இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 09

.


ஆதிகாலத்தில் வெளியிடப்பட்ட இலட்சுமி நாணயத்தில் சில வட இலங்கையில் வெளியிடப்பட்டன. அவற்றில் இந்து சமய சின்னங்களாகிய திரிசூலம், மயில், இடபம், சுவஸ்திகம் ஆகியன உள்ளமை குறிப்பிடத்தக்கது.



அநுராதபுர காலப்பகுதியில் இப்பகுதியில் இருந்த தமிழ் பிரதானிகள் வேளாண்மையின் விருத்தியின் பொருட்டு பல குளங்களை அமைத்தார்கள் என்பதை அறிய முடிகிறது. வன்னிப் பகுதியில் உள்ள பல குளங்கள் தனியாரின் பெயர்களைக் கொண்டவையாக இருந்துள்ளன. வேறு சில இராமநாதபுரம், மதுரை, கன்னியகுமாரி மாவட்டங்களில் உள்ள சில குளங்களின் பெயர்களை ஒத்தவையாகும்.





தமிழ் நாட்டிலுள்ள பகுதிகளைப் பல்லவர் ஆட்சி புரிந்த காலத்தில் அவர்களின் செல்வாக்கு மிகுந்த அளவில் ஏற்பட்டது. இக்காலத்திலே திருக்கேதீஸ்வரம், திருக்கோணஸ்வரம் ஆகிய ஈழத்துப் புராதன சிவாலயங்கள் தமிழகத்தில் அறிமுகமாகிவிட்டன. இவற்றைப் பற்றிய நாயன்மார்களின் பாடல்கள் உண்டு. அநுராதபுரத்திலும் வேறு பல இடங்களிலும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் அமைக்கப்பட்டன.



பல்லவர் பாணியில் உள்ள வரி வடிவ முறையும் தமிழ் வரி முறை, கிரந்த எழுத்து முறை என்பன இலங்கையில் பரவின. அநுராதபுர மன்னர்கள் பல்லவர்களோடு நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியிருந்தனர். இலங்கையிலே தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் பல்லவரின் நாணயங்கள் பல கிடைத்துள்ளன.



இரு சாராருக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் வலுவடைந்தன. பல்லவரின் கட்டட சிற்பக் கலைகள் இலங்கையிலும் குறிப்பாக தமிழர்களிடையிலேயும் அதிக செல்வாக்கைச் செலுத்தியிருந்தன. அநுராதபுரத்தின் வடபுறத்தில் பல்லவர் கால கட்டுமான முறையில் அமைந்த இந்துக் கோயில்கள் பல காணப்படுகின்றன.



முதலாம் இராஜராஜன் காலத்து 883ஆம் ஆண்டளவில் இலங்கையின் வடபகுதியைச் சோழர்கள் கைப்பற்றினார்கள். அதனை ஈழமான மும்முடிச் சோழ மண்டலம் என்று பெயரிட்டார்கள்.



முதலாம் இராஜேந்திரனின் ஆட்சியில் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்ற ஜயம் கொண்ட சோழ மூவேந்த வேளான் எனும் சேனாதிபதி தென்இலங்கைக்குச் சென்று ஐந்தாம் மகிந்தனையும் அவனது பட்டத்து அரசியையும் அவர்களின் அரச சின்னங்களையும் அகப்படுத்திக் கொண்டு சென்றான்.



அவற்றோடு முன்னே, நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி அதி அரசன் மூன்றாம் இராஜசிம்மன் அநுராதபுர மன்னனிடம் அடைக்கலமாக வைத்த பாண்டியரின் குலதனமாகிய முடியினையும் இந்திரன் ஆரத்தினையும் கவர்ந்து சென்றான்.



சோழர் பொலன்னறுவையை மையமாகக் கொண்டு இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் அதிகாரம் செலுத்தினார்கள். மும்முடிச் சோழமண்டலம் இராசராசனது காலத்தில் வளநாடு என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.



சோழர் ஆட்சி ஏறக்குறைய 77 ஆண்டுகளுக்கு நிலைபெற்றது. முதலாம் இராஜேந்திரன் ஜயங்கொண்ட மூவேந்தனின் முதலாவது சோழ இலங்கேஸ்வரனாக முடிசூடினான் என்று சொல்லப்படுகிறது.



அவனது ஆட்சிக் காலத்தில் 1037ஆம் ஆண்டளவில் அவனது புதல்வர்களில் ஒருவன் இலங்கையில் முடிசூடி சோழ இலங்கேஸ்வரன் சங்கவர்மன் எனும் பட்டங்களைச் சூடிக் கொண்டான்.



இவனுடைய ஆண்டுகளைக் குறிப்பிடும் சாசனங்கள் கந்தளாயிலும் மாமங்காக்கேணியிலும் கிடைக்கின்றன. இவனது காலத்து நிகழ்ச்சிகளையே குளக்கோட்டன் வரலாற்றுடன் பிற்காலத்தில் இணைத்துவிட்டனர் போலத் தெரிகின்றது. குளக்கோட்டன் செம்பியன் என்றும் மனுவேந்தன் என்றும் தக்ஷிண கைலாசபுராணம் குறிப்பிடுவது கவனத்திற்குரியது.

கலாநிதி சி.பத்மநாதன்
ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்




தொடரும் ...

No comments: