கட்டுரை இப்படியும் நடக்கிறது August 3, 2023

 இலங்கையில் தமிழர்கள் ஆதிக் குடிகள் என்பதை தனது


எழுத்துக்களாலும் ஆய்வுகளின் சான்றாதாரங்களாலும் நிறுவிய பெருமைக்குரியவர் பேராசிரியர் பத்மநாதன்.

தமிழையும் இந்து மதத்தையும், அவற்றின் தொன்மைகளையும் நிறுவும் பணிக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அவர்.
அவர் இதுவரை தமிழர்களின் அரசியல் வரலாற்றை ஆய்வு செய்திருந்தாலும் நேரடியாக அரசியல் பேசியதில்லை.
ஆனால்இ அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் சொல்லியிருக்கும் கருத்துகள் கவனத்திற்குரியவை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டன என்று அந்த ஊடகர் மாநாட்டில் ஆதங்கப்பட்ட அவர், ஐந்து வருடங்கள் சென்றால் வடக்கு மாகாணம் தமிழர்களின் மாகாணம் இல்லை எனக் கூறும் நிலை மாறிவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களே பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றனர்.
அவ்வாறு மாறியதற்கு காரணம் என்ன? அது நடந்தது எதனால் என்பதை ஒரு கல்வியாளராக- பல்கலைக்கழகத்தின் வேந்தராக சொல்லவேண்டிய அவர், அதனை சர்வசாதாரணமாக கடந்துசென்று வடக்கு மாகாணமும் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தில் இருந்து மாறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அதுவும் ஐந்து வருடங்களில் நடந்துவிடும் எனவும் எச்சரித்திருக்கிறார்.
தமிழ் மக்களின் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமானால், வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்பட
வேண்டும் என்றும், அதனைப் பாதுகாப்பதற்கு 13ஆவது திருத்தத்தில் உள்ள பறிக்கப்பட்ட பல அதிகாரங்களை மீளப்பெற்று நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது இருப்பை ஓரளவு நிலை நாட்ட முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பை அவர் செய்தபோது அவருக்கு அருகே அந்த ஊடகர் மாநாட்டில், தமிழர் மகா சபை ஸ்தாபகரும் தற்போது பதின்மூன்றை அமுல்படுத்தவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருப்பவருமான எந்திரி விக்னேஸ்வரன் அமர்ந்திருந்ததையும் காணமுடிந்தது.
வடக்கு மாகாணத்தின் குடிப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெற்கின் ஆளும் வர்க்கம் திட்டமிட்டு பணியற்றி வருவது இரகசியமானதல்ல.
கல்லோயாவில் டி. எஸ். சேனநாயக்காவால் தொடக்கி வைக்கப்பட்ட சிங்கள குடியேற்றத்திட்டம் இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தனித்து ஆட்சியமைக்கமுடியாத அளவுக்கு குடிசனப்பரம்பலை மாற்றியமைத்திருக்கின்றது.
இதேநிலைமையை வடக்கிலும் ஏற்படுத்த, தொடர்ச்சியாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
ஆனால்இ அதற்கு மாறாக தமிழர்களின் புலம்பெயர்வு தொடர்ந்துகொண்டே இருப்பதால், வடக்கு மாகாணமும் கிழக்கை ஒத்த நிலைக்கு மாறும் அபாயம் இருப்பதை பலரும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கின்றனர்.
அதனால்தான், இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு முடிந்தளவுக்கு மண்ணையும் மக்களையும் காப்பாற்றவேண்டும் என்ற கோஷம் பல்வேறு தரப்பிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றது.
சமஷ்டி தீர்வுக்காக போராடிக்கொண்டிருப்பதா? அல்லது புலம்பெயர் குழுக்கள் சில சொல்வதுபோல, நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை நிரூபித்து, அதனையடுத்து பொதுவாக்கெடுப்பு ஒன்றின் மூலம் நமக்கென தனிஅரசு ஒன்றை உருவாக்குவதாக இருக்கட்டும் – எதுவும் நாளையோ, நாளை மறுதினமோ
கிடைத்துவிடப் போவதில்லை.
அதற்காகப் பல வருடங்கள் போராட வேண்டிவரலாம்.
அவ்வாறு பல வருட போராட்டங்களின் பின்னர், அது கிடைக்கின்றபோது, வடக்கும் கிழக்கைப்போல மாறியிருக்கும் என்ற அச்சம் பலருக்கும் உண்டு.
ஆனால், அதற்காக ஐந்து வருடங்களில் அத்தகைய மாற்றம் ஒன்று வந்தவிடும் என்று போராசிரியர் எச்சரிப்பது, சரியானதா என்பது தெரியவில்லை.
அதுவல்ல, இன்று நாம் சொல்ல வருவது, இந்தக் கருத்தை சொல்லியிருப்பவர் ஓர் அரசியல்வாதி என்றால் அதனைக் கடந்து சென்றிருக்கலாம்.
ஆனால், சொல்லியிருப்பவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர்இ வேந்தர்.
அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தை தவிர மற்றைய பீடங்களில் பெரும்பான்மை இன மாணவர்களே பெரும்பான்மையாகக் கல்வி கற்கின்றனர் என்று ஒரு தகவலை சர்வ சாதாரணமாக கடந்து சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை தந்திருக்கலாம்.
அவரைப் போன்ற கல்வியாளர்கள் முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்தவேண்டும்.
ஒரு காலத்தில் கணித பாடம் என்பது யாழ்ப்பாணத்தவர்களின் அடையாளமாக இருந்தது.
இன்று? பேராசிரியர் பத்மநாதன் போன்றவர்கள் முதலில் கவனம் செலுத்தவேண்டியதுஇ நமது கல்வித்துறை பற்றியே என்பதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: