கட்டுரை இப்படியும் நடக்கிறது July 28, 2023

 


நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்த சம்பவங்களை ஒவ்வொருவரும் தத்தமக்கு தேவையான விடயங்களை மாத்திரம் சொல்வதால் முழுமையாக எங்கும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி செயலகம் தமக்கு தேவையானவற்றை வெளியே சொல்லியது.
சுமந்திரன் தனக்கு தேவையானவற்றைச் சொன்னார்.
இப்படி ஒவ்வொருவரும் தத்தமக்கு தேவையான விடயங்களை மாத்திரம் வெளியே பகிர்ந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு தமிழ்க் கட்சி தலைவர் கூட்டம் முடிந்ததும் தொலைபேசியில் தொடர்பில் வந்தார்.
‘எதற்காக இந்தக் கூட்டத்தை ரணில் கூட்டினார் என்பது தெரியவில்லை.
பதின்மூன்றுக்கு எதிரான எல்லோரையும் வரிசையாக பேசவிட்டு, அதனை நிறைவேற்றுவதற்கு எத்தனை எதிர்ப்பு இருக்கின்றது என்று முதலில் காட்ட விரும்பினாரோ தெரியவில்லை.
பின்னர் ஒரு கட்டத்தில் தமிழ்த் தரப்பினரைப் பார்த்து உங்களால்தான் எல்லாம் தாமதமாகின்றது என்று புகார் சொல்ல அவர் முயன்றபோது,
நாங்கள் திரும்ப அதனை மறுத்ததுடன் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்துங்கள் என்று கோரிக்கை விடுத்தோம்.
முழுமையாக அமுல்படுத்துவதை பின்னர் பார்க்கலாம், முதலில் தேர்தலை நடத்துங்கள் என்றோம்.
அவர் அதற்கும் சரியாக பதிலை சொல்லாமல் எதுவித முடிவும் இன்றி கூட்டத்தை முடித்துவிட்டு எழும்பிவிட்டார்’ என்றார்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே ‘என்ன நடந்தது? என்ன நடந்தது?’ என்று ஒரு நண்பர் லண்டனிலிருந்து தொடர்ந்து தொடர்பில் வந்து
கேட்டுக்கொண்டே இருந்தார்.
அவருக்கு தகவல் சொல்வதற்காக அவருடன் பேசியபோது, இந்தத் தலைவர் சொன்னதை அவருக்கு மறுஒலிபரப்பு செய்தேன்.
அதற்கு அவர் சொன்னார்: ‘கூட்டத்தில் பதின்மூன்றுக்கு எதிரானவர்கள் தமது எதிர்க்கருத்தை சொல்ல, தமிழ் தரப்பினர் தமது தரப்பு
நியாயங்களைச் சொல்ல இரு தரப்பும் சண்டையிடும், அதனை சாட்டாக வைத்தே கூட்டத்தை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வந்திருப்பார்.
ஆனால், அவர்கள் எல்லோரும் தேர்தலை வையுங்கள் என்று ஒத்தகருத்தில் நின்றதால் அவர் குழப்பமடைந்திருப்பாரோ என்னவோ?’, என்றார் அந்த நண்பர்.
நேற்றுக்காலை கூட்டத்தில் கலந்துகொண்ட மற்றுமொரு கட்சித் தலைவர் பேசினார்.
கூட்டத்தில் நடந்தது என்ன என்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார், ‘கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள் என்று வலியுறுத்தி பேசிவிட்டு சில நிமிடங்களிலேயே கூட்டத்திலிருந்து சென்றுவிட்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்லவும் அதனையே வலியுறுத்தி பேசிவிட்டு அமர,
போதாக்குறைக்கு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூம் தேர்தலை வலியுறுத்தி பேசினார்’, என்றார்.
சஜித் தரப்பின் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசனோ, ரவூப் ஹக்கீமோ எதுவித கருத்தையும் சொல்லவில்லையாம்.
எப்போதும் சஜித் தரப்பின் ஆள்போலவே அண்மைக்காலமாக செயல்பட்டுவரும் தமிழரசு கட்சி பேச்சாளர் சுமந்திரனும் திடீரென்று தேர்தலை வலியுறுத்தினாராம்.
உடனே குறுக்கிட்ட ஜனாதிபதி ‘நீங்கள்தான் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் அதனை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் என்று கூறிவிட்டீர்களே?’ என்று கேட்க, ‘இல்லை, அது இல்லாமலே தேர்தலை எதிர்கொள்வதுபற்றி பேசலாம்’ என்றாராம் சுமந்திரன்.
‘பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டால் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கடந்த ஆறு மாதங்களாக நடந்த பேச்சுகளில் தொடர்ச்சியாக கூறிவந்த நீங்கள் இப்போது அது இல்லாமல் ஏற்றுக்கொள்ளலாம் என்றால் எதற்காக இந்த ஆறு மாதங்களையும் வீணடித்தீர்கள்?’ என்று ஜனாதிபதி திரும்பிக் கேட்டபோது சுமந்திரனிடம் பதில் இருக்கவில்லையாம்.
இதைத்தான் பொல்லுக் கொடுத்து அடிவாங்குவது என்று சொல்வதோ? இரண்டு வாரங்களுக்கு முன்னரும், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றபோதும், பதின்மூன்று எமது பிரச்னைக்கு ஆரம்பப் புள்ளியாகக்கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பதின்மூன்றை வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்னர் கடிதம் எழுதியதால்தான் இந்தியாவின் நிலைப்பாட்டிலேயே மாற்றம் ஏற்பட்டது எனவும் கூறியவர்
நமது சுமந்திரன்.
அதாவது அப்படி கடிதம் எழுதுவதற்கு முன்னதாக இந்தியா நமக்கு சமஷ்டிதான் தீர்வு என்று கருதி வந்ததாக அவர் நேரடியாக சொல்லவிட்டாலும்
பதின்மூன்றுக்கு மேலே செல்ல இந்தியா முன்னர் தயாராக இருந்தது என்றார்.
ஆனால், இப்போது பொலிஸ் அதிகாரம் இல்லாமலும் மாகாண சபைகளை ஏற்றுக்கொள்ளவது பற்றியும் பேசலாம் என்கிறாராம்.
நமக்கே இப்படிக் குழப்பம் என்றால் ரணில் எப்படிக் குழம்பியிருப்பாரோ தெரியவில்லை.
அதனால்தானோ என்னவோ, கூட்டம் முடிந்த பின்னர் ஒரு தமிழ் கட்சியின் தலைவருக்கு தொலைபேசி எடுத்து கூட்டத்தில் நடந்தவற்றைப்பற்றி கருத்துக் கேட்டிருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மற்றும் சில சிங்களத் தலைவர்களுடன் பேசியபோது கிடைத்த தகவல்களை நாளை பார்ப்போம்.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: