ஆன்மீகம்

.
Download Thirumali...jpg (64.5 KB)
திருமழிசை ஆழ்வார்
வாசகர்கள்  எல்லோரையும் மீண்டும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி.  சென்ற வாரம் முதல் ஆழ்வார்களை பற்றி பார்த்தோம், இந்த  வாரம் அடுத்த ஆழ்வாரான திருமழிசை ஆழ்வாரை பற்றி காண்போம்.
முன் ஒரு காலத்தில் அத்திரி, ஆங்கிரசர், வஸிஸ்டர், பார்கவர்  முதலிய சப்த ரிஷிகள்  மண்ணுலகில் தவம் புரிய மேலான இடம் யாது ? என்று  பிரஹ்மாவிடம்   வேண்டினர், அதர்க்கு  நான்முகனும்  அவர்களுக்கு சென்னை அருகில் உள்ள


 திருமழிசை (மஹிஸார ஷேத்ரம்)  என்னும் புண்ணிய பூமியை காட்டினார்  என்று “பிரஹ்மானந்த” புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. 
அப்போது பார்கவ  முனிவர் யாகத்தில் பகவானை ஆராதனை செய்து கொனண்டிருக்கும் போது பகவான்  தோன்றி  அவரை நோக்கி " முனிவரே, உமக்கு சுதர்சன அம்சமாக ஒரு புத்திரன் தோன்றி உலகு உய்ய வழி காட்டுவான்  என்று  திருவாய் மலர்ந்து அருளினார்.
அதே போல், பார்கவ  முனிவர் மனைவியான கணககாங்கியும் கருவுற்று ஒரு பிண்ட ரூபத்தில் ஒரு குழந்தையை பெற்றாள். அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு மீண்டும் தவம் புரிய சென்றுவிட்டனர். அக் குழந்தையின் அழுகுரல் கேட்டு அன்னை ஸ்ரீதேவியும் , பகவான் விஷ்ணுவுடன் வந்து அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர். அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது.
அச்சமயம் பிரம்பை வெட்டி கூடை கட்டி வரும் திருவாளனும் அவன் மனைவியும் அக்குழந்தையை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்து  அவர்களுக்கு பகவான் கொடுத்த வரம் என்று கருதி  எடுத்து சென்றனர்.
அக்குழந்தைக்கு பாலமுது கொடுக்க முயன்ற போது குழந்தை, உணவு உண்ண மறுத்து விட்டது. அழுகையும் பேச்சும்  இன்றி பூர்ண அங்க வளர்ச்சியுடன் பகவான் சிந்தனையில் இருக்கும் குழந்தையை பார்த்து பலரும் வியந்தனர்.  பல நாள்கள் உணவு உண்ணாமல் இருந்தும் அதன் உடல்நிலை எவ்வித மாறுதலும் இன்றி, நன்றாகவே இருந்தது. இவ்வதிசயமான சம்பவம், ஊர் முழுவதும் பரவி, பலர் அக்குழந்தையைக் காண வந்து சென்றனர்.
ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக் கண்டனர். அவர்கள் குழந்தைக்கு,  பக்தி விசுவாசத்துடன் கரந்த பசுவின் பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது. ஒருநாள், முதியவர் ஒருவரும் வந்து அக்குழந்தையைக் கண்டார். அக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஞான ஒளியைக் கண்ட அவர், இது எம்பிரான் அருள் பெற்ற, தெய்வக்குழந்தை என்று குறிப்பிட்டு, அக்குழந்தை மிச்சம் வைக்கும் பாலை, அந்த வயது முதிர்ந்த தம்பதிகள் பருகினால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் கூறினார். அதைப் போலவே, அவர்களும் செய்து, ஒரு ஆண்மகவை ஈன்றனர். அக்குழந்தைக்கு கனி கண்ணன் என்று பெயர் சூட்டினர்.
கனிகண்ணன் வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை ஆழ்வாரின் நெருங்கிய  நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டான்.
திருமழிசையாழ்வார், திருவல்லிக்கேணியில் முதல் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரை சந்தித்தார். சகல சமய நூல்களையும் கற்ற திருமழிசையாழ்வாருக்கு, இறைத்தத்துவத்தைப் பற்றிய குழப்பம் ஏற்பட்டது. அதை நீக்கி வைணவப்பேரொளியை அவர் மனத்தில் விதைத்தவர் நம் பேயாழ்வாரே ஆவார். சிவபெருமானும் பகவான் மீது ஆழ்வாருக்கு இருக்கும் பக்தியும், வைராக்கியத்தையும் சோதனை செய்து அறிந்த பின்னர் அவருக்கு "பக்தி சாரர்" என்னும் திருநாமத்தை சூட்டி மறைந்தார்.
அதன் பின் திருமழிசை ஆழ்வார் பல காலங்கள் தவம் புரிந்தும், திவ்ய தேசங்களுக்கு சென்று அந்த கண்ணனை வாயார பாடியும், தரிசித்தும் வந்தார். அப்படியே அவர் அந்த எம்பெருமானின் உத்ரவின் படி நம் முதலாழ்வாரான பேயாழ்வார் பிறந்த ஊரான காஞ்சிபுரம் சென்று அங்கு பல காலம் தவம் கிடந்தார்.
தன் குருதேவர் காஞ்சியில் இருப்பதை அறிந்த கனிகண்ணன் அவரை சென்று நமஸ்காரம் செய்தார். அவருக்கு தொண்டு செய்து வரும் ஒரு மூதாட்டி மேல் பரிவு கொண்டு அவள் மேலும் பல காலம் ஆழ்வாருக்கு  தொண்டு செய்ய ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஒரு பாடலால் அவளை குமரி  ஆக்கினார்.  என்னே குருபக்தி!
இதை அறிந்த அந்நாட்டு மன்னன் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன் கனிகண்ணரை அணுகி தன்னையும் இளமையாக மாற்ற பாடியருள வேண்டும் என்று பணித்தான்.
அதை கேட்ட கனிகண்ணன் அந்த பகவானை பாடும் வாயால் மனிதரை பாட இயலாது என்றார். பல்லவ மன்னனும் நீர் பாட மறுத்தால் எனது தேசத்தில் இருந்து சென்று விட வேண்டும் என்று உத்தரவு இட்டான்.
கனிகண்ணன் ஆழ்வாரிடம் மன்னன் இட்ட உத்தரவை கூறினார். ஆழ்வாரும் தேவராஜன் சன்னதி அடைந்து கனிகண்ணனுக்கு ஏற்பட்ட நிலயை கூறி, அவரோடு தாமும் காஞ்சி விட்டு வேறு இடம் போவதால் அந்த பகவானையும்  தம்மோடு  வரும்படி விண்ணப்பித்தார்.
கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"
என்று பாடினார் திருமழிசையாழ்வார். உடனே அந்த பகவானும் தான் நாக படுக்கையை சுரிட்டி கொண்டு ஆழ்வாருடன் புறப்பட்டார். கமலக்கண்ணன் அந்த  ஊரை விட்டுச் சென்றதால், காஞ்சி மாநகரம் தன் பொலிவை எல்லாம் இழந்து, ஒரே நாளில் நலிவுற்றுவிட்டது. மறுநாள் காலை, பணியாளன் ஒருவன் விரைந்து வந்து மன்னனிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அனைத்தையும் அறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர்களை மீண்டும் காஞ்சிக்கு வர வேண்டினான். அவர்களும், மன்னன் கூற்றுக்கு இசைந்து, காஞ்சிபுரம் செல்ல முடிவு செய்தனர். இப்பொழுது,
கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"
என்று ஆழ்வார் கூற, மீண்டும் அந்த வரதராஜ பெருமாள் காஞ்சியில் வாசம் செய்யத் துவங்கினான். தன் பக்தர் ஓர் அடி அவரை நோக்கி வைத்தால் அந்த பக்த ரக்க்ஷகன் நம்மை நோக்கி 100 அடி வைப்பார் என்பது  எத்தனை உண்மை! இப்படி ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்ததால் அவரை "சொன்னவண்ணம் செய்த யதோக்தகாரி பெருமாள்” என்று இன்றும் அழைக்க படுகிறார்.
இவ்வாறு பல அற்புதங்களை செய்த பின் திருமழிசை ஆழ்வார் தேவபெருமாளின் அனுமதி பெற்று காஞ்சியை விட்டு குடந்தையில் (கும்பகோணத்தை) குடி கொண்டு இருக்கும் “ஸ்ரீ ஆராவமுத பெருமாளை” தரிசிக்க புறப்பட்டார். அங்கு பகவானை அகம் குளிர தரிசித்து அவர் கல்யாண  குணங்களை குறித்து தொண்ணூற்றாறு பாசுரங்கள் "நான்முகன் திருவந்தாதி" மற்றும் திருச்சந்தவிருத்தம் என்னும் பாடல்களை பாடி அருளினார்.
மேலும் 2300 வருடங்கள் அந்த பகவானின் நாமம்களை தியானம் செய்து வாழ்ந்து வந்தார். இப்படி ஆழ்வார் உலகில் மொத்தமாக 4700 ஆண்டுகள் பகவான்  நாமம்களை பிரச்சாரம் செய்து விட்டு பின் அந்த பகவான் திருவடி அடைந்தார்.
ஆழ்வாரின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து  நாம் பல விஷயங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
1) பக்தியோடும், அன்போடும் அவனை வழிபட்டால் அந்த பக்த ர க்க்ஷகன்  தன் பக்தரை பின் தொடருவார், எப்போதும்  கைவிடுவது இல்லை என்பது உண்மை என்று தெரிகிறது.
2) ஆழ்வார் 4700 ஆண்டுகள் வாழ்ந்து எல்லா நூல்களையும் சமயங்களையும் முழுவதும் ஆராய்ந்து நமக்கு அந்த பரம் பொருளான அந்த பகவானை நமக்கு எளிமையாக வழிபட பல பாடல்களை  பாடி கொடுத்து உள்ளார். நாம் அவர் போல் 4700 ஆண்டுகள் வாழ்வது சாத்தியம் இல்லை, ஆய்வு செய்யவும் நேரம் இல்லை. நமக்கு  இருக்கும் மிகவும் சிறிய நேரத்தை பயன்படுத்தி அவர் காட்டிய வழியில் அந்த “கமலகண்ணனை”  வாயால் பாடி மனதார மகிழலாமே!
வாருங்கள் நாமும் அந்த ஆழ்வார்கள் காட்டிய வழியில் அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை வெட்கத்தை விட்டு வாயார பாடி மகிழலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
என்றும் அன்புடன்,
ஆண்டாள்

No comments: