கட்டுரை இப்படியும் நடக்கிறது August 6, 2023

 நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ள அதற்காக


தனியாக படிக்கவேண்டும் போல இருக்கின்றது.

அரசமைப்புச் சட்டத்தில் இருப்பவற்றை ஒரு நிறைவேற்று ஜனாதிபதியாக அமுல்படுத்த வேண்டியது தனது கடமை என்றும், அரசமைப்பிலுள்ள பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் பாராளுமன்றத்தில் அறிவித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இவ்வாறு அறிவித்தபோது, பதின்மூன்றுக்கு நீங்கள் ரெடியா? என்று ஒவ்வொருவராக விழித்து கேட்டது நேற்றுப்போல இருக்கின்றது.
பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் ஆற்றிய அந்த வரலாற்று சிறப்புமிக்க கருத்தை பலரும் விதந்துரைத்தனர்.
அரசமைப்பில் உள்ள அந்த பதின்மூன்றை தான் அமுல்படுத்தப்போவது போலவும், யாராவது அதனை விரும்பவில்லை என்றால் அரசியலமைப்புக்கு திருத்தத்தைக்கொண்டு வந்து பாராளுமன்றில் நிறைவேற்றலாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அப்படி யாரும் திருத்தத்தைக் கொண்டுவரப்போவதில்லை என்ற துணிச்சலில் அவர் அப்படி சொல்வதாக பலரும் அப்போது நினைத்துக்கொண்டனர்.
ஆனால் அப்படியல்ல, யாராவது திருத்தத்தைக் கொண்டு வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்ததாகவே இப்போது புரிந்துகொள்ள முடிகின்றது.
சில மாதங்கள் அவ்வவ்போது தமிழ்க் கட்சிகளுடனும் தமிழரசுடன் தனியாகவும் சந்தித்த பின்னர், கடைசியாக இந்தியாவுக்கு செல்வதற்கு ஓரிரு தினங்களுக்கு
முன்னதாக பொலிஸ் அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் தரமுடியாது என்று அறிவித்ததுடன், அரசியலமைப்பிலுள்ள அந்த பதின்மூன்றை அமுல்படுத்துவதற்கும் பாராளுமன்றமே முடிவு செய்யவேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.
இப்போது கடைசியாக, பதின்மூன்றை அமுல்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடமும், தனித்தனியாக யோசனை கேட்கப்பட்டிருக்கின்றது.
பாராளுமன்றில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளில் பெரும்பாலானவை பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்துவதை விரும்பாத கட்சிகள்.
பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவோம் என்று அறிவித்த சுதந்திரக்கட்சிகூட கடைசியாக பொலிஸ் அதிகாரத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது.
ஆக, மொத்தத்தில் பதின்மூன்றிலுள்ள பல விடயங்களை பாராளுமன்றத்தின் உதவியுடன், இல்லாமல் செய்ய ரணில் திட்டமிட்டுவிட்டது தெளிவாகியிருக்கின்றது.
முதலில் பதின்மூன்றை எமது தொடக்க புள்ளியாகக்கூட கருதமாட்டோம் என்று சொன்ன தமிழ்த் தேசியக் கட்சிகள், பின்னர் பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்தக் கோரின.
அதற்காக இந்தியப் பிரதமரின் உதவியையும் கோரின.
கடைசியாக நடந்த தமிழ்க் கட்சிகளுடனான பேச்சில் பொலிஸ் அதிகாரத்தை தரமுடியாது என்று ஜனாதிபதி சொன்னபோது, அதனை ஏற்கமுடியாது என்று
சொன்னது தமிழரசுக் கட்சி.
ஆனால் அதற்கு பின்னர் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எல்லா அதிகாரத்தையும் பெறுவது பின்னர் பார்க்கலாம், முதலில் மாகாண சபைகளுக்கு
தேர்தல்களை வையுங்கள் என்றது அதே தமிழரசு கட்சி.
இப்போது எல்லோருடைய கோரிக்கையும் மாகாண தேர்தல் என்ற அளவுக்கு சுருங்கிவிட்டது.
ஆனால், ஜனாதிபதியோ முதலில் ஜனாதிபதித் தேர்தல், பிறகு பாராளுமன்றத் தேர்தல், அதன் பின்னரே மாகாணசபைக்கான தேர்தல் என்பதில் உறுதியாக
இருக்கிறார்.
அதுவல்ல இன்று பிரச்னைக்குரியது.
முதலில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி சிங்கள வாக்குகளைப் பெறலாம் என்று கணக்குப் போட்ட ஜனாதிபதி, பதின்மூன்றிலிருந்து எதையெதையெல்லாம் பிடுங்கி எடுக்கலாம் என்பதில் தெற்கு கட்சிகளின் ஆலோசனையை இப்போது கோரியிருக்கிறார்.
பதின்மூன்றாவது திருத்தம் என்பது தமிழ் மக்களுக்கும் அரசுக்குமுரிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம் வந்ததல்ல.
அது இரண்டு நாடுகளுக்கிடையில், இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பலனாக வந்தது.
அதில் கை வைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதா என்பது தெரியவில்லை.
ஆனால், அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது, தமது ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இன்றுள்ள பல அரசியல் கட்சிகள்.
அவர்கள் ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தபோது தமிழர் பிரச்னைக்கு தீர்வாக இந்தியாவால் முன்வைக்கப்பட்டது இந்த பதின்மூன்று.
இதில் இலங்கை அரசு கை வைத்தால், அதனை தடுக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு.
அதனை இந்தியாவிடம் ஞாபகப்படுத்தவேண்டியது, அன்று ஆயுதங்களை ஒப்படைத்த இயக்கங்களுக்கு உண்டு.
வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முதலிட சீனா முன்வந்த போது, அதற்கு எதிர்வினையாற்றிய இந்தியாவின் நெருக்குவாரங்களால் அந்தத் திட்டத்தை சீனா கைவிடவேண்டியேற்பட்டது.
இப்போது இந்திய உதவியுடன் அந்த திட்டத்தை தொடங்குவதற்கான கேள்வி கோரல் வெளிவந்திருக்கின்றது.
ஒருபுறம் இந்தியாவை சமாதானப்படுத்திக்கொண்டு மறுபுறத்தில் இந்திய ஒப்பந்தத்தை மீறுகின்ற முயற்சியையும் இலங்கை தொடங்கியிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: