தமிழ் அரசியலில் தமிழரசு கட்சியின் பாராளுன்றக்குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம். பியுமான இரா. சம்பந்தனுக்கு நிகராக யாரும் இன்று இல்லை என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது.
அவருக்கு நிகராக அரசியலில் அனுபவமும் ஆளுமையும் உள்ள மற்றுமொருவராக ஆனந்தசங்கரி ஐயா இருந்தாலும் அவர் இன்று தமிழ் மக்களின் பிரதிநிதியாக இல்லை.
நாம் சொல்லவருவது, தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இல்லை என்பதையே.
சம்பந்தன் நீண்டகாலமாக பாராளுமன்றம் சென்றதில்லை.
பாராளுமன்றத்தில் உரையாற்றக்கூடிய தெம்புடனும் அவர் இல்லை.
அவரின் மூளையும் சிந்தனை ஆற்றலும் கொஞ்சமும் குறையவில்லை என்றாலும் அவற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் அவரின் உடல்நிலை
ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை.
ஆனாலும் தமிழ் மக்களின் அரசியல் விவகாரம் என்றால் சம்பந்தன் என்ன நினைக்கிறார் என்பதை அறிய பலரும் விரும்புவது தவிர்க்க முடியாதது.
அண்மையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லி செல்வதற்கு முன்னதாக சம்பந்தனை இந்தியத் தூதுவரும் அமெரிக்க தூதுவரும் அவரின்
வீடு தேடிச் சென்று சந்தித்தனர்.
அப்போது, தெற்கில் ஒரு தகவல் உலா வந்தது.
ஜனாதிபதி ரணில் இந்தியப் பிரதமரை சந்திக்கின்ற போது தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பாக அவரை வலியுறுத்துமாறு கோரி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு கடிதம் எழுதிக்கொண்டிருந்த காலம் அது.
அதுவரை தமிழரசுக் கட்சி கடிதம் எதுவும் எழுதவில்லை.
ஆனால், அப்படி எதனையும் வலியுறுத்தி – குறிப்பாக, பதின்மூன்றை அமுல்படுத்துமாறு கோரி மோடிக்கு கடிதம் எழுதவேண்டாம் என்றும் அத்தகைய அழுத்தங்கள் எதனையும் இப்போது கொடுக்கவேண்டாம் எனவும் கேட்பதற்காகவே தூதுவர்கள் இருவரும் சம்பந்தனைச் சந்தித்தார்கள் என்றும் இவர்கள்
இருவரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றி பெறும் வரை அவருக்கு சங்கடங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்பதற்காகவே சம்பந்தனை
சந்தித்தார்கள் எனவும் தெற்கில் அப்போது பேசப்பட்டது.
மற்றைய தமிழ் கட்சிகள் மோடிக்குக் கடிதம் எழுதிவிட்டபோதிலும் ஏன் சம்பந்தனிடம் மட்டும் இவர்கள் கேட்கவேண்டும் என்று தெற்கில் இது தொடர்பாகப் பேசிய ஒருவரிடம் கேட்டபோது, அவர் சொன்னார், ‘சம்பந்தன் கடிதம் எழுதுவதற்கும் மற்றையை தலைவர்கள் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது அல்லவா’ என்று.
ஆக, தெற்கில் இன்றும் சம்பந்தனுக்கென்று ஒரு கவனம் இருந்துகொண்டு தான் இருக்கின்றது.
என்னதான் அவருக்கென்று ஒரு மரியாதை இருந்தாலும் அதனைக் காப்பாற்ற வேண்டியதும் நமது கடமைதான்.
நேற்றைய இந்தப் பத்தியில் நடந்து முடிந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட சில தெற்கு அரசியல் தலைவர்கள் பரிமாறிய விடயங்களைத் தருவதாகக் குறிப்பிட்டிருந்தேன்.
அவர்கள் அனைவரும் சம்பந்தன் மீது மரியாதை கொண்டிருப்பவர்கள்தான்.
ஆனால் அவர்கள் சொன்னது: ‘சம்பந்தன் அன்றைய கூட்டத்தில் என்ன பேசினார் என்பதையே புரிந்து கொள்ள முடியவில்லை.
அங்கு நடந்தவற்றை அவர் புரிந்துகொண்டிருப்பாரா என்பதும் தெரியவில்லை.
அவர் தன்னைவருத்தி இது போன்ற கூட்டங்களுக்கு வரவேண்டுமா என்பது பற்றி அவர் இனியாவது யோசிக்க வேண்டும்.’
தந்தை செல்வா தனது கடைசிக் காலத்தில் அவர் பேசுவது மற்றவர்களுக்கு புரியும் வகையில் இருந்ததில்லை.
அதனாலேயே அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டு வெளியே அவர் தளபதியாக இருந்த அமிர்தலிங்கம் சொல்வார்.
ஆனாலும் கடைசிவரை அவர் மற்றவர் துணையின்றி நடமாடினார்.
இன்று சம்பந்தன் மற்றவர் துணையின்றி நடமாடவும் முடியாத நிலையில், இனியாவது தனது பணிகளை வீட்டில் இருந்தவாறே பார்க்கலாம்.
அவரின் கட்சியினரை அவர் வீட்டிலிருந்தவாறே வழிநடத்தலாம் என்ற அவர்களின் கோரிக்கையும் நியாயமானதாகவே இருந்தது.
- ஊர்க்குருவி.
- நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment