கட்டுரை இப்படியும் நடக்கிறது July 27, 2023


சிங்கள தேசியக் கட்சி ஒன்றின் மூலம் அரசியலுக்கு வந்த இராசமாணிக்கம் சாணக்கிய பின்னர் தமிழரசுக் கட்சியில் ஐக்கியமாகி எம்.பி. ஆன பின்னர், ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னார்: ‘தந்தை செல்வாவும் தேசியக் கட்சி ஒன்றில் அரசியலை தொடங்கி பின்னர் தமிழரசுக் கட்சியை தொடங்கியவர்தானே’
என்று.
அதாவது மகிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து அரசியலுக்கு வந்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கே சாணக்கிய இவ்வாறு பதிலளித்திருந்தார்.
அவருக்குப் போட்டியாக மட்டக்களப்பில் அரசியல் செய்பவர் ரெலோவின் பொதுச் செயலாளரும் தற்போதய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான ஜனா என்று அறியப்பட்ட கோவிந்தம் கருணாகரம்.
ஒன்றுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பில் வெற்றிபெற்ற இருவரும் அவர்கள்தான்.
இப்போது இருவரும் தமிழ்த் தேசிய அரசியலில் எதிர் எதிர் அணியில் இருக்கின்றார்கள்.
அதனால்தானோ என்னவோ சாணக்கியவைப்போலவே தானும் அவ்வப்போது பேசவேண்டும் என்று ஜனா நினைக்கிறாரோ தெரியவில்லை.
‘முதல் அரசியல் படுகொலை அல்பிரட் துரையப்பா.
அவரை சுட்டுக்கொன்றது பிரபாகரன்.
அதனைத் தூண்டியவர் அமிர்தலிங்கம்.
யாழ்ப்பாணத்தில் மேடையில் ஒருமுறை அமிர்தலிங்கம் சொன்னார், ‘துரையப்பாவுக்கு இயற்கை மரணம் நிகழாது’, என்றார்.
அதைத் தொடர்ந்தே அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.
அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை.
பிரபாகரன் கடைசி அரசியல் படுகொலை என்பது துரதிர்ஷ்டமானது.’
களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசுகையிலேயே ஜனா என்ற கருணாகரம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
இன்று துரையப்பா படுகொலை செய்யப்பட்ட நாள்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஐந்தாம் ஆண்டு ஜூலை இருபத்தி ஏழாம் திகதி துரையப்பா படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் நினைவாகத்தான் ஜனா இந்த விடயத்தை நினைவு கூர்ந்தாரோ தெரியவில்லை.
ஆனால், அவர் தெரிவித்திருக்கும் கருத்தை எங்கிருந்து பெற்றார் என்பதுதான் தெரியவில்லை.
துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டபோது ஜனா பதின்ம வயதினர்.
அமிர்தலிங்கத்தின் பேச்சுகளையெல்லாம் கேட்டிருப்பாரா என்பது தெரியவில்லை.
ஆனால், துரையப்பா படுகொலை செய்யப்பட்ட பின்னர், அந்தப் படுகொலை பற்றி அமிர்தலிங்கத்திடம் ஊடகங்கள் கருத்துக் கேட்டபோதே, அமிர்தலிங்கம் ‘துரோகிகளுக்கு இயற்கை மரணம் வராதுதானே’ என்று பதிலளித்தார்.
அதற்காக இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி – ஆயுதங்களைத் தூக்க வைத்ததில் அமிர்தலிங்கம் போன்றவர்களின் பங்கு குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
அதற்காக அமிர்தலிங்கம் இவ்வாறு சொன்னதால்தான் பிரபாகரன் சுட்டுக்கொன்றார் என்பது வரலாறுகளை தவறாக பதியவைத்துவிடும்.
ஏற்கனவே, யாழ்.பொது நூலகம் எப்போது எரியூட்டப்பட்டது என்பதிலேயே சிலர் விதண்டா வாதம் செய்துகொண்டிருக்கின்றனர்.
தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் யாழ். நூலக எரிப்பு என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று அது எரியூட்டப்பட்டது எப்போது என்பதிலேயே வரலாற்றை திருப்பிப்போட்டு வருகின்ற அவல நிலையில் வரலாறுகள் பற்றி பேசுகின்றபோது அதுவும் மக்கள் பிரதிநிதிகள் பேசுகின்றபோது அது
தவறான பதிவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

 




No comments: