உலகச் செய்திகள்

 11 நாடுகளின் பங்கேற்புடன் ஆஸியில் போர் ஒத்திகை

ஷியா பள்ளிவாசல் அருகில் குண்டு வெடித்து அறுவர் பலி

டொனல்ட் டிரம்ப் மீது மூன்று புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

நைகர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம் -ஜனாதிபதி சிறைப்பிடிப்பு

டென்மார்க்கில் குர்ஆன் எரிப்புக்குக் கண்டனம்


11 நாடுகளின் பங்கேற்புடன் ஆஸியில் போர் ஒத்திகை

July 30, 2023 1:06 pm 

பதினொரு தோழமை நாடுகளின் பங்குபற்றுதலுடனான பாரிய பன்னாட்டு இராணுவ ஒத்திகை அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகியுள்ளது. ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப் பயிற்சி ஐக்கிய அமெரிக்காவினதும் அவுஸ்திரேலியாவினதும் தலைமையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இரு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறக்கூடிய இந்த போர் பயிற்சியில் கனடா, பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், நியூசிலாந்து, பப்புவா நியூகினி, தென் கொரியா, டொங்கோ, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பு படையினர் இம்முறை பங்கேற்றுள்ளதோடு இந்தியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளது படையினர் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

“இந்த பன்னாட்டு இராணுவப் பயிற்சியை நாங்கள் ஒரு ஒலிம்பிக்காகக் கருதுகிறோம். இப்பயிற்சியில் 10 ஆயிரம் படை வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் முழுப் பயிற்சிக்குமென 30 ஆயிரம் படையினர் உள்வாங்கப்பட்டுள்ளனர்” என்று அவுஸ்திரேலிய இராணுவத்தின் யுத்த பயிற்சி மத்திய நிலையத்தின் தளபதி கேர்னல் பென் மெக்லென்னன் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 





ஷியா பள்ளிவாசல் அருகில் குண்டு வெடித்து அறுவர் பலி

July 29, 2023 3:42 pm

சிரிய தலைநகர் டமஸ்கஸின் தெற்காக உள்ள ஷியா பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் ஷியா முஸ்லிம்களின் புனித நாளான ஆஷுரா தினத்திற்கு ஒரு நாள் முன் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதோடு 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சிரியாவின் ஷியா யாத்திரிகர்கள் அதிகம் வரும் செய்யிதா செய்னப் அடக்கஸ்தலத்திற்கு அருகிலேயே கடந்த வியாழனன்று (27) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டெக்சி ஒன்றுக்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றே வெடித்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று அது கூறியது.

முகமது நபியின் பேத்தியும் இமாம் அலியின் மகளுமான செய்யிதா செய்னப்பின் அடக்கஸ்தலத்தில் இருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் இருக்கும் பாதுகாப்பு கட்டடம் ஒன்றை ஒட்டியே குண்டு வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் 2011இல் சிவில் யுத்தம் ஆரம்பமானது தொடக்கம் இந்த ஷியா பள்ளிவாசலையொட்டி பல குண்டு தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.   நன்றி தினகரன் 






டொனல்ட் டிரம்ப் மீது மூன்று புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

July 29, 2023 6:00 am 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மீது மேலும் மூன்று புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகையில் இருந்து அவர் எத்தகைய சர்ச்சைக்குரிய பத்திரங்களை வெளியே கொண்டுசென்றார் என்பதை மறைக்க இரண்டாவது ஊழியர் ஒருவர் உதவியதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

டிரம்ப் மீது இதுவரை மொத்தம் 40 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிய குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்படுவதற்குச் சில மணிநேரத்துக்கு முன் தமது வழக்கறிஞர்கள் நீதித்துறை அதிகாரிகளைச் சந்தித்ததாக டிரம்ப் கூறினார்.

2020ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை மாற்ற முயற்சி செய்தது தொடர்பான விசாரணை இதில் அடங்கும். மேலும் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படக்கூடும் என கூறப்படுகிறது.

புதிய சட்ட நடவடிக்கை, டிரம்ப்பையும் அவரோடு இருப்பவர்களையும் தொல்லை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் வீண் முயற்சிகள் என்று அவரது பேச்சாளர் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 






நைகர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம் -ஜனாதிபதி சிறைப்பிடிப்பு

July 28, 2023 6:04 am 

 

மேற்கு ஆபிரிக்க நாடான நைகரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டு ஜனாதிபதி முஹமது பசூமை சிறைப்பிடித்துள்ளது.

தேசிய தொலைக்காட்சியில் கடந்த புதன்கிழமை இரவு தோன்றிய படையினர், அரசியலமைப்பு ரத்துச் செய்யப்பட்டதாகவும், அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதாகவும் அறிவித்துள்ளனர்.

“பாதுகாப்பு நிலைமையில் ஏற்பட்டுள்ள சரிவு, மோசமான சமூக மற்றும் பொருளாதார நிர்வாகத்தை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகள் இதில் தலையிட வேண்டாம் என்றும் இராணுவம் கேட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை தொடக்கம் ஜனாதிபதி பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துருப்புகளால் ஜனாதிபதி பசூம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆபிரிக்க ஒன்றியம், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

மேற்கு ஆபிரிக்காவில் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கு எதிரான போரில் மேற்குலகின் நெருங்கிய நண்பராக பசூம் உள்ளார். அண்மைய ஆண்டுகளில் ஜிஹாதிக்களின் எழுச்சி, அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோவிலும் இராணுவ சதிப்புரட்சிக்கு காரணமானது.

இந்த இரு நாடுகளின் இராணுவத் தலைவர்களும் அந்த நாடுகளின் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸுடன் உறவை துண்டித்திருப்பதோடு நைகரும் பிரான்ஸின் முன்னாள் காலனி நாடாகும்.

நைகரில் அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு குழுக்களுடன் தொடர்புபட்ட தரப்பினர் தொடர்ந்து இயங்கிவருகின்றனர். 2021 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் தெரிவான ஜனாதிபதி பசூம், பிரான்ஸ் மற்றும் மேற்கு நாடுகளின் நெருங்கிய கூட்டாளியாக செயற்பட்டு வருகிறார்.

1960இல் பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றது தொடக்கம் நைகரில் நான்கு இராணுவ சதிப்புரட்சிகள் இடம்பெற்றிருப்பதோடு பல தடவைகள் இதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன.   நன்றி தினகரன் 





டென்மார்க்கில் குர்ஆன் எரிப்புக்குக் கண்டனம்

July 26, 2023 5:37 pm 

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள ஈராக் தூதரகத்திற்கு வெளியில் ‘டென்மார்க் தேசபக்தர்கள்’ என்று அழைக்கப்படும் குழுவொன்று கடந்த திங்கட்கிழமை (24) முஸ்லிம்களின் புனித குர்ஆனை எரித்ததற்கு ஈராக் மற்றும் மேலும் சில முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

இந்த தீவிர வலதுசாரி குழு தமது செயலை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி இருந்தது.

இதனை அடுத்து ஈராக் தலைநகர் பக்தாதில் சுமார் 1000 ஆர்ப்பாட்டக்காரர்கள் டென்மார் தூதரகத்தை அடைய முயன்றனர். ஸ்டொக்ஹோமில் குர்ஆனை எரிக்க திட்டமிட்டதை அடுத்து கடந்த வாரம் பக்தாதில் உள்ள சுவீடன் தூதரகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் மற்றும் சுவீடன் இந்த செயலுக்கு அனுமதி அளிப்பதற்கு யெமன் கோபத்தை வெளியிட்டதோடு, இது குர்ஆன் மீதான வெறுக்கத்தக்க தாக்குதல் என்று துருக்கி குறிப்பிட்டுள்ளது. அல்ஜீரியா, டென்மார்க் மற்றும் சுவீடன் தூதுவர்களை அழைத்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான செயல்களுக்கு அனுமதிப்பது சமூகத்தின் சகவாழ்வுக்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஈராக் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

“ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட இந்த குர்ஆன் எரிப்புக்கு டென்மார்க் கண்டனத்தை வெளியிடுகிறது” என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 


No comments: