இலங்கைச் செய்திகள்

 ‘யாழ் நிலா’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும்

 வடக்கு, கிழக்கு, அநுராதபுரம் மக்களுக்கே வவுனியாவில் கடவுச்சீட்டு பெற முடியும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

 பல்வேறு துறைகளிலும் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவுவதாக அவுஸ்திரேலியா உறுதியளிப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்

பொலிஸ் அதிகாரப் பகிர்வு விடயம் பாரதூரமானது


‘யாழ் நிலா’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும்

August 4, 2023 6:00 am

கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரை இயக்கப்படும் ‘யாழ்நிலா’ விசேட குளிரூட்டப்பட்ட சுற்றுலா ரயில் இன்று 04 ஆம் திகதி முதல் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது. போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இது தொடர்பில் தெரிவிக்கையில்,

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரை யான ரயில் பாதை முற்றிலும் புனரமைக்கப்பட்டதன் பின்னர் காங்கேசன்துறை வரை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வேகமாகவும், பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் பயணிக்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விசேடமாக நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ளும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இந்து பக்தர்களுக்கு பெரும் உதவியாக இச்சேவை அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் கல்கிசையில் இருந்து நான்காம் திகதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு காங்கேசன் துறையை சென்றடையும் என அமைச்சர் தெரிவித்தார். ஆகஸ்ட் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 5:20 மணிக்கு கொழும்பை வந்தடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 18 முதல் தினமும் இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், ஆசன வசதிகளை ஒன்லைன் பதிவு மூலமும் பதிவு செய்யலாம் எனவும் கூறினார். ஒரு பயணத்திற்கான டிக்கெட்டின் விலை 4000 ரூபாய் என குறிப்பிட்ட அமைச்சர், இந்த ரயில் டிசம்பர் 31ம் திகதி வரை தொடர்ச்சியாக இயங்கும் எனவும் தெரிவித்தார்.

புதிய இரவு நகர்சேர் கடுகதி புகையிரதம்

வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையும் ஞாயிறு இரவு 9.30 இற்கு காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையும் சேவையில் ஈடுபடும்.

காங்கேசன்துறை – வவுனியா இருந்து கல்கிசைக்கு

முதலாம் வகுப்பு ரூ.4000, இரண்டாம் வகுப்பு ரூ.3,000, மூன்றாம் வகுப்பு ரூ.2000

05 மாதங்களின் பின்னர் எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல் அநுராதபுரம் மற்றும் மஹவைக்கிடையிலான ரயில் பாதையை நவீனமயப்படுத்துவதற்காக இந்த ரயிலை குறுகிய காலம் நிறுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 







வடக்கு, கிழக்கு, அநுராதபுரம் மக்களுக்கே வவுனியாவில் கடவுச்சீட்டு பெற முடியும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

August 3, 2023 2:17 pm

இன்று (03) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாணம், கிழக்கு மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலையே இதனைத் தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு நாளாந்தம் அதிகளவான வாடிக்கையாளர்கள் வந்து செல்வதால், பொதுமக்களின் நெரிசலை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் பொருட்டு இநநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 





பல்வேறு துறைகளிலும் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவுவதாக அவுஸ்திரேலியா உறுதியளிப்பு

August 1, 2023 12:28 pm 

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், பிரதி உயர் ஸ்தானிகர் லலிதா கபூர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறை , மீன்பிடி துறை, கனிம வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஐதரசன் போன்ற திட்டங்களை அவுஸ்திரேலியா அரசாங்கம், இலங்கையில் முன்னெடுப்பதற்கு உதவுவதாக இதன்போது உறுதியளித்துள்ளது .   நன்றி தினகரன் 





இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்

- ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் விளக்கமளிப்பு

August 4, 2023 4:59 pm 

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை நேற்று (03) பாராளுமன்றத்தில் மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் இங்கு சபாநாயருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பர நீண்டகாலப் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது என்றும் உயர் ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டினார்.

எரிசக்தித் துறை, கல்வித்துறை மற்றும் டிஜிட்டல் துறை உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இவ்விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர் ஸ்தானிகர் சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.

இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார்.

இலங்கை, இந்தியப் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினைக் கூட்டுமாறு கேட்டுக்கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர், அதன் உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் கலந்துகொண்டார்.   நன்றி தினகரன் 





பொலிஸ் அதிகாரப் பகிர்வு விடயம் பாரதூரமானது

-பாராளுமன்றில் விவாதம் நடத்தி தீர்மானிக்க வேண்டும்

August 4, 2023 6:00 am 

 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் அதிகாரம் பற்றி, பாராளுமன்றத்தில் பகிரங்க விவாதத்தை நடத்தி சகலரும் கூட்டாக ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டுமென வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்திலுள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை பகிர்ந்தால், பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இவ்விடயத்தில் தெற்கு மக்கள் உள்ளிட்ட சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதியான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.

இவ்விவகாரத்தில் வடக்கு மக்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பகிரங்க விவாதத்தை முன்னெடுத்து சகலரும் கூட்டாக ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும்.

பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், எமது நாட்டிலுள்ள ஒரு பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டுமென்றால், நாட்டு மக்கள் சகலரும் ஒன்று படவேண்டும்.தெற்கிலுள்ளவர்கள் உம்பட சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீதியான தீர்வைப் பெற்றுக்கொடுக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்.

பொலிஸார் தற்போது அரசியல் மயமாகியுள்ளதாக மக்களே குறிப்பிடுகின்றனர்.

பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான அமைச்சர் இருக்கும்போதே இந்த நிலைமை என்றால், ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது பொலிஸ் பிரிவுகள் உருவாகி 09 முதலமைச்சர்களின் கீழ் பொலிஸ் நிர்வகிக்கப்படும்போது என்ன நடக்கும். இது தொடர்பில் சிந்தித்து பார்க்கவேண்டும்.

எனவே, இதனூடாக தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டு மக்களுக்கு என்னவாகப் போகிறது என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். எந்தவொரு நாடும் அவர்களுக்கு தேவையான சட்டங்களை அந்த நாட்டிலேயே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அதற்காகவே ஒவ்வொரு நாட்டிலும் பாராளுமன்றம் என்றவொரு கட்டமைப்பு இருக்கிறது. இதுதொடர்பில், சகலரும் ஓரிடத்தில் ஒன்றுக்ககூடி கலந்துரையாடி பொதுவான தீர்மானமொன்றுக்கு வரவேண்டும்.

இருந்தபோதும் 13 ஆவது அரசியலமைப்பை பொறுத்தவரையில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த எனைய சகல அதிகாரங்களையும் நடைமுறைப்படுத்த, அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.    நன்றி தினகரன் 


No comments: