சொல்லத்தான் நினைக்கிறன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


நாவலாசிரியராகவும்,பயணக் கட்டுரையாளராகவும் தமிழ் வாசகர்களிடையே நன்கு அறிமுகமானவர் இதயம் பேசுகிறது மணியன். கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் , ஜோதிடராகவும் திகழ்ந்தவர் வித்துவான் வே . லக்ஷ்மணன். இவர்கள் இருவரும் எம் ஜி ஆருக்கு மிக நெருக்கமாக இருந்ததினால் திடிரென்று படத்தயாரிப்பாளர் ஆகும் யோகம் இவர்களுக்கு கிட்டியது. எம் ஜி ஆர் நடிப்பில் இதய வீணை படத்தை தயாரித்து நாலு காசு பார்த்த இவர்கள் அடுத்து கே பாலசந்தர் டைரக்சனில் படம் ஒன்றை தயாரித்தார்கள். மணியன் ஆனந்த விகடனில் எழுதிய இலவு காத்த கிளி என்ற நாவலே படமானது. படத்துக்கு சொல்லத்தான் நினைக்கிறன் என்று பெயரிடப்பட்டது.

மனைவியை இழந்து , பின்னர் தொழிலையும் இழந்து கல்யாண

வயதில் மூன்று பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் சிவராமன். அவருடைய மூத்த மகளின் வருமானத்திலேயே குடும்பம் நடக்கிறது. சிவராமன் வேலை செய்த அலுவலகத்திற்கு புதிய மானேஜராக வருகிறான் ராகவன். சிவராமன் குடும்பத்துடன் அவனுக்கு ஏற்படும் அறிமுகத்தைத் தொடர்ந்து தனது வீட்டின் ஒரு பகுதியில் அவர்களை வாடகைக்கு குடியமர்த்துகிறான் அவன். மூத்த இரு பெண்களும் அவனை மானசீகமாக காதலிக்க, இளைய பெண் புஷ்பாவை மானசீகமாக காதலிக்கிறான் ராகவன். இதனிடையே ராகவனின் பணக்கார நண்பன் கமல் கண்களில் காணும் இளம் பெண்களை எல்லாம் தன் படுக்கையறைக்கு விருந்தாக அழைப்பவன் . அவனுக்கும் புஷ்பாவுக்கு ஏற்படும் மோதல் சவாலாக உருமாறுகிறது. கமலை திருத்துவதாக சவால் விடும் அவளை தன் படுக்கைக்கு விருந்தாக்குவதாக சபதம் செய்கிறான் கமல். அதே சமயம் ராகவன் உதவியுடன் மூன்று பெண்களுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க முனைகிறார் சிவராமன். காதலை வெளியே சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் இவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் மீதிக் கதை.

சென்னையில் ஒரு சராசரி குடும்பத்தில், ஏழ்மையோடு போராடும் ஒரு தந்தையின் கதாபாத்திரத்தை அப்படியே கண் முன் காட்டியிருந்தார் சிவராமனாக வரும் எஸ் வி சுப்பையா. அடிக்கொரு தடவை காட்டும் முகபாவங்கள் சூப்பர். மூன்று பெண்களுக்காகவும் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சுமத்தப் படும் போது எழுந்து சென்று லாட்டரி சீட்டுகளை கொண்டு வைத்து வீசி எரியும் போதும், பெண் பார்க்க வந்தவர்களை பார்த்தும் எழுந்து போங்கடா முண்டங்களா என்று வெடித்து சிதறும் போதும் , பெண்ணாகாப் பிறக்கவே கூடாது என்று பச்சாதாபப் படும் போதும் நடிப்பில் உச்சம் தொடுகிறார் சுப்பையா.


அது வரை காலம் நகைச்சுவை நடிகராக சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த ஏ . வீரப்பன் மோதிரக் கையால் குட்டு வாங்கியது போல் , பாலசந்தரினால் குணச்சித்திர நடிகராக மாறி பரிணமிக்கிறார். பிளே பாயாக வரும் கமல் ஆடுகிறார், பாடுகிறார் , யுவதிகளை காதல் வலையில் வீழ்த்துகிறார் ,இறுதியில் ஒருத்தியிடம் வீழ்கிறார்! ரகவானாக வரும் சிவகுமாருக்கு இயல்பான, அமைதியான வேடம். அலட்டலில்லாமல் செய்கிறார். சுபா, ஸ்ரீவித்யா டைரக்டரின் எதிர் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுகிறார்கள். ஜெயசித்திரா அவரின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக செய்கிறார். பூர்ணம் விஸ்வநாதன் வரும் காட்சிகள் எல்லாம் பூர்ணம். ஜெயசுதா நைஸ்.

இப் படத்தில் நடித்த ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா,சுபா, ஜெயசுதா ஆகியோர் பின்னர் பிரபலமாகி திரையுலகில் தடம் பதித்தார்கள். சிவகுமாரும், கமலஹாசனும் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார்கள். இவர்கள் எல்லோரையும் அடையாளப் படுத்தும் படமாக இந்த படம் அமைந்தது.

பாலசந்தரின் வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகிறது. ராமாயணத்தை படிச்சிருக்கேன் ராமரை இப்ப நேரில் பார்க்கிறேன், போன்ற அவரின் வசனங்கள் பளிச் . பாடல்களை வாலி இயற்ற எம் எஸ் வி இசையில் சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் , கல்யாணம் கச்சேரி எல்லாமே கொண்டாட்டம் பாடல்கள் கவர்கின்றன. பி எஸ் லோகநாத்தின் கமெரா பாலசந்தரின் விருப்பப் படி இயங்கியுள்ளது.

நாவல்களை படமாக்கும் போது தனி அவதானம் தேவை. அதனை

உணர்ந்து சரிவர இயக்கியுள்ளார் இயக்குனர். ஆனால் யாரோ ஒரு பணக்காரரின் வேண்டுகோளுக்காக , வில்லனை திருத்துவதற்காக குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய ஒரு இளம் பெண் தன் பெண்மையை வில்லனிடம் இழப்பதும், பின்னர் துடிப்பதும் , உடனே வில்லன் திருந்தி நல்லவனாவதும் அபத்தம். புதுமை என்று எண்ணி சறுக்கியுள்ளார் பாலசந்தர். ஆனாலும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வியலை ரசனையோடு படைத்திருக்கிறார் என்பதை சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லியும் விட்டேன்!

 



No comments: