கட்டுரை இப்படியும் நடக்கிறது August 4, 2023

 பொதுஜன பெரமுனவிலிருந்து ஓர் அணியை பிரித்து எடுத்து


அவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி அமைத்து ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள ரணில் தயாராகிவருவது குறித்து இந்தப்பத்தியில் சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.

கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார இதற்கான முன்னெடுப்புகளைச் செய்துவருவது குறித்தும் அந்தப் பத்தியில்
எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இதுவரை நாற்பதுக்கும் அதிகமான எம்.பி.க்கள் – பெரும்பாலும் இளையவர்களைக் கொண்ட இந்த அணி பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் அதில் தெரிவித்திருந்தேன்.
ஆனால், அந்த அறிவிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்கு பின்னுக்குப் போயிருக்கின்றது.
எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்து விட்டாலும் ஏன் இந்த தாமதம் என்று தெற்கில் இந்த அணியோடு சம்பந்தப்பட்ட சிலருடன் பேசியபோது தான் ஜனாதிபதி ரணிலின் திட்டம் தெரியவந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பு செய்யாமல் அதன் தலைமையில் மற்றைய கட்சிகளை ஒன்றிணைப்பதால், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஐ. தே. க. தரப்பிலிருந்து ரணிலுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதனாலேயே அவர் கட்சியை மறுசீரமைத்து தலைமைத்துவ சபை ஒன்றை நியமித்து கட்சியை புதுப்பொலிவுடன் நகர்த்திச் செல்ல திட்டமிட்டிருக்கிறாராம்.
அந்த மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்தாலும் இன்னுமொரு சிக்கல் அவருக்கு இருக்கின்றது என்கின்றன விசயமறிந்த வட்டாரங்கள்.
அடுத்த வருடம் முதல் காலாண்டிலேயே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விரும்பும் ரணில் விக்கிரமசிங்க அதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் தொடங்கியிருக்கிறார்.
அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம்கட்ட உதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனையடுத்து தேர்தலை இலக்கு வைத்து அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தையும் அவர் தாக்கல் செய்தாகவேண்டும்.
அந்த வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவரணங்கள் தாராளமாகப் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றில் சம்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கு முன்னதாக பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்துவர தயாராக இருப்பவர்களை அணைத்துக்கொண்டால் எஞ்சியிருக்கும் மகிந்த விசுவாசிகள் ரணிலுக்கு எதிராக திரும்புவதற்கு சந்தர்ப்பம் ஏற்படலாம் என்பதால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும்வரை கொஞ்சம் அடக்கி வாசிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றதாம்.
அதனால்தான், ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராகிவரும் மொட்டு கட்சியினரின் அணியுடனான கூட்டுக்கான அறிவிப்பு ஜனவரிக்கு
தள்ளிப்போயிருக்கின்றது.
தெற்கில் தனக்கு சாதகமான மத்தியதர வர்க்கத்தினரின் வாக்குகளை இலக்கு வைத்து வரவு – செலவுத் திட்டத்தை தயாரிக்கும் அதேவேளையில், கோட்டாபயவின் ஆட்களின் உதவியுடன் சிங்கள கடும் கோட்பாளர்களின் வாக்குகளையும் இலக்கு வைத்துள்ளார்.
இதேவேளையில் சிறுபான்மையினரின் வாக்குகளை கவர தொடர்ந்து முயன்று வருகின்றார்.
அதன் தொடர்ச்சியாகவே முஸ்லிம் இயக்கங்கள் மீதான தடையை நீக்கியதுடன் பதின்மூன்றை அமுல்படுத்த தான் விருப்பம் கொண்டிருப்பதுபோல தொடர்ச்சியாக கூறிவருகின்றார்.
தமிழ் மக்களுக்கு பதின்மூன்றை முழுமையாக வழங்க தான் விருப்பம் கொண்டிருப்பதுபோல கூறிவருகின்ற அதேவேளையில், பொலிஸ் அதிகாரத்தை வழங்கப் போவதில்லை என்று சிங்களவர்களையும் திருப்திப்படுத்தி வருகிறார்.
தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவதென்பது இது தானோ?

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: