இரண்டு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சி
ஒன்றை இரண்டு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், எழுந்து இருவரும் வெளியே வந்தபோது ஒருவர் கேட்டார், என்ன நினைக்கிறீர்கள் இருவரின் கருத்துக்களைப் பற்றி?
என்று.
அதற்கு மற்றவர் சொன்னார், ‘ஒருவர் அறிவாளி போல முட்டாள்தனமாக கதைக்கிறார்’ என்று, ‘அப்ப மற்றவர்?’ என்று கேட்டார்.
அதற்கு இவர் சொன்னார், ‘அவர் தன்னை மகா அறிவாளி என்றும் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அடி முட்டாள்கள் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்’ என்று.
அண்மையில், ஒரு விடயம் தொடர்பாக இரண்டு பேர் பாராளுமன்றில் உரையாற்றியது பற்றிய செய்திகளைப் படிக்க முடிந்தது.
இந்த நாட்டில் சமஷ்டி தீர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவில்லை என்றும் தமிழ் தலைவர்கள் கனவு காணவேண்டாம் எனவும் கூறியிருக்கிறார் சுதந்திரக் கட்சியின் அனுசரணையுடன் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்து இன்று மொட்டு கட்சி பிரமுகராகி இராஜாங்க அமைச்சையும் பெற்று அரசியல்வாதியாக
இருக்கும் சுரேன் ராகவன்.
ஏதோ அவரிடமே தமிழ் தலைவர்கள் சமஷ்டியை கேட்டது போலவும்தானே அதற்கு அனுமதி தரவேண்டியவர் போலவும் அவர் பேசியிருக்கிறார்.
‘இனியும் இந்த நாடு இனவாத யுத்தத்துக்கு முகம் கொடுக்காது.
எனவே, மீண்டும் இதற்குள் நாட்டை தள்ள முயற்சிக்க வேண்டாம்.
அமைதியாக இருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் தூண்டிவிடவேண்டாம் என நான் இவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்’, என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அவர் தனக்கு அரசியல் வாழ்க்கை கொடுத்தவர்களை திருப்திப்படுத்தத்தான் வேண்டும்.
ஆனால், தமிழ் மக்கள் எந்த அரசியல் தீர்வை கேட்க வேண்டும் என்று அவர் வகுப்பு எடுப்பது அவருக்கு அழகல்ல.
வடக்கு – கிழக்கோடு எந்தத் தொடர்பும் அற்ற அவர் வடக்கு – கிழக்கு தமிழர்கள் எதைக் கேட்கவேண்டும் என்று சொல்வது சரியானதல்ல.
ஆனால், அவருக்கு பதிலளித்த நமது தமிழ் காங்கிரஸ் தலைவர் விடுத்த சவால் தான் இன்று பேசப்பட வேண்டியது.
தமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்வதற்கு முதுகெலும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் சவால் விடுத்தார்.
அதுவும் சுரேன் ராகவனிடமும் சரத் வீர சேகரவிடமும்.
அவர்கள் நினைத்தாலும் அதனை நடத்த முடியுமா என்பது அவருக்கு மாத்திரமே தெரிந்தது.
சமஷ்டியைத்தான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பது பல தசாப்தங்களாகவே தேர்தல்கள் மூலம் நிருபிக்கப்பட்டுவிட்டன.
அவருடைய பேரனார் சமஷ்டிக்கு எதிராக ஐம்பதுக்கு ஐம்பது கேட்ட போதே அதனை நிராகரித்து சமஷ்டியை ஏற்றுக் கொண்டவர்கள் தமிழ் மக்கள்.
அதிகம் ஏன் எழுபத்தியேழில் தமிழீழத்துக்கு ஆதரவாகவும் தமிழ் மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள்.
ஆனால், சமஷ்டியை அடைவதற்காகத்தான் அவர்கள் ஏழு தசாப்தங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது வடக்கு, கிழக்கில் அல்ல.
நாடு முழுவதிலும்.
அவ்வாறு ஒரு வாக்கெடுப்பு நடத்தினால்தானே சமஷ்டியை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை கொண்டுவரமுடியும்.
சுரேன் ராகவன்தான் தனது எஜமானர்களை திருப்திப்படுத்த அப்படி பேசுகிறார் என்றால் நமது கஜேந்திரகுமார் எதற்காக இவருடன் இப்படியொரு சவால் விடுகிறார் என்பது தெரியவில்லை.
இப்போது தேவை, வடக்கு – கிழக்கு மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்ற சர்வஜன வாக்கெடுப்பு அல்ல.
இருக்கின்ற மாகாண சபைகளை வேண்டாம் என்று விடுவோம்? அல்லது சமஷ்டிக்காக தொடர்ந்து போராடுவோம்? என்ற வாக்கெடுப்பு ஒன்றே வடக்கு – கிழக்கில் அவசியமாகத் தேவைப்படுகின்றது.
ஏனெனில், மாகாண சபைகளை வேண்டாம் என்கிறார் கஜேந்திரகுமார்.
அப்படியொரு சவாலை விடுவதற்கு கஜேந்திரகுமார் தயாராக இருப்பாரா என்பது தெரியவில்லை.
- ஊர்க்குருவி.
- நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment