கட்டுரை இப்படியும் நடக்கிறது July 31, 2023

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு


தெரியும்.

விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக இருந்த அன்ரன் பாலசிங்கம் லண்டனில் நடைபெற்ற ஒரு மாவீரர் தின விழாவில் பேசுகையில் ‘ரணில் ஒரு நரியன்’
என்று சொன்னது பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.
அதனால்தானோ என்னவோ, இரண்டாயிரத்து ஐந்து ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றால் சமஷ்டி அரசமைப்பு ஒன்றைக் கொண்டுவருவேன் என்று ரணில் கூறிய போதிலும் அவர் வெற்றி பெறுவதைத் தடுப்பதற்காக விடுதலைப் புலிகள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தனர்.
அதுபற்றி பல்வேறு வகையிலும் கூறப்பட்டாலும் ரணில் வெற்றிபெறுவதை அவர்கள் விரும்பவில்லை என்பது தெரிந்ததே.
ஆனால், இன்று நிலைமை வேறு.
இருக்கின்ற தலைவர்களில் ஒப்பீட்டடிப்படையில் தமிழர் பிரச்னையை ஓரளவேனும் புரிந்துகொண்டவர்.
மேற்குலகு நம்புகின்ற ஒரு தாராளவாத அரசியல்வாதி.
அவர் இதுவரை ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் வெற்ற பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.
அவர் சிங்கள தேசியவாதிகளின் ஆதரவைப் பெற முடியாமல் போனதுதான்.
இதனை அவரோடு தேர்தலில் எப்போதும் கூட்டுவைத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு தடவை பகிரங்கமாகவே கூறியிருந்தமை ஞாபகம்.
நடக்கவிருக்கும் தேர்தலில் ரணில், சிங்கள தேசியவாதிகளின் வாக்குகளை பெறமுடியாது போனால் அவரின் வெற்றி சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.
அதனை அவரும் தற்போது உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தெற்கில் கடும் சிங்கள தேசியவாதிகளையும், தெற்கிலுள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த விகாரைகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்தியே தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அவரின் இந்த வலையமைப்பை கவனித்தவர் சுகீஸ்வர பண்டார என்ற இளைஞர்.
பின்னர், கோட்டாபய வெற்றிபெற்று ஜனாதிபதியான பின்னர் அவரின் தனிப்பட்ட செயலாளராக அவரை நியமித்திருந்தார்.
கோட்டாபய பதவி விலகி நாட்டைவிட்டு தப்பிச் சென்றபோது பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணிலிடம் கோட்டா விடுத்த முக்கிய கோரிக்கைகள் சிலவற்றில்
ஒன்று தனது அந்த தனிப்பட்ட செயலாளரை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் பணியில் அமர்த்தி வைத்திருக்கவேண்டும் என்பது.
அவர் இப்போதும் ஜனாதிபதி செயலகத்தில் சுமார் முப்பது ஆளணிகளுடன் பணியாற்றி வருகின்றார்.
பொதுஜன பெரமுனவிலிருந்து ஒரு தொகுதி எம். பிக்களை பிரித்தெடுத்து தனி அணியாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள அந்த அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்கின்றன தெற்கின் செய்திகள்.
முன்னாள் ஜனாதிபதியின் ஆசிர்வாதமும் அவருக்கு இருக்கின்றதாம்.
கோட்டா முன்னர் வசித்த அரச வீட்டிலிருந்து முழுவீச்சில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்பதுதான் தெற்கில் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்ற
செய்தி.
பெரமுனவின் எம்.பிக்களில் சுமார் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் இந்த அணியில் ஏற்கனவே இணைந்துவிட்டபோதிலும், தொடர்ந்து ஆள்பிடிக்கும் பணி நடந்து வருகின்றது.
தீவிர சிங்கள – பௌத்த கடும்கோட்பாட்டு அரசியலை ஆதரிக்கும் இந்த எம்.பிக்கள், கோட்டாவின் பழைய வலையமைப்பை பயன்படுத்தி இப்போதே ரணிலுக்கு ஆதரவான பிரசாரத்தை தொடக்கிவிட்டனர் என்கிறது தெற்கு செய்தி ஒன்று.
ஒரு காலத்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவராகவும் அன்புக்குரியவராகவும் இருந்த நீர்கொழும்பு நிமல் லான்சா தற்போது அந்த அணியை வழிநடத்துகின்ற பணியைச் செய்துவந்தாலும் அந்த அணிக்கு பொருத்தமான ஒருவர் விரைவில் தலைமை தாங்கிக்கொண்டு, அணி பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பெரமுனவிலிருந்து எழுபதுக்கும் அதிகமான எம்.பிக்கள் இந்த அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கடந்த வாரம் சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்று தெரிவித்தது.
இதனால், கடும் கோபத்தில் இருக்கும் ராஜபக்ஷ தரப்பினர், கோட்டாபய மூலம் இவற்றை தடுக்க எடுத்த முயற்சி கைகூடவில்லை என்றும், பின்னர் அவரை ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் மற்றுமொரு தரப்பிலிருந்து தெரியவந்தது.
இந்த நகர்வுகள், பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையேயான உறவில் நெருடலை ஏற்படுத்தியிருப்பதால் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நெருக்கடியை சந்திக்கவேண்டி வரலாம் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
நெருக்கடி அதிகமானால், தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கான அவசியத்தை ரணில் எதிர்கொள்ளலாம் என்கின்றது மற்றுமொரு தரப்பு.!

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: