அரசனின் பள்ளிக்கூடம்




                                                                                                                      அ . முத்துலிங்கம் 

எத்தனை முறை சொன்னாலும் என் மகனைத் திருத்த முடியாது. அவனுக்கு எட்டு வயது, மகளுக்கு நாலு. அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவன் எசமானன், அவள் வேலைக்காரி. இவன் மேசையிலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். வேலைக்காரி வீடு கூட்டினாள். பின்னர் சமையல் அறையை சுத்தமாக்கினாள். இவன் வயிறார சாப்பிட்டுவிட்டு கதிரையை பின்னாலே தள்ளிவிட்டு எழுந்து சென்றான்.  அவள் கோப்பையை கழுவினாள்.


அடுத்த விளையாட்டு. இவன் பள்ளிக்கூட ஆசிரியன். அவள் அடியும் திட்டும் வாங்கும் மாணவி. இவன் ரயிலை ஓட்டும் எஞ்சின் டிரைவர், அவள் கரி அள்ளிப்போடும் ஊழியன். இவன் கம்பனி மனேஜர். அவள் கைகட்டி நிற்கும் சேவகி.  நானும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன். அவள் ஒரு முறை ராணியாக இருக்கலாம். நீ காவல்காரனாக வேடம் போட்டு விளையாடலாம். அவன் சரி அப்பா என்பான், ஆனால் நடைமுறைக்கு வராது.
மகளிடம் சொல்வேன் நீ சம உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று. அவள் அது என்னவென்று கேட்பாள். அவளுக்கு பயம். அண்ணன் தன்னை விளையாட்டில் சேர்க்காமல் விட்டுவிடுவானோ என்று. அவனோடு விளையாடுவதற்காக அவள் என்னவும் செய்யத் தயாராக இருந்தாள்.
அவர்கள் இருவரையும் உட்காரவைத்து மகாபாரதம் கதை சொன்னேன். அவன் சிரிக்கும் இடங்களில் அவளும் சிரித்தாள். அவன் பாதியில் எழும்பி நின்று அம்பு விட்டால், அவளும் விட்டாள். அருச்சுனனுடைய வில்லின் பெயர் காண்டீபம் என்றேன். அங்கேதான் பிரச்சினை முளைத்தது. மகன் சிரிக்கத் தொடங்கினான். மகளும் சிரித்தாள். ‘நாங்கள் வளர்க்கும் மாடு, நாய், பூனைக்கு பெயர் வைப்போம். யாராவது வில்லுக்கு பெயர் வைப்பார்களா?’
‘அந்தக் காலத்து அரசர்கள் வைத்தார்கள்.’
‘காண்டீபம் என்று கூப்பிட்டவுடன் வில் ஓடிவருமா?’ என்றான். விழுந்து விழுந்து சிரித்தான். அவனிலும்கூட மகள் சிரித்தாள். மகாபாரதம் கதை நிறுத்திவைக்கப்பட்டது.
அடுத்தநாள் திங்கட்கிழமை காலை. மகன் அறையில் சத்தம் வந்துகொண்டிருந்தது. எட்டிப் பார்த்தேன். கால்களை அகட்டி வைத்து இரண்டு இடுப்பிலும் கை வைத்துக்கொண்டு மகன் நின்றான். மகளின் உடம்பு குளிரில் நடுங்குவதுபோல ஆடிக்கொண்டிருந்தது.
‘பாசுபதம் எங்கே?’ என்றான் மகன். மகள் பென்சிலை எடுத்துவந்து நீட்டினாள்.
’சுதர்சனம்?’
அழிரப்பரை எடுத்துக்கொடுத்தாள்.
‘பாஞ்சசன்யம்?’
மகள் ஒருகணம் திகைத்து நின்று பின்னர் எல்லா திசைகளிலும் ஓடினாள். நினைவு வந்துவிட்டது. அவனுடைய கொப்பியை எடுத்து சுருட்டி வாயில் வைத்து ஊ என்று ஊதிக் கொடுத்தாள்.
‘காண்டீபம், காண்டீபம் எங்கே?’ என்று கத்தினான் மகன். அவன் கோபமாக நின்றான். இலை துடிப்பதுபோல மகளின் கைகள் நடுங்கின.  ரூலர் தடியை எடுத்து குனிந்தபடி நீட்டினாள்.
மன்னர் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டுவிட்டார்.

No comments: