கட்டுரை இப்படியும் நடக்கிறது August 1, 2023

 சில தினங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தில் ஆளும்தரப்பு எம்.பி.


சுரேன் ராகவன் உரையாற்றியபோது, தமிழ் மக்கள் சமஷ்டியை விரும்பவில்லை என்றும் வடக்கில் ஆளுநராக இருந்தவன் என்றவகையில் தான் இதனை கூறுவதாகவும் தெரிவித்திருந்தது வாசகர்கள் அறிந்ததுதான்.

தான் ஆளுநராக இருந்தபோது ஏதோ தமிழ் மக்களுடன் நெருங்கி பழகியது போலவும், அவர்களின் மனநிலையை தான் அறிந்து வைத்திருப்பவர் போலவும் சுரேன் ராகவன் பேசியமை ஆச்சரியத்துக்குரியதல்ல.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட அவர் முயற்சி செய்ததாக அப்போது சில செய்திகள் வெளிவந்திருந்தன.
அதற்காக தனது நண்பர் சுமந்திரனுடன் அவர் பேசி வந்ததாகவும் அப்போது அந்தச் செய்திகள் தெரிவித்திருந்தன.
தமிழ் மக்களின் மனநிலையை தெரிந்து வைத்திருந்ததாலேயே அவர் கூட்டமைப்பில் போட்டியிட விரும்பியிருக்கலாம்.
அவரது இந்த பேச்சுக்கு பதிலளித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுநாள் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, ‘துணிவு
இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சமஷ்டியை விரும்புகிறார்களா இல்லையா என்று வாக்கெடுப்பு ஒன்றை நடத்துங்கள்’ என்று சவால் விடுத்திருந்தார்.
அவ்வாறு அவர் சவால் விடுத்து ஆற்றிய உரையின் காணொலி ஒன்றை நண்பர் ஒருவர் நேற்று பகிர்ந்திருந்தார்.
என்ன ஒருபேச்சு.
தனக்கே உரிய பாணியில் கஜேந்திரகுமார் பேசினார் என்பதை விட கர்ஜித்தார் என்று சொல்வதே பொருத்தமானது.
ஒரு காலத்தில் அவரது தந்தையார் குமார் பொன்னம்பலத்தை ‘சிங்கத்தின் கோட்டையில் கர்ஜிக்கும் புலி’ என்று கூறப்படுவதுண்டு.
எந்தவித தயக்கமும் இன்றி, தனக்கு சரி என்று பட்டதை துணிச்சலுடன் தெற்கில் கூறுபவர் குமார் பொன்னம்பலம்.
கஜேந்திரகுமாரின் பேச்சைக் கேட்டபோது குமார் மனக்கண்ணில் வந்து போனதை தவிர்க்க முடியவில்லை.
அதுவல்ல நாம் இன்று சொல்ல வருவது.
இந்த காணொலியை அனுப்பியிருந்த அந்த நண்பர் கூடவே தனது யோசனையையும் எழுதியிருந்தார்.
” தமிழ் மக்கள் சமஷ்டியை விரும்புகிறார்களா என்று வாக்கெடுப்பு நடத்த தயாரா என்று அவர் சுரேன் ராகவனிடம் சவால் விடுத்திருந்தார்.
ஆனால் அவர் அதற்காக ஏன் ராகவனிடம் சவால் விடுத்தார் என்பது தெரியவில்லை.
இந்த நாட்டில் அடுத்து நடக்கவிருப்பது ஜனாதிபதித் தேர்தல்தான் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்ட ஒன்று.
தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து இப்போதே பலரும் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.
ரணில் விக்கிரமசிங்க, தான் ஒருவரே தமிழர் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வைத்தரக்கூடிய ஒருத்தர் என்று தமிழ் மக்களை நம்பவைப்பதற்கான முயற்சியை தொடங்கிவிட்டார்.
இந்த நேரத்தில் வடக்கு கிழக்கு மக்கள் தமது அரசியல் அபிலாசையாக வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டிக் கட்டமைப்பைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கஜேந்திரகுமார் போட்டியிடுவதன் மூலம் நிரூபித்துக் காட்டலாமே.’
நண்பரின் அந்தக் கோரிக்கையும் நியாயமானதாகவே இருந்தது.
ஏற்கனவே கஜேந்திரனின் தந்தை குமார் பொன்னம்பலமும் இதே கோரிக்கையை முன்வைத்து ஒரு தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்தானே.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: