உலகச் செய்திகள்

தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி: ட்ரம்ப் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு

 பாகிஸ்தான் அரசியல் பேரணியில் குண்டுத் தாக்குதல்: 44 பேர் பலி

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியாவும் ஜப்பானும் திருப்தி

பிரதமரை பதவி விலகுமாறு பங்களாதேஷில் கடும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல்

உக்ரைனுடன் அமைதிப் பேச்சு பற்றி ரஷ்ய ஜனாதிபதி சூசகம்

இம்ரான் கானுக்கு 3 வருட சிறை; 5 வருட அரசியல் தடை


தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி: ட்ரம்ப் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு

August 3, 2023 6:01 am 

2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக, முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீது குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல், அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயற்சி செய்வதை தடுக்க சதி செய்தல் என 4 பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ஜோ பைடனுக்கு கிடைக்கவிருந்த ஓட்டுகளை தனதாக்கிக் கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஒரு வார காலம் இந்த சதிக்கான திட்டம் தீட்டப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப்புடன் சதி செய்ததாக பெயர் வெளியிடப்படாத 6 பேர்களும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போது அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகவில்லை. ஒருவேளை பின்னர் அவர்கள் பெயர்களும் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

இந்த வழக்கு தொடர்பில் வொஷிங்டனில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் ட்ரம்ப் இன்று (03) ஆஜராகவுள்ளார்.

இதில் 5 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல் மற்றும் 10 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயலுவதை தடுக்க சதி செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் மூன்று வெவ்வேறு வழக்குகளில் மொத்தமாக 78 குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருக்கும் 77 வயதான ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு தாம் எப்போதும் சட்டத்தைப் பின்பற்றியதாகக் கூறினார்.

அண்மையில் சமூக வலைதள பதிவில், “2016 தேர்தலில் நான் வென்றதை எதிர்த்து ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தியதைபோல், ஒரு தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என தெரிந்தால் அதனை எதிர்த்து போரிட எனக்கு முழு உரிமை உள்ளது” என ட்ரம்ப் கூறியுள்ளார்.   நன்றி தினகரன் 

 
பாகிஸ்தான் அரசியல் பேரணியில் குண்டுத் தாக்குதல்: 44 பேர் பலி

- மேலும் 15 பேரின் நிலை கவலைக்கிடம்; பலி அதிகரிக்க வாய்ப்பு

August 1, 2023 6:00 am 

வட மேற்கு பாகிஸ்தானில் அரசியல் பேரணி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதோடு சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய புஜவுர் மாவட்டத்திலுள்ள கர் புறநகர் பகுதியில் பழைமைவாத ஜமாத் உலமா இ இஸ்லாம் கட்சியின் பேரணியிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உடன் எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கூடாரம் ஒன்றில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது குண்டு வெடிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்கள் இருந்த மேடைக்கு அருகிலேயே தற்கொலைதாரி குண்டை வெடிக்கச் செய்திருப்பதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தாக்குதலின் பின்னணில் இஸ்லாமிய அரசுக் குழு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டபோதும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குண்டு வெடித்ததும் கூடாரம் சரிந்து தப்ப முடியாமல் உள்ளே பலர் சிக்கிக் கொண்டதாகவும் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

ஜமாத் உலமா இ இஸ்லாம் பாகிஸ்தானின் பிரதான மதச்சார்பு அரசியல் கட்சி ஒன்று என்பதோடு அது பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அரசாங்க கூட்டணியின் அங்கமாக உள்ளது.   நன்றி தினகரன் 


 பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியாவும் ஜப்பானும் திருப்தி

July 31, 2023 5:07 pm 

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்தியாவும் ஜப்பானும் தம் திருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

புதுடில்லிக்கு விஜயம் செய்திருந்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அச்சமயமே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் திருப்தி தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் சுதந்திரமானதும் வளமானதுமான இந்து – பசுபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்துவதற்கு தங்களுக்கு இடையிலான கூட்டாண்மையின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.   நன்றி தினகரன் 


பிரதமரை பதவி விலகுமாறு பங்களாதேஷில் கடும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல்

July 31, 2023 10:06 am 

பங்களாதேஷில் பிரதமரை பதவி விலகக் கோரி தலைநகர் டாக்காவின் பிரதான வீதிகளை முடக்கி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கற்களை எறிந்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மீது பங்களாதேஷ் பொலிஸார் இரப்பர் குண்டுகள் மூலம் சூடு நடத்தயதோடு கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

பங்களாதேஷ் தேசிய கட்சி ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை பஸ் வண்டிகள் மீது தீ வைத்ததோடு பெட்ரோல் குண்டுகளையும் எறிந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் ஷெய்க் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலை நடுநிலையான காபந்து அரசு ஒன்றின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பங்களாதேஷ் எதிர்க்கட்சியின் தலைவி காலிதா சியா கடந்த 2018 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற பின் அந்த கட்சி பெரும் குழப்பத்தை சந்தித்தபோதும் நாட்டின் வாழ்க்கைச் செலவும் அதிகரித்திருக்கும் சூழலில் அதன் பேரணிகளில் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் பங்கேற்று வருகின்றனர். பிரதமர் ஹசீனா 2009 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடக்கம் அதனை தக்கவைக்க எதேச்சதிகாரம், மனித உரிமை மீறல்கள், பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குதல் மற்றும் தம்மை விமர்சிப்பவர்களை சிறை வைத்து எதிர்க்கருத்துகளை    நன்றி தினகரன் 

உக்ரைனுடன் அமைதிப் பேச்சு பற்றி ரஷ்ய ஜனாதிபதி சூசகம்

July 31, 2023 1:49 pm 

உக்ரைனுடனான அமைதிப் பேச்சை மொஸ்கோ ஒருபோதும் நிராகரிக்கவில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். உக்ரைனிய இராணுவம் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் அதை அணுகுவது சிரமம் என்றார் அவர். ரஷ்யக் கடற்படையின் விடுமுறைக்கு முதல் நாள் அவர் அவ்வாறு கூறினார்.

ரஷ்ய – ஆபிரிக்க உச்சநிலைச் சந்திப்பைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (29) செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் புட்டின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஆபிரிக்க அல்லது சீனாவின் அமைதி முயற்சிகளே போரை முடிவுக்குக் கொண்டுவருவதின் அடிப்படையாக இருக்கலாம் என்று புட்டின் கூறினார்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவும் ஏனைய ஆபிரிக்கத் தலைவர்களும் ரஷ்ய, உக்ரைனியத் தலைவர்களிடம் 10 அம்ச அமைதித் தீர்வைச் சமர்ப்பித்துள்ளனர். ஆபிரிக்காவின் அமைதி முயற்சி பெப்ரவரி மாதம் சீனா முன்வைத்த அமைதித் திட்டத்தைப் பிரதிபலிப்பதாக புட்டின் சுட்டிக்காட்டினார்.

ஆனால் உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தமது நாட்டிலிருந்து ரஷ்யத் துருப்பினர் மீட்டுக் கொள்ளப்படாத வரை அமைதிப் பேச்சுக்கு இடமில்லை என்று கூறியிருந்தார்.

எனினும் தனது நாட்டின் புதிய எல்லைகள் தொடர்பான் உண்மையை உக்ரைன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதன் அடிப்படையிலேயே அது பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்துகிறது.   நன்றி தினகரன் 

இம்ரான் கானுக்கு 3 வருட சிறை; 5 வருட அரசியல் தடை

August 5, 2023 2:08 pm 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் இதன் மூலம் அவர் 5 வருடங்கள் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்க பரிசுகளை சட்டவிரோதமாக விற்று சம்பாதித்த பணத்தை கணக்கில் காட்டவில்லை எனும் குற்றத்திற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை தொடர்ந்து, இம்ரான் கான் லாஹூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம் அவருக்கு பாகிஸ்தான் ரூ. 100,000 (சுமார் இலங்கை ரூ. 150,000) அபராதமும் விதித்துள்ளது.

இம்ரான் கான் 2018 இல் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் கடந்த வருடம் அவர் மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் பதவி நீக்கப்பட்டார்.

இம்ரான் கான் ஏப்ரல் 2022 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் எதிர்கொள்கிறார். அவை அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் என்று அவர் கூறுகிறார்.

பல மாதங்களாக அவர் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த நிலையில், சில சமயங்களில் அவரது ஆதரவாளர்கள் அவரை கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டனர்.

கடந்த மே மாதம், நீதிமன்றத்தில் ஆஜராகாததற்காக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என, உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து, அடுத்த தேர்தலுக்காக மும்முரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

பாகிஸ்தான் நாட்டு சட்டத்தின் படி, இந்த தண்டனை காரணமாக இம்ரான் கான் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதை தகுதி நீக்கம் செய்யும் என்பதோடு, மேலும் உள்ள வழக்குகளுக்கு அமைய, வாழ்நாள் முழுவதும் நீடிக்க வாய்ப்பை ஏற்படுதலாம்.

பாகிஸ்தானின் பாராளுமன்றம் ஓகஸ்ட் 09ஆம் திகதி கலைக்கப்படவுள்ளதோடு, தேர்தலையொட்டி தற்காலிக அரசாங்கம் அரசாங்கத்தை பொறுப்பேற்கவும் உள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம், தேர்தலானது நவம்பர் மாத ஆரம்பத்தில் நடைபெற வேண்டும் என்றாலும், பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தேர்தல் திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

No comments: