பீங்கான் நாரைகள் சிறுகதை

.                                                                                
                                                                                    எஸ் .இராமகிருஸ்ணன்தனது பதினேழாவது வயதில் அம்மா ஒரு நாள் சமையல் செய்து கொண்டிருந்த போது அப்பா பர்மாவிலிருந்து கொண்டுவந்திருந்த தேநீர் கோப்பையை கைதவறி உடையவிட்டதில் இருந்துதான் இப்படி தரையை வெறித்து பார்த்தபடியிருக்கிறாள் என்கிறார்கள். அப்போது நாங்கள் பிறக்கவேயில்லை. அந்த தேநீர் கோப்பை சீனா களிமண்ணில் தயாரிக்கபட்டது அதில் இரண்டு நாரைகளின் உருவம் தங்கநிற சித்திரமாக தீட்டப்பட்டிருந்தாக அப்பா சில முறை சொல்லியிருக்கிறார். அநேகமாக திருமணமான புதிதில் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்வதற்காக அப்பா அந்த தேநீர் கோப்பையை வாங்கி கொண்டு வந்திருக்க கூடும். சம்பவம் நடந்த அன்று அம்மா சூடான தேநீரை  கோப்பை நிறைய ஊற்றியதால் கையில் எடுக்க முடியாமல் தவறி கிழே போட்டிருக்கிறாள்.


அப்பா உடைந்து கிடந்த தேநீர் கோப்பையை கண்டதும் அவள் கன்னத்தோடு ஒங்கி ஒரு அறை கொடுத்துவிட்டு உருப்படாத கழுதை.. பர்மா கப்புடி.. ஒரு நிமிசத்திலே உடைச்சிட்டே..அடக்க ஒடுக்கமா இல்லாம திம்மானி மாதிரி நடந்தா இப்படி தான் ஆகும் என்று வாய்க்கு வந்தபடி திட்டியிருக்கிறார். அம்மாவிடம் சலனமேயில்லை.  திருமணத்திற்கு முன்பு வரை அப்பா பர்மாவில் மரவணிகம் செய்து கொண்டிருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் பர்மாவிற்கு போகவில்லை. நன்மைதருவார் கோவில் சந்தில் சிறியதாக ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்து கொண்டு இங்கேயே வாழத் துவங்கிவிட்டார். அம்மாவை அவர் எடுத்திருந்த ஒன்றிரண்டு புகைப்படங்களில் கூட அவள் தரையை வெறித்தபடிதானிருக்கிறாள். அப்பாவிற்கு அது ஒன்றும் பெரிய விஷயமாக ஒரு போதும் தோன்றவேயில்லை. அப்பா மட்டுமில்லை. வீட்டில் இருந்த சித்தப்பாக்களோ ஆச்சியோ யாருமே அதை ஒரு பொருட்டாக நினைக்கவேயில்லை. எப்போதாவது வேற்று ஆட்கள் யாராவது வீட்டிற்கு வரும்போது தான் அம்மா தலையை குனிந்து கொண்டேயிருக்கிறாள் என்ற விஷயம் கவனத்திற்கு வரும். அப்பா அது ஒரு வியாதி என்று சொல்லி சமாளித்துவிடுவார். அம்மா தரையை வெறித்தபடி  என்ன தான் பார்த்து கொண்டிருக்கிறாள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவளது பார்வை பூமியில் ஏதோ முக்கியமான காரியம் ஒன்று நடந்து கொண்டிருப்பது போல அத்தனை கூர்மையாகயிருக்கும். இரவிலும் கூட அம்மா சமையற்கட்டின்  உள்ளே வெறும்தரையில் முகத்தை பூமியை நோக்கி பார்த்தபடி தான் படுத்திருப்பாள். அம்மாவின் குடும்ப வாழ்க்கையில் இதனால் பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. ஆறு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அதில் ஒன்று பிறந்த சில வாரங்களிலே இறந்தும் போயிருக்கிறது. அவள் குழந்தைகளை கூட தலையை நிமிர்ந்து பார்த்ததேயில்லை.   அம்மா குனிந்தேயிருந்து இருந்து அவளது கழுத்தே அறுபட்ட வாழைமட்டை தொங்குவது போல கீழ் நோக்கி தொங்கி கொண்டிருக்க துவங்கியது.  அம்மா சமையல் அறைக்குள்ளாகவே தனது வாழ்க்கையை கழித்தாள். எப்போதாவது கைதவறி ஒரு டம்ளரோ கரண்டியோ விழுந்தவுடன் அவள் மிகுந்த ஆவேசத்துடன் பூமியை திட்டிக் கொண்டிருப்பதை காணும் போது தெரிந்த யாரோ ஒரு ஆளோடு பேசிக் கொண்டிருப்பது போலவேயிருக்கும். வீட்டில் பகலும் இரவும் அப்பாவின் குரல் எதையாவது சாப்பிடவோ குடிக்கவோ யாசித்து கொண்டேயிருந்தது. அபூர்வமாக வீட்டில் யாரும் இல்லாத நாட்களில் கூட அம்மா வெளியே போனதேயில்லை. அவளுக்கு உலகம் நேர்கொண்டு பார்க்க விருப்பமற்றதாக பதிந்துவிட்டது. சில நேரம் அம்மாவை போல நானும் தலையை குனிந்தபடியே நின்று பார்ப்பேன். ஏதோ ஒரு குற்றமனப்பாங்கு மனதில் கசிய துவங்கி மெல்ல அழுத்த துவங்கிவிடும். ஒரு சாதாரண பீங்கான் கோப்பையை உடைத்தற்காக எதற்காக இப்படியொரு தண்டனையை கொடுத்து கொண்டிருக்கிறாள் என்று யோசித்து கொண்டேயிருப்பேன்.  என்னால் அவளது இயல்பை புரிந்து கொள்ளவே முடியாது. காலம் வீட்டிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற்ற துவங்கியது. திருமணமும் வேலையும் வீட்டினுள் வளைய வந்த எங்கள் அக்காகளையும் என்னையும்  வேறுவேறு ஊர்களுக்கு இடம் மாற்றியது. சாவு ஒரு விருந்தாளியை போல வீட்டில் நுழைந்து அதன் விருப்பமான மனிதர்களை கவ்விக் கொண்டு சென்றது. ஆச்சி இறந்த போதோ, சித்தப்பாவின் மரணத்திலோ அம்மாவிடம் சிறிய மாற்றம் கூட ஏற்படவேயில்லை. அப்போதும் அம்மா தலை குனிந்து கொண்டேதானிருந்தாள். வயோதிகம் முற்றி அம்மாவும் அப்பாவும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார்கள். அப்போதும் கூட அம்மாவின் சமையல் வேலை ஒயவேயில்லை. அவள் கரப்பான் பூச்சிகளோடும், ஈரத்தில் நமத்து போன தீக்குச்சிகளோடும் பேசிக்கொண்டிருப்பதை அப்பா கேட்டிருக்கிறார். அவருக்கு சில சமயம் அம்மாவை பார்க்க பயமாகயிருக்கும். தனக்கும் வயதாகிவிட்டது என்று அவளுக்கு தெரிந்திருக்குமா, எதற்காக இத்தனை வைராக்கியமாக இருக்கிறாள் என்று அவளை பார்த்தபடியே யோசித்து கொண்டிருப்பார். அவள் முறிந்த தானியக்கதிர் போல தலைகவிழ்ந்து கொண்டிருப்பாள். அம்மா  யாரையும் குற்றம் சொன்னதோ திட்டியதோயில்லை. கோடைகாலத்தின் பின்பாதியில் ஒரு நாளிரவு எங்கள் அப்பா குளியல் அறைக்குள் விளக்கு போடாமல் நடந்து போய் வழுக்கி விழுந்ததில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அன்றைக்கு கூட அம்மா வீட்டில் சமைப்பதை நிறுத்தவேயில்லை. அப்பா இறந்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட போது கூட அவள் அதே சமையல்கட்டின் உள்ளே தரையை பார்த்து குனிந்தபடியே அழுது கொண்டிருந்தாள். அவரது உடலை எடுத்து கொண்டு வெளியே போகும் நிமிசத்தில் அவள் விடுவிடுவென முன்வாசலுக்கு வந்து அந்த உடலின் முன்பாக வந்து நின்றவளாக முதன்முறையாக தலையை நிமிர்த்தி பார்த்து நான் வேணும்னு பீங்கான் கோப்பையை உடைக்கலைங்க .. என்று சொல்லிவிட்டு தலையை திரும்பவும் கவிழ்த்திக் கொண்டாள். அப்பாவிடமிருந்து இப்போது எந்த எதிர்ப்பும் வரவேயில்லை. அம்மா பெருமூச்சிட்டு கொண்டபடி தனது அழுகையை சேலையால் துடைத்தபடியே துஷ்டி கேட்டு வந்தவர்களுக்கு கடுங்காப்பி போடுவதற்காக அடுப்பை பற்ற வைக்க துவங்கினாள். அப்பாவின் உடல் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் போய் கொண்டிருந்தது. அன்றோடு தனக்கு திருமணமாகி நாற்பத்தி ரெண்டு வருடங்கள் முடிந்து நான்கு மாதங்கள் ஏழு நாட்கள் ஆகியிருந்தது அம்மாவிற்கு நன்றாகவே நினைவிலிருந்தது. 

Nanri --sramakrishnan.com

No comments: