கட்டுரை கனடிய எதிர்ப்பின் பின்னணி July 27, 2023

 


பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சிங்கள தேசியவாதத்தின் புதிய காவலராக தன்னை காண்பித்துக் கொள்கின்றார்.

ஒவ்வோர் அரசாங்கங்களிலும் இவ்வாறானவர்கள் இருப்பதுண்டு.
மகிந்த ராஜபக்ஷ காலத்தில் விமல் வீரவன்ஸ இந்தப் பணியை செய்துகொண்டிருந்தார்.
தற்போது சரத் வீரசேகர இனவாதப் பணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் ‘வியத்மக’ உருவாக்கிய அரசியல்வாதிகளில் சரத் வீரசேகரவே முதன்மையானவர்.
தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அரசியல் மயப்படுத்தும் நோக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டு, சரத் வீரசேகரவை மாகாண சபைகள் விவகாரங்களுக்கான அமைச்சராக்கினார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் ஒருவரை மாகாண சபைகள் விவகாரத்துக்கு அமைச்சராக்குவது முட்டாள்தனமாக தெரிந்தாலும் கோட்டாபயவை பொறுத்தவரையில் இவ்வாறான செயல்பாடுகளை தனது புத்திசாலித்தனமாகவே கருதிக்கொண்டார்.
இதேபோன்றுதான், 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்கும் ஒருவரை கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநராக நியமித்தார்.
ஆனால், கோட்டாபய தன்னை புத்திசாலியாக எண்ணிக்கொண்டு முன்னெடுத்த அனைத்து விடயங்களுமே இறுதியில் அவருக்கு எதிராகவே திரும்பின.
வியத்மகவும் இறுதியில் காணாமல் போனது.
ஆனால், அதன் எச்சமான சரத் வீரசேகர போன்றவர்கள் இனவாத பணிக்கு தலைமை தாங்கி வருகின்றனர்.
இதுவரையில், தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்திய சரத் வீரசேகர தற்போது கனடாவின் தூதுவரை வெளியேற்ற வேண்டுமென்று கூக்குரலிட்டு வருகின்றார்.
கனடிய தூதுவர் அண்மையில், கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து ருவிற்றரில் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே சரத் வீரசேகர அதனை ஓர் இனவாத பிரசாரமாக முன்னெடுத்துவருகின்றார்.
கனடா, இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் தொடர்ந்தும் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றது.
கனடிய பிரதமர் ரூடோ 83 கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவு கூர்ந்திருந்தார்.
பெருமளவான ஈழத் தமிழ் மக்கள் கனடாவில் வாழ்ந்து வருகின்றனர்.
கனடிய அரசியலிலும் தமிழ் மக்கள் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவது கனடாவை பொறுத்தவரையில் ஓர் உள்விவகாரமாகவும் மாறிவிட்டது.
அண்மையில், ஒரே நேரத்தில் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை தடை செய்யும் தீர்மானத்தை அறிவித்திருந்தது.
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளை ஒரே நேரத்தில் கறுப்புபட்டியலிட்ட சம்பவமானது.
மிகவும் அரிதான ஒன்றாகும்.
கனடாவின் இவ்வாறான அணுகுமுறைகளால் சரத் வீரசேகர போன்றவர்கள் அதிருப்தியுற்றிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கனடிய தூதுவரை வெளியேற்றுமாறு குரலெழுப்பி வருகின்றார்.
கனடிய தூதுவரின் பதிவில் என்ன தவறு உண்டு? ஒரு தவறும் இல்லை.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியொன்றின் மீது கரிசனையை காண்பிப்பது, அடிப்படையில் மனித உரிமை சார்ந்த ஒரு விடயமாகும்.
அது கனடிய வெளிவிவகார கொள்கைக்கு உட்பட்டது.
உண்மையில் ஒரு நாட்டில் வாழும் சக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் சிந்திக்க வேண்டிய பொறுப்பும் அதனை நிவர்த்தி
செய்ய வேண்டிய கடப்பாடும் இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு.
அதனை இன்றுவரையில் செய்வதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் முயற்சிக்கவில்லை.
தொடர்ந்தும் இனவாதத்தில் குளிர்காயும் அரசியலையே செய்ய முற்படுகின்றனர்.     நன்றி ஈழநாடு 

No comments: