எல்லோரையும் வியந்து மகிழவைத்த இனியதோர் அரங்கேற்றம்

.
       எல்லோரையும் வியந்து மகிழவைத்த இனியதோர் அரங்கேற்றம்
அண்மையில் மெல்பேணில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்கள் அனைவரையும் பரவசம் கலந்த வியப்பில் ஆழ்த்தியது. நிருத்தா இந்தியன் நுண்கலைக் கல்லூரியின் இயக்குனரான திருமதி. நிருத்தசொரூபி தர்மகுலேந்திரன் திரு. ந.தர்மகுலேந்திரன் ஆகியோரின் புதல்வியான செல்வி. இளமதி தர்மகுலேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஒக்ரோபர் மாதம் 2ஆம் திகதி மெல்பேணில், சவுத்மோராங் என்றுமிடத்தில் அமைந்துள்ள பிளென்ரி மாவட்டக் கலைக்கூட மண்டபத்தில் நடைபெற்றது. செல்வி இளமதி, நிருத்தா இந்தியன் நுண்கலைக் கல்லூரியில், அவரது தாயாரான நிருத்தசொரூபியிடம், மூன்றுவயதிலிருந்தே பரதநாட்டியத்தை முறையாகக் கற்று வருபவர். இப்பொழுது பதினொரு வயது நிரம்பிய இளமதி கடந்த ஏழாண்டுகளாக பரத நாட்டியத்தில் இடைவிடாத பயிற்சியில் ஈடுபட்டீருப்பவர்.அவரது பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு வந்திருந்த அறுநூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் மண்டபம் நிரம்பிவழித்தது. மெல்பேணின் பெரும்பாலான பகழ்பெற்ற நடனப்பள்ளிகளின் ஆசிரியைகளும், மற்றும் நுண்கலைப் பள்ளிகளின் ஆசிரியர்களும்

சமூகமளித்திருந்தனர். மண்டபத்தில் இடம் கிடைக்காதவர்கள் திரையில் பார்ப்பதற்கு ஏதுவாக மற்றுமொரு மண்டபத்தில் மேலதிகமான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலும், அரங்கேற்ற நிகழ்ச்சிகளின்போது, இடைவேளைவரை மண்டபம் நிறைந்திருப்பதும், இடைவேளையின் பின்னர் அநேக இருக்கைகள் காலியாகக் கிடப்பதும் வளமை. ஆனால் இந்த அரங்கேற்றத்தில் இடைவேளைக்குப் பின்னரும், நிகழ்ச்சியின் இறுதிவரை மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மகிழ்வோடு பார்த்திருந்தமை இளமதியின் அரங்கேற்றத்தின் சிறப்பிற்கு நல்லதோர் சான்றாக அமைந்தது.

திருமதி. நிருத்தசொரூபியின் குருவான பத்மஸ்ரீ அடையாறு கே. லக்ஸ்மன் அவர்கள் இந்தியாவில் இருந்து வருகைதந்து இந்த நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டமை அரங்கேற்றத்தின் சிறப்புமிகு அம்சமாகும். ஆயிரக்கணக்கான நர்த்தகிளை உருவாக்கிய பெருமைமிகு அடையார் லக்ஸ்மன் அவர்கள், தான் வாழ்வில் சாதிக்காதவற்றைக்கூடத் தனது மாணவியான நிருத்தசொரூபி சாதித்துவிட்டதாகவும், அதுகண்டு தான் பெருமைப்படுவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், இளமதியின் திறமை தன்னை மிகவும் பரவசத்தில் ஆழ்த்தியதாகவும், பதினொருவயதிலேயே பரதநாட்டியத்தின் நுணக்கங்களையெல்லாம் கற்றறிந்ததோர் மேதைபோல இளமதியின் ஆடல் முறையும், அபிநயமும, பாவங்களும் அமைந்துள்ளதாகவும் அங்கீகரித்துப் பாராட்டினார். நாட்டிய அமைப்புக்கள் எல்லாவற்றையும் இளமதி அற்புதமாகச் செய்ததாக வியந்து கூறினார்.

விற்றல்ஸீ மாநகர முதல்வர் திருமதி மேரி லலியோஸ் மற்றும், மாநகர உறுப்பினர்கள் ஆகியோர் இறுதிவரை அமர்ந்திருந்து நிகழ்ச்சியை மிகவும் இரசித்து வியந்து பாhராட்டினார்கள்.

இளமதி கல்விகற்கும் மிலபாக் ஹய்ட்ஸ் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் திருமதி பற்றேசன் தனது உரையில் இந்தக் குழந்தை எப்படி இவ்வாறு ஆடுகிறாள் என்று தான் அதிசயப்படுவதாகக் கூறினார். தங்கள் பாடசாலையில், படிப்பில் மட்டுமன்றிக் கல்வி சாராச் செயற்பாடுகளிலும்கூட மற்றைய மாணவர்களுக்கு முன்னுதாரணம்மிக்க மாணவியாக இளமதி திகழ்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

செல்வி இளமதி அரங்கேற்றத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை எவ்வித களைப்பும், தோன்றாமல் மிகவும் உற்சாகமாக ஆடினார். இத்தனை சிறப்பாக ஆடுவது பதினொரு வயதுச் சிறுமியா என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் அவரின் ஆட்டத்தில் அத்தனை அழுத்தம் இருந்தது. அனுபவம் மிக்க நர்த்தகியொருவருக்குரிய தெளிவும், நிதானமும் தெரிந்தது.

திருமதி நிருத்தசொரூபி தர்மகுலேந்திரனின் நல்ல குரல்வளம் அவரின் திறமையான நட்டுவாங்கத்திற்கு மேலும் மெருகூட்டியது. திறமைமிகு இளம் சங்கீத வித்துவான் திரு அகிலன் சிவானந்தன் அவர்களின் வாய்ப்பாட்டுக்கு, மிகப் பிரபலமானவர்கள் பக்கவாத்தியக் கலைஞர்களாக அமைந்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்கள். இருபத்தைந்திற்கும் மேற்பட்ட தனது மாணவர்களுக்கு அரங்கேற்றம் கண்ட பிரபல மிருதங்கக் வித்துவான் திரு யோகன் கந்தசாமி மிருதங்கம் வாசித்தார். இந்தியாவிலிருந்து வருகைதந்த, சர்வதேசப் புகழ்பெற்ற வயலின் மேதையான திரு சுரேஸ்பாபு வயலின். பிரபல நாடகக் கலைஞர் வைத்தியகலாநிதி ஜெயமோகன் புல்லாங்குழல், பல்வேறு வாத்தியங்களிலும் நல்ல தேர்ச்சிபெற்றவராக விளங்கும் பல்லிசைக் கலைஇளவல் திரு நிரோ~ன் சத்தியமூர்த்தி தப்லா, சிதம்பரம் ஆர் சுரேஸ் மோஸிங் என்றிப்படி மிகச் சிறந்த, அனுபவம் மிக்க கலைஞர்களின் திறமைகளுக்கு ஈடுகொடுத்துப் பதினொரு வயதுச் சிறுமியான இளமதி அற்புதமாக ஆடினார். பாடகரும், பக்கவாத்தியக் கலைஞர்களும் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் தமது திறமைகளை வெளிப்படுத்தி அரங்கேற்ற நாயகிக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள்.

வர்ணத்தில் பொதுவாகத் தலைவன் தலைவிக்கிடையிலான காதல் உணர்வுகளை வைத்துத்தான் நாட்டிய அமைப்புச் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த அரங்கேற்றத்தில், ஆடுவது பதினெருவயதுச் சிறுமியாக இருப்பதால் காதல் உணர்வுகளை இயற்கையாகவே புரிந்துகொண்டு உள்வாங்கி வெளிப்படுத்துவதற்கு அவரது வயது போதாது என்பதாலோ என்னவோ, வர்ணம் முப்பெருந் தேவியரின் செயற்பாடுகளைக் கருப்பொருளாக வைத்து அமைக்கப்பட்டிருந்தது. புதுமையாகவும் அருமையாகவும் இருந்தது. கலைமகள், திருமகள், அலைமகள் மூவரைப்பற்றியுமான வர்ணத்திற்கான பாடலை, நிருத்தசொரூபியே எழுதியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அழகான அந்தப்பாடலுக்கு, சிந்துபைரவி, கல்யாணி உட்பட ஒன்பது ராகங்களின் சேர்க்கையாக அதாவது நவராகமாலிகையில், திரு அகிலன் சிவானந்தன் அவர்களே இசையமைத்திருந்தார். மூன்று சக்திகள்பற்றிய அந்தப்பாடலின் பொருளுக்கேற்றவாறு மிகவும் துல்லியமாக அபிநயித்து ஆடினார் இளமதி. அதிலும், துர்க்காதேவிக்கான அவரது முகபாவங்களும், அதற்கேற்றவாறான அங்க அபிநயங்களும் பார்ப்போரை மெய்ம்மறக்கவைத்தன.

இறுதியில் இடம்பெற்ற தில்லானாவில் இளமதி தனது திறமை முழவதையும் வெளிப்படுத்திச் சபையோரின் கரவொலியைத் தனதாக்கிக்கொண்டார்.

குற்றாலக் குறவஞ்சிப் பாடலுக்கான பக்கவாத்திய இசையும், நடன அமைப்பும் அப்படியே அந்தக் குறிஞ்சி நிலக்காட்சியை நம்முன் கொண்டுவந்து நிறுத்தின. பாரம்பரியப் பரதக்கலையின் மிகப்பெரும் மேதையாகத் திகழ்கின்ற பத்மஸ்ரீ அடையாறு லக்~;மன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த அரங்கேற்றத்தில் அழகிய குற்றாலக் குறவஞ்சிப் பாடல் இடம்பெற்றமையும், அதனை திரு. லக்~;மன் அவர்கள் வியந்து பாராட்டியமையும் உண்மையில் மகிழ்ச்சிக்குரிய விடயங்களாகும். இதற்காக திருமதி. நிருத்தசொரூபியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இளமதியின் தந்தை திரு. தர்மகுலேந்திரன் மேடை அலங்காரத்திற்கு மிகவும் சிரத்தையுடன் கவனம் எடுத்திருந்தமையைக் காணக்கூடியதாகவிருந்தது. அழகிய தூண்களோடுகூடிய மண்டபமும், நடராஜர் சிலையும் அமைந்த ஆலயம் முதல் அரைவாசி நிகழ்ச்சிக்கும், இடைவேளையின் பின்னர், கோயில் கோபுரமும் மேடையை நிறைத்து அழகுபடுத்தின. ஆடற்கலைக்கே மூலவரான தில்லை நடராஜர் சிலையும், கோயிலும், கோபுரமும் பின்னுறு காட்சிகளாக அமைந்த அரங்கில் இந்தப் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றமை, வெறும் அழகை மட்டுமன்றி நிகழ்ச்சிப் பொருத்தினையும் எடுத்துக்காட்டியது.

இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலாமேதைகள், தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், நுண்கலை வித்துவான்கள் முதலியோர் உட்படப் பலதரப்பினருக்கும் முன்னிலையில் இந்தச் சிறிய வயதில் எல்லோரும் மகிழ்ந்தும் வியந்தும் பாராட்டும் வகையில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தினைச் செவ்வையாகவும், சிறப்பாகவும் செல்வி. இளமதி தர்மகுலேந்திரன் பூர்த்திசெய்தார் என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை. அவர் கல்வியிலும், கலையிலும் உயர்ந்து, வாழ்வில் பல்வேறு சிறப்புக்களைப் பெற்று புகழ்பூத்து விளங்க நமது பாராட்டுக்கள்.

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

1 comment:

Anonymous said...

Dear Author,
Thanks for the news (not a review). It is incorrect to generalise that most of the Varnams potrays Sirungara rasas only(Thalaivan-Thalaivi....). Sorry to say but that shows your lack of knowledge on music and dance.
There are heaps of Pada varnams (normally used in dance recitals) based on Bakthi Rasas as well. According to your writing (mup perum theviy ar...) looks like the varnam was written to portray Bakthi Rasa, which is fair enough.

Thanks
Cheers
Rasika