நோய் நீங்கிய அதிகாலை - கவிதை

.
                          ஃபஹீமாஜஹான்உனது சொர்க்கமென அமைந்த வீட்டில்

அவள் நோய் வாய்ப்பட்டிருக்கிறாள்
நீ வளர்த்த எல்லாச் செடிகளும்
அவளுடன் வாடிக் கிடக்கின்றன

ஆனந்தமும் அன்பின் பரிமாற்றங்களும்
துள்ளிக் குதிக்கும் அறையெங்கும்
படிந்து போயுள்ளன
அவளது வருத்தங்கள்
கவிழ்ந்து தூங்குகிறது


படுக்கைதனில்
கசப்பானதொரு வேதனை
உனை நகரவிடாது
அருகே அமர்த்தியுள்ளன
அவளது எளிய தேவைகள்

எந்தக் குறுக்கிடல்களும்
அமைதியைக் குலைத்துவிடக் கூடாதெனத்
தொலைபேசிகளைத்
துண்டித்து வைத்துவிட்டுத்
தூக்கம் விழித்திருக்கிறாய்

அபூர்வமாக
இன்றைய அதிகாலைப் பொழுதில்
அலாரத்துக்கு முன்பாக விழித்து
அமைதியாகக் காத்திருக்கிறாள்
உடலைவிட்டு விலகிப்போன
வலிகளை நினைத்துப் பார்க்கிறாள்
ஒரு கொடிபோல
ஆதாரத்தைத் தேடும் தூண்டலுடன்
உனைச் சுற்றியுள்ளது ஒரு கரம்

மென் நீல ஒளி சிந்தும்
இரவு விளக்கின் கீழே
மின்விசிறிக் காற்றிலசையும்
தலைமுடியைக் கோதிவிடுகிறாய்
உன் விரல்களிடையே தோய்கிறது
கருணையின் பரிதவிப்பு
தேவதையைப் போல
அசைகின்றன திரைச் சீலைகள்
இனி
அவளது நடமாட்டம்
இறுகிப் போயுள்ள வீட்டை
மீண்டும் தளர்த்தி வைக்கும்

நன்றி மதியம் திங்கள்

No comments: