மெல்பேர்ணில் வைரத்தில் முத்துக்கள் - எனது அனுபவம்

.

சாந்தினி புவனேந்திரராஜா


ஜுலை நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பேர்ண் நகரமண்டபத்தில் நடந்த வைரத்தில் முத்துக்கள் நிகழ்ச்சிக்குக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் காணும் ஆவலோடும் ஆர்வத்தோடும் அவரின் பரம இரசிகை என்ற வகையில் அங்கு சென்றிருந்தேன்.




பொதுவாகத் திரைப்பட நடிக நடிகையரையோ, பாடகர்களையோ, வேறு கலைஞர்களையோ நேரில் காண வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் அவ்வளவாக எழுவதில்லை. ஆனால் கவிப்பேரரசு இதற்கு விதிவிலக்கு. காரணம் – கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சிக் காவியம், இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள் – இவற்றில் இருந்து- - - - - இது ஒரு பொன்மாலைப் பொழுது, சின்னச்சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை, என்னவளே அடி என்னவளே என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன், நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய், போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கிலை மனசைத்தொட்டு என்று நீண்டு கொண்டே போகின்ற பாடல் வரிசை - அப்படியே மனசிலை பதிந்து விடுகின்ற கிராமத்து மண் மணக்கும் கணக்கில்லாத கவிவரிகள் – இவற்றை எல்லாம் காலத்தால் அழிந்து விடமுடியாத கல்வெட்டுக்களாகச் செதுக்கிய, செதுக்கிக்கொண்டிருக்கும் என்னைக் கவர்ந்த கலைஞர் இவர் என்பதால், இயற்கையோடு இணைந்த இயல்பான – இனிமையான தமிழில் ஊறி, ஊற்றெடுத்துப் பெருக்கெடுக்கும் இவரது வைரவரிகளை நேரில் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தின் உந்துதலால் அங்கு சென்றேன்.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டேன். ஆனாலும் வழமைபோலக் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியும் நிகழ்ச்சி ஆரம்பமாகவில்லை. அந்தக் காலதாமதம் கூட, அந்தக் காத்திருப்புக் கூட ஒரு சுகானுபவத்தைத் தான் தந்தது.

ஆமாம்! அந்தக் காத்திருந்த நேரத்தில் கவிப்பேரரசரின் கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும், இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்களும் என் இதயக்குளத்தில் சிறு கற்களை எறிந்துகொண்டிருந்தன. அவற்றில் முதல்கல்லாக அங்கே விழுந்த கல் – கருவாச்சிக் காவியத்தில் நான் வாசித்து இரசித்த அந்தப் பகுதி-

“விதைச்சு முளைக்கறது மதி, விதைக்காம முளைக்கறது விதி; நல்ல விதைய மட்டுந்தானே விதைச்சோம், களை எங்கிட்டிருந்து வந்திச்சு? நன்மையத்தான் விதைக்கறோம், கூடவே தீமையும் முளைக்குது; தினை விதைச்சவன் தினைய மட்டுமே அறுக்கறதில்ல. களையையும் சேத்துத்தான் அறுப்பான். களைய அப்பிடியே களைஞ்செறியற மாதிரி – விதியை மதியாலை வெல்லலாமா? இல்லையா? - - - - வெண்டா சந்தோஷம்! தோத்தா அனுபவம்!

அந்தக்கல்லைத் தொடர்ந்தது கள்ளிக்காட்டு இதிகாசம். அதில் என்
இதயத்தைத் தொட்ட கல் – “ பெற்றவர்கள் மறைந்து போக, உடன் பிறந்தவர்கள்
அவரவர் பாட்டுக்கு ஒதுங்கிப்போக, நல்லது கெட்டதுகளுக்கு மட்டுமே சுற்றங்கள் வந்து சூழ்ந்துவிட்டு விலகிப் போகப், பெற்றுவளர்த்த பிள்ளைகள்

தங்கள் தொப்புள்க்கொடி உறவை அறுத்துக்கொண்டோட, உடலிலுள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றாய் “ஆளை விடுசாமி” என்று அதனதன்
செயல்ப்பாட்டை நிறுத்திக் கொள்ளும் போது மனைவியின் மடிசாய்கிறான்
கணவன், கணவனின் மடிசாய்கிறாள் மனைவி”

கருவாச்சிக் காவியமும், கள்ளிக்காட்டு இதிகாசமும் நினைவுக்கு
வந்துபோயின, ஆனால் இன்னமும் கவிப்பேரரசர் மேடைக்கு வருவதாய்இல்லை. அதனால் தொடர்ந்து என் இதயக்குளத்தைத் தொட்டது அடுத்த கல்.
அந்தக்கல் “இந்தக் குளத்தில்க் கல் எறிந்தவர்கள்” தொகுப்பில் இருந்து –
கவிப்பேரரசரின் இதயத்தின் அடிவரை சென்ற “ அந்த ஒருத்தி”. அந்த
ஒருத்தியை நினைத்துத் தான் இவர் “என்னவளே அடி என்னவளே என்
இதயத்தைத் தொலைத்துவிட்டேன்” பாடலை எழுதியிருப்பாரோ என்று நான் நினைக்கவும் கவிப்பேரரசர் மேடைக்கு வரவும் சரியாக இருந்த்து.

தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் பார்த்த அதே வைரமுத்து, அதே வெண்ணிற ஆடையில் மேடையில்! காத்திருந்த இரசிகர்களுக்குக் கைகூப்பி வணக்கம் கூறுகிறார் – எப்படித்தெரியுமா? “ இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது இரண்டாவது வணக்கம்!

அப்படியானால் முதலாவது வணக்கம் யாருக்கு? ----அனைவரது
முகத்திலும் ஒரு கேள்விக்குறி? பதில் என்னவாக இருக்கும்

என்ற ஆவலில் மண்டபத்தில் ஆழமான நிசப்தம். “பட்டுச்சேலை கட்டி
வந்திருக்கும் தாய்மாருக்கு எனது முதல் வணக்கம்” சொல்லி
முடிக்கவில்லை அவர், பட்டுச்சேலை கட்டிவந்த தாய்க்குலம் மட்டுமல்ல, மேலைநாட்டு நாகரீக ஆடையில் வந்திருந்த ஆடவர்களும் கூட
உருகிவிட்டார்கள் என்பதை அவர்களது கரவொலி காட்டியது.
கரவொலி ஓயவும், வைரமுத்துவின் குரலொலி தொடர்ந்தது. தனது முதல்ப்பாடல் பற்றி, 30வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தனது அந்த அனுபவம் பற்றி – முதல்ப் பிரசவத்துக்காகத் தனது மனைவி வைத்தியசாலையில் பிரசவ வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கத், தான் தனது முதலாவது பாடலை, ”நிழல்கள்” படத்துக்காகப் பிரசவித்துக்கொண்டிருந்த அனுபவம் பற்றிக் கூறியபோது, அந்த இரண்டு காட்சிகளும் எனது கற்பனையில் வந்து போயின. அந்த வேளையில் அங்கே மேடையில் அந்தப் பாடல் -

“இது ஒரு பொன்மாலைப் பொழுது”

ஆமாம்! கவிப்பேரரசரின் முதல்த் திரை இசைப்பாடலான “இது ஒரு பொன்மாலைப் பொழுதுடன் ஆரம்பித்த அந்த இனிமையான மாலைப்பொழுதில், தனது பிரபல்யமான பாடல்கள், விருதுபெற்ற பாடல்கள் பலவற்றைத் தெரிவுசெய்து, அவை பற்றியும் – அவை பிறந்த கதை பற்றியும் தனக்கே உரிய வைரவரிகளில், வரிக்கு வரி இரசிக்கும் வண்ணம் ஒரு கதாசிரியனாக, ஒரு கதாநாயகனாகக் கதையைக் கொண்டுசென்ற வைரமுத்துவின் பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்கள் பிரபலப் பின்னணிப்பாடகர்கள் உன்னிக்கிருக்ஷ்ணன், மனோ, சுஜாத்தா, சுஜாத்தாவின் மகள் ஸ்வேதா.

பாடல்கள் மட்டும் போதுமா? நகைச்சுவை வேண்டாமா? என்பது போல, வைரமுத்துவின் பாடல் வரிகளை வைத்துக் கோர்த்த நகைச்சுவை நாடகத்துடன் இடை இடையே வந்து போனார்கள் சின்னக்கலைவாணர் விவேக்குடன் செல்முருகனும் சுகாசினியும்.

மொத்தத்தில் வைரத்தில் முத்துக்கள் பட்டைதீட்டப்பட்ட வைரத்தில் பதித்த முத்துக்களாக இதயத்தில் பதிந்துவிட்ட போதிலும் – இதனைப் பார்த்துக்கொண்டிருந்த போது எனக்குள் ஏற்பட்ட ஆதங்கத்தையும் இங்கே சொல்லியே தான் ஆகவேண்டும்.

வைரத்தில் முத்துக்கள் மேடையில் கவிப்பேரரசர் தனக்கே உரிய தனித்துவமான வெண்ணிற ஆடையில் வந்தார். மனோ மேற்கத்தைய ஆடையில் வந்தாலும் அம்சமாக வந்தார். சின்னக்கலைவாணர் விவேக், செல்முருகன், சுகாசினி தத்தமது பாத்திரத்துக்கேற்றவாறு வந்தார்கள். ஆனால் உன்னிக்கிருக்ஷ்ணன்- - - -? ஏனோ தானோ என்ற பாணியில் ஜீன்சுடன்(jeans)மேடைக்கு வந்தபோது அதிர்ந்துவிட்டேன். முன்பு மெல்பேர்ண் மேடைகளில் பார்த்த அதே உன்னிக்கிருக்ஷ்ணன் தானா இவர்? நம்ப முடியவில்லை. நாம் போகின்ற இடத்துக்கு மதிப்புக்கொடுக்க வேண்டும் அல்லவா? அதற்கும் மேலாக நாம் ஏறுகின்ற மேடைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் அல்லவா? மிகவும் திறமை வாய்ந்த பிரபலப் பின்னணிப் பாடகர் மட்டுமல்லாமல், சிறந்த கர்நாடக இசைப்பாடகருமான இவருக்கு ஏன் இந்த அலட்சியம் என்று நினைத்துக் கொண்டேன். அவுஸ்திரேலியாவில் இதுதான் நாகரீகம் என்று நினைத்தாரோ என்றும் நினைத்துக் கொண்டேன்.

பட்டுச்சேலை கட்டிப் பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு முதல்வணக்கம் கூறி வரவேற்ற கவிப்பேரரசரின் கண்களில் இவர் படவில்லையா என்றும் நினைத்துக் கொண்டேன். சுஜாத்தாவும் பட்டுச்சேலை கட்டி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த அந்த வேளையில் எனக்கு மிகவும் பிடித்த “புத்தம்புது பூமிவேண்டும் நித்தம் ஒருவானம் வேண்டும்” நிகழ்ச்சியின் இறுதிப்பாடலாக ஒலிக்கவும் சரியாக இருந்தது. கவிப்பேரரசரைப் பார்த்த, அவரது அழகிய தமிழைக் கேட்ட நிறைவோடும்,மகிழ்வோடும் வெளியே வந்தால் அங்கே இளைய நிலாப் பொழிகிறது.

1 comment:

seelan said...

அவின் குரல்தான் முக்கியம் ....உடையல்ல

அவுஸ்ரெலியா கலாச்சார உடையில் வந்து அவுஸ்ரெலியா டமிழ் ரசிகரை கவர்ந்த உன்னிகிருஸ்ணனுக்கு ஒரு ஒ போடுவோம்...அத்துடன்

விமர்சகருக்கும் ஒ போடுவோம்