உலகமயமாக்கல் செய்தது என்ன?

.

ஒருநாட்டில் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகையின் வறுமையை போக்க முடியவில்லை என்றால் அந்த நாடு கடைப்பிடிக்கும் ஜனநாயகத்தால் என்ன பயன்? என்று வினவியிருந்தார் நெல்சன் மண்டேலா.

“உலகமயமாக்கல்” என்றால் என்ன? பணக்கார நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் சென்று முதலிடுவது ஒரு புறமிருக்க ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்கள் பணக்கார நாடுகளுக்கு சென்று குடியேறுவது மறுபுறம் நடந்து கொண்டிருக்கும். இது எவ்வளவு தூரம் யதார்த்தமான கூற்று என்பதை நாம் நாள் தோறும் கண்கூடாக காண்கிறோம்.

21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரக் கொள்கையாக சக்தி வாய்ந்த பணக்கார நாடுகளால் உலகமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை சமூகத்தை பீடித்துள்ள ஏழ்மை என்ற நோயை தீர்க்கும் மருந்தாக பிரகடனப்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகள் முடுக்கி விடப்படுகின்றன. உலகில் இன்று உலகமயமாக்கல் வலைக்குள் விழாத நாடுகள் எவையும் இல்லை.

உலகில் ஏழை, பணக்கார நாடுகளுக்கு இடையிலான பிரிவினையானது வடக்கு - தெற்கு பிரிவினையாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது.

அனேகமாக எல்லா பணக்கார நாடுகளும் பூமியின் வடபுலத்தில் அமைந்துள்ளதும் தென்புலத்தில் அமைந்துள்ள ஏழை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் கசப்பான உண்மை. அவர்கள் எப்படி “பணக்கார நாடுகள்” ஆனார்கள்? மற்றவர்கள் எப்படி “ஏழை நாடுகள்” ஆக்கப்பட்டார்கள்? அது ஏழை நாடுகளில் வாழும் மூன்றில் இரண்டு உலக சனத்தொகை அவசியம் அறிந்திருக்க வேண்டிய உண்மையாகும்.

ஆதிகாலத்து மனிதன் குகைகளில் வாழ்ந்த போது அந்தச் சுற்றாடலில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தான். கால்நடைகளின் பராமரிப்பை அறிந்து கொண்ட போது நாடோடி கலாசாரம் ஆரம்பமாகியது. குறிப்பிட்ட இடத்தில் இயற்கை வளம் அருகிய போது அது கிடைக்கக் கூடிய வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தார்கள்.

ஆகவே செல்வம் இருக்கும் இடம் தேடி மக்கள் குடி பெயர்வது நவீன காலத்திற்கே உரிய தோற்றப்பாடு அல்ல. ஒரு தேசத்தின் உள்ளேயே, கிராம மக்கள் வாய்ப்பு தேடி நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். துரித கதியில் வளர்ச்சியடையும் நகரங்களும், புறக்கணிக்கப்படும் கிராமங்களும், சமூக இடைவெளியை விரிவுபடுத்துகின்றன.

உள்நாட்டில் இடம்பெயரும் மக்கள் திரளைப்போல, வசதியானவர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்கின்றனர். ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வருபவர்களை பணக்கார நாடுகள் எப்போதும் இரு கரம் நீட்டி வரவேற்பதில்லை. தேவைப்படும் பொழுது பயன்படுத்தி விட்டு அபரிதமாகத் தேங்கி விடும் தொழிலாளரை வெளியே தள்ளுகின்றன. மேலும் “ஏழைகளின் படையெடுப்பை” கண்டு அஞ்சி புதுப்புதுச் சட்டங்களை போடுகின்றனர்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் கோபன்ஹெகன் நகரில் இடம்பெற்ற வறுமை ஒழிப்பு மகாநாடு, குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமையை ஒழிப்பதில் பணக்கார நாடுகளின் கடமை வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும் வறிய நாடுகள் மீது சுமத்தப்பட்ட கடன் சுமை குறையவில்லை. பணக்கார நாடுகள், வறுமை ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முடுக்கி விடுகின்றன.

“மூன்றாம் உலக நாடுகளுக்கான சமூக நலன்புரி திட்டம்” என்ற பதாகையின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி தொண்டு நிறுவனங்களில் வேலை செய்யும் மேலைத்தேய முகாமையாளரின் சம்பளத்திற்கே அந்த நிதி போதாது. எது எப்படியிருப்பினும், பணக்கார நாடுகள் வறுமை ஒழிப்பில் தமது பங்கை மறுக்கவில்லை.

பணக்கார நாடுகள் தமது நாடுகளுக்குள் புக முனையும் ஏழை அகதிகளை, குடியேறிகளைத் தடுக்க முயல்கின்றன. மறுபக்கம் தம்மை ஏழைப் பங்காளனாக காட்டிக்கொள்கின்றன. ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகள் யாவும், அவற்றைத் தம்மில் தங்கியிருக்க வைப்பதற்காகவே செய்யப்படுகின்றன.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டினுள் குடியேற விரும்புபவர்களை “பொருளாதார அகதிகள்” என குறிப்பிடுகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மேற்கு ஐரோப்பியர்கள் பொருளாதார அகதிகளாக அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்களுக்கு படையெடுத்தார்கள்.

தாயகத்தில் நிலவிய வறுமை அவர்களைப் புதிய உலகம் நோக்கி குடிபெயர தூண்டியது. இரண்டாம் உலகப் போர் வரை ஐரோப்பிய நாடுகளில் நிலவிய வறுமை, இன்றைய அபிவிருத்தியடையாத நாடுகளின் நிலையை ஒத்தது.

ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் பத்து வீதத்திற்கும் குறைவானோரே செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள். பெரும்பான்மை மக்கள் கொடிய வறுமைக்குள் உழன்றனர். ஐரோப்பிய வறிய மக்களின் எழுச்சி, பிரெஞ்சுப் புரட்சி போன்ற பல புரட்சிகளுக்கு வழி சமைத்தது. மேலும் பல எதிர்கால புரட்சிகளை தடுக்கும் நோக்கில், “நலன்புரி அரசு” உருவாக்கப்பட்டது. சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டது.

பசுபிக் சமுத்திரத்தில் உள்ள சிறு தீவுகள் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளின் காலடி பட்ட பின்னர்தான். “நாகரீகமடைந்தன.” தீவுவாசிகள் ஐரோப்பியரின் நவீன சாதனங்களை கண்டு வியப்புற்றனர். ஐரோப்பியரின் கடவுள் அவர்களுக்கு கப்பல்களையும் துப்பாக்கிகளையும், நவீன இயந்திரங்களையும் கொடுத்ததாக கருதினர்.

தாமும் ஐரோப்பியரின் மதத்தை தழுவினால் இவற்றைப் பெறலாம் எனக் கருதினர். ஆனால் ஆண்டுகள் பலவாகியும், “ஐரோப்பியக் கடவுள்” தமக்கு நவீன கருவிகளை கொடுக்காததையிட்டு விசனமுற்றனர். தற்போது இந்த மக்கள் கிறிஸ்தவ மத உட்பிரிவை உருவாக்கி ஐரோப்பிய எதிர்ப்பாளராக மாறியுள்ளனர்.

இன்று மூன்றாம் உலக நாட்டு மக்களின் மனநிலை மேற்குறிப்பட்ட பசுபிக் தீவுவாசிகளின் மனநிலைக்கு ஒப்பானது. தன் பிள்ளை ஆங்கிலம் கற்றால் போதும். ஆங்கிலேயரைப் போல பணக்காரர் ஆகலாம் எனப் பல பெற்றோர் நினைக்கின்றனர்.

சில நேரங்களில் அவர்களது கனவுகள் நிஜமாகின்றன. ஆனால் அதற்கு காரணம் ஐரோப்பியமயமாகிய (அல்லது ஆங்கில மயமாகிய) வாழ்க்கைத் தரமல்ல. ஆங்கிலம் பேசும் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் மேன்நிலையில் உள்ளது. இந்த நாட்களில் தகைமை சார்ந்த தொழிலாளரின் பற்றாக்குறையை, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புகின்றனர்.

19 ஆம் நூற்றாண்டில் காலனிகளை ஐரோப்பியமயப்படுத்தும் முயற்சி நடைபெற்றது. ஸ்பானிய, பிரெஞ்சு, ஆங்கில, மொழிகளும், கலாசாரங்களும் பரப்பட்டன. அங்கே ஏற்கனவே இருந்த பூர்வீக கலாசாரங்கள் நசு க்கப்பட்டன. அல்லது புறக்கணிக்கப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் பரப்பவும், கூடவே ஐரோப்பிய கலாசாரத்தை பரப்பவும் உதவின.

கல்விக் கூடங்கள் ஐரோப்பிய கல்வி முறையை இறக்குமதி செய்தன.

இவ்வாறே காலனிகளில் வாழ்ந்த மக்களின் மூளைக்குள் ஐரோப்பிய கலாசாரம் புகுத்தப்பட்டது. ஐரோப்பியமயப்பட்ட புதிய மத்தியதர வர்க்கம் தோன்றியது. அவர்களின் சேவைக்காக காலனிய அரசு அதிகபட்ச சம்பளத்தை வெகுமதியாக வழங்கியது. அதாவது காலனியில் சுரண்டிய பணத்தில் ஒரு பங்கு அவர்களுக்கும் போய்ச் சேர்ந்தது.

ஐரோப்பிய காலனிகள் யாவும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தன. ஐரோப்பாவில் ஏற்கனவே வளர்ச்சியடைந்திருந்த தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை தமது காலனிகளில் இருந்து பெற்றுக்கொண்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட காலனிகளில் மக்களை அடிமைகளாக அல்லது குறைந்த கூலிக்கு அமர்த்தி திருடப்பட்ட மூலப்பொருட்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன. அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயத்த உடைகள் பின்னர் அதே மக்களுக்கு விற்கப்பட்டன.

சுதந்திரமடைந்த முன்னாள் காலனித்துவ நாடுகள் தொழிலகங்களை நிறுவி முடிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பின. ஆனால் அப்போதெல்லாம் (ஐரோப்பாவை வந்து சேரும் போது) “இறக்குமதி தீர்வை” விதிக்கப்பட்டது. அந்த வரியை செலுத்திய பின்னர் விற்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.

ஐரோப்பிய சந்தையில் விற்கப்படும் மூன்றாம் உலக நாடுகளின் பாவனைப் பொருட்கள் பல ஐரோப்பிய நிறுவனங்களாலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன. இலங்கையில் வாங்கும் தேயிலையை பிரித்தானியக் கம்பனிகள் வாங்கி, பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விநி யோகிக்கின்றன. பிரேசிலில் வாங்கும் கோப்பியை சுவிஸ் கம்பனிகள், கவர்ச் சிகரமான போத்தல்களில் அடைத்து உலகம் முழுவதும் விற்கின்றன. அண் மைக்காலங்களில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல கம்பனிகள் சில ஐரோப்பாவில் முதலிட விரும்பின.

ஆனால் அவை கூட்டு ஒப்பந்தத்திற்கு அணுகிய ஐரோ ப்பிய கம்பனிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஐரோப்பிய கம்பனிகளின் பொருளாதார பலம் மிக அதிகமாக இருந்ததால் இந்திய கம்பனிகளை விலை கொடுத்து வாங்க மட்டுமே அவை விரும்பின.

பிரேசிலில் இருந்து ஏற்றுமதியாகும் கோப்பி, இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலை மத்திய அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியாகும் வாழைப்பழம். இவையெல்லாம் ஐரோப்பாவிலோ, அல்லது அமெரிக்காவிலோ உற்பத்தியாவதில்லை.

ஆனால் அமெரிக்க - ஐரோப்பிய கம்பனிகளே மேற்படி உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. பெரும் மூலதனத்துடன் நடத்தப்படும் மேற்குலகப் பன்னாட்டுக் கம்பனிகள் ஆதிக்கம் செலுத்தும் உலக சந்தையை மாற்றுவது அவ்வளவு இலகு அல்ல. இவை மூலப்பொருட்களை வழங்கும் மூன்றாம் உலக நாடுகள் உலக சந்தைக்கு வர விடாமல் தடுக்கின்றன.

இவையெல்லாம் உலகமயமாக்கலால் ஏற்படுத்தப்பட்டவையன்றி வேறென்ன?



No comments: