கட்டுரை இப்படியும் நடக்கிறது August 2, 2023

 தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்


இப்போதெல்லாம் ஒருவரையொருவர் விமர்சிப்பதிலேயே காலத்தை கடத்துகின்றனர்.

ஒருவர் ஊடகர்களைச் சந்தித்து மற்றவர் பற்றி பேசினால், மறுநாள் மற்றவர் இவரைப்பற்றி புகார் சொல்வதே நடந்துகொண்டிருக்கின்றது.
அதற்கு இந்த பதின்மூன்றாவது திருத்தச்சட்டமும் அவர்களுக்கு நன்றாகவே உதவிவருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் கட்சிகளை பேச்சுக்கு அழைக்கின்றபோது, அந்தப் பேச்சுக்களில் பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், பொலிஸ் காணி அதிகாரம் மாத்திரமன்றி, பதின்மூன்றிலிருந்து எடுக்கப்பட்ட அதிகாரங்களையும் மீண்டும் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்ற தமிழ் கட்சிகள், கடைசியாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருப்பது இருக்கட்டும் முதலில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள் என்று
கோரிக்கை வைத்தன.
கடைசியாக நடைபெற்ற தமிழ்க்கட்சிகளுடனான பேச்சுக்களில் பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து மற்றைய விடயங்களை அமுல்செய்ய தயாராக இருப்பதாக
ஜனாதிபதி ரணில் கூறியபோது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்ன தமிழரசுக்கட்சி, பின்னர் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,
பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்துவதை பின்னர் பார்ப்போம், அதற்கு முன்னர் மாகாணசபைகள் இயங்கியபோது எத்தகைய அதிகாரங்களுடன்
இயங்கியதோ அதே போன்று இப்போதும் இயங்கும் வகையில் உடனேயே மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
(அப்படி கோரிக்கை வைத்துவிட்டு யாழ்ப்பாணம் வந்து பதின்மூன்றை ஏற்றுக்கொள்ள முடியாது, சமஷ்டிதான் எமது கொள்கை என்று கதையளந்தது வேறு விடயம்.)
மாகாணசபை தேர்தலை வைக்கக்கோரிய, அந்த திடீர் மாற்றம் எதற்காக என்பதற்கு ஆராய்ச்சி தேவையில்லை.
நல்லாட்சி அரசின் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு விருப்பமானவற்றைச் செய்வதில் எப்படி கரிசனை காட்டினார்களோ அதேபோல இப்போது சஜித் பிரேமதாசாவின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்களா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
காரணம், அந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் பேசிய சஜித் பிரேமதாச, முதலில் மாகாணசபைகளுக்கு தேர்தல்களை வையுங்கள் என்றே கோரிக்கை விடுத்தார்.
போதாக்குறைக்கு அவரைத் தொடர்ந்து பேசிய லக்ஸ்மன் கிரியெல்லவும் அதே கோரிக்கையையே முன்வைத்தார்.
முன்னதாக தமிழ் கட்சிகளுடன் நடந்த கூட்டத்தில் பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என்று ரணில் கூறியபோது, அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறிய
சுமந்திரன், ஒரு சில தினங்களிலேயே அதிகாரங்களை தராவிட்டாலும் பரவாயில்லை, தேர்தலை வையுங்கள் என்று கோரியது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, ரணிலுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியதோ தெரியவில்லை.
அதனால்தானோ என்னவோ, பொலிஸ் அதிகாரம் என்பது ஏற்கனவே பதின்மூன்றில் இருக்கின்ற ஒன்று, அதனை நீக்காமல் தேர்தலை நடத்தினால், தெற்கில் சஜித் தரப்பும் ஜே.வி.பி. தரப்பும், தனக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளும் என்றும், அதாவது பொலிஸ் அதிகாரத்துடன் கூடிய மாகாணசபைகளுக்கான தேர்தல்களே நடக்கின்றன என்று பிரசாரம் செய்வார்கள் எனறும் அதனால் பொலிஸ் அதிகாரம் பதின்மூன்றாவது திருத்தத்தில் இருக்கின்றபோது தேர்தலை நடத்த முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டு கூட்டத்தை அன்று நிறைவுசெய்தார்.
அந்தக் கூட்டத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனையும், பதின்மூன்றுக்கு ஆதரவாக பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் தமிழர் மகாசபைத் தலைவர் எந்திரி விக்னேஸ்வரனையும் தனியாக சந்தித்து பேசிய ஜனாதிபதி ரணில், திட்டவட்டமாக அடுத்து ஜனாதிபதி தேர்தலும் அதனையடுத்து பாராளுமன்ற தேர்தலையும் நடத்திய பின்னர்தான் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தகவலை பின்னர் விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்தார்.
ஆக, மாகாணசபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடமும் இல்லை என்பதையே அவர் தெரிவித்திருப்பதாக உணரமுடிகின்றது.
இதிலிருந்து ஒரு விடயம் மட்டும் தெளிவாகியிருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தல்தான் முதலில் நடக்கவிருக்கின்றது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு பாதகமான எந்த விடயத்தையும் ரணில் விக்கிரமசிங்க செய்யப்போவதில்லை.
தனக்கு சாதகமான விடயங்களைச் செய்ய அவர் முனைந்தால், அதற்காக இருக்கின்ற அதிகாரங்களிலும் எதனை எடுக்கலாம் என்றே அவர் சிந்திக்கக்கூடும்.
பொலிஸ் அதிகாரங்களை தரப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறிய காணொலியை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி, ஏற்கனவே அவர் பிரசாரத்தை தொடங்கியும் விட்டார்.
இந்த நிலையில் தமிழ் கட்சிகள் இனியும் பேச்சுவார்த்தை என்றபெயரில் நடக்கும் கூட்டங்களில் காலம் கடத்த வேண்டுமா? என்பதை ஒன்றுக்கு பலதடவை சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்.
பொலிஸ் அதிகாரத்திற்கு பதிலாக ஆயுதம் இல்லாத பொலிஸ் தரலாம் என்பதுபோன்ற கோரிக்கைகள், ரணிலுக்கு உதவி செய்யுமே தவிர தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.
இந்தச் செய்தியைப் படித்துவிட்டு எமது காட்டூனிஸ்ட் அப்புக்குட்டி அண்ணை எழுதி அனுப்பிய தகவல் ஒன்றுதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
பிறேக்கிங் நியூஸ்: ‘யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டுக்குள் நுழைந்து பலரையும் வெட்டிவிட்டு வெளியேறிய வாள்வெட்டுக் குழு ஒன்றை, கொட்டன் தடிகளுடன் சென்ற மாகாண பொலிஸ் சுற்றிவளைத்து கைதுசெய்தது.’

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: