போகலாமா? மாமி!”

“இன்னும்கூட பத்துப்பதினைஞ்சு நிமிஷம் நடக்கலாம்.” சரவணப்ரியாவுக்குப் பரிச்சயமான ஒரு அமெரிக்கன் நாயை இழுத்துக்கொண்டு எதிரில் வந்தான். “நன்றாக நடக்கிறாளே, உன் அம்மாவா?” என்று கேட்டான்.

“ஒருவிதத்தில்.”

மறுநாள்மாலை சரவணப்ரியா ப்ரேமாவின் வீட்டுக்கதவைத் தட்டினாள். வெளியில்வந்து நடந்த அம்புஜம் மாமி, “அம்பி அலாஸ்கா போனப்போ வாங்கிண்டுவந்தான்” என்று புடவைத்தலைப்பை எடுத்து ரவிக்கைபோல் அணிந்த டி-சட்டையைக் காட்டினார். “என்னையும் கூட வான்னு சொன்னான். நான்தான் அவனுக்குத் தொந்தரவா இருக்கவாண்டாம்னு போகலை.”

“அம்பிக்கு உங்களை ரொம்பப்பிடிக்கும் போலிருக்கு.”

“பதினைஞ்சுவயசு வரைக்கும் எங்க வீட்டிலேதான் வளந்தான். கிருஷ்ணா எதிர்லியே குடியிருந்தா. அப்புறம் ரெண்டு தம்பிகளைப் போல அவளும் இங்கே வந்துட்டா. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாலே அவருக்குத் திடீர்னு ஹார்ட் அட்டாக். மூணுபேரும் வந்து பாத்தப்புறம்தான் கண்ணை மூடினார். காரியமெல்லாம் முடிஞ்சாவுட்டு இந்தியாலே தனியா என்ன பண்ணப்போறேன்னு இங்கே அழைச்சுண்டுவந்தா.”

நடைமுடிந்து வீடு திரும்பியபோது, “இன்னிக்கி அவியல் பண்ணினேன். நன்னா வந்துதுன்னு உனக்கு எடுத்துவச்சிருக்கேன்” என்றார்.

“அவியலா? குடுங்க! குடுங்க! என் ஆத்துக்காரருக்கு தான் ரொம்ப நல்லா அவியல் பண்றதா நினைப்பு. உங்க நிஜ அவியலைச் சாப்பிட்டு அவருக்குக் கர்வபங்கம் வருதான்னு பாக்கலாம்.”

மாமிக்குக் கண்ணீர் வரும்வரை சிரிப்பு.

அடுத்துவந்த நாட்களில் மழை தடுத்தாலொழிய மாலைவேளையில் சரவணப்ரியா அம்புஜம் மாமியை அழைத்துச்சென்றாள். வேலை காரணமாக சிலநாள் களைப்பாக இருந்தாலும் மாமி ஏமாற்றம் அடையக்கூடதென்று அவருடன் நடந்தாள். அலுப்பு தட்டாதிருக்க மூன்று வெவ்வேறு தடங்களில் நடை. கிட்டத்தட்ட முக்கால்மணி ஆகும். ஏற்ற இறக்கம் எதற்கும் மாமி சளைக்கவில்லை. மேடு ஏறும்போது மாமிக்குக் கொஞ்சம் மூச்சுவாங்கும். மற்றநேரங்களில் உரையாடல்தான். பேசுவதற்கு விஷயம் கிடைக்காமல் தவித்ததில்லை.

“அம்பி குடும்பத்தோட காலபாகோஸ் போயிருக்கானாம். எனக்கு ஈ-மெயில்லே படம் அனுப்பிச்சிருக்கான். கம்ப்யூட்டர்லே பாத்தேன்.”

“ஈ-மெயில் வச்சிருக்கீங்களா?”

“இருக்கு. எழுத்து சின்னதா இருக்கறதனாலே யாராவது திறந்துகாட்டணும்.”

“நான் உங்களுக்கு பெரியபெரிய தமிழ் எழுத்திலே லெட்டர் அனுப்பறேன்.”

ஒருநாள் சிறுவர்கள் தெருவில் வெடிவெடித்து ஜூலை நான்கு வரப்போவதை அறிவித்தார்கள். அதற்குப்பயந்து நாய்கள் வீட்டிற்குள் தங்கிவிட்டன. சாலை சரிவில் குரைத்து அவர்களை வரவேற்கவில்லை.

“எங்கே, நம்மோட ஃப்ரென்ட்ஸை இன்னிக்கிக் காணோம்? நான் ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி அதுகள்கிட்ட போயிட்டுவரேன்னு சொல்லலாம்னு பாத்தேன்” என்றார் மாமி.

சரவணப்ரியாவுக்கு அவர் சின்சினாட்டி செல்லவேண்டிய நாள் நெருங்கியதென்று அப்போதுதான் நினைவுக்கு வந்தது. வருத்தமாகக்கூட இருந்தது.

ஒருகணம் நின்று, “எப்போ?” என்று கேட்டாள்.

“நாளைக்கு காலங்கார்த்தாலே.”

“யாராவது கூட வர்றாங்களா?”

“நான்மட்டும்தான். இங்கே ஏறினா நேரா சின்சினாட்டி. மயாமி போறச்சதான் அட்லான்ட்டால மாறணும். ஏர்போர்ட் பெரிசு. அங்கே கொஞ்சம் குழப்பமா இருக்கும்.”

“ப்ரேமாக்குப் போரடிக்கப்போறது.”

“அதுக்குத்தான் இன்னிக்கி ராத்ரி அவளோட அப்பா வரப்போறார்.”

“எங்கேயிருந்து?”

“அவரும் என்னைப்போலத்தான். ப்ரேமாக்கு ஒரு அண்ணாதான், சான்டியாகோலே இருக்கான். அவனோட எப்பவும் வாசம். வருஷத்துக்கு ஒருதடவை பொண்ணைப்பாக்க ஒருமாசம் வருவார்.”

நடைமுடிந்துவிட்டது.

“என்னோட தினம் நடந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ், ப்ரியா! ஊர்லே நடக்கறச்செல்லாம் உன்னை நெனைச்சுப்பேன்.”

“எனக்கும் உங்களோட நடந்துண்டே பேசினது மறக்காது, மாமி!”

“அடுத்த வருஷம் மறுபடி பாத்தா போறது.”

“நிச்சயமா.”

“உடம்புலே தெம்பு இருக்கிறவரைக்கும் நடக்கணும்னு ஆசை.”

“உடம்பு மாத்திரமா, உங்களுக்கு மனசிலும் சக்தி நிறைய இருக்கு.”

அந்தப்பாராட்டில் மகிழ்ந்த மாமி புன்னகையோடு விடைபெற்றார். இரண்டுநாள் கழித்து வழுக்கைத்தலையோடு ஒருவர் வீட்டின் முன்வட்டத்தைச் சுற்றி நடந்தார். ப்ரேமா தன் மாமியாருக்கு ஏற்படுத்திய சட்டம் அப்பாவுக்கும் போல. பத்து நிமிடங்களில் நடந்தேன் என்று பெயர்பண்ணிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். அதைக்கவனித்த சரவணப்ரியா வாயைவைத்து சும்மா இராமல், “அந்த மாமா தனியா நடக்கறார். நீ துணைக்குப்போயேன்!” என்றாள்.

சாமி தயங்கினான். அது அவளை இன்னும் தூண்டிவிட்டது.

“எனக்குத்தெரியும், நீ போகமாட்டேன்னு. அவரோடபேச உனக்கு விஷயம் கிடைக்காது” என்று வம்புக்கு இழுத்தாள்.

“பேசறதிலே பெண்களுக்குத்தான் சாமர்த்தியம். என்னாலே போட்டிபோட முடியுமா?”

“நான் 24மணிநேர செய்தி சான்ல்ல வம்புப்பேச்சைச் சொல்லலை. அதுக்கு ரொம்ப மூளை வேண்டாம், யார் வேணும்னாலும் செய்யலாம். இரண்டுபேரும் சுவாரசியமா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறமாதிரி விஷயம் பரிமாறிக்கணும்.”

“அதுலே அந்த மாமிக்கும் பங்கு இருக்கு.”

“சரி, ரெண்டு பெண்கள் செஞ்சதை ரெண்டு ஆண்கள் செய்யமுடியுதான்னு பாக்கலாம். எனக்கும் அம்புஜம் மாமிக்கும் பதினாறு வயசு வித்தியாசம். படிப்பிலும் குலத்திலும் வேறவேற. நாங்க ஒத்துப்போகலியா? ப்ரேமாவோட அப்பா ராமமூர்த்திக்கு எழுபதுகூட ஆகலை. எம்.ஏ. படிச்சிருக்காராம்.”

தப்பிக்க வழியில்லாமல், “நாளைலேர்ந்து” என்று ஒப்புக்கொண்டான்.

மறுநாள் ராமமூர்த்தி வெளியே வராததால் சாமியே ப்ரேமாவின் வீட்டை அழைத்து அவரால் நடக்கமுடியுமா என்று கேட்டான். பிறகு காதில்கேட்ட ஒலிகளை வைத்து ப்ரேமா அப்பாவை விரட்டியதாகத் தோன்றியது. வீட்டின்முன் சந்தித்தார்கள். ‘கல்-டி-சாக்’கை சுற்றிவந்தபோது பரஸ்பர அறிமுகம்.

அதைத்தாண்டிய சாலையின் இறக்கத்தைக் கடைசிவரை பார்த்து, “இறங்கிடுவேன், ஆனா ஏர்றது நிச்சயமில்லை” என்று அவர் பயமுறுத்தினார்.

சாமி தன் வேலையைப்பற்றி ஒருசில வார்த்தைகள் சொன்னான்.

“நான் ஆர்மிலே இருந்தவன். பையனும் பெண்ணும் காலேஜ் முடிச்சவுடனேயே இங்கே வந்துட்டா. மீனாட்சியும் ஏதோ கான்சர்னு போயிட்டா. ஊர்ஊரா ஏன் சுத்தணும்னு ஐம்பதிநாலு வயசிலியே ரிடைர் ஆயிட்டேன். அடையார் பஸ் ஸ்டான்டுக்குப் பக்கத்திலே ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தோம். அதிலே ஆறு வருஷம் இருந்தேன்” என்று ஆரம்பித்தபோதே அவருக்கு மூச்சு வாங்கியது.

“நாளைக்குப் பாக்கலாம்” என்று சாமி விடைகொடுத்தான்.

அந்த ஆறாண்டுகளைப் பற்றித்தான் அடுத்த இரண்டு நாட்களும் பேச்சு. அப்போது அவர் முகத்திலும் குரலிலும் நிரம்பி வழிந்த உற்சாகம். அந்த வயதிற்கே அவர் சென்றுவிட்டதுபோல் நடையில் ஒருவேகம்.

“கவலையே இல்லாம நிம்மதியா இருந்தேன், சார்! ஒருநாள் ஜூரம்னு படுத்ததில்லை. ஆட்டோல மூணுவேளை சாப்பாடு வரும். ஒரு பாலக்காட்டு ஐயர் கொண்டுவருவான். என்ன வேணும்னு முதல்நாளே சொல்லிடணும். வெங்காய அடையா, கத்திரிக்காய் பொடிக்கறியா, பூரி குருமாவா, தேங்காய் எண்ணெயிலே பொரிச்ச நேந்திரங்காய் வறுவலா எதுவும் செய்வான்” என்றபோது சாமிக்கு வாயில் நீரூறியது.

“அங்கேயிருந்து எங்கே போகணும்னாலும் சௌகர்யம். கடையெல்லாம் பக்கத்திலியே. ப்ரிட்ஜ் க்ளப்புக்கு தினம் நடந்தே போயிடுவேன். லைப்ரரி, கோவில், கச்சேரி, என்னோட ஸ்கூல்-மேட்டுக்குத் திருவான்மியுர்லே வீடு, எல்லா இடத்துக்கும் ஆட்டோ. வெளிலே வந்தா எப்பவும் ரெண்டு காத்திண்டிருக்கும்.”

“நீங்க சொல்றதைக் கேட்டா எனக்கே அங்கே ஃப்ளாட் வாங்கணும்போல இருக்கு.”

“ஒருசமயம் பாருங்கோ! நான் இருந்த காம்ப்ளெக்ஸிலே ஒரு எடுபிடி ஆள். வேலைக்குப் போகாம வீட்டிலே தனியா இருந்த பெண்கிட்ட கத்தியைக்காட்டி தகராறு பண்ணியிருக்கான். நான் மத்தியானம் சாப்பிடறதுக்கு முன்னாலே ஒரு வாக் போவேன். அவ கத்தற சத்தம் கேட்டு வீட்டுக்கு ஓடிப்போய் என் துப்பாக்கியை எடுத்துண்டுவந்து ஜன்னால் வழியா பயமுறுத்தினேன். நல்லவேளையா அதுக்குள்ள விபரீதம் எதுவும் நடக்கலை. என்னைப் பாத்துட்டு பின்கதவைத் திறந்து ஓடப்பாத்தான், விடுவேனா? அவனைப்பிடிச்சுக் கொடுத்தேன்.”

“நல்ல காரியம் பண்ணினேள்.”

“அதிலேர்ந்து காம்ப்ளெக்ஸ்லே இருந்த எல்லாருக்கும் என்மேலே ஒரு தனிமதிப்பு. எப்போ பாத்தாலும் நின்னு விஜாரிச்சுட்டுத்தான் போவா.”

பிறகுவந்த நாட்களில் அவர் பேச்சில் பெரிய மாறுதல்.

“அடையார்லேர்ந்து இங்கே வந்தேளாக்கும்” என்று சாமி ஆரம்பித்தது தவறாகப் போய்விட்டது.

“எனக்கு இஷ்டமே இல்லை. தனியா இருக்கவேண்டாம்னு அழைச்சிண்டுவந்தா. வரும்போது ட்ரிம்மா இருந்தேன். இப்போ பாருங்கோ!” என்று சதை கழன்று, பற்கள் உதிர்ந்து, இடுப்பில் டயர்சுற்றி ஊதியதுபோல் பருத்த உடலைக் காட்டினார்.

“காலைலே கொலஸ்ட்ரால் மருந்துலே ஆரம்பிச்சு ராத்ரி தூங்கறதுக்கு வேலியம் வரைக்கும் பன்னண்டு மாத்திரை. இத்தனைக்கும் சாப்பாட்டிலே எண்ணெய் நெய்யின்னு எதுவும் சேத்துக்கறதில்லை.”

“சான்டியாகோ, ஊர் நன்னா இருக்குமே.”

“ஊர் எப்படி இருந்தா என்ன? ஊரைவிட்டுத் தள்ளி வீடு. எங்கேயாவது போகலாம்னா பஸ் கிடையாது. என்னை அழைச்சிண்டு போக அவாளுக்கு நேரமில்லை. ரெண்டுபேரும் வேலைலேர்ந்து வர்றதுக்கே ஏழுமணிக்கு மேலே ஆகும். சனி ஞாயிறுலே அவன் ஒருநாள் ஆஃபீஸ் போவான், அவ இன்னொரு நாள்.”

“எதாவது வேலைபாத்திருக்கலாமே.”

“வந்த புதுசிலே ஒரு கடைலே செகுரிடி ஆஃபீசரா இருந்தேன். பேர்தான் பெத்தபேர். சாதாரண வாச்மன் வேலை. இருந்தாலும் சந்தோஷமா இருந்தது. ரெண்டு வருஷத்திலே அதை மூடிட்டா.”

“பையனுக்கு எவ்வளவு குழந்தைகள்?”

“ஒரு பெண், ஒரு பையன்.”

“இப்போ என்ன படிக்கிறா?” அவர்களுக்கு அவர் பாடம்சொல்லித்தந்து நேரத்தைச் செலவிடலாமே என்று யோசனைசொல்ல திட்டம்.

“யாருக்குத் தெரியும்? பெண் வீட்டுக்குவந்தா செல்லுலே அரட்டை, இல்லாட்டா காதிலே ஐ-பாட். நாலுதடவை கத்தினாத்தான் திரும்பிப் பாப்போ. பையன் கம்ப்யூட்டர் முன்னாலே உக்காந்தான்னா ஒரே இரைச்சல். ரெண்டுபேரும் எது கேட்டாலும் நீ பேசறது ஒண்ணும் புரியலியேன்னு முகத்தை வச்சுப்பா. ஷேக்ஸ்பியர்லேர்ந்து பெர்னாட் ஷா வரைக்கும், நாம படிக்காத இங்க்லீஷா?”

செல்பேசி ஒலித்தது. முதலில் அலட்சியம்செய்து பிறகு பையிலிருந்து எடுத்தார்.

“ஹலோ ஹரி!” என்று நின்றார்.

தனியாகப் பேசட்டுமென்று சாமி ஒருசுற்றுக்குப் பிறகு அவருடன் சேர்ந்துகொண்டான்.

“பையன்தான் கூப்பிட்டான். நீல மாத்திரை சாப்பிட்டியா, ஆரஞ்சு குளிகையைத் தின்னியான்னு தினம் நாலு கேள்வி. நான் என்ன பச்சைக்குழந்தையா? அப்படியே ஒருவேளை சாப்பிடாட்டா என்ன? குடியா மூழ்கிடும்?”

இதேகதியில் ஒருவாரம். பொறுத்துப்பொறுத்து நேற்று சாமி நைசாகக் கேட்டான். “இங்கே ஒருமாசத்துக்கு நீங்க வந்ததாச் சொன்னாளே. எப்போ சான்டியாகோ திரும்பிப்போறேள்?”

“எங்கே?”

“பிள்ளைகிட்ட.”

“இங்கியேதான் இருக்கப்போறேன்.”

சாமிக்குப் பகீரென்றது. அக்டோபருக்கு பிறகுதான் குளிர். அதுவரையில் அவருடைய முறையீடுகளைக் கேட்டு தினம் செக்குமாடுபோல் ஆறுவீடுகளுக்கு நடுவில் சுற்றவேண்டுமா? அடக்கடவுளே!

“பக்கத்திலே அக்டோபர் ஹவுஸ்னு ஒண்ணு இருக்காமே?” என்றார் மாமா.

“ஆமா, ஜிம்மைத்தாண்டிப் போனா வரும். திறந்து மூணு வருஷம்தான் ஆறது.”

“அங்கே போயிருக்கேளா?”

“ஒருதடவை. எல்லா சௌகர்யமும் இருக்கு.” அங்கே போகப்போகிறாரா? அப்பாடா!

“த்ஸ. என்ன சௌகர்யம்?” என்றார் அலட்சியமாக. “உப்புச்சப்பு இல்லாத சாப்பாடு. வருஷத்திலே ஆறுமாசம் ஜெயிலாட்டம் உள்ளையே அடைஞ்சு கிடக்கணும். தெரிஞ்ச முகம்னு யாரும் இருக்கமாட்டா. டிவிலே எப்ப பாத்தாலும் ரெண்டுபேர் யாரோட மண்டையாவது உருட்டிண்டிருப்பா. அதிலே கஸ்தூரியும் கிடையாது, அரசியும் கிடையாது.”

மாமா சொல்வதும் நியாயம்தான்.

“பையன் நிறைய பணம் போட்டு ஒரு யுனிட் வாங்கியிருக்கான். எவ்வளவுன்னுகூட எனக்குத் தெரியாது. ஏற்கனவே அதிலே குடிஇருக்கறவா ஒருத்தர் காலி பண்ணணும். காலின்னா என்ன, அவா இடம் மாறணும். அங்கேருந்து போறதுக்கு ஒரு இடம்தான் பாக்கி” என்று சுட்டுவிரலை வானத்தைநோக்கி உயர்த்தினார். அந்த முதியோர் இல்லவாசிகளைப் பார்த்திருந்த சாமி அவர் கணிப்பை மறுக்கவில்லை

“நீங்க ‘ஹின்டு’லே பாத்திருப்பேளே, அஃபக்ஷன் ஃபேமிலி ஹோம்ஸ். கல்யாணசுந்தரம் காலனிலே இருக்கு.”

“பாத்திருப்பேன். ஞாபகமில்லை.”

“அங்கே போறேனேன்னு சொல்லிப் பாத்தேன். இங்கே ஆற செலவிலே கால்பங்குகூட இருக்காது. சாப்பாட்டுக்கும் கஷ்டமில்லை. எப்போ வேணும்னாலும் வெளிலே போகலாம். நம்ம ஊர் டிவியைப் பாத்தா பொழுதுபோயிடும். வேண்டாம்னுட்டான். ‘இங்கேன்னா நாங்க கவனிச்சுப்போம். எதாவது ஆச்சுன்னா அவ்வளவுதூரம் யாரால வரது?’ன்னு முனகறான். இனிமே என்ன ஆனா என்ன?”

ஏழுமணிக்குமுன்பே மழை முழுவதும்நின்று வானம் வெளிறியபோது தொலைபேசியில் ஓர் அழைப்பு. ராமமூர்த்தியிடம், ‘இருட்டாவிட்டாலும் தெருவெல்லாம் தண்ணீர் தேங்கியிருக்கிறது, வெளியே எப்படிப்போவது’ என்று சாக்குசொல்லத் தயாரானான் சாமி. அழைத்தது பெரியமணி.

“நான் வான்டர்பில்ட் எமர்ஜென்சியிலிருந்து கூப்பிடுகிறேன். ஒரு சிறு விபத்து” என்று ஆரம்பித்தான்.

“மாமாவுக்கு எதாவது…”

“அவர் நன்றாகத்தான் இருக்கிறார். ப்ரேமாதான். பயப்பட ஒன்றுமில்லை” என்று அவனே ஆறுதல் சொன்னான். “ஈரமான ஷூவோடு ப்ரீ-ஸ்கூலிலிருந்து வீடுதிரும்பிய பையன் காரிலிருந்து குதித்தபோது வழுக்கியதாம். அவனைக்கீழே விழாமல் தாங்கிக்கொள்ள ப்ரேமா வேகமாகப் பாய்ந்திருக்கிறாள். அவனுக்குப் பதில் அவள் சறுக்கி விழுந்துவிட்டாள். கணுக்காலில் எலும்பு பிசகிவிட்டது. சர்ஜரி முடிந்து கட்டுப் போட்டிருக்கிறது. இன்றிரவுக்குள் வீட்டுக்குக் கூட்டிவரலாம். ஆனால் இரண்டு மாதம் வலதுகாலை ஊன்றமுடியாது. சின்னமணியோடு ஏற்கனவே பேசிவிட்டேன். உதவிக்கு அம்மாவை நாளை அனுப்பிவைக்கிறான்.”

அம்புஜம் மாமியின் பயணதிட்டத்தில் இன்னொரு சிறுமாற்றம்.

மூன்றாம்நாள் சரவணப்ரியா வாசல் கதவருகில் நின்று சாமியை அழைத்தாள்.

“வெளியே பாத்தியா?”

சாமி அவளுடன் கவனித்தான்.

அம்புஜம் மாமியும், ராமமூர்த்தி மாமாவும் சேர்ந்து நடந்தார்கள், முன் வட்டத்தைச் சுற்றித்தான்.

“மாமி கூடவந்தா மாமா ‘கல்-டி-சாக்’குக்கு வெளியே போனாலும் போகலாம்.”

“மாமாவாலே முடியுமா?”

“முதல்லே முடியாது. போகப்போக முயற்சிசெய்வார்னு எதிர்பார்க்கலாம்” என்று குறும்பாகச் சிரித்தாள் சரவணப்ரியா.

“இனி அவங்க ரெண்டுபேருக்கும் நம்ம உதவி வேண்டாம்” என்றான் சாமி திருப்தியுடன். ஒரு பெரிய கவலைவிட்டது அவனுக்கு.

அவன் மறந்துபோனாலும் சரவணப்ரியா மறக்கவில்லை. “நம்ம போட்டி என்ன ஆறது?”

“ட்ரான்னு வச்சுக்கலாம்.”

“அதெப்படி? நீ பத்துநாள்தானே மாமாவோட நடந்தே.”

“நானும் உன்னைமாதிரி மூணுமாசம் நடந்திருப்பேன். பாவம் ப்ரேமா! இப்படியாயிடுத்து” என்று சாமி நிஜமாகவே இரக்கப்பட்டான்.

நன்றி அமர்நாத் (சொல்வனம்)  

No comments: