தமிழ் சினிமா

@  தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம் எந்திரன்: சினிமா விமர்சனம் 1
 @  தீபாவளிக்கு எத்தனை படங்கள்..?
@   எந்திரன் விமர்சனம் 2


 தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம் எந்திரன்: சினிமா விமர்சனம்.
( இரு வேறுபட்ட பார்வைகளை இங்கே  தருகின்றோம் நேயர்களே )

ரசிகர்கள், சினிமா விரும்பிகளின் தேடலுக்கும் பசிக்கும் சரியான மெகா விருந்து எந்திரன்.

படத்தில் ரஜினியின் பங்களிப்பைப் பாராட்டுவதா, ஷங்கரின் அசுர உழைப்பைப் புகழ்வதா... ஐஸ்வர்யா ராயின் இதயம் வருடும் அழகை வர்ணிப்பதா..இப்படி, விமர்சனம் எழுதுபவர்களுக்கு சவால்விடும் சமாச்சாரங்கள் ஏராளம். இந்தப் படத்தின் மையக் கருவை ரொம்ப சிம்பிளாக ஒரு வரியில் சொல்வதென்னால்.. விஞ்ஞான படமாக இருந்தாலும் பக்கா ஜனரஞ்சகமான ஒரு கமர்சியல் படம்தான் எந்திரன்.

ரஜினி(வசீகரன்), விஞ்ஞானி, தனது 10 வருட உழைப்பால் ஒரு ரோபோவை(சிட்டி, ஆன்ட்ரோ ஹ்யூமனாய்டு) உருவாக்குகிறார். சிட்டியை நூறு ராணுவ வீரர்களுக்கு சமமான இயந்திர மனிதனாய் மாற்றி இந்திய ராணுவத்திற்கு உபயோகப்படும் வகையில் அரிய செயல்களைச் செயல்படுத்துவதே அவரது லட்சியம். உணர்ச்சியற்ற எந்திரத்தின் உணர்ச்சிகளை மெல்ல மெல்ல வர வைக்கிறார். இதற்கு உதவுகிறார் மருத்துவக் கல்லூரி மாணவியும், வசீகரனின் காதலியுமான ஜஸ்வர்யா ராய்(சனா). உயிரற்ற சிட்டிக்கு உணர்ச்சியின் உச்சமான காதல் உதயமாகும் போது கதையில் திருப்பம் ஏற்படுகிறது. தான் உருவாக்கிய சிட்டியே தன் காதலுக்கு உலை வைக்கும் நிலை ஏற்பட்டதால் கை கால்களை உடைத்து குப்பையில் எறிகிறார். அதே நேரத்தில் ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியராக இருக்கும் ரஜினி இதே போல ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அதில் தோல்வி அடைந்த பேராசிரியர் ரஜினி, வசீகரன் மேல் பொறாமை கொள்கிறார். இச்சமயத்தில், பேராசிரியர் ரஜினியிடம் கிடைத்த சிட்டி விஸ்வரூபம் எடுத்து வில்லத்தனம் செய்கிறான். ரோபோவிடமிருந்து தன் காதலியை மீட்டாரா? ரோபோவின் வில்லத்தனத்தை சமாளித்தாரா? அந்த ரோபோ காதல் தோல்வியிலிருந்து மீண்டதா? என்பது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத க்ளைமாக்ஸ்.
நிச்சயமாக பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காவும் திரையரங்கிற்கு வருபவர்களை எந்திரன் 100 சதவீதம் திருப்திப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு ரஜினி ரசிகனும் பலதடவைகள் திரையங்குகளில் எந்திரனை தரிசிக்கபோவது உறுதி, இது நடுநிலை ரசிகர்களுக்கும் பொருந்தும். மூன்று விதமான வேடங்களில் நடித்திருக்கும் ரஜினி மூன்று வேடங்களுக்கும் உடல்மொழி, வசன உச்சரிப்பு, மானரிசம் போன்றவற்றில் சிறப்பான முறையில் வேறுபாடுகாட்டி கலக்கியுள்ளார்.

ரஜினியின் நடிப்புக்கு நீண்டநாட்களுக்கு பின்னர் கிடைத்துள்ள தீனிதான் இந்த படம். எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு அழகாக இருக்கிறார் ரஜினி. இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. விஞ்ஞானியாக நடிக்கும் போது தனது நடிப்பின் அனுபவத்தை அழகாக பிரதிபலித்திருக்கிறார். அதே ரஜினி, சாதுவான ரோபோவிற்கும், விஸ்வரூப ரோபோவிற்கும் நடிப்பு மூலம் வேறுபடுத்தி நடிப்பில் உச்ச கட்டத்தை எட்டியுள்ளார்.

இறுதிகாட்சியில் சிட்டியின் நடிப்பும் வசனமும் நிச்சயம் ரசிகர்கள் மனதில் ஒருவித கனத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காதல்காட்சிகளில் ஒருவித தயக்கமும் இல்லாமல் இளைஞர்களைபோல கலக்கும் சூப்பர்ஸ்டார் பாடல்காட்சிகளில் வயது, திறமைக்கு தடையல்ல என்பதை உணர்த்தியிருக்கிறார். ஐஸ்வர்யா மீது சிட்டிக்கு காதல்வரும்போது ரஜினி கொடுக்கும் உணர்ச்சிகளை விபரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. சிட்டியும் வசீகரனும் ஒன்றாகவரும் காட்சிகள் அனைத்தும் படு பிரமாதமாக வந்திருக்கிறது.

ஐஸ்... அழகின் மொத்த உருவமாய் வந்து மனதை அள்ளிக்கொள்கிறார். இவரை விட பொருத்தமான ஒரு ஜோடியை இனி ரஜினிக்கு கண்டுபிடிக்கவே முடியாது. சகல முகபாவங்களிலும் சும்மா வெளுத்துக்கட்டுகிறார். இவருக்கு வயதாகிவிட்டது என்று இன்னும் 30 வருடத்துக்கு சொல்ல முடியாது. அதும் சிட்டி ரோபோ தன் காதலை சொல்லியவுடன் அவரின் நடிப்பு பிரமாதம்.

படம் முழுக்க ரஜினியும் ஐஸ்வர்யா ராயுமே இருப்பதால் படத்தில் வில்லனுக்கு வேலை இல்லை என்றே சொல்லலாம். வந்து ஷங்கர் சொன்ன வேலையை செய்துவிட்டு சென்றிருக்கிறார் ஹாலிவுட் வில்லன் டேனி டென்ஷாங்பா.. படத்தில் கருணாசும், சந்தானமும் எதற்கு என்றே தெரியவில்லை. சன் டீவி சக்சேனா புகழ் பாடியே இந்த வாய்ப்பை பெற்றிருப்பார் கருணாஸ். ஆனால் அதற்குரிய எந்த வேலையும் படத்தில் பெரிதாக இல்லை. ஹனீபாவும் கலாபவன் மணியும் ரசிக்க வைக்கிறார்கள். படத்தில் மற்ற பாத்திரங்கள் எதுவுமே மனதில் இல்லை.

கோவிலில் ஸ்பீக்கர் கட்டி கூத்தடிக்கும் வேறொரு கும்பலை 'நிராயுதபாணி'யாக்குகிற காட்சியில் ரோபோவை வேப்பிலை அடிக்காத குறையாக பக்தியொழுக பார்க்கும் பெண்மணிகளும், ரஜினியின் 'ஆத்தா கோலமும்' கூட அதிர வைக்கிறது தியேட்டரை. அந்த ரயில் சண்டை வினாடிக்கு வினாடி பிரமிப்பு. பிரசவ வார்டிலும் கூட ரோபோவின் கருணை டச்சோ டச்! தலை திரும்பிய குழந்தையை பக்குவமாக திருப்பி பாதுகாப்பாக நார்மல் டெலிவரியாக்குகிற காட்சிகள் சென்ட்டிமென்ட் மேளா.

ரஜினி படத்தின் நாயகனாலும் உண்மையான எந்திரனின் சூப்பர்ஸ்டார் இயக்குநர் ஷங்கர்தான், இதை யாராலும் மறுக்க முடியாது. நிச்சயமாக இது ஒரு ஷங்கர் படம்தான், தனக்குள் இருந்த அத்தனை கனவுகளையும் நனவாக்கி இருக்கிறார். வாய்ப்பும் வசதியும் அமைந்தால் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் படைப்புகளை நம்மாலும் தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஷங்கர்.

அமரர் சுஜாதாவின் வசனங்கள் எளிமை...ஆனால் ஒவ்வொன்றும் சும்மா நச்சு நச்சுன்னு இருக்கு, 'காதல் வந்தால் ரோபோவிற்கும் நட்டு கழண்டு விடும்' என ரோபோ சொல்லும் வசனங்கள் அரங்குகளில் கைதட்டல் பெறுகிறது. ஒரு உண்மையான எழுத்தாளர் நினைத்தால் கொசுவுக்கும் வசன எழுத முடியும் என நிரூபித்திருக்கிறார் சுஜாதா. மனிதனைப் போல் கொசுவிற்கும் பேசும் திறமை இருந்தால் இப்படி தான் பேசியிருக்கும் என ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார் சுஜாதா.

'அவதார்', 'டெர்மினேட்டர்' உட்பட பல ஹாலிவுட் படங்களை உருவாக்கிய, அமெரிக்காவில் உள்ள ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோ கிராபிக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறது. அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.

இயக்குநரின் உணர்வை உள் வாங்கி அதை அப்படியே வெளிக்காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. பாடல் காட்சியில் தெளிவும் அழகும், சாகச காட்சியில் பிரம்மாண்டத்தையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ரத்னவேலு. சாபு சிரிலின் கலையும், ஆன்டனியின் எடிட்டிங்கும், பீட்டர்ஹெய்னின் சண்டைக்காட்சிகளும் அட்டகாசம்.

ரஹ்மானின் இசையில் 'கிளிமஞ்சாரோ', 'காதல் அணுக்கள்' பாடல்கள் இனிமை. இறுதிக்காட்சிகளில் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாய் அமைந்திருக்கிறது. அதேபோல அடக்கி வாசிக்கவேண்டிய இடங்களையும் நன்கு உணர்ந்து அதற்கேற்றால்போல சிறப்பாக தனது பங்கை செய்துள்ளார் ரஹ்மான்.

ஐஸ்வர்யா காரில் இருக்கும்போது, கூட இருக்கும் ரோபோவை போலீசார் சரமாரியாக சுடுவது, அனைத்து வாகனங்களையும் மிதித்துத்தள்ளும் ரோபோ கூட்டம் வசீகரனின் காரை மட்டும் மிதிக்காமல் துரத்துகிறது என ஓரிரு இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கமர்சியல் படமொன்றை லாஜிக் மீறல்கள் இல்லாமல் எடுப்பது சாத்தியமில்லை என்பதால் இதுவொரு பெரிய குறையல்ல!

தமிழ்த் திரையுலகிற்கும், இந்திய திரையுலகிற்கும் ஒரு அற்புத மற்றும் பிரம்மாண்ட படைப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு ஹாலிவுட் தரத்துக்கு நிகரான படைப்பை தர ஒத்துழைத்த கலாநிதி மாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

விஞ்ஞானத்தை அழகிய வில்லைகளாக விழுங்கும் வாய்ப்பு இனி ஒரு தமிழ் சித்திரத்தில் பார்க்கமுடியுமா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ரஜினியை இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நாயகனாகவே பார்க்கலாம் என்கிற உறுதிமொழி அளிக்கும் படம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத விஞ்ஞானத்தின் பிரம்மாண்ட மாயஜாலம்!

எந்திரன் - இந்திய சினிமாவின் மைல்கல்!
நடிகர்கள்- ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ், கலாபவன்மணி, டேனி டென்ஷாங்பா
இசை -ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்- ஷங்கர்
தயாரிப்பு- கலாநிதி மாறன்

எம் ஏ சுசீலாவின் பார்வையில் என்திரன்











பிரமிப்பூட்டும் வகையில் பிரம்மாண்டமானதொரு பின்புலத்தை முன் வைத்தபடி நீதிபோதனை செய்யும் சங்கரின் பழகிப்போன பழைய ஃபார்முலாவே இப்போதும் ரோபோ கோப்பையில் வைத்து ரஜினி,ஐஸ்வர்யாராய் ஆகிய கூடுதல் ஜோடனைகளுடன் பரிமாறப்பட்டிருக்கிறது.


ஏராளமான பொருட்செலவும்,எக்கச்சக்கமான உழைப்பும் (ஓரளவு நடிப்பும் கூடத்தான்) இணைந்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் இல்லாதது எதுவென்பதைத் தரமான திரைப்பட ரசனையில் ஓரளவு  பழகிப் போன பார்வையாளன் கூட எளிதாகக் கண்டு கொள்ள முடியும்.


படத்தின் இறுதியில் - ரோபோவாக வரும் சிட்டி ,தனது உடல் பாகங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி வைத்துக் கொண்டே வருவதைப் போல நாமும் திரை அரங்கிற்குள் நுழையும்போதே சுயசிந்தனை,லாஜிக்,நல்ல திரைப்படம் பற்றி நமக்குள் ஊறிப்போயிருக்கும் முன்னனுமானங்கள் என்று எல்லாவற்றையும் கொஞ்ச நேரம் கழற்றி வைத்து விட்டுச் செல்ல முடிந்தால்  திரையில்நடப்பவற்றையெல்லாம்  கார்ட்டூனை ரசிக்கிற குழந்தைகளைப்போல ஒரு தமாஷாக எடுத்துக் கொண்டு மூன்று மணி நேரத்தை உற்சாமாகக் கொண்டாடிக் களிக்க முடியும்.(அப்படி எடுத்துக்கொள்ளமுடிந்ததனாலோ என்னவோ ...வழக்கமாக இப்படிப்பட்ட நேரங்களில் வரும் கோபம் இம்முறை எனக்கு வரவில்லை).


காதலியையும்,அபயக் குரல் எழுப்புபவர்களையும் காப்பாற்றும் பொறுப்பு சிட்டி ரோபோவிடம் ஒப்புவிக்கப்பட்டு விட்டதாலோ என்னவோ...சாகசம் மற்றும் ஸ்டைல் காட்டியாக வேண்டிய வேலை மனித ரஜினியாகியாகிய வசீகரனுக்கு இல்லை;காதலியிடம் கடற்கரையில் விஷமம் செய்ய வரும் ஆளைக் கண்டதும் மண்ணை வாரித்தூற்றிவிட்டுக் அவளது கையைப் பற்றிக்கொண்டு மூச்சிரைக்கப் புறங்காட்டி ஓடும் ரஜினியின் பிம்பம் சற்று low profile ஆக- தமிழ்த் திரைக்கும் ,அவரது ரசிகர்களுக்கும் புதிதாக இருப்பது இதனாலேதான்.படத்தில் ஓரளவுக்கு யதார்த்ததோடு ஒத்துவரும் ஆறுதலான விஷயம் இது.
முதல் பாதியில் வரும் சிட்டியின் பாவனைகளே நகைச்சுவைக்குப் போதுமானவையாக இருக்க...சந்தானமும் கருணாஸும் , அவர்களது அசட்டுத்தனங்களும் எதற்கு?(சில நேரங்களில் வில்லனின் அடியாட்களாகக் கூட அவர்கள் காட்சி தருகிறார்கள்)
மாறாக...ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் விஎம் சி ஹனீஃபா இடம் பெறும் காட்சி -அதில் அவரும் சிட்டிக்கும் நிகழும் உரையாடல் தரமான நகைச்சுவையை மிகவும் இய்ல்பாகத் தந்து விடுகிறது.


வெட்ட வெட்ட முளைக்கும் புராண கால அசுரர்களைப் போல ஒன்றோடொன்று பல்வேறு வடிவங்களில் பின்னிப் பிணைந்தபடி அதகளம் செய்யும் சிட்டிக்கூட்டத்தின் இறுதிக்கட்ட அட்டகாசம் சற்றே சுவாரசியமூட்டியபோதும்..


எந்திரன் ஒரு தொழில் நுட்பத் தந்திரன் 
என்பதற்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை.
பி.கு;
எங்கள்குடும்பத்தாரையும் சேர்த்து 8 பேர் மட்டுமே இருந்த ஆரவாரமற்ற தில்லியின் திரையரங்கு ஒன்றில் எந்திரனைப் பார்த்த போது ....மதுரைத் திரையரங்குகளின் உற்சாகக் கூவலுடன் கூடிய பார்வையாளர்கள் ஒரு கணம் நெஞ்சுக்குள் மின்னலடித்ததைத் தவிர்க்க முடியவில்லை.
காரணம் இப்படிப்பட்ட படங்களைப் பொறுத்தவரை திரைப்படங்களை விடவும் சுவாரசியமானவை பார்வையாளர்களின் எதிர்வினைகள்.
தமிழ்ச் சமூகத்தின் மலினமாகிப் போய்விட்ட அரசியல் சமூக வரலாறுகளுக்கான உயிருள்ள ஆவணங்கள் அவை மட்டுமே. 

நன்றி masusilablogspot


தீபாவளிக்கு எத்தனை படங்கள்..?


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி ஒரு முக்கிய சீஸன். தயாரிப்பாளர்களுக்கும் வசூலை அள்ள நல்லதொரு வாய்ப்பு.

வழக்கமாக 6 படங்களுக்கும் மிகாமல் தீபாவளிக்கு வெளியாகும். ஆனால் கடந்த ஆண்டு 3 படங்கள் கூட வெளியாகவில்லை.

இந்த ஆண்டு 6 படங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தனுஷ் நடித்த உத்தம புத்திரன், ஆர்யாவின் சிக்குபுக்கு தீபாவளிக்கு அரஜுன் நடித்த வல்லக்கோட்டை, ராம்கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம், மைனா, வ குவார்ட்டர் கட்டிங் ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன.

இவற்றில் உத்தமபுத்திரன் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். தெலுங்கில் வெளியான ரெடி படத்தின் ரீமேக் இது. தனு் ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார்.

சிக்குபுக்கு படத்தில் ஆர்யாஸ்ரேயா ஜோடி யாக நடித்துள்ளனர். கே.மணி கண்டன் இயக்கியுள்ளார். காதல் கதையாக உருவாகி உள்ளது.

வல்லக்கோட்டை படத்தில் அர்ஜுன், ஹரிப்ரியா ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். பக்கா ஆக்ஷன் மசாலா இது.

மைனா படத்தில் விதார்த், அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். அமலாபால் சிந்துசமவெளி படத்தில் அனாகா என்ற பெயரில் நடித்து பிரபலமானவர். சிறு வயதிலேயே நட்பாக பழகுவார்கள். வளர்ந்ததும் காதல் வயப்படுவதும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுமே கதை.

வகுவார்ட்டர் கட்டிங் காமெடி படமாக உருவாகியுள்ளது. சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார்.

ரத்த சரித்திரம் படத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய், பிரியாமணி நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.

மேலும் 20 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. கமல், திரிஷா ஜோடியாக நடிக்கும் மன்மதன் அம்பு படம் டிசம்பர் 10ந்தேதி ரிலீசாகிறது.

விஜய், அசின் நடிக்கும் காவலன் படம் டிசம்பர் 24ல் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகிறது.

நன்றி வீரகேசரி


    எந்திரன் விமர்சனம்  2

நல்லவேளை, தியேட்டர் டிக்கெட்டுகளை மைக்ரோ சிப்களாக கொடுக்கவில்லை! மற்றபடி டைட்டிலுக்கு ஏற்றார் போல எந்திரனின் ஒவ்வொரு பிரேமையும் விஞ்ஞானத்தில் முக்கி எடுத்திருக்கிறார் ஷங்கர். ஆவென்று வாய் பிளக்கும் ரசிகனின் தொண்டைக்குள் புகுந்து மூளைக்குள் போய் ஒரு முரட்டு நடனமே ஆடியிருக்கிறது தொழில் நுட்பம். நமது பேட்டரி லோ ஆகிற நேரத்திலெல்லாம் ஐஸ்வர்யாவின் அழகும், ரஜினியின் கம்பீரமும் வந்து சார்ஜ் செய்துவிட்டு போவதுதான் 'எந்திர'ஜாலம்!

பத்தாண்டுகளாக பாடுபட்டு ஒரு ரோபோவை கண்டு பிடிக்கிறார் விஞ்ஞானி ரஜினி. நு£று ராணுவ வீரர்களுக்கு சமமான இந்த எந்திர ரஜினியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்து செயற்கரிய செயல்களை செய்ய வைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் பயிற்சி காலத்தில் அந்த எந்திரன் செய்கிற ரகளையும், காதலும் படைத்தவருக்கே கோபத்தை ஏற்படுத்த, அதனுடைய கையை காலை ஒடித்து குப்பை தொட்டியில் எறிந்து விடுகிறார். அதே நேரத்தில் ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியரும் இதே போல ஒரு ரோபோவை கண்டுபிடிக்கிற முயற்சியில் இருக்கிறார் என்பதும் அது பெயிலியர் ஆகிவிட ரஜினி மேல் பொறாமைப்படுகிறார் என்பதும் வில்லத்தனத்திற்கு வழி வகுக்க, குப்பையில் எறியப்படுகிற எந்திர ரஜினி போய் சேருகிறது அந்த பொறாமை புரபசரிடம்!

இதுவரைக்கும் நல்லவனா இருந்த ரோபோவை நான் கெட்டவனாக்குறேன் பார் என்று சவால் விடும் அந்த புரபசர், விரல் அகல சிவப்பு சிப் ஒன்றை அதனுள் செலுத்த, அப்புறம் தமிழ்சினிமாவின் 75 ஆண்டுகால வில்லன்களையும் கலந்து பிசைந்து செய்த மாதிரி கர்ண கொடூர ஆட்டம் போடுகிறது அது! குண்டு மழை பொழியும் ஹெலிகாப்டரையே கூட தனது பீச்சாங் கையால் போட்டு உடைக்கிற அளவுக்கு அபாயகரமான அந்த ரோபோவை எப்படி அழிக்கிறார் விஞ்ஞானி? ஐஸ்வர்யாவை காதலித்த அந்த ரோபோ காதல் தோல்வியிலிருந்து மீண்டதா போன்ற கேள்விகளுக்கான விடைதான் க்ளைமாக்ஸ்.

பஞ்ச் டயலாக் இல்லை. பம்மாத்து அறிமுகம் இல்லை. ஆனாலும் நிமிடத்துக்கு நிமிடம் மிரள வைக்கிறார் ரஜினி. விஞ்ஞானி ரஜினியை விடுங்கள். அந்த ரோபோ ரஜினிதான் அசத்தல். ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய புத்தகத்தை அப்படியே ஒரு விநாடி நேரத்திற்குள் மைண்டில் பதிவு பண்ணிக் கொள்வதும், கேட்கிற கேள்விகளுக்கு டாண் டாண் என்று பதிலடிப்பதுமாக பட்டைய கிளம்புகிறது ரோபோ. டெலிபோன் டைரக்டரியை படித்துவிட்டதாக சொல்லும் அதனிடம் என் போன் நம்பர் என்னன்னு சொல்லு என்று சதாய்க்கும் ஆசாமியிடம் அவரது முகவரியோடு போன் நம்பரையும் புட்டு புட்டு வைக்கிற காட்சி சுவாரஸ்யம்.

எதை பேசினாலும் அதற்கு நேரடி அர்த்தம் எடுத்துக் கொண்டு செயல்படுகிற காட்சிகளும் கலகல... கையை பின்புறம் வைத்துக் கொண்டு லஞ்சம் கேட்கும் கான்ஸ்டபிள் 'வெட்டு' என்று கேட்க, பக்கத்திலிருக்கிற கத்தியை எடுத்து ஒரே போடாக போடுகிறாரே, தியேட்டரே வெடிச்சிரிப்பில்!

கோவிலில் ஸ்பீக்கர் கட்டி கூத்தடிக்கும் வேறொரு கும்பலை 'நிராயுதபாணி'யாக்குகிற காட்சியில் ரோபோவை வேப்பிலை அடிக்காத குறையாக பக்தியழுக பார்க்கும் பெண்மணிகளும், ரஜினியின் 'ஆத்தா கோலமும்' கூட அதிர வைக்கிறது தியேட்டரை. அந்த ரயில் சண்டை வினாடிக்கு வினாடி பிரமிப்பு. பிரசவ வார்டிலும் கூட ரோபோவின் கருணை டச்சோ டச்! தலை திரும்பிய குழந்தையை பக்குவமாக திருப்பி பாதுகாப்பாக நார்மல் டெலிவரியாக்குகிற காட்சிகள் சென்ட்டிமென்ட் மேளா.

உயிர் கிடையாது. வலி கிடையாது. உணர்ச்சிகள் கிடையாது என்றிருக்கும் ரோபோவை உணர்ச்சிக்குள்ளாக்கும் விஞ்ஞானி தனது காதலி ஐஸ்வர்யாராயை இழந்துவிடுமோ என்று அஞ்சுகிற போதுதான் கதையிலும் ஒரு டர்னிங்!

ஐஸ்வர்யா ராய் இன்னும் அப்படியே இருக்கிறார் என்பதுதான் இன்னொரு விஞ்ஞான அதிசயம். புருவம், நெற்றி, உதடு என்று ஒவ்வொன்றையும் வர்ணிக்கிறார் ரஜினி. அது அத்தனையும் சரி என்பது போலவே இருக்கிறார் ஐஸ். நீ ஒரு மிஷின். நான் ஒரு மனுஷி. இரண்டு பேரும் காதலிக்க முடியாது என்று விளக்கி புரிய வைக்க துடிக்கும் போதெல்லாம் அவரது கண்களும் கூட கூட பேசுகிறதே, அதற்கே தனி புத்தகம் போடலாம்.

அப்புறமாகவும் ஒரு ரோபோ ரஜினி வருகிறார். அது சாட்சாத் ராட்சசன். தரையை ஒரு காலால் ஓங்கி உதைத்து ஒரு சிரிப்பு சிரிக்கிறாரே... பயங்கரம்ப்பா. ஒரு ரோபோ இன்னொரு ரோபோவை செய்ய, அந்த ரெண்டும் இன்னும் ரெண்டை உருவாக்க, அந்த ஏரியா முழுக்க ரஜினி ரஜினியாய் ரோபோக்கள். அதே கெட்டப்பில் விஞ்ஞானியும் உள்ளே நுழைந்துவிடுகிறாரா, எந்த நேரத்தில் ரகசியம் உடையுமோ என்று நகம் கடிக்க விடுகிறார் டைரக்டர். ஒரு சொட்டு ரத்தத்தை வைத்து கண்டுபிடித்துவிடுகிற வில்லன் ரோபோ ஆடுகிற பேயாட்டம் கிராபிக்ஸ்தான் என்றாலும் ஹாலிவுட் தரத்திற்கு நிச்சயம் குறைந்ததல்ல!

சொல்ல மறந்தாச்சு. இந்த படத்தில் சந்தானமும் கருணாசும் கூட நடித்திருக்கிறார்கள். காஸ்ட்லி சம்பளம் வாங்கிய 'வேஸ்ட்'லி நடிகர்கள்!

தொழில் நுட்பத்தை எழில் நுட்பம் ஆக்கியிருக்கிறார்கள் கிராபிக்ஸ் கலைஞர்கள். ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உழைப்புக்கு தனி மெடலே குத்தலாம். இசைப்புயல் ரஹ்மானுக்கு ரசிகர்களின் 'வசை'ப்புயல் நிச்சயம். கிளிமஞ்சாரோ தவிர மற்றவை வெகு வெகு சுமார்.

ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார். ரசூல் பூக்குட்டியின் சிறப்பு சப்தம், குறிப்பாக ரோபோவின் வாய்ஸ் கிரேட்! சண்டை காட்சிகள் பீட்டர் ஹெய்னின் கைங்கர்யம். ரஜினியை ஒரு நடமாடும் லாஞ்சராகவே ஆக்கியிருக்கிறார் ஹெய்ன்!

தனது வழக்கமான அட்வைஸ்களை இந்த படத்தில் கை விட்டிருந்தாலும் ஒரு காட்சியில் ஒரு வினாடியில் உணர வைத்திருக்கிறார் ஷங்கர். ஓடும் ரயிலில் வாசலில் நின்று பான் பராக் துப்ப முயலும் ஒருவனின் முகத்தில் கால் வைத்து பறக்கிறார் ரஜினி.

க்ளைமாக்சில் உணர்ச்சியில்லாத ஒரு எந்திரம், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க வைக்கிறது ரசிகர்களை! அதுதான் ஷங்கரின் வெற்றியும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 comment:

Ramesh said...

எம் ஏ சுசிலாவின் பார்வையில் எந்திரன் தரமான எழுத்து. எல்லாம்மாயை தானா இந்த உலகம் மயங்கும் ஏனோ?