முத்தேவியரும் அருள்பாலிக்கும் நவராத்திரி விழா

.
 உற்றார் உறவினர்கள்
என் உற்றவர் அல்லர் தாயே
உன்னை அல்லாது மற்றார்
யாரும் துணையில்லையே! - சுவாமி கெங்காதரானந்தா

ஸ்ரீ துர்க்காதேவி – புகழ், உயர்வு, மங்களம், சுகம் மோட்சம் ஆகியவற்றை அருள்பவள்.ஸ்ரீ லட்சுமி தேவி – அமைதி, அழகு, ஒளி, சாந்தி ஆகியவற்றை அருள்பவள். அவள் மகா விஷ்ணுவின் பத்தினி, அஷ்டலஷ்மியாகவும், திருமாலின் இடம் பொருள் அறிந்து உரையாடுபவள்.

ஸ்ரீ சரஸ்வதி தேவி - சகல வித்தைகளுக்கும் அதிபதியாய் விளங்கி வாக்கு, அறிவு, ஞானம் ஆகியவற்றை அருளி சந்தேகங்களை நீக்கக் கூடிய வடிவமாகவும், இசை நாதத்தில் மூழ்கி மக்களின் கவலைகளை கல்விஞானத்தின் மூலம் நீக்குபவள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணபரம்மஹம்ஸர் ஸ்ரீ காளி தேவியை வணங்கி அருள்பெற்றவர் நிலையில்லா மின்னல் போல் தோன்றி இடர் அகற்றுபவள் ஸ்ரீ காளி. பூமாதேவி, கங்காதேவி ஆகிய பல அம்சங்களைத் தாங்கி உலக இயக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

பொறுமையுடன் சில நிமிடங்களேனும் அகக்கண்ணால் தியானித்தால் பல நன்மைகளைப் பெறலாம். பலவித முன்னேற்றம் கண்ட மனிதன் இன்றும் மனிதனாக வாழ்கின்றானா என்பது கேள்விக்குறி?

நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படுகின்றது. மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தை உண்டாக்க விரும்புகின்றான்.

உலகைப் படைத்த இறைவன்

அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான்.

இக்கருத்தையே நவராத்திரி விழா விளங்கப்படுத்துகின்றது. (இச்சை - விருப்பம், ஞானம் - அறிவு, கிரியா – செய்தல், ஆக்கல்).

பிரபஞ்சவுற்பத்திக்கு காரணமான இறைவன் அனேக மூர்த்தங்களின் உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் விளங்கிய போதிலும் அவையனைத்தையும் ஒன்றாக்கித் தாயான ஸ்வரூபத்தில் வழிபடுதல்தான் பெரும்பயனைத் தருமென பிரபஞ்சவுற்பத்தி எனும் நூல் கூறுகின்றது.

பரப்பிரம்மத்தையே பராசக்தி அன்பினால் கட்டுப்படுத்தியுள்ளாள் என்பதை உலகைப் படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ்ணுவையும் அழிக்கும் உருத்திரனையும் இவர்கட்கு மேலாகவிருக்கும் ஈஸ்வரனையும் தனக்குள் மறையும்படி செய்து மீண்டும் அவர்களை வெளிப்படுத்தி அவர்களது தத்துவார்த்தங்களை அவர்கள் மூலமாகவே இயற்றுவிக்கிறாள்.

துர்காம்பிகை -இலக்குமி,சரஸ்வதி, பார்வதி,லலிதா என்று எல்லாமாயிருக்கும் தெய்வங்களது தத்துவார்த்தமாக உபாசிப்பதற்கு சகல யோக்கியங்களும் உண்டென்றும், அவையாவும் அதற்குத் துணைநிற்குமெனவும் வித்யாரண்யர் விளக்கியுள்ளார்.

ஆன்மாவை இறைவன்பால் வழிப்படுத்த திருவருள்தான் துணை நிற்கின்றது. இந்தத் திருவருட் சக்திதான் சித் சக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி எனப்படுகின்றது. இதில் ஆதிபராசக்தி தான் துர்க்கையாகும்.

குழந்தைகளுக்குக் கல்விபுகட்டி நாடும், உலகமும் நலம்பெற ஏதுவாக வாழ்வோமாக.

-கார்த்திக் 

நன்றி வீரகேசரி

No comments: