கட்டுரை இப்படியும் நடக்கிறது August 5, 2023

 குதிரை பந்தயத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க


வாய்ப்பிருப்பதையறிந்த இரு நண்பர்கள் ஆளுக்கு ஒரு ‘ரேஸ்’ குதிரையை வாங்கினர்.

ஒருவர் கேட்டார், ‘நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே, என்ன செய்யலாம்?’.
அதற்கு மற்றையவர் சொன்னார், ‘என் குதிரைக்கு மட்டும் வாலை சிறிதாக வெட்டி எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்’ என்றார்.
அதுபோல் ஒரு குதிரையின் வால் வெட்டப்பட்டது.
ஆனால், அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குறும்புக்கார பையன் ஒருத்தன், மற்றைய குதிரையின் வாலையும் அதேபோல வெட்டிவிட்டதால், அடுத்த
நாள் இருவரும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர்.
இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும்வரை தொடர்ந்தது.
இப்போது குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக்கொண்டு நின்றன.
இதைப் பார்த்து கவலைப்பட்ட நண்பர்களில் ஒருவர் சொன்னார்: ‘சரி இனி சிவப்பு குதிரை உன்னுடையது, வெள்ளை என்னுடையது’.
இந்தக் கதைதான் இப்போது அடிக்கடி ஞாபகத்துக்கு வருகின்றது.
தையிட்டியில் விகாரை குறித்து சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அந்த விகாரை தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் காணி உரிமையாளர்களின் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டது பற்றி பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு அந்த விகாரைக்கு அப்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரே அடிக்கல் நாட்டிய செய்திகள் அப்போது அநேகமாக எல்லா ஊடகங்களிலுமே வெளிவந்திருந்தன.
இவ்வாறு அடிக்கல் நாட்டியபோதே, அது தனியார் காணி என்றும், அதில் விகாரை கட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் தையிட்டிக்குரிய உள்ளூராட்சி சபையான வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றியதோடு தமது பணி முடிந்தது என்று பிரதேச சபை இருந்துவிட்டது.
அதிலும் சிறப்பு, அந்த பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் இருந்த போதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலர் அந்தச் சபையில் இருந்தனர்.
ஆனால், நான்கு வருடங்கள் நடந்த கட்டுமானம் முடிந்து நூறு அடி உயரத்தில் விகாரை கட்டிமுடிந்த பின்னரே அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டம் நடத்தியது.
இது குறித்து முன்னரும் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
போராட்டம் என்றால், ஒரு கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படுவது.
அதாவது தையிட்டி விகாரையை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே அந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் தொடங்கப்பட்டபோது விகாரை இடித்தழிக்கப்படும்வரை தொடரும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது.
ஆனால், எந்தக் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தப்பட்டதோ அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமலே போராட்டம் நிறுத்தப்பட்டது.
இப்போது மாதந்தோறும் மீண்டும் மீண்டும் இரண்டு நாட்களுக்கு அந்த விகாரை செய்தியாகி வருகின்றது.
கடந்த திங்களன்று ‘மீண்டும் தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்துக்கு எதிராகப் போராட்டம் ஆரம்பம்.
இனத்தின் இருப்பைக்காக்கத் திரண்டு வாருங்கள்’ என்ற அழைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் அவர்களிடமிருந்து
பகிரப்பட்டது.
வழக்கம்போல கஜேந்திரன் எம். பி. தலைமையில் அவருடன் விரல்விட்டு எண்ணக்கூடிய போராளிகள் அங்கு ‘திரண்டு’ இருந்தனர்.
பொலிஸாருடன் மல்லுக்கட்டும் காணொலிகளும் ஆங்காங்கே செய்திகளாக வந்தன.
அது என்ன மாதந்தோறும் இப்படியொரு போராட்டம் நடக்கின்றது என்று ஓர் ஊடகத் தம்பியிடம் கேட்டபோது அவர் சொன்னார், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று போராட்டம் நடத்துகிறார்கள்.
விகாரையை அகற்றும் வரை போராட்டம் நடக்குமாம்’ என்றான்.
அத்துடன், அவன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.
‘பாவம் தமிழ் மக்கள்’ என்றான்.
நான் சொன்னேன், ‘ஏனடா தம்பி, பாவம் தமிழ் மக்கள் என்கிறாய், அங்கே தமிழ் மக்கள் பெருமளவில் போகவில்லையே, ஒரு இருபது பேரைக்கூட காணவில்லையே’ என்றேன்.
அதற்கு அவன் சொன்னான்: ‘இல்லை அண்ணே, இவர்களைப் போன்றவர்களை தலைவர்களாக பெற்றதற்கு தமிழ் மக்கள் பாவம் என்றேன்’ என்றான்.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: