கட்டுரை இப்படியும் நடக்கிறது July 30, 2023

 இந்த ஊர்க்குருவி யாழ்ப்பாணத்தில் எண்பதுகளில் ஈழநாடுவில்


பணியாற்றிய அந்தக்காலத்தில் இரவுக் கடமை முடிந்து அதிகாலை வீட்டுக்குச் செல்வதற்காக யாழ்ப்பாண பஸ் நிலையம் செல்வதற்கு முன்னதாக அதன் எதிரே உள்ள பூபாலசிங்கம் புத்தகக்கடையில் சில நிமிடங்களைக்கழிப்பதுண்டு.

கடையின் மேற்குப் பக்கத்தில் அன்றைய தினசரிகளை விற்பதற்கான பகுதியின் முன்னால் யாழ்ப்பாணத்தின் பிரமுகர்கள் பலரை காணலாம்.
அங்கே கொட்டடியைச்சேர்ந்த அந்த பதின்மவயது வாலிபனும் தினமும் நிற்பான்.
அன்றைய பத்திரிகைகளில் வந்திருக்கின்ற செய்திகளை மற்றவர்கள் விமர்சித்துக்கொண்டிருக்கும்போது.
அவன் மட்டும் எந்தப் பத்திரிகையில் எந்த செய்தி வந்திருக்கின்றது? அந்தச் செய்தி எந்தப்பத்திரிகையில் வரவில்லை என்பது போன்ற தகவல்களை சொல்லிக்
கொண்டிருப்பான்.
அத்தனை செய்திகளையும் அலசிக்கொண்டு வருவோர் போவோர் எல்லோருடனும் கதைத்துக்கொண்டிருப்பான்.
அனேகமாக அவனுக்கு அங்கு வருகின்ற வயதான பிரமுகர்களும் நண்பர்கள் மாதிரித்தான்.
அந்த வாலிபன் இப்போது லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
இப்போது அவருக்கு எத்தனை வயதிருக்கும் என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள்.
நான் யாரை சுட்டுகிறேன் என்பதை அவரைத் தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.
நேற்றையதினம் வட்ஸ்அப்பில் தொடர்பில் வந்தார்.
வட்ஸ் அப்தொலைபேசி அழைப்புக்களை அழைப்பவர் யார் என்பதை அவர்களின் ‘புறோஃபைல்’ காட்டித்தந்து விடும்.
அவர் தான் அழைக்கிறார் என்பதால் தவிர்க்க முடியாமல் பேசவேண்டிவந்தது.
எடுத்த எடுப்பிலேயே அவர் சொன்னார், ‘ஈழநாடுவுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறதுதான்.
அந்தக்காலத்தில் ஒரு பத்திரிகையில் தவறான செய்தி வந்தால் கூட வேறு ஒரு பத்திரிகை அந்த தவறை சுட்டிக்காட்டாது.
அதாவது ஒரு பத்திரிகையைப்பற்றி மற்றுமொரு பத்திரிகை செய்திவெளியிடாது.
அந்தப்பாரம்பரியத்தில் வந்ததுதான் ஈழநாடு.
என்றாலும் எனக்கு சில வேளைகளில் ஈழநாடு மீது கோபம் வருகிறது’ என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் அவர்.
அவர் எதைச் சொல்கிறார் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.
‘அப்படி வேறு எந்தப் பத்திரிகையைப் பற்றி நாங்கள் தவறாக எழுதினோம் என்று இப்படியொரு பீடிகை போடுகிறீர்கள்’ என்று கேட்டேன்.
இல்லை, இல்லை, ஈழநாடு தனது பாரம்பரியத்தை இதுவரை மீறவில்லைத்தான்.
ஆனால் இந்த ஒருதடவை என்றாலும் மீறவே வேண்டும்’ என்றார் அவர்.
‘யாழ்ப்பாணத்திலுள்ள எந்த ஒரு பத்திரிகையுமே – ஈழநாடு குழுமம் (டான் ரிவியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) பற்றிய எந்த ஒரு செய்தியையும் கண்டுகொள்வதில்லை.
ஆனால் நீங்கள் மட்டும் ஒரு பத்திரிகையின் உரிமையாளரான அந்த அரசியல்வாதியின் செய்திகளை போடுகின்றபோது எரிச்சலாக இருக்கின்றது.’ என்றார்.
‘அண்மையில் வடக்கு கிழக்கின் முக்கிய சிவில் சமூக பிரதி நிதிகள் கையெழுத்திட்டு இந்தியப் பிரதமருக்கு மனு அனுப்பியிருந்தார்கள்.
நல்லை ஆதீனத்திலிருந்து ஆயர்கள் வரையும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னாள் உபவேந்தர்கள் என்று பலர் கையெழுத்திட்ட அந்த மனுவில், இந்த சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒரு பிரஜையாக ஈழநாடு குழுமத்தலைவர் குகநாதனும் கையெழுத்திட்டிருந்ததுடன், அந்த மனுவை கையளிக்க இந்திய துணைத்தூதரகத்திற்கும் சென்றிருந்தார்.
இதனை ஒரு செய்தியாக்கிய பத்திரிகை ஒன்று, ‘தங்களைத் தாங்களே சிவில் சமூகத்தினர் என்று கூறிக்கொள்ளும் சிலர் மனுவை கையளித்தனர்’ என்று செய்தி
வெளியிட்டிருந்தது.
ஒரேயொருவர் கையெழுத்திட்டு சிவில் சமூகம் என்ற பெயரில் கடிதம் எழுதினாலும் அதனை அப்படியே பிரசுரிக்கின்ற அந்தப் பத்திரிகை, சமூகத்தில் இத்தனை பெரிய பிரமுகர்கள் கையெழுத்திட்டு மகஜர் கையளித்ததை கேவலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னைத்தானே கேவலப்படுத்தியது.’
நண்பர் விடுவதாக இல்லை.
அவர் சொல்வதையெல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த போது, சொன்னார், அதற்குப்பிறகும் அந்த பத்திரிகையின் தலைவர் பற்றிய செய்தியை நீங்கள் ஒளிபரப்பியதை பார்த்த பின்னர் தான், நான் இப்போது தொலைபேசி எடுத்தேன் என்றார்.
அவரை சமாதானப்படுத்துவதற்காக சொன்னேன்.
‘அவர்களைப் போல எங்களையும் நடந்துகொள்ளச் சொல்கிறீர்களா?’ என்று.
‘அதற்காக… குட்டக்குட்டக் குனிபவனும் மடையன் தானே?’ என்றார் கோபமாக.
‘தங்களைத் தாங்களே ஊடகப் போராளிகள் என்றும், அரசியல் கட்சி ஒன்றில் இருந்து கொண்டும் தங்களை நடுநிலை பத்திரிகை என்றும் எழுதுகின்றவர்களைப் பற்றி இனியாவது கண்டுகொள்ளாதீர்கள் என்று விட்டு தொடர்பை துண்டித்து விட்டார் நண்பர்.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: