பயங்கரமான ஆயுதம் - அ.முத்துலிங்கம்

.
குறுந்தொகையில் ஒரு பாடலைப் படித்தபோது சட்டென்று ஓர் எண்ணம் தோன்றியது. இவ்வளவு காலமும் அப்படி தோன்றியதில்லை. இந்த உலகத்தில் பல விசயங்கள் உங்கள் உற்றார் உறவினர் ஊரார் என்ன சொல்வார்கள் என்ற பயத்தினால்தான் நடக்கின்றன. மனிதன் தன் சொந்த புத்தியால் யோசித்து எடுக்கும் முடிவுகள் குறைவு என்றே படுகிறது. இன்று அல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது தொடங்கிவிட்டது. மனிதனை நல்வழிப் படுத்துவதோ தீ வழிப்படுத்துவதோ அரச கட்டளைகள் அல்ல; சமுதாயக் கட்டுப்பாடுகள்தான்.

ராமாயணத்தில் ராவணன் கொல்லப்பட்டுவிட்டான். விபீடணன் சீதையை அழைத்துவந்து ராமன் முன் நிறுத்துகிறான். ராமன் சொல்கிறான். 'தர்மம் காப்பது என் கடமை. எங்கள் குலத்துக்கு நேர்ந்த அபகீர்த்தி களையப்பட்டு, என் வீரம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. நீ மீட்கப்பட்டாய். இனி நீ சுதந்திரமானவள், உன் விருப்பம் என்னவோ அதைச் செய்யலாம். நீ லட்சுமணனையோ பரதனையோ வரித்துக்கொள்ளலாம். வானரர்களின் அரசன் சுக்கிரீவனுடன் போகலாம். இலங்கை அரசன் விபீடணனும் இருக்கிறான்.' சொல்லத் தகாத இந்த வார்த்தைகளை ராமன் சொன்னான்.
சீதை லட்சுமணனிடம் சொல்லி தீமூட்டி அதில் குதித்து புடம்போட்ட பொன்போல ஒளிவீச வெளியே வருகிறாள். அப்போது ராமன் சொல்கிறான். 'சீதை உண்மையானவள் என்பது எனக்கு தெரியும், ஆனால் உலகத்துக்கு தெரியாது. அவர்கள் சீதையை தூற்றுவார்கள். உலகம் என்ன நினைக்கும் என்ற அச்சத்தினால்தான் நான் இதைச் செய்யவேண்டி நேர்ந்தது.' ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுச் சட்டதிட்டங்கள் இருக்கலாம். ஆனால் மனிதன் சட்ட திட்டங்களைப் பார்க்கிலும் சமுதாய கட்டுப்பாடுகளுக்குத்தான் அதிகம் பயப்படுகிறான். ஆதியிலிருந்து அதுவே அவனை வழிநடத்தியிருக்கிறது.
சினுவா ஆச்சிபி என்ற நைஜீரிய எழுத்தாளர் எழுதிய புகழ்பெற்ற நாவல் Things Fall Apart. அதைப் படித்தபோதும் இப்படித்தான் ஓர் இடத்தில் திடுக்கிடல் ஏற்பட்டது. ஒக்கொங்வோ ஒரு மல்யுத்த வீரன். அவனுடைய ஊரில் அவனுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. இரண்டு கிராமங்களுக்கு இடையில் ஏற்பட்ட பகை முற்றாமல் தடுக்க ஒரு கிராமம் மற்றக் கிராமத்துக்கு ஒரு பையனை பணயமாகத் தருகிறது. அந்தப் பையனின் பெயர் இக்மெஃபுனா. அவனை மல்யுத்தவீரன் ஒக்கொங்வோ தன் மகனைப்போல வளர்க்கிறான். அவன் மேல் நிறையப் பிரியம் கொள்கிறான். மூன்று வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் கிராமத்து பெரியவர்கள் பையனை கொலை செய்ய முடிவு செய்கின்றனர். ஒக்கொங்வோ அந்த முடிவை எதிர்ப்பான் என்று நினைத்தால் அவனும் வேறு வழி இல்லாமல் ஊருடன் ஒத்துப்போகிறான். ஊர்மக்களுடன் சேர்ந்து மகனைக் கொல்ல காட்டுக்கு அழைத்துச் செல்கிறான். காட்டு விளிம்பில் இக்மெஃபுனா நடந்துகொண்டிருக்கும்போதே ஒருவன் பின்னாலிருந்து அவனை கத்தியால் வெட்டுவான். இக்மெஃபுனா 'தந்தையே என்னை இவர்கள் கொல்கிறார்கள்' என்று கதறுவான். ஒக்கொங்வோ ஓடிவருவான், அவனைக் காப்பாற்றுவதற்கு அல்ல, அவனும் கத்தியை எடுத்து வெட்டி பையனை சாய்க்கிறான். 'கோழை என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகக் கூடாது. ஊரார் என்ன நினைப்பார்கள்' என்ற எண்ணம்தான் ஒக்கொங்வோவை நிறைத்திருக்கிறது.

குறுந்தொகையில் ஒரு பாடல். வேப்பம்பூ பூக்கும் காலம் வரும்போது நான் திரும்புவேன் என்று சொல்லிவிட்டு சென்ற தலைவன் திரும்பவில்லை. ஊர் பெண்களின் நாக்குகள் வம்பு பேசுகின்றன; அவளை இகழ்கின்றன. வசை பாடுகின்றன. பிரிவினால் அவள் படும் வேதனையிலும் பார்க்க இந்த இம்சையைதான் அவளால் தாங்கமுடியாமல் போகிறது. புலவர் அங்கே ஓர் உவமை தருகிறார். ஏழுநண்டுகள் கால்களால் அத்திப்பழத்தை மிதித்ததுபோல இந்தப் பெண்களின் நாக்குகள் அவளை துன்புறுத்தின. பாடலை திரும்ப திரும்ப படிக்க வைத்தது இந்த உவமைதான். ஏழு நண்டுகள், 56 சிவந்த கால்கள் அத்திப்பழத்தை உழக்கி சிதைக்கின்றன. ஊர்ப்பெண்களின் சிவந்த நாக்குகள் அவளை புண்படுத்துகின்றன. பாடலில் ஓர் இடத்தில்கூட அவள் பிரிவின் வேதனை சொல்லப்படவில்லை. அவள் வேதனை எல்லாம் ஊராருடைய நாக்குகள்தான்.

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென்று அவ்வே.
குறுந்தொகை - 24 பாடியவர் பரணர்.

Translation by A.K.Ramanujan
What she said
It looks as if the summer's glowing
new blossom on the dark neem tree
will not stay for his coming.
These cruel women's ட்டன்குஎஸ்
are working on me,
and now that he is gone,
grinding me to paste
like the one fig
of the white tree by waterside,
trampled on by seven ravenous crabs.
உலகத்தின் மிகப் பயங்கரமான ஆயுதம் ஊரார் வாய்
நன்றி அமுது

1 comment:

Anonymous said...

[quote]மனிதனை நல்வழிப் படுத்துவதோ தீ வழிப்படுத்துவதோ அரச கட்டளைகள் அல்ல; சமுதாயக் கட்டுப்பாடுகள்தான்.[/quote]

இன்று மக்கள் சமுதாய கட்டுப்பாடுகளையும் பெரிதாக கண்டுகொள்வதில்லை ...