அஞ்சலிக்குறிப்பு : நீங்காத நினைவுகளில் நிலைத்திருக்கும் ஆறுமுகம் பத்மநாதன் முருகபூபதி


எமது தமிழ்சமூகத்தில்,  மழைக்கு முக்கிய பண்பாட்டுக்கோலம்  காலம் காலமாக நீடித்துள்ளது.

முழு உலகிற்கும் மழையைத்  தரும் இயற்கையை போற்றிவரும் எமது சமூகமும்,  வீட்டுக்கு திடீரென ஒரு விருந்தினர் வந்துவிட்டால்,   “ மழைதான் வரப்போகிறது  “ என்பார்கள்.  எவரதும் வாழ்வில் வசந்தம் வீசினால்,  முன்னேற்றம் தென்பட்டால்,  “ அவர் காட்டில் மழை பொழிகிறது  “ என்பார்கள்.

இவ்வாறு மழை குறித்து பல்வேறு கருத்தியல்கள் வாழ்கின்றன. 

தான் படைத்த குறளில், தமிழ் என்ற சொல்லே இடம்பெறாதவகையில் உலகப்பொதுமறை எழுதிய திருவள்ளுவரும் கூட 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

( அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் குறள் எண்: 55 )

மழை குறித்து எழுதி வைத்துள்ளார்.

இந்த அஞ்சலிக்குறிப்பினை மழைகுறித்த பதிவுடன்


தொடங்குவதற்கு  முக்கிய காரணம்  இம்மாதம் 22 ஆம் திகதி சிட்னியில் மறைந்த எமது அருமை நண்பர் – அன்பர் ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் பற்றிய நினைவுகள்தான்.

அவர் மறைந்திருக்கும் திகதியில்தான் எத்தனை இரண்டு இலக்கங்கள் பாருங்கள்: 22 -02 -2022.

இரண்டு தேசங்களில் வாழ்ந்து மறைந்திருக்கும் ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள்,  என்னைவிட  பதினைந்து வயது மூத்தவர். ஆனால், இரண்டாயிரமாம் ஆண்டின் பின்னர் அறிமுகமாகிய அவர் என்னோடு வயது வித்தியாசமின்றி தோழமையுடன் உறவாடியவர்.

அவரை பல வருடங்களுக்கு முன்னர்  முதல் முதலில் கொழும்பில் சந்தித்த நாளன்றும் நல்ல மழை பெய்தது.  அவரது வீட்டு வாசல்படியேறும்போது,   “ வாருங்கள்…. மழையையும் அழைத்து வந்திருக்கிறீர்கள்  “ என இன்முகத்துடன் அழைத்து,  துடைப்பதற்கு துவாய் தந்தவர்.

கடந்த 24 ஆம் திகதி சிட்னியில்  அவரை, அன்பு மனைவி, மக்கள், உறவுகள் , நட்புகள் ,  அன்பர்கள் வழியனுப்பிவைக்கும்போதும் கடுமையான மழை. 

அப்போது நான் வதியும் மெல்பனில் கடும் கோடை. சூரிய பகவான் எம்மை  சுட்டெரித்துக்கொண்டிருந்தார். சிட்னியில் வருண பகவான், குறைவின்றி மழையை பொழிந்துகொண்டிருந்தார்.  இயற்கைதான் எத்தனை விநோதங்களை எமக்கு காண்பிக்கிறது.


வட இலங்கையில் வீமன்காமம் தெல்லிப்பழையை பூர்வீகமாகக்கொண்டிருந்தவர் அன்பர் பத்மநாதன். ஆறுமுகம் – செல்லமுத்து தம்பதிகளின் செல்வப்புதல்வன், இலங்கையில் கூட்டுறவு பரிசோதகராக பணியாற்றியவர்.

2000 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் , சிட்னியில், அப்போது தனது கலாநிதிப் பட்ட படிப்பிற்காக வருகை தந்திருந்த எழுத்தாளர் கலாமணி அவர்களின் வாடகை வீட்டில் ( ஹோம்புஷ்  )   நடந்த இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டேன். 

மெல்பனில் 2001 ஆம் ஆண்டு நாம் நடத்தவிருந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டமாகவே அந்த சந்திப்பு நடந்தது.

அதற்கு சிட்னியில் வதியும் இலக்கிய ஆர்வலர் கவிஞி பாமதி சோமசேகரம் அழைத்து வந்து எமக்கு அறிமுகப்படுத்திய மற்றும் ஒரு இலக்கிய ஆர்வலர்தான் யசோதா பத்மநாதன்.

அன்று தொடங்கிய இலக்கிய நட்புறவு, சகோதர வாஞ்சையுடன் கூடிய குடும்ப உறவாக மாறியது.  யசோதா மெல்பனிலும் சிட்னியிலும்  நடந்த எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துகொண்டார்.

சிட்னியில் உயர் திணை என்ற அமைப்பின் ஊடாக பல கலை, இலக்கிய அமர்வுகளையும் நடத்தினார். இந்தத் தொடர்புகளினால், அவர் இலங்கையிலிருந்த தமது பெற்றோர்களையும், நான் அங்கே சென்றிருந்தவேளையில் தொலைபேசி ஊடாக அறிமுகப்படுத்தியிருந்தார்.

யசோதாவின் தந்தையார்  பத்மநாதன் , எனது பூர்வீகம் நீர்கொழும்பு என்பதை அறிந்ததும், தமது மகள் யாழ். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்தில் தனது ஆய்வுக்கு நீர்கொழும்பையே பிரதானமாக எடுத்து அங்கு வாழும் மக்கள் குறித்து எழுதியிருப்பதாக சொன்னதும், சிட்னி வந்து குறிப்பிட்ட ஆய்வேட்டையும் யசோதாவிடம்  வாங்கிப்படித்துவிட்டு கொடுத்தேன்.

இவ்வாறுதான் தங்கை யசோதாவுடன் எனக்கு பாசமலர் உறவு மலர்ந்தது.  இவரின் பெற்றோர் சிட்னிக்கு வந்து சேர்ந்தபின்னர், அங்கு  நான் செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் Pendle hill  இல் அவர்கள் வசித்த வீட்டுக்குச் செல்வதையும் வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன்.

குறிப்பிட்ட  தொடர் மாடிக் குடியிருப்பில்தான் நண்பர் எழுத்தாளர்  ( அமரர் ) காவலூர் இராசதுரையும் அவரது மனைவியும் வசித்தனர்.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து  எழுத்தாளர் ஜெயமோகனும் இலங்கையிலிருந்து எழுத்தாளர் தௌிவத்தை ஜோசப்பும் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்தபோது,  எமது சிட்னி சுற்றுலாவை ஒழுங்கு செய்தவர் யசோதா.  அத்துடன் மெல்பனிலிருந்து சிட்னி செல்லும் எழுத்தாளர்கள் ஜே.கே, கேதார சர்மா , நான் உட்பட சில இலக்கியவாதிகள்  அவர்களின் Pendle hill  இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடுவோம்.  இதுபோன்ற நிகழ்வுகளினால், அந்த இல்லம் எப்போதும் இலக்கியமணம் வீசியவாறு திகழும்.

யசோதாவின் அருமைத் தந்தையார்  பத்மநாதன், புன்னகை பூத்தவாறு அனைத்தையும் செவிமடுப்பார். அபூர்வமாகத்தான் ஏதும் கருத்தும் சொல்வார். அத்துடன் அவர் தீவிர வாசகர்.  அவரும்  அவரது துணைவியார், கமலேஸ்வரி அம்மையாரும் தமிழ் வானொலி நிகழ்ச்சிகளையும் தவறாமல் செவிமடுப்பார்கள்.

நான் அங்கே வருகின்றேன் என அறிந்தால், அம்மையார் எனக்காக விசேடமாக கீரையில் செய்த ஏதாவது ஒரு சமையலை படைத்திருப்பார்.

 “ தம்பி பூபதி வந்தால்… இங்கே இதுதான் விசேடம்  “ என்பார் அய்யா. அவருடன் Pendle hill  இல் நடைப்பயிற்சியும் மேற்கொண்டிருக்கின்றேன்.  முகத்தில் எப்பொழுதும் மந்திரப்புன்னகை தவழும்.

இலக்கிய சர்ச்சையில் யசோதா என்னுடன் கடுமையாக வாதிட்டால், பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கும் அவர், நான் அந்த வீட்டுப்படிகளை கடந்து வெளியே வந்தபின்னர்,                 அவர்ட  வயசென்ன….. உன்ர வயசென்ன….. ஏன் அவருடன் அவ்வாறு வாதிடுகிறாய்  “ என்று கடிந்துகொள்ளும் இயல்புகொண்டவர்தான் பத்மநாதன் அய்யா.

அவ்வாறு என்மீது அன்பும் அபிமானமும் கொண்டிருந்தவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியறிந்ததும், பாசமலர் தங்கை யசோதாவுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து ஆறுதல் சொன்னேன்.

தவிர்க்கமுடியாத பல காரணங்களினால், அமரர் பத்மநாதன் அவர்களின் இறுதி நிகழ்வுகளில் என்னால் கலந்துகொள்ளமுடியாது போய்விட்டது.

அவரது மறைவினால் ஆழ்ந்த கவலையில்  ஆழ்ந்திருக்கும் தங்கை யசோதாவுக்கும்  அருமை அம்மாவுக்கும் மற்றும் அவரது மகள்மார், மருமகன்மார், பேரப்பிள்ளைகள் உட்பட குடும்ப நண்பர்களின் துயரத்திலும் பங்கெடுக்கின்றேன்.

ஒரு மழைக்காலத்தில் இலங்கையில் எனக்கு அறிமுகமான அன்பர் ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் அவுஸ்திரேலியா சிட்னியில் எதிர்பாராத ஒரு மழைக்காலத்தில், எம்மிடமிருந்து விடைபெற்றுள்ளார்.

 “ சூரியனுக்கும் விதிமுறை உண்டு

அந்த சந்திரனுக்கும் வரையறை உண்டு , ஆனால்

ஏனோ இந்த வான் மழைக்கு மட்டும்

இயற்கையின் நியதியில் எந்தவொரு

வரைமுறையும் இல்லாத கால நிலை

அல்லாத தேவன் வகுத்த ஒரு தனி விதிவிலக்கு உண்டு   

என்று ஒரு கவிஞர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

எம்மிடம் இனி எஞ்சியிருப்பது  அன்பர் ஆறுமுகம் பத்மநாதன் பற்றிய பசுமையான நினைவுகள்தான்.

---0---

 

 

 

 

2 comments:

யசோதா.பத்மநாதன் said...

எழுத்தாளர் பூபதி அண்ணா,

உங்கள் அஞ்சலிக்குறிப்புக்கு மிக்க நன்றி.

உண்மைதான் அவர் ஒரு விஷேஷமான மனிதர். வீட்டில் அவர் இருக்கும் போதும் அவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போதும் சூரிய பகவான் அவரைத் தேடி வந்து சில நிமிடங்கள் நலம் விசாரித்துப் போவார். அப்போதெல்லாம் அவருக்கு அதை நான் சுட்டிக் காட்டியதோடு அந்த சொற்ப நிமிடங்களில் வந்து போகும் அந்த நிகழ்வை படம் பிடித்தும் வைத்திருக்கிறேன். சுமார் 4/5 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அந் நிகழ்வு தற்செயலாக இடம்பெற்றிருக்கிறது. நம்பமுடியாத இடங்களில் எல்லாம் சூரியனின் சகவாசம் அவரோடு இருந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

ஆனால் அவர் அமைதியான உறக்கத்தில் அமைதியான சுவாசத்தோடு எம்மைப் பிரிந்த போதோ பெரு மழை! கடும் மழை!!

இயற்கை அவரை அரவணத்துக் கொண்டது. அந்த விஷேஷ நாள் 22.02.2022.

கவித்துவமான அவர் வாழ்வை அழகியலோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி பூபதி அண்ணா.எதிர்பாராத உங்கள் அஞ்சலிக்குறிப்புகள் மனதுக்கு இதம் தருவன.

அன்புடன் யசோதா.பத்மநாதன். (மகள்)

Unknown said...

என் பள்ளித் தோழியின் அப்பா.வவுனியா, பன்றிகெய்த குளம் வீட்டில் அப்பாவை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். பின்னர் அவுஸ்திரேலியா சென்ற சமயம் விருந்துண்ணச் சென்ற சமயம் பார்த்ததுதான். ஆழ்ந்த இரங்கல். யசோ மகளாய் உன் அப்பாவை எக்குறையும் இன்றி பார்த்தது எனக்குத் தெரியும். அவர் இயற்கையோடு சங்கமம் கொள்வது மறுக்க முடியாத நியதி தானே....