பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன், ஜனாதிபதி ரணிலுடன் இன்று பேச்சு - முக்கிய ஒப்பந்தம் தொடர்பிலும் கவனம்
கவனயீர்ப்பிற்கு ஆதரவாக முடங்கியது முல்லைத்தீவு
பாப்பரசரின் பிரதிநிதி நேற்று முள்ளிவாய்க்காலுக்கு விஜயம்! -உயிர் நீத்தவர்களுக்காக சுடர் ஏற்றி வழிபாடு
கனேடிய அமைச்சரவையில் இலங்கைத் தமிழர்!
கோட்டாபய ராஜபக்ஷவினால் தடை விதிக்கப்பட்ட 5 இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதி விசேட வர்த்தமானி வெளியீடு
பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன், ஜனாதிபதி ரணிலுடன் இன்று பேச்சு - முக்கிய ஒப்பந்தம் தொடர்பிலும் கவனம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் நேற்று (28) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் காலநிலை மாற்றம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், இலங்கை கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்களில் ஏற்படும் எரிபொருள் கசிவு தொடர்பாக கண்காணிப்பை மேற்கொள்வதற்காக செய்மதி தொழில்நுட்பத்தை பிரான்ஸிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பாக அந்த நாட்டுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையின் போது முக்கிய கவனம் செலுத்தப்படுமென, அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்த பிரான்ஸ் ஜனாதிபதி, இன்று பிற்பகல் இலங்கையிலிருந்து மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பப்புவா நியூகினியா மற்றும் வனாடு ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு பிரான்ஸுக்கு திரும்ப முன்னராக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், இன்றையதினம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக தனது நாட்டுக்கு திரும்பவுள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. நன்றி தினகரன்
கவனயீர்ப்பிற்கு ஆதரவாக முடங்கியது முல்லைத்தீவு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும் கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) காலை 9 மணிக்கு கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்து பேருந்துகளில் ஏற்றப்பட்ட பகுதியில் ஆரம்பிக்கும் கவனயீப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது
குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் பல்வேறு தரப்பிலுருந்தும் முழுமையான ஆதரவு கிடைக்கப்பெற்று வருகிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அரசியல் கட்சிகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பூரண ஆதரவு வழங்குவதோடு, இன்று போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறவில்லை
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மல்லாவி, உடையார்கட்டு, மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நகரங்களில் கடைகளை மூடி போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கிவருகின்றனர்
பாடசாலை பலவும் மாணவர்கள் வரவின்மை மற்றும் போக்குவரத்து இன்மை காரணமாக இயங்கவில்லை.
விஜயரத்தினம் சரவணன் - நன்றி தினகரன்
பாப்பரசரின் பிரதிநிதி நேற்று முள்ளிவாய்க்காலுக்கு விஜயம்! -உயிர் நீத்தவர்களுக்காக சுடர் ஏற்றி வழிபாடு
பாப்பரசர் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்துக்கு விஜயம் செய்திருந்தார். யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்காக சுடர் ஏற்றி அவர், மலரஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அங்கு தெரிவு செய்யப்பட்ட விஷேட தேவையுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்.
தொடர்ந்து முல்லை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் மோட்டார் வாகன பேரணியில், அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
வட்டுவாகல் பாலம் தொடக்கம் முல்லைப்பட்டினம் சுற்றுவளைவு வரை அவருக்கு விசேட வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சுனாமி நினைவாலய தரிசிப்பிலும் புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்ற நற்கருணை ஆசீர்வாதத்திலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
கனேடிய அமைச்சரவையில் இலங்கைத் தமிழர்!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் புதல்வர் கெரி ஆனந்தசங்கரி, கனடாவின் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் ஒருவர் கனேடிய அமைச்சரவை அமைச்சராக முதல் தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளும் லிபரல் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக கெரி ஆனந்தசங்கரி கடமையாற்றி வருகிறார். பழங்குடியின உறவுகளுக்கான அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்காப்ரோ தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வரும் கெரி ஆனந்தசங்கரி, கடந்த 2015 ம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு வருகிறார்.
மனித உரிமைகள் சட்டத்தரணியான ஆனந்தசங்கரி, சமூக ஆர்வலராகவும் தமிழர் விவகாரங்கள் மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
கோட்டாபய ராஜபக்ஷவினால் தடை விதிக்கப்பட்ட 5 இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதி விசேட வர்த்தமானி வெளியீடு
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் வகையில், கடந்த 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/ 3 எனும் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்து 5 இஸ்லாமிய அமைப்புகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த தடை நீக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் பின்வரும் அமைப்புகள் குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.
- ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)
- சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)
- சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)
- அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)
- ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம்-ஈ-அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா
2021 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (மட்டுமீறிய ஒழுங்கமைப்புகளைத் தடைசெய்தல்) ஒழுங்குவிதிகளின் கீழ், எந்தவெவாரு தரப்பினருக்கும் பாதிப்பின்றி முறையாக குறித்த பட்டியிலில் உள்ள 1, 2, 3, 4, 5 ஆகிய பெயர்கள் நீக்கப்படுவதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி… (தமிழ், ஆங்கிலம்)
ஏற்கனவே தடை செய்யப்பட்ட போது வெளியிடப்பட்ட வர்த்தமானி (தமிழ்)
நன்றி தினகரன்
No comments:
Post a Comment