வாயாடி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து


கதைகள் எழுதப்பட்டு அவை படமாகி வெற்றி கண்டுள்ளன. 1947ம் ஆண்டளவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் பல சீர்திருத்த கருத்துக்களை உள்ளடக்கி அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி படம் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டு மாபெரும் வெற்றியை கண்டது. அதன் பின் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபர் எம் சோமசுந்தரத்தின் மகன் எம் எஸ் காசி , கதாநாயகியை முன்னிலைப் படுத்தி ஒரு படத்தை 1973ல் தயாரித்தார். அந்தப் படம் தான் வாயாடி.


படத்தின் பெயரே கதாநாயகியின் கதாபாத்திரத்தை

உணர்த்துவதாக அமைந்தது. அந்த பாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக கே ஆர் விஜயா அமைந்தார். அவரை சுற்றி முழுப் படமும் உருவானது. படத்தின் தயாரிப்பிலும் அவரின் மறைகரம் தென்பட்டது.

வீட்டு வேலைகளை செய்து தன்னுடைய அன்றாட வாழ்வை ஓட்டும் பொன்னி நல்லவள், வெகுளி,ஆனால் வாயாடி! தன் மனதில் பட்டத்தை பட்டென்று வெளிப்படையாக பேசிவிடும் அவளின் செயல் ஒரு வீட்டில் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய முடியாத வண்ணம் தடுக்கிறது. செல்வந்தரான கோவிந்தசாமி வீட்டில் வேலைக்கு சேரும் அவளை கோவிந்தசாமியின் மகன் ராஜா காதலிக்கிறான். குடும்ப சொத்தை வீணாக்கி, படிக்காமல் சதா ஜாலியாக வாழும் அவனின் காதலை ஆரம்பத்தில் பொன்னி மறுக்கிறாள். ஆனால் பின்னர் அவனை காதலிக்கிறாள். அவளின் வற்புறுத்தலினால் படித்து பட்டதாரியாகிறான் ராஜா. ஒரு வழியாக பெற்றோர்கள் சம்மதிக்கவே பொன்னி , ராஜா கல்யாணம் நடக்கின்றது. ஆனால் பொன்னியின் பணத்தால் பட்டதாரியாகும் ராஜா ஆடம்பரமான, நாகரீகமான வாழ்வை நாடுகிறான். சதா மதுவிலும், மங்கையிடமும் நாட்டம் கொள்கிறான். பொன்னியோ துடிக்கிறாள். அவனை மீண்டும் மீட்டு நல்வழி படுத்துகிறாளா என்பதே மீதிக்கதை.

படத்தின் கதையை கலைஞானம் எழுதினார். ஆண்கள் எவ்வளவுதான் கெட்டலைந்தாலும் அவர்களை திருத்தும்சாமர்த்தியம் பெண்களிடமே உண்டு என்பதை வலியுறுத்தும் வகையில் கதையை எழுதியிருந்தார். அதற்கு திரைக் கதை வசனம் எழுதி, டைரக்ட் செய்தார் மதுரை திருமாறன். வசனங்களில் சிலம்பம் ஆடும் திருமாறனின் திறமை பல இடங்களில் பளிச்சிட்டது. வாசலில் இருக்கும் செருப்பு யாரையும் தேடி போவதில்லை, அதை தேடித்தான் யாரேனும் வருகிறார்கள். பீரோவின் இருக்கும் பட்டு வேட்டியை வாசலிலும் , வாசலில் இருக்கும் செருப்பை பீரோவிலும் வைக்க முடியாது , ஒரு பெண் கையை நீட்டினால் மடக்கலாம், காலை நீட்டினால் மடக்கலாம் , ஆனால் கழுத்தை நீட்டினால் அவ்வளவுதான் என்பது போன்ற பல வசனங்களை திருமாறன் எழுதி இருந்தார்.


கதாநாயகன் ராஜாவாக வரும் ஜெய்சங்கர் தன் வழமையான நடிப்பை வழங்கினார். படம் முழுவதும் வசனம் பேசுவதே கே ஆர் விஜயாவுக்கு வேலையானது. அவ்வப்போது முகபாவனையிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தினார் அவர். வி கே ராமசாமி பாத்திரமறிந்து நடித்திருந்தார். ஜோடி இல்லாமல் சோ காமெடி செய்தார். இவர்களுடன் சுந்தரராஜன், மனோகர், சுகுமாரி, கே கண்ணன், ஒரு விரல் கிருஷ்ணராவ், சி ஐ டி சகுந்தலா, எஸ் வி ராமதாஸ் என்று பலரும் நடித்திருந்தனர்.

எம் எஸ் விஸ்வநாதன், கண்ணதாசன் கூட்டு இதில் வேட்டு வைத்து

விட்டது. பொண்ணா இல்லை பூவா பாடல் மட்டுமே எடுபட்டது. ஒளிப்பதிவை பழம் பெரும் ஒளிப்பதிவாளர் ஜுபிடர் பி ராமசாமி கவனித்தார். நாட பாணியில் சில காட்சிகள் அமைந்த போதிலும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தினார் திருமாறன். இப் படத்தைத் தொடர்ந்து இதே பாணியில் மேலும் சில படங்களை இயக்கும் வாய்ப்பும் அவருக்கு கே ஆர் விஜயா மூலம் கிடைத்தது!


No comments: