ஊடகம், படைப்பிலக்கியத்துறைகளில் செவ்விதாக்கம்

.
ஊடகம், படைப்பிலக்கியத்துறைகளில் செவ்விதாக்கம்
செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் கவனிக்கவேண்டிய பக்கம்
செவ்விதாக்கம் பல்கலைக்கழகங்களில் பாடநெறியாகுமா?

2011 சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலில் இடம்பெறும் முதல் நிகழ்ச்சி
 முருகபூபதி
ஊடகத்துறையில் செம்மைப்படுத்தும் (Editing)  பணியானது இந்தத்துறையின் தொடக்க காலத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அத்துடன் மேலைத்தேய நாடுகளில் படைப்பு இலக்கிய வெளியீட்டுத்துறையில் பதி;ப்பாளருக்கும் படைப்பாளிக்கும் இடையே கொப்பி எடிட்டர் (Copy Editor)  பணியாற்றுவார். இவரது பணி நூலுருவில் வெளியிடப்படவுள்ள படைப்பின் மூலத்தை சிதைக்காமல் செம்மைப்படுத்துவது.

இங்கு பதிப்பாளர்-படைப்பாளர்- கொப்பி எடிட்டர் மூவருக்கும் இடையே ஆரோக்கியமான உறவு இருப்பின் வெளியாகும் நூலும் தரமாக அமைந்துவிடும். இந்தக்கலாசாரம் எமது தமிழ்ச்சூழலில் முறையாக வளர்த்தெடுக்கப்படவில்லை.

தமிழ் ஊடகங்களைப்பொறுத்தமட்டில் செய்திகளை சேகரித்து எழுதியனுப்பும் நிருபர், அதனை எடிட்செய்யும் ஆசிரியர் அல்லது துணை ஆசிரியர் ஆகியோருக்கிடையில் தொடர்பு நெருக்கமாகவிருக்கும். நிருபர் அனுப்பும் செய்தியை அப்படியே பிரசுரித்தால், ஒலி-ஒளிபரப்பினால் அதனால் எந்தத்தவறும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட செய்தியின் உண்மைத்தன்மை குறித்து பிரச்சினை எழுந்து விவகாரமாகும்போது ஊடகத்தின் ஆசிரியரோ அல்லது நிருவாகமோ நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறவேண்டி துர்ப்பாக்கியம் வந்துவிடும்.

அதனாலேயே ஆசிரிய பீடங்களில் துணை ஆசிரியர் குழாம் ஒன்று இயங்கிக்கொண்டிருக்கும். அச்சில் வந்த எழுத்துப்பிழைகளே கருத்துப்பிழையாகி விவகாரமாகிய சுவாரஸ்யங்களும் உண்டு. அறிந்தவற்றை பட்டியலிட்டால் நிலத்தில் விழாதகுறையாக சிரிக்கலாம்.

தமிழ் இலக்கியச்சூழலில் செம்மைப்படுத்தும் கலை தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழில் எழுதியிருந்தேன். அதுதொடர்பாக சில எதிர்வினைகளும் எழுந்தன. நாம் எதிர்வரும் 2011 ஜனவரியில் கொழும்பில் நடத்தவிருக்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலில் ஒழுங்குசெய்யவிருக்கும் கருத்தரங்கு அமர்வுகளில் இந்த செம்மைப்படுத்தும் கலை தொடர்பாகவும் விரிவாக ஆராயவிருக்கின்றோம்.

சர்வதேச ஒன்றுகூடல் தொடர்பாக கடந்த ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் தகைமைசார் பேராசிரியர் கா.சிவத்தம்பி, செம்மைப்படுத்தலை செவ்விதாக்கம் என்றும் அழைக்கலாம் என்று சிறுதிருத்தம் கூறி விரிவாக உரையாற்றினார். இக்கூட்டத்தில் கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளினதும் இலக்கிய இதழ்களினதும் ஆசிரியர்களும் நூல் பதிப்புத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தனர்.

இலத்திரணியல் ஊடகங்களின் பெருக்கத்தினாலும் படைப்புகளை கணனியில் வேகமாக பதிவுசெய்யக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருப்பதனாலும் செம்மைப்படுத்துவது இலகுவானதாகியிருக்கிறது. ஆனால் இதுபற்றிய சிந்தனை தொடர்ச்சியாக வளர்க்கப்படவில்லை.

பெரும்பாலான தமிழ்ப்படைப்பாளிகள் தாம் எழுதியது அப்படியே ஊடகங்களில் மாற்றம் திருத்தமின்றி வெளியாகவேண்டும் என்றே விரும்புகிறார்கள். தப்பித்தவறி ஆசிரியர் அதில் கைவைத்துவிட்டால் உறவு குலைந்துவிடும். வெளியீட்டு முயற்சி கூட ஒருவகையில் குழுப்பணிதான் (Team Work)  என்பதை புரிந்துகொள்ள மறுப்பதனால்தான் இத்தகைய சங்கடங்களும் தோன்றுகின்றன.

சில வாசகர் கடிதங்களை அல்லது படைப்புகளை இதழாசிரியர் அதன் உள்ளடக்கம் தெரிந்தோ தெரியாமலோ பிரசுரித்துவிட்டால் அதனால் பாதிக்கப்படும் அல்லது இதழுக்கு பொருத்தமற்றது எனக்கருதும் வாசகர் தாமதமின்றி தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது கடிதம் ஊடாக தமது எதிர்வினையை சமர்ப்பித்துவிடுவார். அதில், “ஏனைய்யா உங்கள் அலுவலகத்தில் குப்பைக்கூடை இல்லையா? குப்பையில் போடவேண்டியதையெல்லாம் பிரசுரித்து பக்கங்களை வீணடிக்கிறீரே....!” என்று தெரிவிப்பார்.

இந்த அனுபவத்தை பல இதழாசிரியர்கள் சந்தித்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்தபோது தீபம் தொலைக்காட்சியில் நான் பங்கேற்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் அனஸ். இளைய அப்துல்லா, செம்மைப்படுத்தும் விடயத்தில் இலக்கிய இதழ்கள் போதிய கவனம் எடுப்பதில்லை என்று தமது வருத்தத்தை தெரிவித்தார்.

ஈழத்து இலக்கிய உலகில் முன்னர் சில எழுத்தாளர்களின் படைப்புகளை எஸ்.பொ. செம்மைப்படுத்திக்கொடுத்திருப்பதாகத்தகவல் உண்டு. ஆனால், எஸ்.பொ. குறிப்பிட்ட எழுத்தாளர்களுடன் முரண்பட்டவுடன் தாம்தான் அவர்களுக்கு எழுதிக்கொடுத்ததாகவும் பல சந்தர்ப்பங்களில் அவர்களின் பெயரையே புனைபெயராக்கி எழுதியிருப்பதாகவும் குசும்புத்தனம் புரிந்திருக்கிறார். மேலைத்தேய நாடுகளில் பல புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகளை பதிப்பாளரின் வேண்டுகோளுக்கு ஏற்ப செம்மைப்படுத்தியிருப்பவர்களிடம் இத்தகைய குசும்புத்தனம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

விக்ரம்;சேத்தின் Suitabale Boy என்ற நாவல் ஆறு பதிப்பாசிரியர்களிடம் சென்றிருப்பதாகவும் அவர்களின் ஆலோசனைகளின் பின்னர்தான் அதற்கு நேர்த்தியான வடிவம் கிடைத்ததாகவும் தகவல் இருக்கிறது.

இலக்கிய படைப்புகளை செம்மைப்படுத்துவதன் தேவை அவசியமானது என்ற காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

பத்திரிகை ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வாசகர்களின் கவனத்தையும் கருத்தையும் ஈர்ப்பதற்கு அவற்றின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறும் அதேதருணம் அவற்றின் தலைப்புகளும் சிந்தனையில் ஊடுருவும். தலைப்பைப்பார்த்துவிட்டே குறிப்பிட்ட செய்தியை படிக்கலாமா தவிர்க்கலாமா என்றும் வாசகர்கள் தீர்மானிப்பதுண்டு. அதனால் தலைப்பும் ஊடகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது.

தொலைக்காட்சி, வானொலிகளில் தலைப்புச்செய்திகள் சொல்லப்படுவதன் தாற்பரியமும் அதுதான். நான் சிலவருடங்கள் வீரகேசரியில் ஆசிரியபீடத்திலும் அதற்குமுன்னர் அங்கே ஒப்புநோக்காளர் பிரிவிலும் பணியாற்றியிருக்கின்றேன். அச்சமயம் செய்தி ஆசிரியர்களாக பணியாற்றிய திருவாளர்கள் டேவிட் ராஜூ, நடராஜா ஆகியோர் பத்திரிகையாளர்களான அலுவலக நிருபர்களுக்கும் வெளியூர் நிருபர்களுக்கும் தெரிவிக்கும் ஒரு முக்கியமான ஆலோசனை எக்காலத்துக்கும் பொருத்தமானது.

அவர்கள் சொல்வார்கள்: “நீங்கள் எழுதிக்கொடுக்கும் செய்தி பத்திரிகையில் என்ன வடிவத்தில் வெளியாகிறது என்பதை கவனியுங்கள்”

இந்த ஆலோசனை பின்பற்றப்படும்போது செய்தி எழுத்துப்பயிற்சி நிச்சயமாக செம்மையுறும்.

ரயில் கடவை இல்லாத இடத்தில் ஒரு பாதசாரி ரயிலால் மோதுண்டு இறந்தார் என்றால் அந்தச்செய்தியின் தலைப்பிலும் உள்ளடக்கத்திலும் அங்கே கடவை இல்லையென்பதும் அதுவே விபத்துக்கான காரணம் என்பதும் அழுத்தமாக பதிவாகவேண்டும். எனச்சொல்வார் டேவிட்ராஜூ.

நடராஜா கவித்துவமான தலைப்புகளை இடுவார். ஒருசமயம் கொழும்பிலிருந்து புறப்பட்ட யாழ்தேவி ரயிலில் பாதுகாப்பு படையினர் பொதுமக்களை பணயமாகவைத்துக்கொண்டு கிளிநொச்சிக்கும் ஆனையிறவுக்கும் இடையே பயணித்து தமது முகாம்களுக்கு சென்றனர். தமது பாதுகாப்புக்காக அவ்வாறு நடந்துகொண்ட படையினர் பொதுமக்கள் அதனால் எதிர்நோக்கிய அசௌகரியத்தையிட்டு ஊடகம் ஊடாக செய்தியை வெளியிட்டபோது அதற்கு நடராஜா இட்ட தலைப்பு “ யாழ்தேவி, நீ யார் தேவி? நிற்பதும் ஓடுவதும் யாருக்காக?”

இப்படியாக பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டேபோகலாம்.

ஆக்க இலக்கியத்தில் செவ்விதாக்கம்.

இன்று தமிழ் இலக்கிய உலகில் பிரதான பேசுபொருளாக இருப்பதும் இந்த செவ்விதாக்கம்தான். அதற்குக்காரணமாகியிருக்கும் அம்சங்கள் பல. இலத்திரணியல் ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சி. புதிய தலைமுறை படைப்பாளிகளின் பங்களிப்பு, சிற்றிதழ்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள் நடத்தும் சிறுகதை, கவிதைப்போட்டிகள். அவற்றில் பங்கேற்க துடிப்போடு எழுதும் இளம்படைப்பாளிகள். புலம்பெயர்ந்தவர்களிடம் நிதிவளம் இருக்கிறது என நம்பிக்கொண்டு தமிழகத்தில் புத்தக பதிப்புத்துறையை தொழிற்சாலையாக்கி அச்சடித்துக்குவிக்கும் சில பதிப்பகங்கள் அவற்றின் உள்ளடக்கத்தின் தரம்பற்றிய பிரக்ஞையின்றி இயங்கும்தன்மைகள். குறிப்பிட்ட அம்சங்களாகியிருக்கின்றன.

அதனால் ஒரு படைப்பு அச்சுக்குச்செல்லும் முன்னர் அல்லது நூலுருவாகும் முன்னர் நம்பிக்கைக்குரிய ஒரு தேர்ந்த வாசகரிடம் அல்லது எழுத்தாளரிடம் பார்வைக்கு அனுப்பி செம்மைப்படுத்துதல் நல்லது என்ற கருத்து வளர்ந்துவருகிறது.

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் யுகமாயினி மாத இதழில் ஆர்.வெங்கடேஷ் என்ற எழுத்தாளர் தமது ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தியிருந்தார்.

“ நம்ம ஊரில், ‘ப்ரூஃப் ரீடர்’களை எடிட்டர்களாக நினைக்கிறார்கள். பதிப்பாசிரியர்கள் என்ற சாதி இங்கே ‘மைனாரிட்டி கம்யூனிட்டி’. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் முதுகலைப்பட்டப்படிப்புகளில் எடிட்டிங்கை ஒரு பாடமாகவேனும் வைத்து இதற்கு உயிர் கொடுக்கலாம். எழுத்தாளர்களின் வளரச்சிக்கேற்ப நுண்ணுணர்வு கொண்ட எடிட்டர்களின் எண்ணிக்கை வளரவில்லை என்பது வருத்தமான விஷயம்.”

அவரது யோசனையை நாமும் பல மட்டங்களில் விவாதித்து ஏற்றுக்கொள்ளலாம்.

இலங்கையில் ஊடகத்துறை பயிற்சிக்கல்லூரிகளில் எடிட்டிங் என்பது முக்கிய பாடத்திட்டமாக இருப்பதுபோன்று இலக்கிய அமைப்புகளும் தமது நிகழ்ச்சிகளில் செவ்விதாக்கம் தொடர்பான பயிற்சிப்பட்டறைகளையும் இணைத்துக்கொள்ளலாம்.

அதற்கு கால்கோள் இடுமாப்போன்றுதான் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடலின் நிகழ்ச்சி நிரலில் படைப்பு இலக்கியத்துறையில் செவ்விதாக்கம் என்ற தலைப்பில் ஒரு முழுநாள் கருத்தரங்கை நடத்த எண்ணியுள்ளோம்.

இதில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் அல்லது இதுவிடயத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புபவர்கள் தாமதமின்றி பின்வரும் முகவரியில் எழுத்துமூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயர்களை பதிவுசெய்துகொள்ளலாம். மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

E.Mail: international.twfes@yahoo.com.au
முகவரி:
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் (International Tamil Writers Forum)

3 B, 46th Lane, Wellawatte, Colombo-06

வீரகேசரி வாரவெளியீட்டில் (02-05-2010) பிரசுரமானது

No comments: