எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 74 கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களுடன் ஒரு பொழுது ! இலங்கையில் கேள்வி கேட்கும் கல்வித்திட்டம் எப்போது தோன்றும்..?! முருகபூபதிஎனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இரண்டாம் பாகத்தை எழுதிக்கொண்டிருந்தபோது, கனடா பயணம் குறுக்கே வந்தமையால்,  அந்தப் பயண அனுபவங்களையும் எழுத நேர்ந்தது.

எனினும்,  கனடா அனுபவங்களை முழுமையாக நான் எழுதவில்லை.  கனடாவில்  நண்பர் மூர்த்தி Tamil Entertainment Television இற்காக என்னுடன் நடத்திய  கலந்துரையாடல் நேர்காணல் காணொளிப்பதிவு, அவுஸ்திரேலியாவுக்கு நான் திரும்பிய பின்னர்தான் கிடைத்தது.

கடந்த ஐம்பது வருடகால எழுத்துலக அனுபவத்திலிருந்து நான் சில


புத்திக்கொள்முதல்களை பெற்றிருக்கின்றேன்.

வானொலிகள் – தொலைக்காட்சிகள் – பத்திரிகைகள் – இதழ்கள் ஆகியன பேட்டி காணும்போது எச்சரிக்கையுடன்தான் இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. முடிந்தவரையில் எம்மை,  எமது பணிகளை  நன்கு தெரிந்தவர்கள் எம்மிடம் கேள்வி கேட்டால், பதில் சொல்வதற்கும் எளிதாக இருக்கும்.  உள்நோக்கங்களுடன் கேள்வி கேட்பவர்களிடமிருந்து சாதுரியமாக தப்பிக்கொள்ளவேண்டும்.

சிண்டு முடிந்துவிடும் கேள்விகள் குறித்து எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும்.

இலங்கையை விட்டு புறப்படுவதற்கு முதல்நாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தற்போது இலங்கையில் எத்தனை வானொலிகள் ஒலிக்கின்றன என்பது எனக்குத் தெரியாது.

நான் இலங்கையில் நின்ற சமயம் சில வீடுகளில் வானொலிகள் ஒலிப்பதைக்  கேட்டேன். பல வீடுகளில் தமிழகத்தின் தொலைக்காட்சி நாடகங்கள்தான் ஓடிக்கொண்டிருந்தன.

அவற்றின் தரத்திற்கும் தகுதிக்கும், சிங்கள மொழியிலும் Sub Title  ஓடுகிறது.  அதற்காக தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் உழைப்பினையும் நேரத்தையும் செலவிடுவது ஆச்சரியமாக இருந்தது.

மாமியார் – மருமகள்  சண்டை சச்சரவு – பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை -  ஆளுக்கு ஆள் துரோகம் முதலான  சின்னத்தனமானதும் சில்லறைத்தனமானதுமான  தமிழக தமிழ் தொலைக்காட்சி நாடகங்களுக்காகவே சிங்கள Sub Title  எழுதி பதிவேற்றுகிறார்களே என்று ஆச்சரியமடைந்தேன்.

இலங்கையில்  முன்னர் நான்  இருந்த காலப்பகுதியில் பல தரமான சிங்கள தொலைக்காட்சி நாடகங்களை பார்த்து ரசித்திருக்கின்றேன். அவற்றைப்பார்த்து தமது ரசனையை வளர்த்துக்கொண்ட சிங்கள மக்களுக்கு தமிழக  தமிழ் தொலைக்காட்சி நாடகங்கள் ஏன் இவ்வாறு வஞ்சனை செய்யவேண்டும் என்பதுதான் தெரியவில்லை.


இதுபற்றி சில வருடங்களுக்கு முன்னர், இலங்கை பாராளுமன்றத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்காவும் சுட்டிக்காண்பித்து கண்டித்திருந்தார்.

உள்நாட்டு தமிழ்க்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கையிலேயே  தரமான தொலைக்காட்சி நாடகங்களை தயாரிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால், எமது தமிழ்த்தலைவர்கள், இதுபற்றி இதுவரையில் எதுவும் பேசவில்லை.  அவர்கள் அன்றும் ஈழத்து இலக்கியம், கலை, ஈழத்து திரைப்படம் குறித்து எதுவுமே பேசவில்லை. பல ஆண்டுகளாக சமஷ்டி பற்றியும்  13 ஆவது திருத்தச்சட்டம் பற்றியும், மாகாண சபை அதிகாரங்கள் பற்றியும்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் தமக்குத் தெரிந்ததை பேசட்டும்.  நாம் எமக்குத்  தெரிந்ததை பேசுவோம்!

மனோகணேசன் மாத்திரம் அவ்வப்போது, தனது தந்தையார்              ( அமரர் ) வி. பி. கணேசன் எடுத்த தமிழ்த்திரைப்படங்கள் பற்றி பேசியிருக்கிறார்.

அவரும் அவரது தம்பி பிரபா கணேசனும் புதிய காற்று


திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்கள்.

சரி, போகட்டும், நான் சொல்ல வந்த விடயத்திற்கு வருகின்றேன்.

இலங்கை வானொலி தேசிய சேவை  இசைப்பிரிவில் பணியாற்றும் சிவசங்கர் மணம் முடித்திருப்பது எனது பெறாமகளைத்தான்.  நான் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் என்னைப்பார்க்க நீர்கொழும்புக்கு வந்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர், தங்கள் வானோலியின் தேசிய சேவைக்கு நேர்காணல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

 “ தம்பி… இனி நான் கொழும்புக்கு வருவது சாத்தியமில்லை.  இயலுமானால், தொலைபேசி ஊடாக உங்கள் வானொலி கலையகத்திலிருந்து தொடர்புகொண்டால் பேசமுடியும்  “ என்றேன்.

இலங்கை வானெலி தேசிய சேவையில் பணியாற்றும்  நாகபூஷணி கருப்பையா அவர்கள் என்னைத் தொடர்புகொள்வார் எனச்சொல்லிவிட்டு  சிவசங்கர் விடைபெற்றார்.


நாகபூஷணியை இதுவரையில் நான் நேருக்கு நேர் சந்தித்திருக்கவில்லை.  எனினும் அவர் பற்றி அறிந்திருந்தேன். சிறந்த ஒலிபரப்பாளருக்கான விருதுகளையும் பெற்றிருப்பவர். அத்துடன் கவிதைகளும் எழுதுபவர். அவர்  எழுதி வெளியிட்டிருக்கும் கவிதை நூலின் பெயர்: நெற்றிக்கண்.

நாகபூஷணியும் என்னைப்பற்றி தெரிந்துவைத்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.  அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

அவர் என்னைப்பற்றியும் எனது படைப்புகள் பற்றியும், ஏற்கனவே நான்  பெற்றிருந்த  இலக்கிய விருதுகள், மற்றும் அண்மையில் பெற்ற கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது பற்றியும் நன்கு தெரிந்துகொண்டே நான் புறப்படுவதற்கு முதல்நாள் ஜுலை 24 ஆம் திகதி  நண்பகல் வேளையில் தொடர்புகொண்டார்.

அவர் என்னைப்பற்றிய அறிமுகத்தை முதலில் சொன்னபோது Home work செய்துவிட்டுத்தான் தொடர்புகொள்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

சுமார் 40 நிமிடங்கள் அந்த நேர்காணல் பதிவாகியது.

நான் அவுஸ்திரேலியா – மெல்பன் திரும்பிய பின்னர், ஜூலை மாதம்


31 ஆம் திகதி, இலங்கை நேரம் இரவு 9-30 மணிக்கு எனது நேர்காணல் ஒலிபரப்பாகும் என்ற குறுஞ்செய்தி எனது கைத்தொலைபேசிக்கு வந்தது.

அந்த இரவு நேரத்தில் அதனை எத்தனைபேர் கேட்பார்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது!

அந்த ஒலிப்பதிவு எனது வாட்ஸ்அப்பிற்கு வரலாம் என்று எதிர்பார்க்கின்றேன்.

கனடாவில் நண்பர் மூர்த்தி நடத்திய கலந்துரையாடல் ஒளிபரப்பாகிவிட்டதாகவும், அதனை யூ ரியூப்பில் பதிவேற்றத்தான் சற்று தாமதமாகிவிட்டதாகவும் கனடா Tamil Entertainment Television நிருவாக இயக்குநர் திருமதி ராஜி அரசரட்ணம் எனக்கு தகவல் தெரிவித்தபோது அவுஸ்திரேலியாவில் எனக்கு அதிகாலை 3-00 மணி .

இவ்வாறு நேரத்துடன் போராடிக்கொண்டே எனது அண்மைக்கால பயணங்கள் நிகழ்கின்றன!

ஆனால்,  எழுத்தும் வாழ்க்கையும் என்று காலத்தை செலவிட்டுக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற படைப்பாளிகளுக்கும் சில செய்திகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.


கிழக்கிலங்கையில் நின்றபோது,  நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயக்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெற்று கல்வியில் முன்னேறி, தற்போது நல்ல நிலையிலிருக்கும் பல மாணவர்களுடன் தொடர்புகொண்டு உரையாடினேன்.

கிழக்கு பல்கலைக் கழகத்தில் முன்னர் படித்து, பட்டதாரியாகி தற்போது அதே பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பயிலும் ஆண்கள் தங்கியிருக்கும் விடுதியில் வோர்டனாக பணியாற்றும் பிரபாகரனின் தொடர்பு கிடைத்தது.

அவர் திருமணமாகி  இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையாகிவிட்டார்.  அவருடன் படித்த எமது கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெற்ற மாணவர்கள் அனைவரும் பட்டம் பெற்று  ( சுமார் 24 பேர் )  சிறந்த தொழில் வாய்ப்புகளும்  பெற்று திருமணமாகி குடும்பஸ்தர்களாகிவிட்டனர் என்ற நற்செய்தியையும் பிரபாகரன் சொன்னார்.

இலங்கையில் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கடந்த


சில வருடங்களாக ஊடகக் கற்கை நெறி இடம்பெறுவதாக அறிந்தேன். கிழக்கு பல்கலைக்கழகத்திலும் அவ்வாறு மாணவர்கள் குறிப்பிட்ட ஊடகக் கல்வியை தொடருகிறார்களா? அவ்வாறாயின் அவர்களிடம் நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.  கிழக்கு பல்கலைக்கழக  தமிழ்த்துறை மாணவர்கள் சிலருடன் ஒரு சிறிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தரமுடியுமா,.? என்று பிரபாகரனிடம் கேட்டிருந்தேன்.

கல்முனை – பாண்டிருப்பில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு,  இலக்கிய நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன் இரவு 9-00 மணியளவில் அவரது மட்டக்களப்பு வீட்டுக்கு திரும்பிய சில நிமிடங்களில் பிரபாகரன் என் முன்னால் தோன்றினார்.

சுமார் நான்கு வருடங்களின் பின்னர்,  அவரை அன்று ( ஜூலை 18 ஆம் திகதி ) சந்தித்தேன். 

அவர் துரிதமாக செயல்பட்டு, மறுநாள் நண்பகல் கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை கவனித்தார்.

விரிவுரையாளர்கள் மேகராஜா, ரூபி வலன்ரினா,  நதீரா ஆகியோருடனும் மேலும் சில விரிவுரையாளர்களுடனும் மாணவர்களை சந்தித்தேன்.

கிழக்கு பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள். அதில் பெண்கள்தான் அதிகம். அதிலும் இஸ்லாமிய மாணவிகள்தான் அதிகம்.


இஸ்லாமிய சமூகத்தினரின் கல்விக்கண்ணை திறப்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் தீவிர முயற்சி மேற்கொண்ட  முன்னாள் கல்வி அமைச்சர் ( அமரர் ) பதியுதீன் முகம்மது அவர்களை மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

அன்றைய தினம் சுவாமி விபுலானந்தர் தொடர்பான நிகழ்ச்சிகளும் இருந்தமையால்  எனது உரை 45 நிமிடங்களுக்குள் நிறைவடைந்தது.

மாணவர்களைப் பார்த்து ஏதும் கேள்விகள் கேளுங்கள் எனச்சொன்னேன்.

பதில் இல்லை. மயான அமைதி நிலவியது.

இறுதியாக எந்தப்புத்தகம் படித்தீர்கள்..? எனக்கேட்டேன். அதற்கும் பதில் இல்லை.

 சினிமா: பார்த்ததும் கேட்டதும் என்ற நூலையும் எழுதியிருக்கின்றேன். அதனால், சினிமா பற்றியாவது கேளுங்கள் என்றேன். அதற்கும் பதில் இல்லை.

அந்த ஆழ்ந்த அமைதியை குலைக்கவேண்டியிருந்தது.  மாணவர்களை உற்சாகமூட்ட வேண்டியிருந்தது.

நடிகை நயன்தாராவுக்கு எத்தனை குழந்தைகள்..? நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது என்ன வயது..? முதலான  கேள்விகளையாவது கேளுங்கள் என்றேன்.

அரங்கம் சிரிப்பால் சற்று அதிர்ந்தது.

விரிவுரையாளர்கள் மௌனமாக சிரித்தார்கள்.

இந்தக்கேள்விகளும் கேட்கப்படவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் பேராதனை பல்கலைக்கழகத்திலும்  அட்டன் - பத்தனை கல்வியியல் கல்லூரியிலும் மாணவர்களிடத்தில், இறுதியாக எந்தப் புத்தகம் படித்தீர்கள்..? எனக்கேட்டபோதும் பதில் இருக்கவில்லை. 

தவறு எங்கோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பது மாத்திரம் உண்மை. 

ஒரு மாணவி மாத்திரம் விரிவுரையாளர்களின் வற்புறுத்தலையடுத்து எழுந்துவந்து அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்  பணிகள் – தமிழ்க்கல்வி  பற்றி கேட்டார்.  அவருடைய கேள்விக்கு விரிவாக பதில் சொன்னேன்.

அதுபற்றி அடுத்த அங்கத்தில் குறிப்பிடுவேன்.  அவுஸ்திரேலியாவுக்கு  புறப்படுவதற்கு முன்னர், எனது கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சந்திப்பு தொடர்பான ஆதங்கத்தை சில எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  பேராசிரியர்களிடத்தில் தெரிவித்தேன்.

எனது குரலுக்கு செவிமடுத்த ஒரு ஊடகவியலாளர் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் அனுப்பியிருக்கும் தினகரன் வாரமஞ்சரியின் ஆசிரிய தலையங்கத்தை இங்கே சமர்ப்பிக்கின்றேன்.

தினகரன் வாரமஞ்சரி ஆசிரியத் தலையங்கம் ( 30-07-2023 )

வாசிப்பும்  இலக்கியமும்

குன்றிச் செல்லும் துயரம்!

  நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளை விட தீங்கான விடயங்களே அதிகம் உள்ளனவென்று பொதுவெளியில் நிலவுகின்ற விமர்சனங்களில் உண்மை இல்லாமலில்லை. இன்றைய நவீனத்தின் தீங்கான விளைவுகளில் ஒன்றுதான் இளைய தலைமுறையினர் மத்தியில் இலக்கியம் மீதான நாட்டம் இல்லாமல் போனதாகும்.

 இலக்கியம் மீதான ஈடுபாடு இப்போதெல்லாம் வெகுவாகவே குறைந்து போய்விட்டதென்பதை சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை. இன்றைய இளையதலைமுறையினரில் எத்தனை பேர் சிறுகதை, நாவல், கவிதை போன்ற இலக்கியங்களைத் தேடி வாசிக்கின்றார்கள் என்பதை ஆராய்ந்தால் இந்த உண்மை இலகுவாகவே புரிந்து விடும்.

 அக்காலத்து பிரபல இலக்கியப் படைப்பாளிகளை மாத்திரமன்றி, இக்கால இலக்கியப் படைப்பாளிகளையும் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு முற்றாகவே தெரியாது. அதுமாத்திரமன்றி சிறுகதை, நாவல், கவிதை போன்ற இலக்கியங்கள் தொடர்பான சிற்றறிவும் இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கிடையாதென்பது வேதனையான விடயம்.

 இன்றைய இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்களிலேயே எவ்வேளையிலும் மூழ்கிக் கிடக்கின்றார்கள். தமது அந்தரங்கங்களை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்வதிலும், அருவருப்பானவற்றைத் தேடி அறிவதிலுமே பலருக்கும் நாட்டம் அதிகம். இளையோரை மாத்திரமன்றி வயதானவர்களையும் இவ்வாறான ‘சமூக ஊடகப் பித்து’ ஆட்கொண்டு விட்டதால் இலக்கிய ஆர்வமும், பயனுள்ள வாசிப்புகளும் குன்றிப் போய்விட்டன.

 அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற இலங்கை எழுத்தாளரான லெ. முருகபூபதி கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்து ஒருமாத காலம் இங்கு தங்கியிருந்து விட்டுத் திரும்பியிருந்தார். அவர் அக்காலத்தில் இலங்கையின் தேசியப் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகளை ஏராளமாகப் படைத்தவர். இன்றும் உலக தமிழ் இலக்கியப் பரப்பிலும், ஊடகவெளியிலும் முருகபூபதியைத் தெரிந்திருக்காத இலக்கிய ஆர்வலர்கள் இல்லை எனலாம். அன்று போல இன்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் அவர்.

 அத்துடன் நின்று விடாமல் இலங்கையில் ஆதரவற்ற சிறார்களான மாணவர்கள் நூற்றுக்கணக்கானோரின் கல்விக்கு உதவும் தொண்டு அமைப்பொன்றையும் அவுஸ்திரேலியாவில் நடத்தி வருபவர் அவர்.

 ஒரு மாதகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இலக்கிய சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியா திரும்புகையில் அவர் வேதனையுடன் கூறிய தகவல் இது.

  “இளவயதினரிடம் மாத்திரமன்றி, வயதானவர்களிடமும் வாசிப்பு மீதான நாட்டமும் அக்கறையும் அருகியே போய்விட்டன. எமது தலைமுறையுடன் இலக்கியமும் வாசிப்பும் முற்றாகவே இல்லாமல் போய்விடுமோ என்று அச்சமாக உள்ளது” என்றார் வேதனையுடன் எழுத்தாளர் முருகபூபதி.

  கலையும் இலக்கியமும் நம் வாழ்வுடன் பின்னிப்பிணைந்தவை என்பதால் அவரது அக்கருத்தை புறந்தள்ளிவிட முடியாது.

 ( தொடரும் )

 

letchumananm@gmail.com No comments: