எதிர்பார்த்தவாறே இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தியிருக்கின்றார்.
மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கான எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் அவசரமாக அனைத்து கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
ரணிலைப் பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளும் உடன்பட்டால் அரசியல் தீர்வு விடயத்தில் தனக்கு எவ்வித முரண்பாடுமில்லை என்று கூறுகின்றார்.
ஆனால், நமக்கு நன்றாகத் தெரிந்த விடயம் சில விடயங்களில் அனைத்து கட்சிகளும் உடன்படப்போவதில்லை.
குறிப்பாக, 13ஆவது திருத்தச் சட்ட விடயத்தில் பொலிஸ் அதிகாரத்தை அமுல்படுத்துவதில் நிச்சயம் அனைத்து கட்சிகளும் உடன்படப்போவதில்லை.
இந்த நிலையில் தமிழ் கட்சிகள் விடயங்களை எவ்வாறு கையாளப்போகின்றன? வழமைபோல் 13இற்கு அப்பால் செல்லுதல் – அல்லது 13 மைனஸை ஏற்றுக்கொள்ள முடியாதென்று கொழும்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு இறுதியில் புதிய அரசியல் யாப்பு பற்றிப் பேசப்போகின்றனவா அல்லது விடயங்களை தூர நோக்குடனும் விவேகத்துடனும் கையாளப் போகின்றனவா? மாகாண சபை முறைமையிலுள்ள குறைபாடுகளுக்கு அப்பால் அது வடக்கு – கிழக்கில் குறிப்பிட்டளவான அதிகாரத்தை கையாள்வதற்கான வாய்ப்பை தமிழ் மக்களுக்கு வழங்குகின்றது.
இந்த நிலையில், ரணில் அதனை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறுகின்றபோது பந்தை ரணிலின் பக்கமே வீசிவிட வேண்டும்.
ஏனெனில், இந்தியா, 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் மற்றும் மாகாண சபை தேர்தலையே வலியுறுத்தியிருக்கின்றது.
அபிலாசைகள் என்னும் சொல்லை பயன்படுத்தியிருந்தாலும்கூட, அதன் அடித்தளமாக 13ஆவது திருத்தச் சட்டமே இருக்கின்றது.
எனவே, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் முன்னேற்றங்களை காண்பிப்பதற்கான வாய்ப்பை ரணிலுக்கு வழங்க வேண்டும்.
ஏனெனில், அதனை அமுல்படுத்துவதில் தனக்கு பிரச்னையில்லை என்று ரணில் கூறுகின்றார்.
ஒருவேளை, ரணில் ஏமாற்ற முற்பட்டால் அது ஓர் ஆதாரமான பதிவாகும்.
தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அரசியல் தலைமைகள்மீது நம்பிக்கை இழந்திருக்கின்றனர்.
நிலத்தைவிட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகளையே தேடுகின்றனர்.
பெருமளவானர்கள் வெளியேறிவருகின்றனர்.
இந்த நிலைமை நீடித்தால் இன்னும் பத்து வருடங்களில் வடக்கு, கிழக்கின் மக்கள் தொகை மேலும் வீழ்ச்சியடையும்.
இதனை முடிந்தவரையில் தடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு, அதிகார கட்டமைப்பு ஒன்று தேவை.
இதனை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும்.
வாய்ப்புகள் கதவை தட்டிக் கொண்டிருப்பது போன்ற கற்பனைகளுடன் அரசியலை முன்னெடுக்க முடியாது.
இதில், எந்தவொரு வெளித்தரப்பும் தமிழ் மக்களுக்கென்று பிரத்தியேகமாக உதவிசெய்யப் போவதில்லை.
கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் புத்திசாதுர்யமாகக் கையாளுவதன் ஊடாகத்தான் விடயங்களில் படிப்படியாக முன்னேற முடியும்.
கொள்கை முக்கியமென்று வாதிடும், சுலோகங்களில் சுகம் காணும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை.
நிலைமை தொடர்ந்தும் சிக்கலைடைந்து செல்கின்றது.
நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment