கட்டுரை இப்படியும் நடக்கிறது July 25, 2023

 ‘உன்னிடம் இரண்டு கடிதங்கள் கொடுத்தேனே, அவற்றைக்


கவனமாக ‘போஸ்ட்’ செய்து விட்டியா?’ என்று கேட்டார் முதலாளி.

‘நீங்கதான் கவனக் குறைவாக அமெரிக்கா போக வேண்டிய கடிதத்தில் இருநூறு ரூபாய் முத்திரையையும் கொழும்புக்கு போகவேண்டிய கடிதத்தில் இரண்டு ரூபாய் முத்திரையையும் ஒட்டி இருந்தீர்கள்’ என்றான் வேலைக்காரன்.
‘சரி, சரி, முத்திரையை மாற்றி ஒட்டி அனுப்பி விட்டாய் அல்லவா?’ என்றார் முதலாளி.
‘ஒட்டி இருந்த முத்திரையை கழட்ட முடியல்ல.
அதனால் விலாசத்தை மட்டும் அழித்து மாற்றி எழுதி அனுப்பி விட்டேன்’ என்றான் அந்த புத்திசாலி வேலைக்காரன்.
இந்தக் கதைக்கும் இனி எழுதப்போகின்ற விடயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
லண்டனிலிருந்து நண்பர் ஒருவர் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்றும் அது தன்னிடம் இல்லை எனவும் கடைசியாக நடந்த தமிழ் எம்.பிக்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்திருந்தார் அல்லவா.
அதுகுறித்து பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவோ, ஏற்கனவே, அரசியலமைப்பில் இருக்கும் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு ஆதரவு தேவையில்லை என்றும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தியே அதனை அமுல்படுத்த முடியும்
எனவும் தெரிவித்திருந்தார்.
அது குறித்தே அந்த லண்டன் நண்பர் தனது சந்தேகத்தை கேட்டிருந்தார்.
‘சம்பந்தன் சொல்வது சரி என்றே தெரிகின்றது.
ஏற்கனவே, மூன்றில் இரண்டு ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதற்கு மீண்டும் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு ஆதரவு தேவை’ என்று கேட்டிருந்த அந்த நண்பரே மற்றுமொரு சந்தேகத்தையும் கேட்டிருந்தார்.
அதாவது, ரணில் அந்தக் கூட்டத்தில் தன்னிடம் மூன்றில் இரண்டு ஆதரவு பாராளுமன்றில் இல்லை என்றும் அதனால் சில விடயங்களை நிறைவேற்ற முடியாது எனவும் அவர் சொல்லியபோது, ‘எதிர்க்கட்சிகளின் சட்டமா அதிபர்’ என்று வர்ணிக்கப்படும் நமது சுமந்திரனும் அங்கே இருந்தார்.
சம்பந்தன் சொல்வது சரி என்றால் சுமந்திரன் எதற்காக அந்தக் கூட்டத்தில் ரணில் சொன்ன தகவலை மறுத்துரைக்கவில்லை?
இதுதான் லண்டன் நண்பருக்கு ஏற்பட்ட சந்தேகம்.
அவருக்குள் இவ்வாறான ஒரு கேள்வி ஏற்பட்டது நியாயமானதுதான்.
அதுவல்ல முக்கியமானது, அந்தக் கூட்டத்துக்கு மறுநாள் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சம்பந்தன் ஐயா, எதற்கு மூன்றில் இரண்டு தேவை என்று கேட்டார்.
ஆனால், ரணில் அதுபற்றி கூறியபோது அங்கே சுமந்திரன் மாத்திரமல்ல, சம்பந்தன் ஐயாவும் இருந்தாரல்லவா? அப்போது ஏன் அவர் உடனேயே அதனை கேள்விக்கு உட்படுத்தவில்லை என்பது தெரியவில்லை.
ஆனால், இது பற்றிய தெளிவை தமிழ் மக்களுக்கு தெரிவிக்கவேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் குறிப்பாக சுமந்திரன் போன்றவர்களின் கடமை.
கடந்த இரண்டு தினங்களாக மாகாண சபைகளுக்கான அதிகாரம் குறித்து யாழ். பல்கலைக்கழக முன்னாள் சட்ட பீடத் தலைவர் தெரிவித்த கருத்து தொடர்பாகவும், தற்போதைய சட்ட பீட தலைவர் கோசலை மதன் தெரிவித்த கருத்து குறித்தும் பிரஸ்தாபித்திருந்தோம்.
தற்போதைய பீடத்தலைவர் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய காணொலி முகநூலில் பகிரப்பட்டிருப்பது குறித்தும் குறிப்பிட்டிருந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
அந்த காணொலி பற்றிய முன்னூட்டங்களை எழுதும் சிலர், அவர் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தில் உயர் பதவிகளை பெறுவதற்காகவே அப்படி பேசியிருப்பதாக எழுதிவருவதை காணமுடிந்தது.
அவர் பதவிக்காகவே அவ்வாறு கூறிகிறார் என்றால், இதற்கு முன்னர் அவரின் பதவியில் இருந்தவர்களும் அப்படி ஏதாவது செய்துதான் அந்தப் பதவிக்கு வந்தார்களா என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: