சிட்னியில் ஒளிர்ந்த "வைர(த்தில்) முத்து(க்கள்)

கானா பிரபா

திரையிசைக்கவிஞர்கள் கறிவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு வந்து காட்டியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கு முன்னான காலகட்டத்தின் சகாப்தங்களான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்ற ஆளுமைகள் தமிழ்த்திரையிசைப் பாடல்களின் தனித்துவங்களாக இருந்தாலும், கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடலாசிரியர்களுக்கான தனித்துவம் என்ற விஷயத்தில் முன்சொன்னது போல நட்சத்திர முத்திரையைப் பதித்திருக்கின்றார். அந்த வகையில் ஒரு பாடலாசிரியரை முன்வைத்து அவுஸ்திரேலியாவில் நடக்கும் முதல் கலை நிகழ்ச்சியாக அமைந்தது சரிண்டா வழங்கிய "வைரத்தில் முத்துக்கள்". இந்த நிகழ்வு  சனிக்கிழமை யூலை 3 ஆம் திகதி சிட்னி நகரமண்டபத்தில் இரவு 7.30 முதல் இரவு 10.30 வரை நடந்தது.

கவிஞர் வைரமுத்துவோடு பாடகர்கள் மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா (சுஜாதா மகள்) ஆகியோரோடு நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் இணைந்து இந்த "வைரத்தில் முத்துக்கள்" நிகழ்ச்சியைப் படைத்திருந்தனர்.
ஓவ்வொரு திரையிசைப்பாடல்கள் பிரசவிக்கும் போதும் அதன் பின் சுவையான ஒரு சம்பவம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதைத் தன் பாணியிலே வைரமுத்து அவர்கள் விவரித்து தருவது தனித்துவமானது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றதற்கும் முதற்காரணம் "வைரமுத்து"வே தான். "நேற்றுப் போட்ட கோலம்" என்ற நூலில் தன் திரையிசைப்பாடல்கள் பிறந்த கதையைக் கவிதையாக வர்ணித்து எழுதியதைப் பலமுறை ரசித்திருக்கின்றேன். அந்த சுகானுபவம் நேரிலே கிட்டவெண்ணி நிகழ்ச்சிக்குப் படையெடுத்தேன்.

நிகழ்ச்சி ஆரம்பமானது, தன் அக்மார்க் தும்பைப்பூ வெள்ளை உடைக்குள் கறுப்பு வைரம் மேடையில் தோன்றப் பார்வையாளர் கூட்டம் ஆரவாரித்ததில் இருந்தே என்னைப் போலவே இன்னொரு கூட்டமும் அங்கே வந்திருந்ததைக் கைதட்டிக் காட்டியது. முதற்பாடல் நிழல்கள் படத்தின் தன் முதற்பிரசவமான "இது ஒரு பொன்மாலைப்பொழுது" பாடல் பிறந்த கதையைச் சொன்னார். மார்ச் 10 ஆம் திகதி இயக்குனர் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா ஆகியோரோடு இந்தப் பாடலை எழுதும்போது மனைவி பொன்மணி வைரமுத்து தன் முதற்பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த நாள் முப்பது நிமிடத்தில் இட்டுக்கட்டிய அந்தப் பாடலின் நினைவை 30 வருசங்களுக்குப் பின் மேடையில் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கேட்ட விஷயம் என்றாலும் ஒரு மெய்சிலிர்ப்பான அனுபவம். தன் முதற் பாடல் எழுதி முடிந்ததும் இளையராஜா, வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்தபோது "அட இந்தக் கருவாயன் லேசில் இப்படியெல்லாம் செய்ய மாட்டானே" என்று வைரமுத்துவிடம் சொல்லியதைச் சிரித்துக் கொண்டே சொன்னவர் "யாரை யார் கருவாயன் என்று சொல்லுகிறார்" நாம் மூன்றுபேருமே இந்த விஷயத்தில் ஒற்றுமையானவர்கள் ஆச்சே, வைகை ஆத்துத் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களல்லவா நாம் மூவரும்" என்று அவர் சொன்ன கணம், பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்துவின் அந்தப் பொற்காலம் நினைவுக்கு வந்து ஏங்க வைத்தது. இந்தப் பாடலை மனோ பாடி முடிந்ததும். இந்தப் பாடலுக்காக விடுபட்ட சரணத்தை இங்கே தருகின்றேன் என்று சொல்லியதும், மனோ "இரவும் பகலும் யாசிக்கிறேன்" என்று தொடர்ந்தார் அந்தக் கேட்காத கவிவரிகளை.

பாடகர் மனோவைப் பொறுத்தவரை ராஜா வைரமுத்துவோடு உரசிக்கொண்ட எண்பதுகளின் அந்த நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ராஜாவின் வளர்ப்பு மகனாகச் சீராட்டப்பட்டவர் பாட்டுலகில். எனவே வைரமுத்துவின் வரிகளில் மனோவுக்கான தனி அங்கீகாரம் பெற்ற பாடல் ஒன்றுமே இல்லை என்றே சொல்லி விடலாம். பின்னர் ரஹ்மானின் சகாப்தம் மலர்ந்த போதுதான் மனோவுக்கும் வைரமுத்துவுக்குமான கூட்டணி என்பது ஓரளவு சொல்லத் தக்கதாக இருந்தது. எனவே வைரமுத்துவை முன்வைத்து நடந்த இந்த நிகழ்ச்சியில் மனோ, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நகலாகவே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம், குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் என்று வந்த போது. அந்த வகையில் மூன்று மணி நேர இசைவிருந்தில் இரண்டே இரண்டு இளையராஜா பாடல்கள் தான் கிட்டியது. இதுவே வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் கூடவே சித்ரா என்று கூட்டணி வைத்துக் கச்சேரி பண்ணியிருந்தால் எந்திரன் அளவுக்கு எகிறியிருக்கும்.

சிட்னிக்குளிர் உன்னிகிருஷ்ணனின் எதிரியாக அமைந்து அவரின் குரல்வளையை நெரித்ததை முதல் நாள் பேட்டி எடுத்த போதே உணர்ந்தேன். அது நிகழ்ச்சி நடந்த போதும் தொடர்ந்தது துரதிஷ்டம். "என்னவளே அடி என்னவளே", "பூவுக்குள் ஒளிந்திருக்கும்" (ஸ்வேதாவோடு) போன்ற தன் பாடல்களைத் தந்ததோடு சிவாஜி படத்தில் உதித் நாராயணன் குரலுக்காக இவர் மேடையில் பாடிய "சஹானா சாரல் தூவுதோ" என்ற பாடலை எடுத்தது பெரிய ரிஸ்காக அமைந்து விட்டது. சென்னையில் பாடினால் மும்பையில் எதிரொலிக்கும் உச்சஸ்தாயி உதித் இன் குரலில் உன்னி மேலே சென்ற போது குரல்வளையை இன்னும் இறுக நெரித்து இயற்கை சதி செய்தது. வெகு லாவகமாகப் பாடித் தேசிய விருதைக் கைப்பற்றிக் கொண்ட "உயிரும் நீயே உடலும் நீயே" பாடலைக் கொடுத்துக் கொள்ளை கொண்டிருக்கலாமே.


ஆந்திரா தமிழ் நாட்டுக்கு இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் பி.சி.சுசீலா, மற்றவர் ஜானகி. அதேபோல் கேரளம் இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் சித்ரா மற்றவர் சுஜாதா என்ற வைரமுத்துவின் அறிமுகத்தோடு சுஜாதா தோன்றினார்.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது ஐந்து முறை கிடைத்த போதும் அந்தப் பாடல்களுக்குத் தேசிய விருது கிட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பாடலுக்கு எதிர்பார்த்தேன் ஆனால் கிட்டவில்லை, விருது என்பதே எதிர்பாரால் கிடைக்க வேண்டியது தானே என்று சொல்ல சுஜாதா பாடிய பாடல் "காற்றின் மொழி ஒலியா இசையா " என்று சுஜாதா பாடி அந்தப் பாடலை முடிக்கும் நிமிடத்துளிகள் வரை சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கி ஒன்றித்தது அந்தப் பாடலை அவர் கொடுத்த அந்தத் தெய்வீகக் குரலில். சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தப் பாடலை ஶ்ரீலேகா பார்த்தசாரதி ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி, வாழைத்தோப்புக்குள் யானை புகுந்த கதையாய் துவம்சம் பண்ணியிருந்தார். அந்த வலிக்கு ஒத்தடமாக அமைந்தது சுஜாதாவின் இந்த அட்சர சுத்த அக்க்ஷய திருதைத் தங்கக் குரல். சுஜாதாவுக்குப் பின் வந்த சித்ராவுக்குக் கூட இப்போதெல்லாம் மேடைக்கச்சேரி செய்யும் போது உச்சஸ்தாயியில் ஒரு பாடலைக் கொண்டு போகும் போது, லிப்ட் இயங்காத நேரம் பாத்து பத்து மாடிக்கு ஏறிய களைப்பு வருவதைப் பார்க்கலாம். ஆனால் சுஜாதா இந்த விஷயத்தில் வெகு லாவகமாக ஸ்கோர் செய்து ஆட்டத்தில் இருக்கிறார். தன் சுத்தத்தமிழுக்கு ஆசான் வைரமுத்து என்றார் சுஜாதா.

பாடகி சுஜாதாவுக்கும் , அவர் மகள் ஸ்வேதாவுக்கும் வயசில் தான் வித்தியாசம், வாய்சில் அல்ல என்ற வைரமுத்துவின் கூற்றைப் பலமடங்கு நிரூபித்தது சுஜாதாவின் குரல்.

பாடகி சுஜாதா சிட்னியில் இறங்கும் நேரம் பார்த்து திரையிசையின் பெரும் பிதாமகர்களில் யாராவது இறப்பது ஒரு வாடிக்கையாக விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி சுஜாதா இங்கே வந்து வானொலியில் பேட்டி கொடுத்த நேரம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இறந்த சேதியைச் சொன்னேன் அவருக்கு. அந்த நேரம் அவர் அதிர்ச்சி கலந்த கவலையோடு "மகாதேவன் மாமா" என்று உருகி, மகாதேவனின் பெருமையைச் சிலாக்கித்திருந்தார். மீண்டும் இந்த முறை அவர் வந்த நேரம் இன்னொரு இசையமையாளரின் இறப்புச் செய்தியும் வந்தது. மலையாள சினிமாவின் சாகித்யங்களில் ஒருவரான எம்.ஜி.ராதாகிருஷ்ணன் கடந்த ஜீன் 2 ஆம் திகதி இறந்த சேதி வந்தது. இரண்டுமே வெள்ளிக்கிழமைகள். மலையாள இசையின் ஆளுமை எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு இந்த வேளை என் இரங்கல்களைப் பதிவு செய்கின்றேன்.

எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மலையாள சினிமாவின் தனித்துவம் மிக்க இசையமைப்பாளராக விளங்கி வந்திருக்கின்றார். கே.ஜே.ஜேசுதாசின் சக பாடகி சுஜாதாவை முதன்முதலில் தனிப்பாடல் ஆல்பம் மூலமாகவும் , சித்ராவை திரையிசைப்பாடகியாகவும் அறிமுகப்படுத்தியவரே இவரே. கமலா சுரையாவின் கவிதைகளை "சுரையா பாடுன்னு என்ற இசை அல்பமாக ஆக்கியிருக்கின்றார். தலைசிறந்த இயக்குனர் அரவிந்தனின் அரவிந்தனின் 'தம்ப்' ஆர்ட் பிலிம் மூலம் இசையமைப்பாளர், ஆல் இந்தியா ரேடியோவில் தம்புரா கலைஞராக மாதச் சம்பளத்தில் சேர்ந்து வாய்ப்பாட்டு கிளாஸ் திருவனந்தை வானொலியில் நடத்தியது மூலம் பிரபலம், மனைவி பத்மஜா மலையாளத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், இவரின் சகோதரர் எம்.ஜி.ஶ்ரீகுமார் பிரல பின்னணிப்பாடகர்.(தகவல் குறிப்புக்கள் ஆதாரம் விக்கிபீடியா, இரா.முருகன்). அத்தோடு தமிழில் சந்திரமுகியாகக் குதறப்பட்ட மணிசித்ரதாளு மலையாளப்படத்தில் இவர் வழங்கிய இசை அந்தப் படத்தின் அடிநாதமாக விளங்கியதைப் படத்தைப் பார்க்கும் போதே அனுபவித்திருக்கின்றேன். குறிப்பாக மணிச்சித்ரதாளுவில் வரும் தமிழ்ப்பாடலான "ஒருமுறை வந்து பார்ப்பாயா" என்ற கே.எஸ்.சித்ரா, கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் உட்பட இந்தப் படத்தில் வந்த மற்றைய பாடல்களும். இவரின் இசையை நான் எல்.வைத்யநாதனின் இசை வரிசையில் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் தோட்டத்தில் இருந்த பாலசந்தரின் அலுவலகத்துக்கு ஒருமுறை வைரமுத்துவை அழைத்து புதுசா ஒரு பையன் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறான், வந்து பாருங்கள் என்று பாலசந்தர் அழைத்தபோது அங்கே ஜமுக்காளம் விரித்துத் தரையில் கீபோர்டுடன் உட்கார்ந்திருந்த திலீப் என்ற பையன் பின்னாளில் ரஹ்மான் என்ற ஆஸ்கார் நாயகனாக வந்த நினைவைப் பகிர்ந்து கொண்ட வைரமுத்து, "சின்னச் சின்ன ஆசை" என்ற ரோஜா பாடலைக் கேட்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஒரு தமிழர் கடிதம் எழுதிய போது தன்னோடு இருக்கும் மற்ற மொழிக்கார சகாக்கள் இந்தப் பாடலின் ஹிந்தி வடிவத்தை விடத் தமிழைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள் என்று சொல்லி நெகிழ வைத்தார். ஸ்வேதா அந்தப் பாடலைப் பாடிய போது அச்சொட்டாக மின்மினியின் குரல் தான். இந்த ஸ்வேதா இன்னும் ஆறுமாதங்களில் திருமண பந்தத்தில் இணைகிறார் என்றவாறே வைரமுத்து "மணமகளே மருமகளே வா வா" என்று குறும்பாகப் பாடிய போது ஸ்வேதா முகத்தில் அவர் அம்மா அடிக்கடி காட்டும் வெட்கம். பத்து வருசங்களுக்கு முன் அம்மாவோடு சிட்னி வந்திருக்கேன் ஆனா அப்போது நான் மீண்டும் இங்கே ஒரு பாடகியாக வருவேன்னு நினைச்சுப் பார்க்கலை என்று ஸ்வேதா நெகிழ்ந்தார். அது மட்டுமே அவர் பேசிய முதலும் கடைசியுமான வார்த்தைகள்.
"வேற்றுமொழிப்பாடகர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடலாமா" என்று என்னிடம் கேட்ட போது, தமிழைச் சிதைக்காதவரை யாரும் அதைச் செய்யலாம். செளராஷ்டிரர் செளந்தரராஜன், கன்னடர் ஶ்ரீனிவாஸ் தொட்டு பல உதாரணங்களைச் சொன்ன வைரமுத்து தமிழ்ப்பாடல்களைப் பாடிய பெரும்பான்மை வேற்றுமொழிப்பாடகர்கள் தான் அதைச் சிதையாமல் பாடியிருக்கின்றார்கள் என்றவாறே பாடகர் உதித் நாராயணன் ஈஸ்வரா என்ற பாடலில் "பிரியமான பெண்ணை ரசிக்கலாம்" என்பதை "பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்" என்று மாற்றிப் பாடிய அந்த நிகழ்வைச் சொன்ன போது அரங்கம் சிரிப்பு மழையில் அதிர்ந்தது. எட்டு நிமிடங்கள் மட்டுமே எழுத நேரம் பிடித்தது என்று பாட்ஷா பாடலான "ரா ரா ராமையா" பாடலைச் சொல்லிவிட்டு, இரண்டு நாள் இடைவெளியில் காதல் ஓவியம் படத்தில் பாடலான "சங்கீதஜாதி முல்லை" பாடலை இரவோடிரவாக இளையராஜா விட்டுக் கதவைத் தட்டி, லுங்கி கட்டிய ராஜா ஆர்மோனியம் வாசிக்க மெட்டமைத்துக் கண்ணீர் விட்டுப் பின் விநியோகஸ்கர்கள் படத்தின் தோல்வியால் கண்ணீர் விட்ட கதையைச் சொன்னார். அந்தப் பாடலை மனோ பிரதிக் குரலெடுத்துப் பாடினார்.
ராக்கமா கையத் தட்டு பாடல் போல ரஹ்மான் தன் பங்குக்குத் தந்த திருடா திருடா பட "வீரபாண்டிக் கோட்டையிலே" பாடலின் மூல வடிவில் மனோ, உன்னிமேனன், சித்ரா ஆகியோர் பாடியிருப்பார்கள். அதே பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா பாடியது சிறப்பாக இருந்தது. பாடி முடிந்ததும் முதல் தடவையா முயற்சி பண்ணியிருந்தேன் என்று மூச்சு வாங்கியவாறே சிரித்தார்.

"வைரமுத்துவின் ரசிகை" என்ற நகைச்சுவை நாடகத்தை விவேக் தன் பரிவாரங்களான செல் முருகன், சுஹாசினி ஆகியோருடன் நான்கு பாடல்களுக்கு இடையில் என்று பாகங்களாகக் கொடுத்திருந்தார். வைரமுத்து போல நடித்து காதலிக்கும் ஆண்மகனாக விவேக். முடிவில் வைரமுத்துவே தோன்றி "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்" ஆனால் காதலுக்கு ஒரு பொய்யும் சொல்லக்கூடாது என்று முத்தாய்ப்பாய் முடித்தார். அளவான நகைச்சுவை என்பதால் ரசிக்க முடிந்தது.
செம்மொழி மாநாட்டில் பேச வந்த கலிபோர்னிய நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் புழங்கிய சொற்களையும் இன்றும் காத்துப் பேசிவரும் மொழி தமிழ்மொழி என்று சிலாகித்ததைச் சொல்லி மகிழ்ந்த வைரமுத்து பாரிமன்னனின் மகளிர் பாடும் சங்கத்துப் பாடலை ஆதாரமாகக் கொண்டு எழுதிய "நறுமுகையே நறுமுகையே" பாடலைச் சொல்ல, உன்னிகிருஷ்ணனோடு ஸ்வேதா பாடினார்.
கொச்சி தாஜ் ஹோட்டலில் முத்து பாடல்பதிவு இடம்பெற்ற சமயம் நெப்போலியின் கடைசி ஆசையினை ரஜினிக்குச் சொன்ன போது கேட்டு வியந்த அவர் ஏதாவது ஒரு பாடலில் புகுத்தவேண்டும் என்று ஆசை கொண்ட போது எழுதியது தான் "மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை" என்ற "ஒருவன் ஒருவன் முதலாளி" பாடல் என்றார். முத்து படத்தில் இருந்து இன்னொரு முத்தாக மனோ, சுஜாதா பாடிய "தில்லானா தில்லானா" பாடலை ரஜினி போல ஆடிக்கொண்டே மனோ பாட , மீண்டும் சுஜாதாவின் முகம் வெட்கத்தால் நிரம்பியது.

திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு இசைக்குழு ஒன்று பக்கவாத்தியமாக வந்தாலும் பெரும்பாலான பாடல்களுக்குப் கரோக்கி இசை தான் என்பதை உன்னிப்பாகப்பார்த்தாலே தெரியும். ஆனால் சேட்டன்கள் நீண்ட நேரமாக "நல்லவங்க மாதிரியே வாசிச்சு நடிச்சாங்க" . ஏதோ ஒரு பாடலில் புல்லாங்குழல் ஸ்கோர் செய்யும் நேரம் முடிந்தும் புல்லாங்குழலை வச்சு பாவ்லா பண்ணி வாசிச்சுக் கொண்டிருந்தார் சேட்டன்.

"புத்தம் புது பூமி வேண்டும்" பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா ஆகியோர் பாட நிறைவாகியது நிகழ்ச்சி. இதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் தமிழர்களை மட்டும் இல்லாது பொத்தம் பொதுவாக விளம்பரப்படுத்துவதால், ஓவ்வொரு பாடலுக்கும் இடையில் "தமிழ் பாட்டு பாடுக", "கன்னட சாங் பிளீஸ்", "மலையாளம் ஒன்னு", "தெலுகு நம்பர் பிளீஸ்" என்றெல்லாம் கூக்குரல் வரும் ஆனால் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பிரச்சனை இல்லை. இருந்தாலும் நிகழ்ச்சி ஓய்ந்து விட்டது என்றதும் மேல்மாடியில் இருந்த சேட்டன்ஸ் & சேச்சிஸ் மலையாளம் மலையாளம் என்று கத்த சுஜாதா, ஸ்வேதா கடலினக்கரை போனோரே பாடலில் இருந்து சமீபத்தைய வரவு கோலக்குயில் கேட்டோ பாடல்களைத் துண்டு துண்டாகப் பாடி நிறைத்தார்கள். குறிப்பாக ஸ்வேதாவுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்த நைவேத்யம் திரைப்படப்பாடல் "கோலக்குயில் கேட்டோ ராதே என் ராதே" பாடலை அவர் அம்மா சுஜாதா பாடியது வல்லிய சுகமானு.

வைரமுத்து என்ற சகாப்தம் தமிழ்த்திரையிசையின் முக்கியமான சகாப்தங்களான இளையராஜா, ரஹ்மான் போன்ற ஆளுமைகளோடு இணைந்த காலங்கள் தனித்துவமானவை. அதை ஒரே நிகழ்ச்சியில் கொடுப்பதென்பது மகா கஷ்டம். இருந்த போதும் முன் சொன்னது போல இந்தப் பாடல்களுக்குப் பின்னால் அணி செய்த ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்றோரோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைப் படைத்தால் அந்த நிகழ்ச்சியின் வடிவமே இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கும் . கூடவே இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வைரமுத்து அவர்கள் ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுத்த விளக்கம் என்பது விலாவாரியாக சுவையாக இருந்து ஒருகட்டத்தில் சுருங்கி பின் நேரப்பற்றாக்குறையால் விளக்கங்களே இல்லாத வெறும் பாடல்களாக இருந்தது பெரும் குறை. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் படைத்த பாடல்கள் பிறந்த கதைகளைக் கேட்டாலும் மீண்டும் சலிப்புத் தட்டாவிட்டாலும் இதை விட இன்னும் பல அனுபவங்களை வேறு பாடல்களோடு கேட்க வேண்டும் என்ற ஆசையும் வருகின்றது. இதை விட முக்கியமாக, ராஜாவோடு முரண்பட்டு இருந்த காலத்தில் தன் இருண்ட காலத்தில் வெளிச்சமாய் மாற்றிக்காட்டிய முக்கியமான பாடல்களை வைரமுத்து அந்தக் காலகட்டத்து இசையமைப்பாளர்கள் சந்திரபோஸ் மற்றும் சங்கர் கணேஷ் போன்றோருடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பாடல் பிரசவ அனுபவங்கள் மேடைகளில் பதியப்படாதவை. அவை அரங்கேற வேண்டும் என்ற தீரா ஆசை இருந்தாலும் அந்தப் பாடல்களை ரசித்துக் கேட்கும் கூட்டம் எவ்வளவு தூரம் இந்த டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.
இவையெல்லாம் கடந்து "வைரத்தில் முத்துக்கள்" நம் மனதில் இடம்பிடித்த சுகானுபவம்.

1 comment:

Rajah said...

இசை நிகழ்சிக்கு போகவில்லை என்ற குறையை சிட்னி சுப்புவின் மூலம் அறியத்தந்ததுக்கு சிட்னி தமிழ் முரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்... ராஜா